நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

முதலாயிரம்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆண்டாள் நாச்சியார் பெருமையை உபதேச ரத்தின மாலை 24ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார்.

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து 

ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு என்பது ஐந்து என்று ஒரு எண்ணிக்கையாகவும் பயப்படுபவர்கள் என்பதையும் குறிக்கும். அதாவது பஞ்ச பாண்டவர்களுக்குப் பின் இருந்த ஒரே வாரிசான பரீக்ஷித்து போலே ஆழ்வார்கள் பதின்மர்க்கும் ஒரே வாரிசு என்று முதல் அர்த்தம். எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயப்படுபவர்களான ஆழ்வார்களுக்கு ஒரே வாரிசு என்று இரண்டாம் அர்த்தம். பெரியாழ்வார் முழுவதுமாக மங்களாசாஸனம் செய்தார். மற்றைய ஆழ்வார்கள் பரமபக்தி நிலையை அடைந்தார்கள். ஆண்டாளோ, பெரியாழ்வாரைப் போலே மங்களாசாஸனமும் செய்தாள், மற்றைய ஆழ்வார்களைப் போலே பக்தியிலும் உயர்ந்து விளங்கினாள். பிஞ்சாய்ப் பழுத்தல் என்றால், செடி பூத்து, பின்பு காயாகி, பின்பு பழம் தருவது போல் அல்லாமால், “திருத்துழாய் முளைக்கும் போதே பரிமளிக்குமா போலே” முதலிலேயே பழமாகப் கனிந்து இருத்தல். அதாவது, சிறு வயதிலேயே உயர்ந்த பக்தி நிலையிலே இருத்தல். ஆண்டாள் நாச்சியார் ஐந்து வயதிலேயே திருப்பாவை பாடினாள். நாச்சியார் திருமொழியிலே எம்பெருமானை அடைய மிகவும் உருகினாள். மனமே! இப்படிப்பட்ட ஆண்டாளை எப்பொழுதும் கொண்டாடு.

திருப்பாவையைப் பாடி அதில் எம்பெருமானே உபாயம், எம்பெருமானே உபேயம் என்று நிர்ணயித்தும்கூட எம்பெருமான் தன்னை வந்து கைக்கொள்ளாததால் மனம் உடைந்த ஆண்டாள் நாச்சியார், எம்பெருமானை அடையும் ஆசை கட்டுக்கு அடங்காத நிலையில், இந்த நாச்சியார் திருமொழி என்னும் அற்புத ப்ரபந்தத்தை அருளிச்செய்தாள்.

ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும் தன்னை விட்டுசித்தன் கோதை என்றும் பட்டர்பிரான் கோதை என்றும், பெரியாழ்வாருக்கு அடிபணிந்தவளாகவே அடையாளப் படுத்திக் கொள்கிறாள். விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே என்று எம்பெருமான் தன் தந்தையான பெரியாழ்வாருக்காகத் தன்னை ஏற்றுக் கொண்டால், அதுவே தனக்கு உகந்தது என்று அறுதியிட்டுத் தன் ஆசார்ய நிஷ்டையை வெளியிடுகிறாள். பூமிப் பிராட்டியான தனக்கும் எம்பெருமானுக்கும் இருக்கும் நெருக்கமான உறவை மிக அழகாக நமக்குக் காட்டியருளி நம்மையும் பக்திப் பரவசத்தில் ஈடுபடச் செய்கிறாள்.

பெரியவாச்சான் பிள்ளையின் அற்புத வ்யாக்யானத்தையும் புத்தூர் ஸ்ரீ உ வே க்ருஷ்ணஸ்வாமி அய்யங்காரின் விவரணத்தையும் துணையாகக் கொண்டு, இந்த எளிய விளக்கவுரை எழுதப்படுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment