நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< மூன்றாம் திருமொழி – கோழியழைப்பதன்

எம்பெருமான் இடைப் பெண்களின் வஸ்த்ரங்களை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் இருக்க, அப்பெண்கள் அவனிடத்திலே ப்ரார்த்தித்தும் நிந்தித்தும் வஸ்த்ரங்களைப் பெற்றார்கள். எம்பெருமானும் அப்பெண்களும் கூடி அனுபவித்தார்கள். ஆனால் இந்த ஸம்ஸாரத்தில் எந்த இன்பமும் நிரந்தரமாக நிற்காது என்பதால், அவனும் அவர்களிடம் இருந்து பிரிந்து அவர்கள் இன்பத்தைத் தடுத்தான். அவர்களும் இவன் நம் வஸ்த்ரங்களைப் பறித்தாலும் பறிக்கட்டும், அவனுடன் சேர்ந்து இருப்பதே நன்று என்று நினைத்துக் கூடலிழைக்கிறார்கள். கூடல் இழைப்பது என்பது குறி பார்ப்பதில் ஒரு வகை. பகவத் விஷயம் மிகவும் உயர்ந்ததாகவும் இனிமையாகவும் இருப்பதால், அவனிடத்தில் மிகவும் அன்பு கொண்ட அடியவர்களை, பரம சேதனான அவனை விட்டு, அசேதனமான மற்ற உபாயங்களைக் கொண்டு எப்படியாவது அவனை அடைந்து விடலாம் என்று எண்ணவைக்கும். இப்படி அடியார்களைப் பிரிவில் கலங்கச் செய்யவில்லை என்றால் பிரிந்திருக்கும் எம்பெருமானுக்குப் பெருமை இல்லை என்று ஆகிவிடுமே. ஆக, இந்தப் பதிகத்தில், கண்ணனைப் பெறுவதற்காக இவர்கள் கூடல் இழைத்துப் பார்க்கிறார்கள்.

முதல் பாசுரம். திருமாலிருஞ்சோலையில் எழுந்திருக்கும் மணவாளனான எம்பெருமான் சயனித்திருக்கும் திருவரங்கத்தில் அந்தரங்க கைங்கர்யத்தை ஆசைப்பட்டு அதற்காகக் குறிபார்க்கிறாள்.

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே!

கூடலே! தெளிவுடைய ஞானத்தை உடைய நித்யர்கள் மற்றும் முக்தர்கள் பலரும் வணங்கும் ஸ்வாமியாய், வள்ளலாய், திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் மணவாளனான புருஷோத்தமன் திருப்பள்ளிகொண்டிருக்கும் திருவரங்கத்திலே அவனுடைய திருவடிகளுக்குக் கைங்கர்யம் பண்ணும்படி அவன் நினைத்தான் என்றால் அதை நீ நடத்திக்கொடு.

இரண்டாம் பாசுரம். எம்பெருமானைப் பார்த்தால் என்னைப் பெறுவதற்காக அவன் ஸாதனத்தை அனுஷ்டிப்பவன் போல் இருக்கிறான். அதின் பலனை நான் பெறும்படி செய்வாயா என்று குறிபார்க்கிறாள்.

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றி தன்னொடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே!

கூடலே! காட்டில் உள்ள திருவேங்கடமலையிலும் நகரமான திருக்கண்ணபுரத்திலும் ஒரு வருத்தமும் இல்லாமல், ஆனந்தத்துடன் நித்யவாஸம் செய்தருளுகிற வாமனனாய் அவதரித்த எம்பெருமான் ஓடிவந்து என் கையைப் பிடித்துத் தன்னோடு சேர்த்துக்கொள்வான் என்றால் அதை நீ நடத்திக்கொடு.

மூன்றாம் பாசுரம். ஸர்வேச்வரனான கண்ணன் வருவானா என்று குறிபார்க்கிறாள்.

பூமகன் புகழ் வானவர் போற்றுதற்
காமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன்* மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! எம்பெருமானின் திருநாபீகமலத்தில் பிறந்த ப்ரஹ்மாவும் புகழ்பெற்ற நித்யஸூரிகளும் பாடித் துதிப்பதற்குத் தகுந்த புருஷோத்தமனாய், அழகிய ஒளி படைத்த நெற்றியை உடைய தேவகிப்பிராட்டியுனுடைய சிறந்த பிள்ளையாய், மிக்க பெரும் நற்குணங்களை உடைய ஸ்ரீ வஸுதேவருடைய மாட்சிமை பொருந்திய பிள்ளையான கண்ணன் என்னிடத்தில் வருவானாகில் அதை நீ நடத்திக்கொடு.

நான்காம் பாசுரம். ஆச்சர்யமான லீலைகளைச் செய்த கண்ணன் வருவானா என்று குறிபார்க்கிறாள்.

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே!

கூடலே! இடைப்பெண்களும் இடையர்களும் அஞ்சும்படி மலர்ந்து உயர்ந்திருந்த கடம்ப மரத்தின் மேலேறித் தன் திருவடி நீரினுள்ளே புகும்படிக் குதித்து (எம்பெருமானின் திருவடி படும்) பாக்யசாலியான காளியனின் தலை மேலே நாட்டியமாடிய நடனக் கலையில் வல்லவனான கண்ணன் என்னிடத்தில் வருவானாகில் அதை நீ நடத்திக்கொடு.

ஐந்தாம் பாசுரம். விரோதிகளை அழிக்கும் ஸ்வபாவம் உடைய கண்ணன் வருவானா என்று குறிபார்க்கிறாள்.

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நன்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடைமா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே!

கூடலே! நெற்றியில் அலங்கரிக்கப்பட்ட, பெருமதத்தை உடைய குவலயாபீடம் என்னும் யானையை உதைத்து அழித்த கண்ணன், மாடங்களை உடைய மாளிகைகளால் சூழப்பட்ட மதுரைமாநகரிலே நாம் இருக்கும் தெருவைத் தேடி வந்து, நம்முடன் எல்லோரும் பார்க்கும்படிக் கூடுவானாகில் அதை நீ நடத்திக்கொடு.

ஆறாம் பாசுரம். எனக்கு முன்னே எனக்காக இங்கே வந்து அவதரித்தவன் என்னுடன் கூடுவதற்கு வருவானா என்று குறிபார்க்கிறாள்.

அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால்
செற்றவன் திகழும் மதுரைப் பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! முன்பே எனக்காகவே இருக்கக் கூடியவனாய் மருத மரங்களை முறிந்து விழும்படியாகத் தவழ் நடை பயின்றவனாய் கம்ஸனை வஞ்சனையினாலே அழித்தவனாய், ப்ரகாசிக்கிற மதுரை மாநகர்க்கு அரசனான கண்ணன் வருவானாகில் அதை நீ நடத்திக்கொடு.

ஏழாம் பாசுரம். விரோதிகள் எல்லோரையும் அழித்த கண்ணன் என்னுடன் கூடுவதற்கு வருவானா என்று குறிபார்க்கிறாள்.

அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! முற்காலத்தில் தீய கார்யங்களைச் செய்து வந்த சிசுபாலனும், நின்று கொண்டு இருந்த இரட்டை மருத மரங்களும், ஏழு எருதுகளும், கொக்கு வடிவில் வந்த பகாஸுரனும், வெற்றிவேலையும் பலத்தையும் உடைய கம்ஸனும் விழுந்து முடியும்படி எல்லோரும் பார்க்கும்படி கொன்ற கண்ணன் வருவானாகில் அதை நீ நடத்திக்கொடு.

எட்டாம் பாசுரம். என்னிடம் ஆவலும் அன்பும் உள்ளன. அவனோ ரக்ஷகன் மற்றும் எளியவ்னும் கூட. இந்நிலையில் அவன் வருவானா என்று குறிபார்க்கிறாள்.

ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய நெஞ்சு தவிர வேறிடத்தில் பொருந்தாதவனும் நல்ல நறுமணம் சூழ்ந்த த்வாரகைக்கு ரக்ஷகனும் கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமான கண்ணன் வருவானாகில் அதை நீ நடத்திக்கொடு.

ஒன்பதாம் பாசுரம். தன் உடைமையான உலகை அளந்துகொண்டவன் என்னையும் சேர்த்துக்கொள்ள வருவானா என்று குறிபார்க்கிறாள்.

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! முற்காலத்திலே அழகிய ஆபரணங்களையெல்லாம் பூண்டு வாமனனாக மஹாபலியினுடைய சிறந்த யாக சாலையில் எழுந்தருளி மேலுலகங்களையும் கீழுலகங்களையும் ஒவ்வோரடியினாலே அளந்து கொண்ட த்ரிவிக்ரமன் வருவானாகில் அதை நீ நடத்திக்கொடு.

பத்தாம் பாசுரம். கஜேந்த்ராழ்வானை ரக்ஷித்த எம்பெருமான் எங்களை ரக்ஷிக்க வருவானா என்று குறிபார்க்கிறாள்.

பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே!

கூடலே! அநாதியான நான்கு வேதங்களுக்கும் உட்பொருளாயிருப்பவனாய், மதஜலம் பெருகும்படி நின்ற கஜேந்த்ராழ்வானின் துயர் நீங்கி வாழும்படி அருள்செய்தவனாய், எம்மை ஈர்க்கும் அழகை உடையவனாய், அழகிய இடைப்பெண்களின் நெஞ்சிலே குழைந்திருப்பவனான கண்ணன் வருவானாகில் அதை நீ நடத்திக்கொடு.

பதினொன்றாம் பாசுரம். இப்பதிகத்தைப் பாட வல்லவர்களுக்குப் பலம் சொல்லி முடிக்கிறாள்.

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழற்கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே

ஊடலோடே இருக்கை, குற்றங்களை உணர்த்துகை மற்றும் கூடி இருக்கை ஆகிய செயல்களிலே நெடுங்காலமாக நிலைத்து நின்ற, நிறைந்த புகழை உடைய இடைப்பெண்கள் கூடலிழைத்தமை பற்றி, அழகிய கூந்தலை உடைய ஆண்டாள் (நான்) அருளிச்செய்த இந்தப் பத்து பாசுரங்களையும் சொல்ல வல்லவர்களுக்கு எம்பெருமானைப் பிரிந்து துன்பப்படும்படியான பாவம் இல்லை.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment