நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – ஐந்தாம் திருமொழி – மன்னு பெரும்புகழ்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர்

கூடலிழைத்து அதில் ஆசை நிறைவேறாததால், முன் தானும் எம்பெருமானும் கூடியிருந்த காலத்திலே உடன் இருந்த குயிலைப் பார்த்து, நம் வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்லக்கூடியது, ஞானம் உள்ள பறவை என்றெண்ணி, இது நம்மை எம்பெருமானுடன் சேர்த்துவிடும் என்று நினைத்து, அந்தக் குயிலின் காலில் விழுந்து “என்னையும் எம்பெருமானையும் சேர்த்துவிடு” என்று ப்ரார்த்திக்கிறாள். இவள் பேசினால் அதுவும் பதில் சொல்லும் என்பதையே காரணமாகக் கொண்டு, அதனிடத்தில் ப்ரார்த்திக்கிறாள். ராவணனையே பார்த்து “என்னைப் பெருமாளிடம் சேர்த்து விடு” என்று சொல்லக்கூடிய ஸீதாப்பிராட்டியைப் போன்றவளான ஆண்டாள், குயிலைப் பார்த்தால் விடமாட்டாளே. ஆகையால், இங்கே குயிலிடம் தன்னை எம்பெருமானிடம் சேர்க்கும்படி ப்ரார்த்திக்கிறாள்.

முதல் பாசுரம். எல்லோரையும் முறையாக ரக்ஷிக்கக்கூடிய எம்பெருமான் என்னை ரக்ஷிக்கவில்லை என்றால் அதைச் சரி செய்வது உன்னுடைய கடமை அன்றோ என்று குயிலைக் கேட்கிறாள்.

மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கிழக்கும் வழக்குண்டே?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே!
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்

புன்னை, குருக்கத்தி, கோங்கு, செருந்தி ஆகிய பல மரங்கள் நிறைந்த சோலையில், பொந்தில் வாழும் குயிலே! பொருந்திய எல்லையில்லாத கல்யாண குணங்களையுடையவனாய் திருமகள் கேள்வனாய், நீல மணி போன்ற நிறத்தை உடையவனாய், ரத்னங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்தவனாய், மிடுக்கை உடைய எம்பெருமானை ஆசைப்பட்டதே காரணமாக என்னுடைய கையில் வளைகள் கழன்று விழுவது தகுமோ பவளம் போல் சிவந்த திருவதரத்தை உடையவனான என் ஸ்வாமி என்னிடம் வந்து சேரும்படி எப்பொழுதும் அவனது திருநாமங்களைக் கதறிக் கொண்டிருந்து நீ விரைந்து கூவ வேண்டும்.

இரண்டாம் பாசுரம். தான் இப்போதிருக்கும் நிலையை அறிவித்தாலே அதைக் கேட்டு அந்தக் குயிலானது அதற்குப் பரிஹாரம் தேட முடியும், ஆகையால் தன் தற்போதைய நிலையை விளக்குகிறாள்.

வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் ஊயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடும் குயிலே!
மெள்ள இருந்து மிழற்றி  மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்

தேனொழுகும் செண்பகப்பூவிலே ஸாரமான அம்சத்தை அனுபவித்து ஆனந்தமாக இசை பாடும் குயிலே! தூய உள்ளம் கொண்ட அடியார்களை அழைக்கும் சங்கத்தாழ்வானை இடதுதிருக்கையிலே ஏந்திக்கொண்டிருக்கிற பரிசுத்தியை உடைய புருஷோத்தமன் தனது திருமேனியை எனக்குக் காட்டமாட்டேன் என்கிறான். மேலும் என்னுடைய ஹ்ருதயத்துள்ளே வந்து புகுந்து என்னை நைந்துபோம்படிச் செய்து, மேலும் என்னைத் துன்புறுத்துவதற்காக, நாள்தோறும் என் ப்ராணனை நன்றாக வளர்த்து, என்னைத் தவிக்கச்செய்து வேடிக்கை பார்க்கிறான். நீ என் அருகில் இருந்து கொண்டு உன் மழலைச் சொற்களைச் சொல்லி விளையாடாமல், எனக்காகத் திருவேங்கடமலையில் வந்து நிற்கிற எம்பெருமான் இங்கே வரும்படி கூப்பிட வேண்டும்.

மூன்றாம் பாசுரம். நம் விரோதிகளைப் போக்கி நமக்கு அனுபவத்தைக் கொடுக்ககூடிய ஸ்ரீ ராமன் இங்கே வரும்படி நீ கூவ வேண்டும் என்கிறாள்.

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய்தலை அற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்கும் காணேன்
போதலர் காவில் புது மணம் நாறப் பொறிவண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே! என் கருமாணிக்கம் வரக் கூவாய்

புஷ்பங்கள் மலரும் சோலையிலே புதிய பரிமளம் வீச அழகிய வண்டினுடைய காமரம் என்னும் பண்ணைக் (ராகத்தை) கேட்டுக்கொண்டு உன் பேடையோடு வாழும் குயிலே! மாதலியானவன் ராமனின் தேரில் ஸாரதியாய் முன்னே நின்று தேரை நடத்த, மாயப்போர் செய்யக்கூடிய ராவணன் மேலே அம்பு மழையை அவனுடைய ப்ரதானமான தலை மீண்டும் மீண்டும் அறுந்து விழும்படி எய்த எம்பெருமானுடைய வரவை ஓரிடத்திலும் நான் காணவில்லை. ஆதலால் நீல ரத்னம் போன்ற திருமேனியையுடையவனான அந்த எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவ வேண்டும்.

நான்காம் பாசுரம். கருடனைக் கொடியாக உடையவனான அழகிய எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவ வேண்டும் என்கிறாள்.

என்புருகி இனவேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோய் அது நீயும் அறிதி குயிலே!
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணியனை வரக் கூவாய்

குயிலே! எலும்புகள் உருகிப்போய் வேல் இனம் போன்ற நீண்டு பரந்த கண்களும் உறங்கமறுக்கின்றன. நெடுங்காலமாக பிரிவுத்துயர் என்னும் கடலிலே அழுந்தி ஸ்ரீவைகுண்டநாதன் (விஷ்ணுபோதம்) என்னும் கப்பலைப் பெறாமல் இங்கேயே தவித்துக்கொண்டிருக்கிறேன். நம்மிடத்திலே அன்புடையவர்களைப் பிரிவதால் ஏற்படும் துன்பத்தை நீயும் அறிவாய்தானே? பொன்னைப் போன்ற திருமேனியை உடையவனாய் கருடனைக் கொடியாக உடையவனான தர்மமே வடிவெடுத்தவனான கண்ணனை இங்கே வரும்படி கூவு.

ஐந்தாம் பாசுரம். திருவுலகளந்தருளின எம்பெருமானை இங்கே நான் காண வரும்படி கூவுவாயாக என்கிறாள்.

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலொடு பால் அமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே! உலகளந்தான் வரக் கூவாய்

மெதுவாக நடந்து வரும் அன்னங்கள் எங்கும் பரவி விளையாடுவதற்கு இருப்பிடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய பொன் போன்ற அழகிய திருவடிகளைக் காண வேண்டும் என்னும் ஆசையினாலே ஒன்றுக்கொன்று போட்டியிடும் என்னுடைய கெண்டை மீன் போன்ற கண்கள் உறங்க மறுக்கின்றன. குயிலே! திருவுலகளந்தருளின எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவு. நீ அப்படிச் செய்தால் நான் இனிய சோற்றையும் பாலமுதையும் ஊட்டி வளர்த்துள்ள அழகிய கிளியை உன்னோடே நட்புறவு கொள்ள வைப்பேன்.

ஆறாம் பாசுரம். என் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள மூலகாரணமான அவன் இங்கே வரும்படி நீ கூவினாயாகில் என் உயிர் உள்ள வரை என் தலையை உன் காலிலே பொருத்தி வைப்பேன் என்கிறாள்.

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளங்குயிலே! என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறிலேனே 6

பூங்கொத்துக்கள் மலருமிடமான சோலையிலே அழகிய ஒரு இடத்திலே உறங்குகின்ற சிறு குயிலே! எல்லாத் திசைகளிலும் தேவர்கள் வணங்கித் துதிக்கும்படியான பெருமை பெற்ற ஹ்ருஷீகேசன் (அடியார்களின் இந்த்ரியங்களை தன் வசத்தில் வைத்திருப்பவன்) தன்னை எனக்குக் காட்டாமல் என்னைத் துன்புறுத்த, நான் முத்துப்போல் வெளுத்த முறுவலும் சிவந்த அதரங்களும் முலைகளும் ஆகிய விஷயங்களால் அழகு அழியும்படி ஆனேன். நான் உயிருடன் இருப்பதற்கான மூல காரணமான அவ்வெம்பெருமானை இங்கே வரும்படி நீ கூவினால், என் தலையை உன் காலிலே எப்பொழுதும் பொருத்தி வைத்திருப்பது தவிர வேறு ஒரு கைம்மாறு செய்ய அறியேன்.

ஏழாம் பாசுரம். அழகிய ஆயுதங்களையுடைய எம்பெருமான் இங்கே வரும்படி கூவுவாயாக என்கிறாள்.

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே! உனக்கென்ன மறைந்துறைவு? ஆழியும் சங்கும் ஒண்தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி

அழகிய குயிலே! அலை எறியும் திருப்பாற்கடலில் சயனித்திருக்கும் எம்பெருமானுடன் கூடவேண்டும் என்கிற ஆசையினால் எனது முலைகள் பருத்து மிகவும் உத்ஸாஹமாக எனது உயிரை உருக்கிக் கலங்கச்செய்கின்றன. நீ மறைந்திருப்பதினால் உனக்கு என்ன பயன்? திருவாழி, திருச்சங்கு, ஸ்ரீகதை ஆகியவை பொருந்திய திருக்கைகளையுடைய எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவினால் மிகவும் தர்மம் செய்தனையாவாய்.

எட்டாம் பாசுரம். திருமாலான எம்பெருமான் வரும்படி நீ விரைந்து கூவுவாயாக என்கிறாள்.

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன்
நாங்கள் எம்மிலிருந்து ஒட்டியகச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே! திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே

இனிய பழங்களையுடைய மாந்தோப்பிலே சிவந்த தளிர்களை அலகால் கொத்துகிற இளங்குயிலே! சார்ங்கம் என்னும் வில்லை வளைத்து இழுக்கும் சக்தியையுடைய பெரிய திருக்கைகளையுடையவனாய், மிகவும் திறமைசாலியான எம்பெருமான் காதலிலும் சிறந்து விளங்குபவன். அவனும் நானும் சேர்ந்திருந்து எங்களுக்குள் ரஹஸ்யமாகச் செய்துகொண்ட உறுதிமொழியை நாங்கள் இருவருமே அறிவோம். மிகவும் தூரத்தில் இருக்கும் திருமாலை மிகவும் விரைவாக நீ கூவவில்லை என்றால் அவனை நான் எப்படிப் படுத்தப்போகிறேன் என்பதை நீயே பார்ப்பாய்.

ஒன்பதாம் பாசுரம். எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவுவாயாக அல்லது என்னுடைய பொன்வளைகளை மீட்டுத்தா என்கிறாள்.

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே! குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன்றேல் திண்ணம் வேண்டும்

மிக்க ஒளியை உடைய வண்டுகளானவை இசை பாடும் சோலையிலே ஆனந்தமாக வாழ்கின்ற குயிலே! நான் சொல்லுவதை நீ நன்றாகக் கேள். நான் பசுமையான கிளி போன்ற நிறத்தையுடையவனான திருமால் என்கிற ஒப்பற்ற வலையிலே சிக்கிக்கொண்டு கிடக்கிறேன். இந்தச் சோலையில் நீ வாழ நினைத்தாயானால் திருவாழி திருச்சங்குடையவனான எம்பெருமான் இங்கே வரும்படி கூவுவது மற்றும் நான் இழந்த பொன் வளையல்களைக் கொண்டு வந்து கொடுப்பது ஆகிய இரண்டுள் ஏதாவதொரு கார்யம் நீ கட்டாயம் செய்தே ஆக வேண்டும்.

பத்தாம் பாசுரம். எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவாமல் இருந்தால் உனக்கு தண்டனை கொடுப்பேன் என்கிறாள்.

அன்றுலகம் அளந்தானை உகந்து அடிமைக்கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்திருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே!
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்

மஹாபலி பலம் மிகுந்திருந்த அக்காலத்தில் திருவுலகளந்தருளின எம்பெருமான் விஷயத்திலே நான் கைங்கர்யத்தை ஆசைப்பட அவனும் அந்தக் கைங்கர்யம் எனக்குக் கிடைக்காமல் செய்ய, அதனால் நான் நோவுபட்டிருந்தேன். அந்த ஸமயத்தில் தென்றல் காற்றும் பூர்ண சந்த்ரனும் எனக்குள்ளே புகுந்து கொண்டு என்னைத் துன்புறுத்தும் ந்யாயத்தை நான் என்னவென்று அறிகின்றிலேன். குயிலே! நீயும் எப்பொழுதும் இந்தச் சோலையிலே இடைவிடாமல் இருந்துகொண்டு, என்னை துன்புறுத்தாமல் இரு. இன்று நாரயணன் எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவாமல் இருந்தால், இந்தச் சோலையில் இருந்து உன்னை விரட்டிவிடுவேன்.

பதினொன்றாம் பாசுரம். இறுதியில் இத்திருமொழியை கற்றுப் பாட வல்லவர்கள், தங்கள் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த புருஷார்த்தத்தைப் (பலன்) பெறுவர்கள் என்கிறாள்.

விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுற என் கடல் வண்ணனைக் கூவு கருங்குயிலே! என்ற மாற்றம்
பண்ணுறு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே

வேல் போன்ற கண்களையுடையவளாய், மென்மை குணங்களையுடையவளாய் நான்கு வேதங்களையும் இசையுடன் பாடக்கூடிய வைதிக ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்கிற ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள் (நான்), திருவடிகள் ஆகாசத்தளவும் போய்ப் பொருந்தும் படியாக நீண்டு வளர்ந்து எல்லா இடங்களையும் வ்யாபித்த பெருமையை உடைய எம்பெருமானை ஆசைப்பட்டு “கரிய குயிலே! கடல்வண்ணனான எம்பெருமானை நான் காணும்படி நீ கூவுவாயாக” என்று அருளிச்செய்த, எம்பெருமானை நன்கு கவிபாடிய இந்தச் சொல்மாலையை ஓத வல்லவர்கள் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடும் அந்தரங்க கைங்கர்யத்தைப் பெறுவர்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment