ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி
திவ்ய ப்ரபந்தங்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களாகும். அவற்றின் முதலாயிரம், இரண்டாம் ஆயிரம், இயற்பா, திருவாய்மொழி என்னும் வகைப்பாட்டை நாம் முந்தைய கட்டுரையில் சிறிது அநுபவித்தோம். ஒவ்வோர் ஆயிரத்தின் உள்ளடக்கங்களையும் நாம் சற்று அநுபவித்தோம். இந்த வகைப்பாடும் தொகுப்பும் ஶ்ரீமந்நாதமுனிகளால் செய்யப்பட்டது. இன்று நமக்கு திவ்ய ப்ரபந்தங்களைப் பற்றிய அறிவு கிடைத்தது நம்மாழ்வாரின் அருளினால் ஆகும். ஶ்ரீமந்நாதமுனிகள் திவ்ய ப்ரபந்தங்களையும், அவற்றின் உள்ளாழ்ந்த அர்த்தங்களையும் நம்மாழ்வாரிடமே நேரில் கேட்கப்பெற்றார். கண்ணிநுண்சிறுத்தாம்பை 12,000 முறை அநுஸந்தித்து ஆழ்வாரின் அநுக்ரஹத்தை பெற்றருளினார். கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரின் காலத்திற்குப் பின்னர், ஶ்ரீவைஷ்ணவம் சற்று தொய்வு அடைந்தது. ஶ்ரீமந்நாதமுனிகளால் திவ்ய ப்ரபந்தங்களின் புநருத்தாரணமும், அவரது ஶிஷ்யர்கள் மூலம் வகைப்பாடும் ப்ரசாரமும் நிகழ்ந்து, ஶ்ரீவைஷ்ணவ தர்ஶனம் மீண்டும் செழித்தோங்கியது.
இதுவரை நாம் முதலாயிரத்தை அநுபவித்து வந்தோம். திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றைச் சுருக்கமாக அநுபவித்தோம். ஒவ்வொரு ப்ரபந்தத்திலும் முக்யமான அம்சங்களையும் விவரிக்கப்பட்ட முக்கிய கருத்துக்களையும் நாம் அநுபவித்தோம்.
இனி, பெருமாள் திருமொழியை அநுபவிப்போம்.
பெருமாள் திருமொழி
ஶ்ரீ குலஶேகர ஆழ்வாரால் நமக்கு அருளிச்செய்யப்பட்டது இந்தப் பெருமாள் திருமொழி. இவர் குலஶேகரப் பெருமாள் என்றும் அழைக்கப்படுவார். இவருக்கு ஶ்ரீ ராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது மற்றும் பாகவதர்களிடம் ஆழமான பக்தி இருந்தது. இவருடைய ராஜ ஸபையில் தினமும் ராமாயண கதா பாராயணம் நடத்துவார்; அதை இவர் எப்பொழுதும் கேட்டு ரசித்து அநுபவித்தருளுவார். ஶ்ரீரங்கம் சென்று ஶ்ரீ ரங்கநாதனை தர்சிக்க வேணும் என்று இவருக்கு அளவிட முடியாத அவா.
இவர் க்ஷத்ரிய குலத்தில் அவதரித்தவர்; மிகச் சிறந்த வீரராகவும் விளங்கினார். எம்பெருமானின் அருளால் குற்றமற்ற ஞானத்தை பெற்று, சிறந்த ஶ்ரீவைஷ்ணவராகத் திகழ்ந்தார். ஶ்ரீ ராமர் மீது கொண்ட மிகுந்த ப்ரீதியினால், குலஶேகர ஆழ்வார் குலஶேகரப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். நம் ஸம்ப்ரதாயத்தில் ஶ்ரீ ராமரை “பெருமாள்” என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. இது பல ஆழ்வார்/ஆசார்யர்களின் அருளிச்செயல்களிலும் காணலாம். இவருடைய அருளிச்செயல்களும் அதனாலேயே பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், நம் ஸம்ப்ரதாயத்தில் க்ருஷ்ணனை எப்பொழுதும் கண்ணன்/க்ருஷ்ணன் என்றே அழைக்கும் வழக்கமுண்டு – நம் சொந்தக் குழந்தையை அழைப்பது போல. உண்மையில், “ஶ்ரீ” என்ற விஶேஷணத்தை உபயோகிப்பது கூட நம்மிடையே ஒரு தூரத்தை உண்டாக்குவதாக கருதப்படுவதால், அதைத் தவிர்க்க வேண்டும் என்று ஸம்ப்ரதாயம் கூறுகிறது.
பெருமாள் திருமொழிக்கு அழகான தனியன்கள் உள்ளன. அவற்றின் மூலம் இந்த ப்ரபந்தத்தின் பெருமையை நாம் அறியலாம்.
முதல் தனியன்
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே!
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் – பொன்னம்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு
இந்த தனியன் குலஶேகர ஆழ்வாரின் பெருமையை வர்ணிக்கிறது. வளர்ப்புக் கிளியை நோக்கி அருளிச் செய்யப்பட்ட இந்த தனியனில், தென் திருவரங்கத்தில் நித்யமாக எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ ரங்கநாதனின் திருக்கல்யாண குணங்களை பாட வல்ல சீர்மை மிக்க பெருமாளான, சேர நாட்டின் அரசரான, எங்கள் குலஶேகரனின் பெருமையை எப்பொழுதும் பாடிக்கொண்டிருப்பாய் என்று கூறி, இன்னமுதம் ஊட்டுவதாக வாக்களிக்கிறார்.
இரண்டாம் தனியன்
ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரங்கொடு குடப் பாம்பிற் கை இட்டவன் மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியே
இந்தத் தனியன் குலஶேகர ஆழ்வாரின் வைபவத்தையும், அடியார்களிடம் இவருக்கு இருந்த மிகுந்த அன்பையும் பக்தியையும் விவரிக்கிறது. இவருடைய சில அமைச்சர்கள் அடியார்களிடம் பொறாமை கொண்டு, அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தோடு, ஸந்நிதியில் இருந்த சில ஆபரணங்களைத் திருடி அடியார்கள் மீது பழியை சுமத்தினர்.
குலஶேகர ஆழ்வார், அடியார்கள் ஆபரணங்களை எடுக்கவில்லை என்று அறிவித்தவாறு, விஷப் பாம்புகள் நிறைந்த குடத்தில் தமது கரத்தை இட்டு நிரூபித்தருளினார். அக்காலத்தில் இது ஒரு உண்மையை நிரூபிக்கும் தர்மப் பரீக்ஷையாகக் கருதப்பட்டது. இவ்வாறு பாம்புகளால் எந்த தீங்கும் இல்லாமல் தப்பியருளிய குலஶேகர ஆழ்வார், அடியார்களின் நிரபராதித்துவத்தை நிலைநாட்டினார். அடியார்களின் தூய்மையை நிரூபிக்கத் தம் உயிரையே பணயமாக வைத்தருளிய அத்தகைய ப்ரேமையும் மஹா விஶ்வாஸமும் கொண்ட குலஶேகர ஆழ்வாரின் பெருமை இந்த தனியனில் போற்றிக் கொண்டாடப்படுகிறது.
பெருமாள் திருமொழியின் முக்கிய விஷயங்கள்:
- மொத்தம் 10 பதிகங்கள், 105 பாசுரங்கள் கொண்டது.
- இது ஶ்ரீராமர் மீது அருளிச்செய்யப்பட்ட ப்ரபந்தமாகும்.
- முதல் மூன்று பதிகங்களில், ஆழ்வார் ஶ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீரங்கநாதனுக்கு மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.
- அடுத்த பதிகத்தில், திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.
- தொடர்ந்து, திருவித்துவக்கோடு திவ்ய தேசத்திற்கு மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.
- அதற்கு அடுத்து, நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்தது போல, ஆழ்வார் ஸ்த்ரீ பாவத்தில் க்ருஷ்ணாவதாரத்தின் மீது தம் ப்ரேமையை வெளிப்படுத்துகிறார்.
- கடைசி மூன்று பதிகங்களில், ஆழ்வார் ஶ்ரீராமாவதாரத்தை மிகவும் அற்புதமான முறையில் அநுபவித்தருளுகிறார்.
முக்கியமாக அநுபவிக்கப்படும் திவ்ய தேசங்கள் – ஶ்ரீரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு, திருச்சித்திரகூடம் (கடைசி பதிகம்). திருச்சித்திரகூடத்தை ஶ்ரீராமர் வநவாஸ காலத்தில் தங்கியிருந்த சித்ரகூடத்துடன் ஆழ்வார் தொடர்புபடுத்தி, கோவிந்தராஜ பெருமாள் அதே முறையில் எழுந்தருளியிருப்பதாக அநுபவித்தருளுகிறார்.
ஶ்ரீராமாயணம் ஶரணாகதி ஶாஸ்த்ரமாக போற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது. பெருமாள் திருமொழி முக்கியமாக ஶ்ரீராமாவதாரத்தை கொண்டாடுவதால், இதுவும் ஶரணாகதி ஶாஸ்த்ரமாகவே கருதப்படுகிறது. ஶ்ரீராமாயணத்தில் ஶரணாகதியின் திருஷ்டாந்தங்களைப் பல இடங்களில் நாம் காணலாம் – தேவதைகள் எம்பெருமானிடம் ஶரணாகதி செய்வது; தஶரதன் பரஶுராமரிடம் ஶரணாகதி செய்வது; இளைய பெருமாள் வநவாஸம் செல்லும் போது பெருமாளிடமும் பிராட்டியிடமும் ஶரணாகதி செய்வது; பரதாழ்வான் காட்டில் ஶ்ரீராமரிடம் ஶரணாகதி செய்வது (பெருமாள் அயோத்யா திரும்புவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்). ஶ்ரீராமர் தாமே ஸமுத்ர ராஜனிடம் ஶரணாகதி செய்வது; விபீஷணாழ்வான் பெருமாளிடம் ஶரணாகதி செய்வது – என இவ்வாறு பல த்ருஷ்டாந்தங்கள் காணப்படுகின்றன.
பெருமாள் திருமொழி ஶரணாகதியின் சிறப்பை மிகத் தெளிவாக விளக்குகிறது.
முதல் பதிகத்தில், ஆழ்வார் ஶ்ரீரங்கநாதனிடம் ஶரணாகதி செய்கிறார். ஶரணாகதி செய்த பிறகு, ப்ரபந்நனுக்கு இயல்பாகவே ஆறு விஷயங்கள் உண்டாகும் என்று நம் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்கிறார்கள். ஆனுகூல்யஸ்ய ஸங்கல்பம் (எம்பெருமானுக்கு உகந்த செயல்களை செய்ய வேண்டும் என்ற விருப்பம்), ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம் (அவனுக்கு பிடிக்காதவற்றை தவிர்த்தல்), கோப்த்ருத்வ வரணம் (எம்பெருமானையே ரக்ஷகனாக ஏற்றுக்கொள்ளுதல்), கார்பண்யம் (நம்மிடம் எதுவுமில்லை என்று உணர்தல்), மஹாவிஶ்வாஸம் (எம்பெருமான் நம்மை காப்பாற்றுவான் என்ற பூர்ண நம்பிக்கை), ஆத்ம நிக்ஷேபணம் (ஆத்மாவை எம்பெருமானுக்காக மட்டுமே வைத்திருத்தல்).
இதை “உறங்குவான் கைப்பண்டம் போலே…” என்ற த்ருஷ்டாந்தத்தால் விளக்குவர். ஒருவன் புத்தகம் படிக்கும் போது தூங்கிவிட்டால், புத்தகம் தானாகவே கீழே விழும், அவன் வேண்டுமென்று கீழே வைக்க வேண்டியதில்லை. அதைப் போலவே, ஶரணாகதன் ஆனவனுக்கு இந்த ஆறு விஷயங்களும் படிப்படியாக இயல்பாகவே வளர்ந்துவரும், சுய-முயற்சி தேவை இல்லை.
ஆனுகூல்யஸ்ய ஸங்கல்பம் என்பது எம்பெருமானுக்கு உகந்தவற்றைச் செய்ய வேண்டும் என்ற ஆசையைக் குறிக்கும் போது, ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம் என்பது அவனுக்கு பிடிக்காதவற்றை முற்றிலும் தவிர்த்தலைக் குறிக்கிறது.
இந்த ஆறு விஷயங்களும் அடுத்தடுத்த பதிகங்களில் அழகாக விவரிக்கப்படுகின்றன.
அடுத்த பதிகத்தில், ஆழ்வார் அடியார்களை அநுபவிக்கிறார். எம்பெருமான் தன் அடியார்களிடம் நாம் அநுகூலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், இது ஆனுகூல்யஸ்ய ஸங்கல்பத்திற்கு சிறந்த த்ருஷ்டாந்தமாகும்.
அடுத்த பதிகத்தில், ஆழ்வார் ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனத்தை வெளிப்படுத்துகிறார். இந்த ஜட ஶரீரத்தையும் ப்ரக்ருதி மண்டலத்துடனான தொடர்பையும் விரும்பாமல் இருக்கிறார்.
அடுத்த பதிகத்தில், திருவேங்கடமுடையானை அநுபவிக்கும்போது, எம்பெருமானின் ஆனந்தத்திற்காக இருப்பதே தன் ஒரே விருப்பம் என்றும், வேறு எந்த குறிக்கோளும் தனக்கில்லை என்றும் உறுதியாக அருளிச் செய்கிறார்.
அடுத்த பதிகத்தில், திருவித்துவக்கோட்டு எம்பெருமானை அநுபவிக்கும்போது, தன் கார்ப்பண்யத்தை வெளிப்படுத்துகிறார். எம்பெருமானின் திருவடி தவிர தனக்கு வேறு கதியில்லை என்று அருளிச் செய்கிறார்.
அர்ச்சாவதார எம்பெருமான்களை அநுபவித்த பிறகு, க்ருஷ்ணாவதாரத்தை அநுபவிக்கிறார். ஒரு பதிகம் தேவகியின் ஆற்றாமையின் தொனியில் அமைந்துள்ளது; மற்றொன்று ஒரு கோபிகையின் பாவத்தில் அருளிச்செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு, கடைசி மூன்று பதிகங்களில் ஶ்ரீராமாவதாரத்தை அநுபவிக்கிறார். “மன்னுபுகழ்…” பதிகத்தில், கௌஸல்யையின் பாவத்தில் ஶ்ரீராமனுக்கு அழகான தாலாட்டு பாடுகிறார். அடுத்த பதிகத்தில், ஶ்ரீராமர் வநவாஸம் சென்றதால் பிரிவைத் தாங்க முடியாத தஶரதனின் புலம்பலாக அருளிச்செய்கிறார்.
கடைசி பதிகத்தில், ஶ்ரீராமாயண சரித்ரம் முழுவதும் அழகாகவும் தெளிவாகவும் அருளிச் செய்கிறார். எம்பெருமான் இப்பொழுது திருச்சித்ரகூடம் திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கிறான் என்று அருளிச்செய்து, இந்த மகிமைமிக்க அற்புதமான ப்ரபந்தத்தை ஆழ்வார் நிறைவு செய்கிறார்.
இங்கே மேலும் ஒரு முக்யமான அம்சத்தை கவனிக்க வேண்டும் — முதல் பதிகத்தில் எம்பெருமானிடம் ஶரணாகதி செய்த உடனே, அடுத்த பதிகத்திலேயே அடியார்களின் வைபவத்தை கொண்டாடுகிறார். இது இந்த ப்ரபந்தத்தின் மிக முக்யமான அம்சமாகும்.
திருச்சந்த விருத்தம்
இது மிகவும் அழகான ப்ரபந்தமாகும். இது திருமழிசைப்பிரானால் நமக்கு அருளிச் செய்யப்பட்டது. திருமழிசை ஆழ்வார் திருமழிசைப் பிரான் என்றும் அழைக்கப்படுவார்.
குலஶேகர ஆழ்வார், பெருமாள் (ஶ்ரீராமர்) மீது கொண்ட மிகுந்த அன்பினால் குலஶேகரப் பெருமாள் என்று அழைக்கப்படுவது போல, திருமழிசை ஆழ்வார் திருமழிசைப்பிரான் என்று அழைக்கப்படுகிறார்.
திருக்குடந்தை எம்பெருமானுக்கு ஆராவமுதப் பிரான் என்று திருநாமம் உண்டு. திருமழிசை ஆழ்வார் ஆராவமுதப் பிரானிடம் கொண்ட மிகுந்த அன்பினாலும் திவ்யமான தொடர்பினாலும், திருமழிசைப் பிரான் என்று அழைக்கப்படுகிறார். அதே சமயம், திருக்குடந்தை எம்பெருமான் ஆராவமுத ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறான். இவ்வாறு எம்பெருமானும் ஆழ்வாரும் தம் பட்டப்பெயர்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். இது இருவருக்கிடையே இருந்த ஆழமான அன்பையும் அபிமானத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது.
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் என்று இரண்டு ப்ரபந்தங்களை அருளிச்செய்தார். இந்த இரண்டே ப்ரபந்தங்கள் மட்டுமே இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கின்றன என்று சொல்வதே மிகவும் பொருத்தமானதாகும். குரு பரம்பரா ப்ரபாவம் திருமழிசை ஆழ்வார் 4,700 ஆண்டுகள் என்ற மிக நீண்ட ஆயுளை உடையவராக இருந்தார் என்று எடுத்துக்காட்டுகிறது. இவர் பல க்ரந்தங்களும் / ப்ரபந்தங்களும் இயற்றியருளினார். ஆயினும், இவற்றைப் படித்து அநுபவிப்பவர் யார் என்று ஆழ்வார் நினைத்தருளி, தம் அனைத்து அருளிச்செயல்களையும் காவிரி நதியில் ஆழ்த்திவிட்டார். அவற்றில், மேற்கூறிய இரண்டு ப்ரபந்தங்கள் மட்டுமே அவரிடம் திரும்பி வந்தன — இவை காக்கப்பட்டு ப்ரசாரப்பட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. ஆகவே, இந்த இரண்டு ப்ரபந்தங்களை மட்டும் ஆழ்வார் வருங்கால சந்ததியினருக்காக காத்தருளினார்.
திருச்சந்த விருத்தம் தமிழ் இலக்கணத்தில் “விருத்தப் பா” மற்றும் “ஆசிரிய விருத்தப் பா” வகையைச் சேர்ந்தது. இதை திருவாசிரிய விருத்தம் என்று ஏன் அழைக்கவில்லை என்று ஒருவர் வியக்கலாம். சந்தம் என்பது அழகான இசையை குறிக்கும் என்பதை அறிந்தால் இந்த ஸந்தேஹம் தீரும். திருச்சந்த விருத்தம் மற்ற எல்லா ப்ரபந்தங்களையும் விடத் தனித்துவமான மற்றும் அழகான ராகத்தில் ஸந்நிதிகளில் சேவிக்கப்படுகிறது. அதனாலேயே இந்த திருநாமம் வந்தது.
இந்த ப்ரபந்தத்திற்கு இரண்டு தனியன்கள் உள்ளன. முதல் தனியன் திருச்சந்த விருத்தத்தின் பெருமையை விவரிக்கிறது; இரண்டாம் தனியன் ஆழ்வாரின் பெருமையை விவரிக்கிறது.
முதல் தனியன்
தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர் தீர
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும்
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம் பதியே
இத்தனியன் ஆழ்வாரின் அவதார ஸ்தலமான திருமழிசையின் மஹிமையை முதலில் கூறி, தொடர்ந்து ஆழ்வாரின் க்ருபையையும் எடுத்துரைக்கிறது. அவ்விடம் சந்தன மரங்களாலும் அகில் மரங்களாலும் சூழப்பட்டு, மண்ணானது மணம் கமழ்வதாய் விளங்கும். பெரிய பிராட்டியார் மிகுந்த மகிழ்வுடன் அங்கு எழுந்தருளியிருக்கின்றார். இத்திவ்யதேசத்தில் திருவவதாரம் செய்தருளிய ஆழ்வார், இவ்வுலகில் இந்த திருச்சந்த விருத்தத்தைச் சிந்திப்போர் / அநுஸந்திப்போர் அனைவரின் துக்கமும் நீங்கும் பொருட்டு இப்ப்ரபந்தத்தை அருளினார்.
இரண்டாவது தனியன்
உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க – உலகு தன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.
இத்தனியன் திருமழிசையின் மஹிமையை விஶேஷமாக உணர்த்துகின்றது. பூர்வகாலத்தில், தபஸ் அநுஷ்டிப்பதற்கு உகந்த ஸ்தலத்தை நிர்ணயிப்பதற்காக, ப்ரஹ்மா புலவர்களால் போற்றப்படும் தராசினால் மஹத்தான தீர்த்தங்கள் யாவற்றையும் ஒரு பக்கத்திலும் திருமழிசையை மறுபக்கத்திலும் வைத்துத் தூக்கினார். அப்போது திருமழிசை வைத்த பக்கமே கனமுடையதாய் விளங்கியது. ஆழ்வார் திருவவதாரம் செய்தருளிய இத்திவ்யதேசத்தின் மஹிமை அத்தகையதாகும்.
நான்முகன் திருவந்தாதியில், ப்ரஹ்மாவையும், அவர் ஸ்ருஷ்டிக்கும் தேவதைகளையும் உள்ளடக்கிய இவ்வுலகம் யாவும் ஶ்ரீமந்நாராயணனாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்று ஸம்ஸாரிகளுக்கு ஆழ்வார் உபதேசம் அருளிச்செய்தார். ஶாஸ்த்ரங்களிலிருந்து பல அர்த்தங்களை விஶதமாக எடுத்துக்காட்டி, பரமபத நாதனாகிய எம்பெருமானையே நாம் ஆஶ்ரயிக்க வேண்டும் என்று உபதேசித்தருளினார். ஆயினும், ஸம்ஸாரிகள் இவ்வுபதேசத்தை ஏற்று நடவாமையால் மனம் நொந்த ஆழ்வார், தாமாவது எம்பெருமானின் கல்யாண குணங்களை நன்றாக அநுபவிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.
திருச்சந்த விருத்தத்தின் 120 பாசுரங்களில், ஆழ்வார் எம்பெருமானை அழகுற அநுபவிக்கிறார். எம்பெருமானின் ஐந்து நிலைகளாகிய பர, வ்யூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்சா என்னும் இவற்றை, ஆழ்வார் அநுபவித்தருளினார்.
- பரம் – பரமபதத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருமேனி, அவனது பரத்வத்தை வெளிப்படுத்துவது
- வ்யூஹம் – திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் திருமேனி
- விபவம் – அவன் அருளிச்செய்த பல திருவவதாரங்கள்
- அர்ச்சா – பல திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கும் திருமேனி
- அந்தர்யாமி – எம்பெருமான் ஸர்வ சேதனர்களிலும் உள்ளுறைந்திருக்கும் நிலை
நான்முகன் திருவந்தாதியை பரோபதேசமாகவும், திருச்சந்த விருத்தத்தை எம்பெருமானின் திருமேனியையும் கல்யாண குணங்களையும் குறித்த ஸ்வாநுபவமாகவும் கொள்ளலாம். ஆயினும், இதிலும் கூட ஆழ்வார் தம் மனதை நோக்கி உபதேசம் அருளிச்செய்வதன் மூலம் நம்மைப் போன்றோருக்கும் பரோபதேசம் புரிகின்றார்.
ப்ரபந்தத்தின் முதல் பகுதியில், எம்பெருமானின் மேன்மையை ஆழ்வார் அநுபவிக்கத் துவங்குகின்றார். பல பாசுரங்களில், எம்பெருமான் ஜகத்காரணத்வம் உடையவன் என்றும், நித்யமான பரமபதமும், ஸ்ருஷ்டிக்கப்பட்ட இவ்வுலகும் ஆகிய உபய விபூதிக்கும் நாதன் என்றும், இந்த ஸமஸ்த ஸ்ருஷ்டியையும் எவ்வாறு நிர்வஹிக்கின்றான் என்றும், எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக எவ்வாறு விளங்குகின்றான் என்றும் அருளிச்செய்கிறார்.
18ஆம் பாசுரத்தில், திருப்பாற்கடலில் ஆதிஶேஷன் மீது எம்பெருமான் ஶயநித்தருளும் வைபவத்தை ஆழ்வார் அருளிச்செய்கின்றார், இதன் மூலம் அவனது வ்யூஹ ரூபத்தை அநுபவிக்கின்றார்.
19ஆம் பாசுரம் முதல், எம்பெருமானின் பல திருவவதாரங்களை ஆழ்வார் அநுபவிக்கத் தொடங்குகின்றார். முதலில் ஹம்ஸாவதாரத்தை அருளிச்செய்கின்றார். அதாவது, வேதங்களை மறந்துபோன ப்ரஹ்மாவிற்கு அன்னப்பறவை வடிவில் எழுந்தருளி வேதங்களை உபதேசித்தருளிய திருவவதாரம். இவ்வாறு பல திருவவதாரங்களைத் தொடர்ந்து அநுபவித்தருளுகிறார்.
49ஆம் பாசுரம் முதல், அர்ச்சாவதார அநுபவத்தை விஸ்தாரமாக அருளிச் செய்கின்றார். அரங்கன், திருவேங்கடமுடையான், ஆழ்வாருக்கு மிகவும் ப்ரியமான திருக்குடந்தை எம்பெருமான் மற்றும் பல திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களை அநுபவிக்கிறார். அவனது அந்தர்யாமி ரூபத்தையும் அநுபவித்தருளினார். இத்திவ்யதேசங்களில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதன் முக்கிய நோக்கம் ஆழ்வாரின் திருவுள்ளத்தில் புகுவதற்கே என்று ஆழ்வார் நிர்ணயிக்கின்றார். இது ஸம்ப்ரதாயத்தின் மிக முக்யமான அர்த்தத்தை வெளிக்காட்டுகிறது – அதாவது பல திவ்யதேசங்களில் அர்ச்சா ரூபம் எடுப்பதன் ஒரே நோக்கம், அடியார்களின் திருவுள்ளத்தில் புகுவதற்கே என்பதாகும்.
“அத்தனாகி அன்னையாகி…” என்னும் 115ஆம் பாசுரத்தின் மூலம், எம்பெருமான் மோக்ஷம் அருள எழுந்தருளியிருக்கையில், இவ்வுலகாகிய துக்க ஸாகரத்தில் மூழ்கியதால் மனம் வருந்த வேண்டாம் என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்கின்றார். எம்பெருமான் “மாஶுச:” என்று அருளிச்செய்துள்ளதால் நாம் ஶோகிக்க வேண்டியதில்லை. பிள்ளை லோகாசார்யர் முமுக்ஷுப்படியில் இப்பாசுரம் சரம ஶ்லோகத்தின் அர்த்தத்தை உணர்த்துவதாக காட்டியருளினார். நம்மை உஜ்ஜீவிப்பிப்பதற்கு எம்பெருமான் இவ்வளவு ப்ரயத்னம் செய்கையில், நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
கடைசிப் பாசுரமான “இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று …” என்பதில், ஆழ்வார் பரமபதம் அடைந்ததாக ஸ்பஷ்டமாக அருளிச்செய்கின்றார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் மோக்ஷம் அடைந்ததாக அருளிச்செய்தது போலவே, இங்கும் ஆழ்வார் “அறாத இன்ப வீடு பெற்றதே” என்று அருளிச்செய்து இதனை வெளிப்படுத்துகின்றார்.
திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி
இந்த இரண்டு ப்ரபந்தங்களும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்டவை. அவர் ஶ்ரீரங்கத்தில் வாசம் செய்து எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தருளி வந்தார். தம்மை தொண்டரடிப்பொடி என்றே அடையாளப்படுத்தி கொண்டார். அதாவது, அடியார்களின் காலடியில் இருக்கும் பொடி (அ) தூசி என்று அடியார்க்கு அடியாராகவே தம்மை நிலை நிறுத்திக் கொண்டார். இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்த அவர், எம்பெருமான் மீது அளவிலா அன்பு கொண்டு அவனுக்கு மாலைகள் தொடுத்தருளினார்.
“திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார்” என்னும் வாக்யத்தால் திருமாலை பெருமை பெற்று விளங்குகின்றது. அதாவது, திருமாலையை அறியாதவர்கள் திருமாலாகிய ஶ்ரீமந்நாராயணனையே அறியாதவர்கள் ஆவர். ஆழ்வார் இந்த ப்ரபந்தத்தில் பல ஆழமான அர்த்தங்களை அழகுற அருளிச்செய்துள்ளதால், நாம் யாவரும் இதனை நன்கு கற்க வேண்டும். இப்ப்ரபந்தத்தை ஸகல ஶ்ரீவைஷ்ணவர்களும் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று நம் ஆசார்யர்கள் நிர்ணயித்தருளினார்கள்.
திருமாலை தனியன் (திருவரங்கப் பெருமாள் அரையர் அருளிச்செய்தது)
மற்றொன்றும் வேண்டா மனமே! மதிள் அரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக் கீழ் – உற்ற
திருமாலை பாடும் சீர்த் தொண்டரடிப்பொடி எம்
பெருமானை எப்பொழுதும் பேசு
ஆழ்வார் பெரிய பெருமாளின் (கண்ணன் எம்பெருமானே பெரிய பெருமாள்) திருவடியிணையில் முழுமையாக ஈடுபட்டு, வேறொன்றையும் நினையாது திருமாலை பாடுகிறார். அரையர் தம் மனதை நோக்கி, இவ்வாறு பெரிய பெருமாளின் திருவடியிணையில் ஒருமுகமாக நிலைத்திருக்கும் தொண்டரடிப்பொடி எம்பெருமானை எப்பொழுதும் பேசுமாறு கூறுகிறார்.
திருமாலையின் உள்ளர்த்தங்கள்
இங்கு ஆழ்வார் பல விஷயங்களை அநுபவித்தருளுகிறார். எம்பெருமானின் திருநாம ஸங்கீர்த்தனத்தை கொண்டாடுவதிலிருந்து துவங்குகிறார். எம்பெருமானின் திருநாமங்களின் மஹிமையை அருளிச்செய்கிறார்.
“காவலில் புலனை வைத்து..” என்னும் பாசுரத்தில், எம்பெருமானின் திருநாமங்களை ஓதுவதால் யமனுக்கு நாம் அஞ்சோம்; அவன் தலையில் நம் திருவடிகளை வைப்போம் என்று ஆழ்வார் அருளிச்செய்கிறார்.
அடுத்து, “பச்சை மாமலை போல் மேனி..” என்னும் பாசுரத்தில், நம் பூர்வாசார்யர்கள் த்ருதீய விபூதி (அதாவது நித்ய விபூதி மற்றும் லீலா விபூதிகளிலிருந்து வேறுபட்ட மூன்றாம் விபூதி) என்று கொண்டாடும் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் அரங்கநாதன், ஆழ்வாருக்கு மிகவும் ப்ரியமானவன் என்றும், அந்தத் திருவரங்கனின் திவ்ய அவயவங்களையே அநுபவிக்க விரும்புகிறார் என்றும், பரமபதத்தைக் கூட விரும்பவில்லை என்றும் ஆழ்வார் அருளிச்செய்கிறார்.
மூன்றாம் பாசுரத்திலிருந்து, ஆழ்வார் எம்பெருமானின் திவ்ய குணங்களையும் எம்பெருமானின் அர்ச்சாவதாரங்களின் மஹிமையையும் அநுபவித்தருளுகிறார். ஶ்ரீரங்கநாதனின் அர்ச்சா ரூபத்தினால் மட்டுமே எம்பெருமான் விஷயத்தில் தமக்கு அபிநிவேஶம் உண்டானது என்றும், அதுவே இந்த அபிநிவேஶத்தை மேலும் வளர்த்தது என்றும் ஆழ்வார் அருளிச்செய்கிறார். அவனது திவ்ய திருமேனியின் ஸௌந்தர்யம் எம்பெருமான் விஷயத்தில் அபிநிவேஶத்தை வளர்த்தது மட்டுமின்றி, தம் மனதிலுள்ள க்லேஶங்களையும் நீக்கியது என்று ஆழ்வார் அருளிச்செய்கிறார்.
ஆழ்வார் தம் தாழ்ச்சியை பலமுறை அருளிச்செய்கிறார். கர்ம, ஜ்ஞான, பக்தி யோகங்களுக்குத் தாம் தகுதியற்றவர் என்றும், எம்பெருமானின் திருவடியைப் பற்றிக்கொள்ள மட்டுமே இயலும் என்றும் உறுதியாக அருளிச்செய்கிறார். இவ்வாறு அவலநிலையில் இருந்து எம்பெருமானை ரக்ஷிக்கும்படி வேண்டியும், இதுவரை ஏன் அவன் அவ்வாறு செய்யவில்லை என்று ஆழ்வார் வியந்தருளுகிறார். பல பாசுரங்களில் தமக்கு எந்த ஸத்குணங்களும் இல்லை என்றும், துர்குணங்களே நிறைந்திருக்கின்றன என்றும் ஆழ்வார் அருளிச்செய்கிறார்.
இந்த ப்ரபந்தத்தின் 38வது பாசுரம் மிகவும் முக்யமானது.
“மேம்பொருள் போகவிட்டு மெய்மையை மிக உணர்ந்து…” என்னும் பாசுரத்தில், ஆழ்வார் “வாழும் சோம்பர்” என்று குறிப்பிடுகிறார். இவர்கள் ரஹஸ்யத்ரயத்தை நன்கு கற்று, அதில் முழு விஶ்வாஸம் கொண்டவர்கள். எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராயிருப்பவர்கள். ஆனால் தம் நன்மைக்காக அணுவளவும் ப்ரயத்னம் செய்ய மாட்டார்கள். இந்தப் பாசுரம் த்வய மஹாமந்த்ரத்திற்கும் சரம ஶ்லோகத்திற்கும் உரிய அர்த்தத்தை நிலைநாட்டுகிறது. மேலும், இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் “காம்பறத் தலை சிரைத்து” என்று குறிப்பிடும்போது, உபாயாந்தரங்களுடன் அணுவளவும் ஸம்பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அர்த்தமாகிறது.
அடுத்தடுத்த பாசுரங்களில், பூர்வோக்த குணங்களை வெளிப்படுத்தும் பாகவதர்களின் மஹிமைகளை அருளிச்செய்கிறார். நாம் எவ்வாறு அவர்களுடன் ஸம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்றும் அருளிச்செய்கிறார்.
இறுதியாக, 45வது பாசுரமான “வளவெழும் தவள மாட மதுரை மாநகரம் தன்னுள்..” என்பதில், எம்பெருமான் தம் தாழ்வான வார்த்தைகளை மஹா கவிதையாக கொண்டாடுகிறான் என்றும், அவ்வளவு வாத்ஸல்யம் உடையவன் என்றும் ஆழ்வார் அருளிச்செய்து, அவ்வாறிருக்கும் எம்பெருமானை இந்த ப்ரபந்தத்தின் மூலம் கொண்டாடினோம் என்று நிறைவு செய்கிறார்.
திருப்பள்ளியெழுச்சி
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை அருளிச்செய்த பின்னர் திருப்பள்ளியெழுச்சியை அருளிச்செய்தார். இது திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானத்தின் அவதாரிகையில் காட்டப்படுகிறது. இது மிகவும் அழகான ப்ரபந்தம். இதில் ஆழ்வார் எம்பெருமான் ஶ்ரீரங்கநாதனுக்கு ஸுப்ரபாதம் பாடுகிறார். ஸுப்ரபாதம் என்பது எம்பெருமானை துயில் எழுப்புவதாகும். எம்பெருமான் எப்பொழுது உறங்குகிறார் என்ற பெரிய கேள்வி எழும். ‘உறங்குவான் போலே யோகு செய்யும்’ என்று ஆழ்வார் அருளியது போல், எம்பெருமான் யோக நித்ரா நிலையில் இருக்கிறார். அந்த நிலையில், எம்பெருமான் நமக்கு நன்மை செய்யும் வழிகளை சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், நாம் ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் சென்று எம்பெருமானை க்ருபையுடன் எழுந்தருள வேண்டி ப்ரார்த்தித்தால், நாம் அவனுடைய திவ்ய அநுக்ரஹத்திற்கு பாத்திரமாவோம். இது நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. வால்மீகி ராமாயணத்தில் ரிஷி விஶ்வாமித்ரர் “கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வ ஸந்த்யா ப்ரவர்த்ததே …” என்ற ஶ்லோகத்தால் ஶ்ரீராமரை எழுப்புவதை காண்கிறோம். அவ்வாறே, தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஶ்ரீரங்கநாதனை இப்ப்ரபந்தத்தில் எழுந்தருளச் செய்கிறார்.
தனியன் 1
தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேஶயம் ராஜவதர்ஹணீயம் |
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||
ஆச்சர்யமான குணங்களை உடைய பெரியபெருமாள் ஆதிஶேஷன் மேல் ஶயனித்து, சக்ரவர்த்தியைப் போன்று அனைவராலும் அர்ச்சிக்கப்படுகிறார். அப்படிப்பட்ட பெரியபெருமாள், பரமபதத்தில் பரவாஸுதேவனாக விளங்குகிறார். அவரைத் தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி என்னும் பாமாலையால் மிகுந்த க்ருபையுடன் எழுந்தருளச் செய்தார். அத்தகைய மஹானான தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நான் ஸேவிக்கிறேன்.
தனியன் 2
மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னிய சீர்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் வண்டு
திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானை பள்ளி
உணர்த்தும் பிரான் உதித்த ஊர்
யோக நித்ரையில் ஶயனித்திருந்த எம்பெருமானை எழுந்தருளச் செய்து நமக்கு மஹத்தான உபகாரம் செய்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் அவதார ஸ்தலம், மண்டங்குடி என்று வேதங்களில் நிபுணர்களான மாமறையோர் போற்றுகின்றனர்.
இவ்வாறு, இரண்டு தனியன்களும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ப்ரபாவத்தையும், அவரது அவதார ஸ்தலத்தையும், பெரியபெருமாளையும் பெருமைப்படுத்துகின்றன.
இந்த ப்ரபந்தத்தில், பல பாசுரங்களில் தேவதைகள், ரிஷிகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் அனைவரும் வந்து பெரியபெருமாளை க்ருபையுடன் எழுந்தருளச் செய்ய ஆவலுடன் காத்திருப்பது வர்ணிக்கப்படுகிறது. ப்ரஹ்மா, ருத்ரன், ஸ்கந்தன், இந்த்ரன், வருணன் முதலான தேவதைகள், எம்பெருமானை முதலில் எழுப்புவதற்கு போட்டியிட்டுக் கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகின்றனர். ஸந்நிதி திறக்கப்படும்போது பெரியபெருமாளின் கடாக்ஷம் தங்கள் மேல் முதலில் விழ வேண்டும் என்று காத்திருக்கின்றனர்.
முதல் பாசுரமான “கதிரவன் குண திசை..” என்பதில், ஆழ்வார் கரை புரண்டோடும் கடலைப் போன்று அடியவர்கள் திரண்டு வந்திருக்கின்றனர் என்கிறார். அவர்களுடன் வந்தோர் பெரிய வாத்யங்களை வாசிக்கின்றனர். எம்பெருமான் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கி எழுந்தருளி தர்ஶனம் அருளவேண்டும் என்று ஆழ்வார் ப்ரார்த்திக்கிறார்.
ஆழ்வார் இதே பாவனையை அழகுடன் அடுத்தடுத்த பாசுரங்கள் அனைத்திலும் வெளிப்படுத்துகிறார்.
கடைசி பாசுரமான “கடிமலர்க் கமலங்கள்..” என்பதில், ஆழ்வார் எம்பெருமானின் அடியார்களுக்கு அடியார் என்ற தன் ஶேஷத்வ நிலையை வெளிப்படுத்துகிறார். எம்பெருமானின் அடியார்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்யத்தை அருள வேண்டும் என்று பெரியபெருமாளிடம் ப்ரார்த்தித்து ப்ரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
அமலனாதிபிரான்
திருப்பாணாழ்வாரால் அருளிச்செய்யப்பட்டு முதலாயிரத்தின் பகுதியாக விளங்குகிறது இந்த ப்ரபந்தம்.
திருப்பாணாழ்வாரின் ப்ரஸித்தமான சரித்ரம் நாம் அனைவரும் அறிந்ததே. அவர் பாணர் குலத்தில் அவதரித்து திருவரங்கநாதன் மேல் மிகுந்த அநுராகம் கொண்டிருந்தார். பெரியபெருமாளையே ஸர்வஸ்வமாக கொண்டு தன் வாழ்வை நடத்தினார். ஒருமுறை, காவிரி நதிக்கரையில் பெரியபெருமாளின் ஸந்நிதி திக்கை நோக்கி அமர்ந்து, வீணை வாசித்துப் பாடியவாறு எம்பெருமானை அநுஸந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது லோகஸாரங்க முனி ஆழ்வாரை அவமதித்தார். லோகஸாரங்க முனி பெரியபெருமாளின் தர்ஶனத்திற்கு சென்றபோது, பெருமாள் “நம் பாணர்” என்று குறிப்பிட்டு திருப்பாணாழ்வாரை அழைத்து வரும்படி ஆணையிட்டார். அதனை திவ்ய ஆஜ்ஞையாக ஏற்று, லோகஸாரங்க முனி காவிரிக் கரைக்கு திரும்பி சென்று ஆழ்வாரை ஸந்நிதிக்கு வருமாறு வேண்டினார். ஆயினும், ஆழ்வார் தான் திருவரங்கத்தின் திருவீதிகளில் பாதம் பதிக்கத் தகுதியற்றவன் என்று கூறினார். லோகஸாரங்க முனி, ஆழ்வார் தன் பாதங்களைத் தரையில் வைக்க வேண்டியதில்லை என்று கூறி தம் தோளில் ஏற்றிக்கொள்ள முன்வந்தார். மீண்டும் மீண்டும் வற்புறுத்திய லோகஸாரங்க முனிக்கு இணங்கி திருப்பாணாழ்வார் அதற்கு உடன்பட்டார்.
லோகஸாரங்க முனியின் தோளில் அமர்ந்து ஸந்நிதியை நோக்கி பயணிக்கும் போதே, திருப்பாணாழ்வார் நமக்கு அமலனாதிபிரானை அருளிச்செய்தார். ஸந்நிதியை நெருங்கும் தருணத்தில் லோகஸாரங்க முனி ஆழ்வாரை தரையில் இறக்கி வைக்கிறார். திருப்பாணாழ்வார் “கொண்டல் வண்ணனை..” என்ற கடைசி பாசுரத்தை அருளிச்செய்து பெரியபெருமாளின் திருவடியை அடைந்து, அங்கிருந்தே பரமபதத்திற்கு எழுந்தருள்கிறார்.
தனியன் 1 (ஸம்ஸ்க்ருதம்)
ஆபாத சூடம் அநுபூய ஹரிம் ஶயானம்
மத்யே கவேர துஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்டுதாம் நயனயோர் விஷயாந்தராணாம்
யோ நிஶ்சிகாய மனவை முனிவாஹனம் தம் ||
திவ்ய காவேரி நதியின் வட மற்றும் தென் ப்ரவாஹங்களுக்கு இடையே எம்பெருமான் ஶயன திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். அத்தகைய எம்பெருமானை திருவடி முதல் திருமுடி வரை மிகுந்த ஆனந்தத்துடன் அநுபவித்த திருப்பாணாழ்வார், இவ்வளவு அழகான தர்ஶனம் கண்ட கண்கள் இனி வேறு எந்த விஷயத்தையும் பார்க்காது என்று நிர்ணயித்தருளினார். லோகஸாரங்க முனியின் தோளில் ஏறி எழுந்தருளிய அத்தகைய திருப்பாணாழ்வாரை இந்தத் தனியன் வணங்குகிறது.
தனியன் 2 (தமிழ்)
காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி
தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே
லோகஸாரங்க முனியின் தோளில் எழுந்தருளி ஸந்நிதியில் ப்ரவேஶித்தமையால் முனிவாஹனர் என்று அழைக்கப்படும் ஆழ்வார், எம்பெருமானின் அவயவங்களை அநுபவித்தார். திருவடித் தாமரைகள், அழகிய திருவாடை, திருநாபி, திருவுதரம், தேட்டரும் உதரபந்தம், திருமார்பு, திருக்கண்டம், பவளச் செவ்வாய், வாட்டமில்லாத திருக்கண்கள் என்று எம்பெருமானின் திருமேனி முழுவதையும் அநுபவித்தருளினார். எம்பெருமானின் ப்ரபாவங்களை பாட்டினால் கண்டு, அதனால் வாழ்வதே அவரின் இயல்பாக இருந்தது. அத்தகைய திருப்பாணாழ்வாரின் திருவடிகளை இந்தத் தனியன் வணங்குகிறது.
திருப்பாணாழ்வார் பெரியபெருமாளின் திருமேனி முழுவதையும் அழகாக அநுபவித்தருளினார். வ்யாக்யானங்களில் அடுத்தடுத்த பாசுரத்திற்கும் இடையே இரண்டு வகையான ஸம்பந்தங்கள் நிறுவப்படுகின்றன.
முதல் வகை ஸம்பந்தத்தில், எம்பெருமான் ஆழ்வாருக்கு அருளிய உபகாரங்கள் விவரிக்கப்படுகின்றன.
இரண்டாம் வகை ஸம்பந்தத்தில், ஆழ்வார் பெரியபெருமாளின் திருமேனியின் ஒவ்வொரு திவ்ய அவயவத்தையும் எவ்வாறு அநுபவிக்கிறார் என்பது விவரிக்கப்படுகிறது. கடலில் மூழ்கி கொண்டிருப்பவன் ஒரு மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டால், அலைகள் எவ்வாறு அவனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இழுத்துச் செல்லுமோ, அதேபோல் எம்பெருமானின் திவ்ய அவயவங்களும் ஆழ்வாரை ஒரு அநுபவத்திலிருந்து மற்றொரு அநுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
இந்த ப்ரபந்தத்தில் காட்டப்படும் முக்யமான ஶாஸ்த்ரார்த்தம் என்னவென்றால், எம்பெருமானின் திவ்ய மங்கள திருமேனியை அநுபவிப்பதே நமக்கு நித்ய கைங்கர்யமாகவும் உத்தேஶ்யமாகவும் இருக்க வேண்டும் என்பதே.
ஒவ்வொரு பாசுரத்திலும் ஆழ்வார் பெரியபெருமாளின் திருமேனியின் ஒவ்வொரு அவயவத்தை அநுபவிக்கிறார். பெருமாளின் திருக்கண்கள் ஆழ்வாரை எவ்வாறு மயக்கின என்பதை வெளிப்படுத்துகிறார். பின்னர் எம்பெருமானின் திருமேனி முழுவதின் அழகையும் அநுபவிக்கிறார்.
கடைசி பாசுரமான “கொண்டல் வண்ணனை…” என்பதில், பெரியபெருமாளின் அழகிய திருக்கண்களையும் திருமேனியையும் கண்ட பின்னர், பரமபதநாதன் உட்பட எம்பெருமானின் மற்ற அர்ச்சாவதாரங்கள் வேறு எதனையும் பார்க்கமாட்டேன் என்று ஶபதம் கொண்டு ஆழ்வார் ப்ரபந்தத்தை நிறைவு செய்கிறார்.
இவ்வாறு, முதலாயிரத்தின் அனைத்து ப்ரபந்தங்களையும் ஒருவாறாக அநுபவித்தோம்.
ஆதாரம் – https://www.youtube.com/watch?v=nUInuo9g6Lk&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=4 மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/11/simple-guide-to-dhivyaprabandham-part-3/
அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி
பதிவிடம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org