ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் இவ்வுலகில் உள்ளவர்களுக்கு உஜ்ஜீவனத்தை அளிப்பதற்காக அழிந்து கிடந்த இவ்வுலகத்தைப் படைப்பது, சாஸ்த்ரங்களைக் கொடுப்பது, தானே வந்து அவதரித்து உபதேசங்களைப் பண்ணுவது, ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களைக் கொண்டு ஸம்ஸாரிகளைத் திருத்துவது என்று பல முயற்சிகளைச் செய்கிறான். உஜ்ஜீவனம் என்பது பகவானுக்கு நித்ய கைங்கர்யம் பண்ணுவது. அது முதல் நிலை. அதனுடைய எல்லை நிலம், பாகவதர்களுக்கு நித்ய கைங்கர்யம் பண்ணுவது. பாகவதர்களில் முக்யமான ஒருவரே ஆசார்யர். அந்த ஆசார்ய ஸ்தானத்தில் சிறந்து விளங்கியவர் எம்பெருமானார். இவர் மாறன் அடி பணிந்து உய்ந்தவன் என்று கொண்டாடப்படுபவர் – நம்மாழ்வாரிடத்தில் மிகவும் அன்பு பூண்டவர். இப்படிப்பட்ட எம்பெருமானாருக்கு யதீந்த்ரர் என்று ஒரு அழகிய திருநாமம் உண்டு. யதீந்த்ரரிடத்தில் மிகுந்த அன்பு பூண்டவர் மணவாள மாமுனிகள். யதீந்த்ர ப்ரவணர் என்று மணவாள மாமுனிகளுக்கு ஒரு சிறப்புத் திருநாமம் உண்டு. இவர் எம்பெருமானாரின் புனரவதாரம்.

இவர் எம்பெருமானார் விஷயமாக இரண்டு அற்புத ப்ரபந்தங்களை அருளியுள்ளார். ஒன்று ஸம்ஸ்க்ருதத்தில் அருளிய யதிராஜ விம்சதி, மற்றொன்று தமிழில் அருளிய ஆர்த்தி ப்ரபந்தம். இவை இரண்டிலும் எம்பெருமானாரிடத்தில் தனக்கிருந்த பேரன்பை அழகாகக் காட்டியுள்ளார்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது – எம்பெருமானாரின் புனரவதாரம் மணவாள மாமுனிகள் என்றால், எதற்காகத் தானே தன் விஷயத்தில் பக்தியுடன் இருக்க வேண்டும்? இதற்குப் பெரியோர்கள் காட்டும் விளக்கம் – எம்பெருமானை வணங்குவது எப்படி என்பதை எம்பெருமான் தானே ஸ்ரீராமனாக இருந்து பெரிய பெருமாளைத் தன் குல தெய்வமாகக் கொண்டு காட்டினான். ஆசார்யனை எப்படி வணங்குவது என்பதை எம்பெருமானார் தாமே மணவாள மாமுனிகளாக இருந்து எம்பெருமானாரைத் தன் இஷ்ட தெய்வமாகக் கொண்டு காட்டினார்.

இப்படி மணவாள மாமுனிகள் அருளிய ஆர்த்தி ப்ரபந்தத்தில் இரண்டு விஷயங்கள் காட்டப் படுகின்றன. ஒன்று எம்பெருமானாரின் திருமேனியை அனுபவித்து மங்களாசாஸனம் பண்ணுவது, மற்றொன்று எம்பெருமானாரைப் பிரிந்து வாழ முடியாமல் அவரைச் சென்று உடனே அடைய ஆசைப்பட்டுக் கதறுவது.

இந்த அற்புத ப்ரபந்தத்துக்கு பிள்ளை லோகம் ஜீயர் ஒரு அழகிய வ்யாக்யானத்தை அருளியுள்ளார். அதன் துணை கொண்டு, இதற்கான எளிய விளக்கவுரையை இங்கே அனுபவிக்கலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment