உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 66

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 65

பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில்
அன்பதுவும் அற்று மிக்க ஆசையினால்
நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர் 

அறுபத்தாறாம் பாசுரம். கீழ்ப் பாசுரங்களில் காட்டிய விஷயத்துக்கு உதாரணமாக யாரேனும் உளரோ என்று தன் திருவுள்ளம் கேட்பதாகக் கொண்டு அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

பின்பழகராம் பெருமாள் ஜீயர் பெரு நகரமான பரமபதத்தை அடைவதில் எந்த ஆசையும் கொள்ளாமல், தன் ஆசார்யரான நம்பிள்ளையிடத்திலே இருந்த பேரன்பினால், அவருக்குத் தகுந்த கைங்கர்யங்களைச் செய்து வந்தார். விலக்ஷணமான நெஞ்சே! நீயும் அப்படிப்பட்ட நிலையை எவ்விதமான தோஷமும் இல்லாமல் எப்பொழுதும் நினை.

பின்பழகராம் பெருமாள் ஜீயர் நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யர். நம்பிள்ளை சிஷ்யராக இருந்த காலத்திலேயே இவர் ஜீயராக இருந்தும், நம்பிள்ளைக்குத் திருமேனி கைங்கர்யங்கள் செய்து வந்தவர். இவருக்கு ஒரு முறை திருமேனியிலே ஏதோ ஒரு உபாதை வர, வைத்யரிடம் சென்று மருந்து வாங்கி உண்டு, அதைச் சரி செய்து கொண்டார். ஸ்ரீவைஷ்ணவர் அதிலும் ஸந்யாஸி, இப்படி மருந்து உட்கொண்டு உடம்பைப் பேணலாமா என்று ஒரு பேச்சு வர, அந்த ஸமயத்தில், பலரும் இதற்குப் பல காரணங்கள் கூறினர். ஒரு ஆசார்யர், இவருக்கு நம்பெருமாளை விட்டுப் பிரிய மனமில்லை என்றார். மற்றொருவர், இவருக்கு ஸ்ரீரங்கவாஸத்தை விட மனமில்லை என்றார். வேறொருவர், இவருக்கு நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டியை விட மனமில்லை என்றார். நம்பிள்ளை, ஜீயரையே அழைத்துக் காரணத்தை வினவ, இவர் தன் ஆசார்யனான நம்பிள்ளை தீர்த்தமாடித் திரும்பி வரும் காலத்திலே அவர் திருமுதுகிலே துளிர்க்கும் வியர்வையை ஸேவிக்கும் பாக்யம் இங்கு தானே உள்ளது, இதை இழக்க விரும்பாததாலேயே அப்படிச் செய்தேன் என்று நம்பிள்ளையின் திருமேனி மீது தனக்கிருந்த எல்லையில்லாத பக்தியை வெளியிட்டார். இதையே இங்கே மாமுனிகள் கொண்டாடுகிறார். நம்மாழ்வாருக்கு ஸ்ரீ மதுரகவிகள் போலேயும், எம்பெருமானாருக்கு வடுக நம்பியைப் போலேயும், இவரும் ஒருவர்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment