தனியன்கள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கேட்க

தனியன்கள் கோயில்களிலும், மடங்களிலும், இல்லங்களிலும் சேவாகாலத் தொடக்கத்தில் சேவிக்கப்படும் ச்லோகங்கள். ஒவ்வொரு ப்ரபந்தத்துக்கும் தனித்தனியாக் தனியங்கள் இருந்தாலும், தொடக்கத்தில் பொதுத் தனியங்கள் என்று சில ச்லோகங்கள் சேவிக்கப் படுகின்றன. அவற்றை அர்த்தத்துடன் இங்கே அனுபவிப்போம்.

srivaishna-guruparamparai

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||

இந்த தனியன் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதர், மணவாள மாமுனிகள் விஷயமாக அருளிச்செய்தது. திருமலையாழ்வார் என்னும் திருவாய்மொழிப் பிள்ளையினுடைய திருவருளுக்குப் பாத்திரமானவரும், ஞானம், பக்தி முதலிய குணங்களுக்குக் கடல் போன்றவரும், எம்பெருமானாரிடத்தில் பக்தி நிறைந்தவருமான மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

இப்புவியில் அரங்கேசற்கு ஈடளித்தான் வாழியே என்று மணவாள மாமுனிகளின் பெருமை பேசுகிறது. ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவரங்கம் பெரிய கோயிலில் ஸ்ரீரங்கநாதர் முன்பே திருவாய்மொழியின் சிறந்த வியாக்கியமான ஈடு முப்பத்தாராயிரப்படியை காலக்ஷேபம் செய்தருளினார். காலக்ஷேப சாற்றுமுறையன்று ஸ்ரீரங்கநாதர் சிறுபிள்ளை வடிவுடன் ஓடிவந்து கை கூப்பி நின்று “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்று தொடங்கும் இந்த தனியனை வெளியிட்டார் திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஸ்ரீ சைலேசர் என்று திருநாமம்.

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம் |
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

குருபரம்பரையின் வரிசையை இத்தனியினில் கூரத்தாழ்வான் அருளிச்செய்துள்ளார் திருமகள் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் முதலாக ஸ்ரீ நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் நடுவாக என்னுடைய ஆசார்யரான எம்பெருமானாரை முடிவிலே உடையதாகிய ஆசார்ய பரம்பரையை வணங்குகிறேன் என்பது இத்தனியனின் பொருளாகும்.

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

இதுவும் கூரத்தாழ்வான் அருளிச்செய்தது.

எவர் நிகரில்லாத எம்பெருமானுடைய பொன் போன்ற இரன்டு திருவடித் தாமரைகளில் எப்பொழுதும் வைத்திருக்கும் பக்தியினாலே உலகில் உள்ள மற்ற எல்லாப் பொருள்களையும் மிக அற்பமாக நினைத்தாரோ, அத்தகைய பகவானும் கருணைக்கடலும் என்னுடைய ஆசார்யருமான இந்த ராமானுஜருடைய
இரண்டு திருவடிகளையும் உபாயமாகப் பற்றுகிறேன் என்பது இந்தத் தனியனின் கருத்தாகும்.

மாதாபிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

இது ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தது.

தாயும் தந்தையும் மனைவியும் மக்களும் செல்வமும் மற்ற எல்லாமும் என்னொடு ஸம்பந்தமுடையவர்க்கெல்லாம் ஆதியாகவும் என்னுடைய குலத்திற்குப் பதியாகவும் இருக்கின்ற நம்மாழ்வாருடைய வகுள மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட எந்த இரண்டு திருவடிகளோ அத்தகைய இரண்டு திருவடிகளை என் தலையாலே வணங்குகிறேன் என்பது இதன் அர்த்தமாகும்.

பூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத
ஸ்ரீ பக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந்
ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

இது பட்டர் அருளிச்செய்தது.

பூதத்தாழ்வாரும் பொய்கை ஆழ்வாரும் பேயாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் குலசேகராழ்வாரும் திருப்பாணாழ்வாரும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் எம்பெருமானாரும் ஸ்ரீ நம்மாழ்வாரும் ஆகிய பெரியோர்களை எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஆழ்வார்கள் பதின்மரையும் ஆசார்யர்களில் முக்கியமானவரான எம்பெருமானாரையும் சேர்த்து அநுஸந்திக்கும் ச்லோகம் இது. இதில் பொய்கையார் பூதத்தார் பேயார் என்கிற முறைப்படியே திருநாமங்களைச் சொல்லாமல் பூதத்தாழ்வாரை முன்னே கூறியும் நம்மாழ்வாரை முடிவில் கூறியிருப்பதும் ச்லோகம் அமைந்த அமைப்பு என்று நினைத்திருக்கலாம். அது அன்று. காஸார பூத மஹதாஹ்வய பக்திஸாராந் ஸ்ரீமத் சடாரி குலசேகர பட்டநாதாந் பக்தாங்கிரிரேணு முநிவாஹந கார்த்திகேயாந் ராமாநுஜஞ்ச யமிநம் ப்ரணதோஸ்மி நித்யம் என்று அடைவு படக் கவி சொல்வதில் அருமையொன்றுமில்லை. ஆயினும் பூதத்தழ்வார் தொடங்கி நம்மாழ்வார் முடிவாக அமைக்கப்பட்ட இந்த தொகிப்பிற்கு நல்லொதொரு காரணம் ஒன்றுண்டு கேளுங்கள்.

ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரை அவயவியாக வைத்து (முழுமையான பகுதியாய்) மற்றுள்ள ஆசார்யர்களை அவயவங்களாக வைத்து (உறுப்பு) முன்னோர்கள் ச்லோகங்களை அருளிச்செய்துள்ளார்கள். அவற்றில்
பூதத்தாழ்வாரை திருமுடியாகவும் பொய்கை பேயாழ்வார்களை திருக்கண்களாகவும் பட்டர்பிரானை திருமுகமாகவும் திருமழிசைப்பிரானை திருக்கழுத்தாகவும்
குலசேகரப் பெருமாளையும் திருப்பாண் பெருமாளையும் திருக்கைகளாகவும் தொண்டரடிப் பொடிகளை திருமார்பாகவும் கலியனை திருநாபியாகவும் எதிராசனை திருவடிகளாகவும் உருவகப் படுத்தியிருத்தலால் அந்த வரிசைக்கு ஏற்ப
இந்த தனியன் அவதரித்தது என்று பெரியோர் கூறுவர். (அவயங்களை) உறுப்புகளை முந்துற வரிசையாகச் சொல்லிப் பிறகு (அவயவியான) முழுமையான ப்ரபந்ந ஜந கூடஸ்தரான நம்மாழ்வார் என்பதைத் தெரியப் படுத்தியுள்ளார் பட்டர். திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும்போது நஞ்ஜீயருடைய ப்ரார்த்தனையினால் அருளிச்செய்த ச்லோகம் இது.

இது காஞ்சீபுரம் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமியால் கொடுக்கப்பட்ட விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இவ்விஷயம் வேதிக்ஸ் அறக்கட்டளை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள க்ரந்தமாலா அறக்கட்டளை மூலம் பதிப்பிக்கப்பட்ட நித்யானுஸந்தானம் புத்தகத்தில் உள்ளது.

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம்ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே ||

இந்தத் தனியன் பொன்னடிக்கால் ஜீயர் விஷயமாக தொட்டயங்கார் அப்பை (பொன்னடிக்கால் ஜீயரின் அஷ்ட திக் கஜங்கள் – எட்டு சிஷ்யர்களில் ஒருவர்) என்பவரால் இயற்றப்பட்டது

ஸ்ரீ மணவாள மாமுனிகள் அடியொற்றி அவரின் பாதரேகை போல இருப்பவரும் தன்னை அன்னாரின் தாஸனாக அனைத்து செயல்பாட்டிற்கும் தன் வாழ்வு நிலைபெற அவரையே சார்ந்திருந்த பொன்னடிக்கால் ஜீயரை வணங்குகிறேன் என்பது பொருளாகும்.

பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் எட்டு சிஷ்யர்களுள்  முதலானவர். ஸ்ரீ ரங்கநாதர் மற்றும்மாமுனிகளின் நியமனித்தினால் வானமாமலை/தோதாத்ரி மடத்தைத் தோற்றுவித்தார். இந்த தனியன் வானமாமலை திவ்ய தேசத்திலும் மற்றுமுள்ள நவதிருப்பதி தேசங்களிளும் வானமாமலை மடத்திலும் வானமாமலை மடத்து சிஷ்யர்களின் இல்லங்களிலும் சேவிக்கப்படுகிறது. பொதுவாக இந்தத் தனியன் ‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‘ தனியன் சொல்லப்பட்ட உடனேயே சேவிக்கப்படுகிறது. மேலும் இந்தத் தனியன், பொன்னடிக்கால் ஜீயரின் சிஷ்யர்களைக் கூடஸ்தராகக் (முதல் ஆசார்யராக) கொண்ட ஆத்தான் திருமாளிகை, முதலியாண்டான் திருமாளிகை (அண்ணவிலப்பன் – அப்பாச்சியாரண்ணா திருவம்சம்) போன்ற திருமாளிகைகளிலும், அந்தத் திருமாளிகை சிஷ்யர்கள் இல்லங்களிலும் சேவிக்கப்படுகிறது.

அடியேன் சாந்தி ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://divyaprabandham.koyil.org/index.php/thaniyans-invocation/

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org