ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 16 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 11 – 15

பாசுரம் 16

எம்பெருமானார் “நம்மிடத்தில் உமக்குச் சிறிதளவும் அன்பில்லை என்றாலும், விரோதமாகவாவது செய்யாமல் இருக்கிறீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு, மணவாள மாமுனிகள் “அதுவும் இல்லை. அறிவிலியான அடியேனுடைய குற்றத்தை போகமாகக் கொள்ளும் தேவரீர் திருவடிகளை என்று நான் அடைவேன்?” என்கிறார்.

ஆகாதது ஈது என்றறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வன் ஆதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா!
என்று உன் அடி சேர்வன் யான்?

யதிராஜரே! நல்லோர்களால் கைவிடப்படுவன எது என்று நன்கறிந்தும், அதை மற்றவர்களுக்கு உபதேசித்தும், அப்படிப்பட்ட செயல்களையே எப்பொழுதும் செய்வேன். இப்படி இருப்பதால், மோஹத்தாலே குருடானவன் என்று திருவுள்ளத்திலே கொண்டு, அடியேனைத் தள்ளிவிட வேண்டாம். எப்போது அடியேன் தேவரீர் திருவடிகளை அடையக் கடவேன்?

பாசுரம் 17

கீழே “எப்பொழுது தேவரீரை அடைவேன்?” என்று கேட்ட இவருக்கு எம்பெருமானார் “சரீர வியோகத்தில் கொடுக்கிறோம்” என்று சொன்னதாகக் கொண்டு “உடனே கொடுக்காமல் காலம் தாழ்த்துவதன் காரணம் ஏதோ?” என்கிறார்.

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஒன்று
இல்லா எனக்கும் எதிராசா! நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவேன் என்ற நீ
தண் என்றிருக்கிறது என் தான்?

யதிராஜரே! தீய செயல்கள் எல்லாவற்றையும் பதித்துக் கொண்டு, நல்ல செயல்கள் ஒன்றும் இல்லாத அடியேனுக்கு, ஸத் புருஷர்கள் அடையத் தகுந்த பரமபதத்தை நாமே தருகிறோம் என்று அருளிச்செய்த தேவரீர் கால தாமதம் செய்வதன் காரணம் என்ன? [உடனே தந்தருள வேண்டும் என்று கருத்து]

பாசுரம் 18

எம்பெருமானார் இவர் ஆசைப்பட்டதைச் செய்து தருவதாக இருக்க, அது கிடைக்கும் வரை பொறுக்க முடியாமல், இந்த ஸம்ஸாரமாகிற இருட்டு அடியேனுக்கு எப்போது முடியும் என்று அவரையே கேட்கிறார்.

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா!
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் குன்றாமல்
இப்படியே இந்த உயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப்பவமாம் நீண்ட இரவு

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே! குறையாமல் இப்படியே இந்த ஆத்மாவுக்கு அறியாமை என்னும் இருட்டை விளைக்கும் இந்த ஸம்ஸாரமாகிற காள ராத்ரியில் (கருப்பு இரவு) அகப்பட்டு வழி தெரியாமல் திகைக்கும் அடியேனுக்கு எப்போது தேவரீரை அடைவதான நல் விடிவு ஏற்படும்? இவ்விஷயத்தில் அடியேன் ஒன்றும் அறியாமல் இருக்கிறேன். எல்லாம் அறிந்த தேவரீர் இதற்கு ஒரு நல்ல விடிவை அருளவேண்டும்.

பாசுரம் 19

எம்பெருமானாரின் கை பார்த்திருக்கும் தான் இப்படி உடம்புக்கு வசப்பட்டிருப்பது அவருக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்குகிறார்.

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்குத் தீங்கன்றோ? நல்லார்கள்
தந்தனயர் நீசர்க்கு ஆட்செய்யச் சகிப்பரோ?
எந்தை எதிராசா! இசை

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே! இரவும் பகலும் அடியேன் இந்த உடம்பின் வழி சென்று ஈடுபட்டிருப்பது தேவரீருடைய பெருமைக்கு ஒரு கேடன்றோ? ப்ரஹ்ம ஞானத்தை உடைய நல்லார்கள் தங்கள் புதல்வர்கள் தாழ்ந்தவர்களுக்கு தாழ்ந்த தொண்டுகளைச் செய்துகொண்டிருப்பதைப் பொறுப்பார்களோ? இதைத் தேவரீரே அருளிச்செய்யவேண்டும்.

பாசுரம் 20

எம்பெருமானார் தனக்கு அர்ச்சிராதி கதியில் சென்று பரமபதத்தை அடையும் பேற்றைச் செய்து கொடுக்க இருக்கிறார் என்பதை உணர்ந்து இனி நமக்குப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பி, அர்ச்சிராதி கதியில் போவது தொடங்கி பரமாத்மாவுக்குத் தொண்டு செய்வது முடிய எல்லாவற்றையும் தாம் பெற்றதாக நினைத்து ஆனந்தம் அடைகிறார்.

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை ஆற்றில்
நாம் மூழ்கி மலம் அற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலந்திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று
மாமலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே

பரமபதத்தை அடைவதைவிடப் போகும் வழியே சிறந்தது என்று சொல்லும்படியான அர்ச்சிராதி கதியில் போகும் இன்பம் எல்லாம் அனுபவித்து, அம்ருதமயமான விரஜா நதியிலே நாம் நம்முடைய வருத்தம் எல்லாம் தீரும்படித் தீர்த்தமாடி, எல்லா தோஷங்களும் நீங்கப் பெற்று, பரிசுத்தமான பரமபதத்தை அடைந்து, குணங்களெல்லாம் திகழும், சுத்தஸத்வமயமான திவ்ய உடம்பைப் பெற்று, நித்யஸூரிகள் எதிர்கொண்டு அழைத்து, ப்ரஹ்மாலங்காரத்தைப் பண்ணி, ஸத்காரங்கள் செய்து, அவர்களுடன் திருமாமணி மண்டபத்திலே சென்று, ச்ரிய:பதியான ஸ்ரீமந்நாராயணன் தன் மடியிலே நம்மை வைத்து மகிழும் செல்வம், யதிராஜர் இதில் ஆசையுடைய நமக்கு அருளும் செல்வமே.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment