திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 16 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருப்பாவை

<< பாசுரங்கள் 6 – 15

இனி, 16 மற்றும் 17ம் பாசுரங்களில், நித்யஸூரிகளான க்ஷேத்ர பாலகர்கள், த்வார பாலகர்கள், ஆதிசேஷன் போன்றோர்களுக்கு இவ்வூரில் ப்ரதிநிதிகளாய் இருப்பவர்களை எழுப்புகிறாள்

பதினாறாம் பாசுரம். இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள்.

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
      கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
      ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
      தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
      நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய்

எங்களுக்கு ஸ்வாமியாய் இருக்கும் நந்தகோபனுடைய திருமாளிகையைக் காப்பவனே! கொடிகள் இருக்கும் தோரண வாயிலைக் காப்பவனே! ரத்னங்கள் பதிக்கப்பட்ட கதவினுடைய தாளை நீக்கவேண்டும். இடைப் பெண்களான எங்களுக்கு ஆச்சர்யமான செயல்களை உடையவனும் நீல ரத்னம் போன்ற திருநிறத்தை உடையவனுமான கண்ணன், நேற்றே எங்களுக்கு ஓசையெழுப்பும் பறையைக் கொடுப்பதாக வாக்களித்தான். அவனைத் திருப்பள்ளி உணர்த்துவதற்காக உள்ளத் தூய்மையுடன் வந்துள்ளோம். ஸ்வாமி! முதலில் உங்கள் வாயால் மறுக்காமல், கண்ணனிடத்தில் அன்பு கொண்ட இந்தக் கதவை நீங்களே திறக்கவேண்டும்.

 

பதினேழாம் பாசுரம். இதில் ஸ்ரீ நந்தகோபன், யசோதை மற்றும் நம்பிமூத்த பிரானை (பலராமன்) எழுப்புகிறாள்.

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
      எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
      எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
      உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
   
  உம்பியும் நீயும் உறங்கு ஏலோர் எம்பாவாய்

வஸ்த்ரத்தையும் நீரையும் சோற்றையுமே தர்மம் செய்யும் எங்கள் ஸ்வாமியான நந்தகோபரே! எழுந்திரும். வஞ்சிக்கொம்பு போன்ற இடைப்பெண்களுக்கெல்லாம் தலைவியாக இருப்பவளே! ஆயர் குலத்துக்கு ஒளி விளக்காய் இருப்பவளே! எங்கள் தலைவியான யசோதைப்பிராட்டியே! உணர்ந்தெழுவாய். வானத்தைத் துளைத்துக்கொண்டு உயர்ந்து எல்லா உலகங்களையும் அளந்தருளிய தேவாதி தேவனே! உறக்கத்தை விட்டு எழுந்திருக்கவேண்டும். சிவந்த பொன்னால் செய்த வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையுடைய செல்வனே! பலராமனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் திருப்பள்ளி உணர்ந்தருள வேண்டும்.

 

18, 19 மற்றும் 20ம் பாசுரங்களில் – கண்ணன் எம்பெருமானை எழுப்பவதற்கு இன்னும் ஏதோ ஒரு குறை உள்ளது என்று யோசித்து, நப்பின்னைப் பிராட்டியின் புருஷகாரம் இல்லை என்பதை உணர்ந்து, இம்மூன்று பாசுரங்களில், ஆண்டாள் நப்பின்னைப் பிராட்டியின் பெருமை, கண்ணன் எம்பெருமானுக்கும் அவளுக்கும் இருக்கும் நெருக்கம், அவளின் எல்லையில்லாத போக்யதை, ஸௌகுமார்யம், அழகிய உருவம், எம்பெருமானுக்கு வல்லபையாய் இருக்கும் குணம் மேலும் அவளின் புருஷகாரத்வம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறாள்.பிராட்டியை விட்டு எம்பெருமானை மட்டும் ஆசைப்படுதல் ஸ்ரீராமனை மட்டும் ஆசைப்பட்ட ஸூர்ப்பணகையின் நிலை என்றும், எம்பெருமானை விட்டு பிராட்டியை மட்டும் ஆசைப்படுதல் ஸீதாப் பிராட்டியை மட்டும் ஆசைப்பட்ட ராவணின் நிலை என்பர்கள் நம் பூர்வர்கள்.

 

பதினெட்டாம் பாசுரம். எப்படி எழுப்பியும் எம்பெருமான் எழுந்திருக்காமல் இருக்க, நப்பின்னைப் பிராட்டியைப் புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு எழுப்பினால், கண்ணன் எம்பெருமானை எழுப்பலாம் என்றெண்ணி அவ்வாறே செய்கிறாள். இப்பாசுரம் எம்பெருமானார் மிகவும் உகந்த ஒன்று.

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
      நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
      வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
      பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
      வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்

மத்த கஜத்தைப்போலே பலம் உடையவராய், போரில் புறமுதுகிட்டு ஓடவேண்டாதபடியான தோள்வலிமையை உடையவரான ஸ்ரீ நந்தகோபருடைய மருமகளே! நப்பின்னைப் பிராட்டியே! நறுமணம் மிகுந்த கூந்தலை உடையவளே! வாயிலைத் திற. கோழிகள் எல்லாப் பக்கங்களிலும் வந்து கூவுவதைப் பார்! குருக்கத்திக் கொடிகளாலான பந்தல்மேல் இருக்கும் குயில் கூட்டங்கள் மீண்டும் மீண்டும் கூவுவதைப் பார்! பந்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் விரல்களை உடையவளே! உன் நாதனான கண்ணன் எம்பெருமானுடைய திருநாமங்களை நாங்கள் பாடும்படியாக, உன்னுடைய அழகு பொருந்திய வளையல்கள் ஒலிக்கும்படி வந்து, உன்னுடைய சிவந்த தாமரை போன்ற திருக்கையால் மகிழ்ச்சியுடன் கதவைத் திற.

 

பத்தொன்பதாம் பாசுரம். இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் மாறி மாறி எழுப்புகிறாள்.

குத்து விளக்கு எரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
      மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
      வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
      எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
      தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்

நிலைவிளக்கு எரிய, யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட கால்களையுடைய கட்டிலிலே மெத்தென்ற பஞ்சினாலான படுக்கையின் மீது ஏறி, கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களை அணிந்த கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்கள் மேலே தன் அகன்ற திருமார்பை வைத்துக் கொண்டு சயனித்திருப்பவனே! வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு. மையால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற கண்களை உடையவளே! நீ உன்னுடைய கேள்வனான எம்பெருமானை ஒரு கணமும் துயிலெழ அனுமதிக்க மாட்டேன் என்கிறாய். நீ அவனைவிட்டு சிறிது நேரமும் பிரிந்திருக்கமாட்டாயன்றோ? இப்படி அவனை எங்களிடத்தில் வரவிடாமல் தடுப்பது உன் ஸ்வரூபத்துக்கும் சேராது ஸ்வபாவத்துக்கும் சேராது.

 

இருபதாம் பாசுரம். இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் சேர்த்து எழுப்பி நப்பின்னைப் பிராட்டியிடம் “நீ எங்களையும் அவனையும் நன்றாகச் சேர்த்து, அனுபவிக்கும்படி செய்” என்று கேட்கிறாள்.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
      கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
      வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
      நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
      இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு இடர்வரும் முன்னமே எழுந்தருளி அவர்களுடைய நடுக்கத்தைப் போக்கவல்ல பலத்தையுடைய கண்ணன் எம்பெருமானே! துயில் எழு. அடியார்களை ரக்ஷிப்பதில் நேர்மை உள்ளவனே! ரக்ஷிப்பதற்குத் தேவையான பலம் உள்ளவனே! எதிரிகளுக்குத் துன்பத்தைக் கொடுக்கக்கூடிய பரிசுத்தியை உடையவனே! துயில் எழு. பொற்கலசம் போன்ற ம்ருதுவான திருமுலைத்தடங்களையும் சிவந்த வாயையும் மெல்லிய இடையையும் உடைய நப்பின்னைப் பிராட்டியே! பெரிய பிராட்டியைப் போன்றவளே! துயில் எழு. நோன்புக்குத் தேவையான திருவாலவட்டத்தையும் கண்ணாடியையும் எங்களுக்குக் கொடுத்து உனக்கு நாதனான கண்ணனையும் கொடுத்து இப்போதே, நீயே அவனுடன் எங்களை நீராட்ட வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment