ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 11 – 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 6 – 10

பாசுரம் 11

எம்பெருமானார் “நீர் நாமே எல்லாம் என்றிருக்கும் வடுகநம்பி போன்றோர் பெற்ற பேற்றை ஆசைப் படுகிறீர்” என்று சொல்ல, மணவாள மாமுனிகள் “தேவரீரே அந்நிலையை அடியேனுக்கு உண்டாக்கி, அடியேனை எப்பொழுதும் அடிமை கொண்டு அருள வேண்டும்” என்கிறார்.

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை
என்தனக்கு நீ தந்து எதிராசா! எந்நாளும்
உன்தனக்கே ஆட்கொள் உகந்து

எம்பெருமானாரே! தேவரீரைத் தவிர எம்பெருமானைக் கூட தெய்வமாக அறியாத, பொருந்திய புகழை உடைய வடுகநம்பியுடைய சரம பர்வ நிஷ்டையை தேவரீர் தந்தருளி எக்காலத்திலும் தேவரீருக்கே அடியேனை அடிமையாகக் கொள்ள வேண்டும்.

பாசுரம் 12

எம்பெருமானார் “இப்படி நீர் சொல்வதைச் செய்வதற்கு நமக்குள் என்ன உறவு உள்ளது” என்று கேட்பதாகக் கொண்டு தனக்குத் திருவாய்மொழிப் பிள்ளையுடன் உள்ள உறவை எடுத்துரைக்கிறார் மணவாள மாமுனிகள்.

தேசந் திகழும் திருவாய்மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா!
அப்படியே நீ செய்தருள்

எம்பெருமானாரே! எல்லா இடங்களிலும் ப்ரகாசிக்கும் வைபவத்தை உடையராய் திருவாய்மொழியில் உள்ள ஈடுபாட்டாலே திருவாய்மொழிப் பிள்ளை என்றே அழைக்கப் படுபவரான, தன்னிடத்தில் தானே ஆசார்யத்வத்தை ஏறிட்டுக் கொள்கை முதலான குற்றங்கள் இல்லாத திருமலை ஆழ்வார், தம்முடைய தயைக்குப் பாத்ரமான அடியேனை “இவன் எப்படி மாறினால் உஜ்ஜீவனத்தை அடைவான்?” என்று ஆராய்ந்து தேவரீர் திருவடிகளிலே சேர்த்தருளினாரோ, அவ்வழியிலேயே தேவரீர் அடியேனை உஜ்ஜீவனம் அடையச் செய்ய வேண்டும்.

பாசுரம் 13

தாம் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கக் கூடிய எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் பண்ணி அவர் திருவடிகளில் பரம்பரையாக ஸம்பந்தம் பெற்றவர்கள் பெறும் பேற்றை அருளிச்செய்கிறார்.

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று ஏத்திச் சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்

“யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”, “யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”, “யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக” என்று பல முறை சொல்லி, ஸ்தோத்ரம் பண்ணி, ஸாமர்த்யமாக வாழ்பவர்களுடைய திருவடிகளின் கீழே வாழ்பவர்கள் ஆழ்வார்களுடைய அருளை முழுவதுமாகப் பெறுவர்கள்.

பாசுரம் 14

“தேசம் திகழும்” என்னும் பாசுரத்தோடு இப்பாசுரத்துக்குத் தொடர்பு. நடுவில் வந்த பாசுரம், எம்பெருமானார் வைபவத்தை நினைத்து சொல்லப்பட்டது. எம்பெருமானார் “திருவாய்மொழிப் பிள்ளை உம்மை நம்மிடத்திலே சேர்த்ததைச் சொன்னீர். நீர் அதற்கு மேலே எதுவும் அதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு, மணவாள மாமுனிகள் “அதிகாரம் இருந்தால் தேவரீரிடத்தில் வரவேண்டிய அவச்யம் இல்லையே என்கிறார்”.

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!

எம்பெருமானாரே! ஞானம் மற்றும் அநுஷ்டானங்களில் பூர்த்தியோடு இருக்கும் அதிகாரம் இருந்தால் பெரிய பெருமாளே தன் அருளைக் கொடுக்க மாட்டாரோ? அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாதவர்களுக்காகத் தானே தேவரீர் அருள் புரிந்து ரக்ஷிக்க வேண்டுவது? தேவரீரும் அதிகாரிகளுக்கே அருள் புரிவேன் என்று சொன்னால் அடியேனைப் போன்ற அதிகாரமில்லாதவர்கள் என் செய்து உஜ்ஜீவனத்தை அடையப் போகிறோம்?

பாசுரம் 15

பரம தார்மிகரான எம்பெருமானாரை மீண்டும் மீண்டும் குற்றம் சொல்கிறோம். அவர் திருவடிகளை அன்போடு நினைத்தால் அவரே நமக்கு எல்லா நன்மைகளையும் செய்வார். இப்படியிருக்க, அவரிடத்திலே நமக்கு உண்மையான அன்பு இல்லையே என்று வருந்துகிறார்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா உரைக்கும் இத்தால் என்? அன்பவர்பால்
இப்போதளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது உண்டாவது இனி?

“எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று சொல்லப்படும் இந்த வாசகத்தையே அடியேனுடைய நாக்கு அன்பில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும். இதனால் என்ன பயன்? இந்த க்ஷணம் வரை அவர் விஷயத்தில் ஒரு அன்பையும் என்னிடத்தில் பார்க்கவில்லை. இது வரை வாராத அது இனி எப்பொழுது வரப்போகிறது?

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment