ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 6 – 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 1 – 5

பாசுரம் 6

தேவரீர் விஷயத்தில் அனுகூலமாய் இருப்பவர்களுக்கு தேவரீர் தக்க ஸமயத்தில் நன்மையைச் செய்யலாம். அடியேன் ப்ரதிகூலனாக இருப்பதால் மேலும் மேலும் தவறுகளே செய்வேன். ஆகையால் அதற்கு முன்பு என்னுடைய தேஹத்தைப் போக்கியருள வேண்டும் என்கிறார்.

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ்வினையேன்
தீம்பு முற்றும் தேகமுற்றிச் செல்லுங்கால் ஆம்பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா! இவ்வுடலைத்
தீர்க்கவே ஆன வழி செய்

எப்படி வேப்ப மரம் முற்ற முற்ற, அதன் கசப்பு அதிகம் ஆகுமோ, அதே போல க்ரூரமான கர்மங்களை உடைய நான், உடம்பு முற்ற முற்ற, மேலும் மேலும் தவறுகளையே செய்வேன். ஆகையால், யதிகளுக்கு நாதரானவரே! அடியேனுடைய ஸ்வரூபம் நிலைத்து இருப்பதற்காக, தேவரீர் முற்பட்டுச் சிந்தித்து அடியேனுடைய இந்த உடலை முடிப்பதற்கான வழியைச் செய்தருள வேண்டும்.

பாசுரம் 7

உம்முடைய கார்யம் நாம் ஏன் பண்ண வேண்டும் என்று எம்பெருமானார் கேட்பதாகக் கொண்டு, மணவாள மாமுனிகள் “பால் குடிக்கும் குழந்தை என்று தன் கார்யத்தைத் தானே செய்து கொள்ளுமோ அன்று தான் தேவரீரையே நம்பி இருக்கும் அடியேனும் அடியேன் கார்யத்தைச் செய்து கொள்வேன்” என்கிறார்.

அன்னை குடி நீர் அருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ? என்னே
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்
உனக்கது தாழ்வோ? உரை

தன் குழந்தையிடத்திலே மிகவும் அன்பு கொண்ட தாயானவள் அக்குழந்தைக்கு ஏதேனும் நோய் வந்தால் தான் நீர் முதலியவற்றை அந்த நோயை வளர்க்காத விதத்தில் பருகி, தன்னால் ஊட்டப்படும் குழந்தையின் நோயைப் போக்காளோ? என்ன ஆச்சர்யம்! அடியேனிடத்தில் தாயன்பு கொண்டிருக்கும் எதிராசரே! அடியேன் பண்ண வேண்டிய அனுஷ்டானங்களை அடியேனுக்குப் பதிலாக தேவரீர் அனுஷ்டித்தால் அடியேனுக்கு நன்மையை ஏற்படுத்தினால், அது தேவரீருக்குக் கெடுதலோ? இதைத் தேவரீரே அருளிச்செய்யலாமே.

பாசுரம் 8

எம்பெருமானார் “நாம் தாயைப்போலே உம்மை ரக்ஷிக்க வேண்டும் என்று சொன்னீர். ஆனால் நீரே நல்ல மற்றும் தீய  செயல்களைச் செய்கிறீரே. நாம் எப்படி உம்மை ரக்ஷிப்பது?” என்று கேட்பதாகக் கொண்டு, மணவாள மாமுனிகள் “அடியேனை தேவரீர் ரக்ஷிக்கவில்லை என்றால் அது தேவரீருக்கே அவப்பெயரைக் கொடுக்கும்” என்கிறார்.

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்திருக்கக் கண்டிருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் நன்குணரில்
என்னாலே என்னாசமேலும் எதிராசா!
உன்னாலே ஆமுறவையோர்

தாயானவள், தன்னுடைய குழந்தை பெரிய கிணற்றுக்கு அருகில் சேர்ந்து இருக்க, அதைத் தடுக்காமல் இருந்தாள் என்பதையே தனக்கு அவப்பெயராகப் பெறுகின்றாள். எதிராசரே! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் பாபமாகிற படுகுழியைக் கிட்டின என்னாலே என்னுடைய நாசத்தை விளைத்துக் கொள்ளப்பட்டது என்றாலும் தேவரீரிடத்தில் அடியேனுக்கு இருக்கும் ஸம்பந்தத்தை ஆராய்ந்து பார்க்கவும்.

பாசுரம் 9

அருகில் இருப்பவர்களுக்கு “நீர் பாபங்களே செய்து இன்னும் பல பிறவிகள் எடுக்கவேண்டும்படி இருந்தால் எம்பெருமானாராலே என்ன செய்ய முடியும்” என்பது கருத்தாகக் கொண்டு “அப்படியானாலும், அடியேனுக்காக அவரும் அவதாரம் செய்து அடியேனை ரக்ஷித்து அருளுவார்” என்கிறார்.

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் பாபத்தால்
யான் பிறப்பேனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா

கிணற்றில் விழும் குழந்தையோடே குதித்து அவ்வாபத்தை நீக்கும் தாயைப்போலே அடியேன் பண்ணிய பாபத்தாலே அடியேன் இன்னும் சில பிறவிகளை எடுத்தாலும் அடியேனுக்குத் தந்தையாகிய எதிராசர், அடியேனைக் கைதூக்கி விடுவதற்காக தாமும் அவதரித்து அருளுவார்.

பாசுரம் 10

எம்பெருமானார் திருவடிகளை விட்டு விலகி, மனது வேறு விஷயங்களில் ஈடுபடுவதனாலேயே கர்மமும் அதன் மூலம் ஜன்மமும் கிடைக்கிறது. இனி அப்பேச்சுக்கே இடம் இல்லாதபடி அவர் திருவடிகளைப் பொருந்தி வாழ் என்று தன் திருவுள்ளத்தைக் குறித்து அருளுகிறார்.

பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமாநுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே! வாழ்

எனக்கு பவ்யமான நெஞ்சே! மலர்மகளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகளுக்குப் பாதுகைகளாய் அத்தாலே தாம் ஆனந்தப்படும் செல்வமான நம்மாழ்வாருடைய தேன் பெருகும் மலர் போன்ற திருவடிகளுக்குப் பொருந்திய, ப்ரியமான திருவடி நிலைகளாய், அடியேனுக்குத் தந்தையாய் இருக்கும் ராமானுஜர் என்னும் எம்பெருமானாரைச் சரணடைந்து வாழ்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment