திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 21 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருப்பாவை

<< பாசுரங்கள் 16 – 20

நப்பின்னைப் பிராட்டி “எம்பெருமானை அனுபவிப்பதில் நானும் உங்கள் கோஷ்டியில் ஒருத்தியே” என்று சொல்லி ஆண்டாள் கோஷ்டியில் வந்து சேர்ந்து கொள்கிறாள்.

இருபத்தொன்றாம் பாசுரம். இதில் கண்ணனின் ஆபிஜாத்யம் (ஸ்ரீ நந்தகோபனுக்கு மகனாகப் பிறந்தது), பரத்வம், திடமான வேத சாஸ்த்ரத்தால் அறியப்படும் தன்மை முதலிய குணங்களைக் கொண்டாடுகிறாள்.

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
     மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
     ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
     மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே
     போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்

பாலைச் சேகரிக்க வைத்த பாத்திரங்களெல்லாம் எதிரே பொங்கி மேலே வழியும்படியாக இடைவிடாது பாலைப் பொழியும்படியான வள்ளல் தன்மையுடைய பெரிய பசுக்களை மிகுதியாக உடையவரான நந்தகோபரின் பிள்ளையே! திருப்பள்ளி உணர்ந்தருள வேண்டும். உயர்ந்த ப்ரமாணமான வேதத்தில் சொல்லப்படும் திண்மையை உடையவனே! பெருமையை உடையவனே! இவ்வுலகத்தில் எல்லோரும் பார்க்கும்படி நின்ற ஒளியுருவானவனே! துயில் எழு. உன் எதிரிகள் உன்னிடத்தில் தங்கள் பலத்தை இழந்து உன் திருமாளிகை வாசலில் வேறு புகலில்லாதவர்களாக வந்து உன் திருவடிகளை வணங்கிக் கிடப்பதுபோலே நாங்களும் உன்னைத் துதித்து, உனக்கு மங்களாசாஸனம் செய்துகொண்டு உன் வாசலை வந்தடைந்தோம்.

 

இருபத்திரண்டாம் பாசுரம். இதில் எம்பெருமானிடம் தனக்கும் தன் தோழிகளுக்கும் வேறு புகலில்லை என்பதையும், விபீஷணாழ்வான் ஸ்ரீராமனிடம் சரணடைய வந்தாப்போலே தாங்கள் வந்துள்ளதையும் அறிவிக்கிறாள். மேலும் தான் எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டதையும் எம்பெருமானின் அருளையே வேண்டுவதையும் அவனுக்கு அறிவிக்கிறாள்.

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
     பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
     கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
     திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
     எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்

அழகியதாய் இடமுடைத்தாய் பெரிதாய் இருக்கும் பூமியில் ராஜ்யம் செய்யும் அரசர்கள் தங்களுடைய அஹங்காரம் குலைந்து வந்து உன் ஸிம்ஹாஸனத்தின் கீழே கூட்டமாகக் கூடி இருப்பதைப்போலே நாங்களும் இங்கே வந்து சேர்ந்தோம். கிங்கிணியின் (கிலுகிலுப்பை) வாய் போலே பாதி மலர்ந்த தாமரைப் புஷ்பத்தைப்போலே சிவந்திருக்கும் கண்களாலே சிறிது சிறிதாக எங்கள்மேல் உன் கருணைப் பார்வையைச் செலுத்தமாட்டாயோ? ஸூர்யனும் சந்த்ரனும் உதித்தாற்போல் அழகிய இரண்டு கண்களாலும் நீ எங்களை கடாக்ஷித்தால் எங்களிடம் உள்ள துன்பம் அழிந்துவிடும்.

 

இருபத்துமூன்றாம் பாசுரம். இதில் கண்ணன் எம்பெருமான் ஆண்டாளை வெகுகாலம் காக்கவைத்ததை எண்ணி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவள் எம்பெருமானைப் படுக்கையை விட்டு எழுந்து, சில அடிகள் நடந்து, அவனுடைய சீரிய ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருளி, சபையில் தன் விண்ணப்பத்தை ஒரு ராஜாவைப் போலே கேட்குமாறு ப்ரார்த்திக்கிறாள்.

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
     சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
     மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
     கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
     காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்

காயாம்பூப்போலே கறுத்த நிறத்தை உடையவனே! மழைக் காலத்தில் மலைக் குகையில் பொருந்தி இருந்து தூங்குகின்ற வீரம் மிகுந்த சிங்கம் விழித்தெழுந்து, தீப்பொறி பறக்கும் தன் கண்களை விழித்து, வாஸனை மிகுந்த பிடரி மயிர்கள் எழும்படி எல்லாப் பக்கங்களிலும் அசைத்து, உடம்பை உதறி சோம்பல் முறித்து, உடலை நேராக்கி நிமிர்த்து, கர்ஜனை செய்து வெளியில் புறப்பட்டு வருவதுபோலே உன்னுடைய திருமாளிகையின் உள்ளிருந்து இவ்விடத்திலே எழுந்தருளி அழகிய அமைப்புடைய மேன்மைபெற்ற ஸிம்ஹாஸனத்தின் மீது எழுந்தருளி இருந்து நாங்கள் வந்த கார்யத்தை விசாரித்து அருள வேண்டும்.

 

இருபத்து நாலாம் பாசுரம். அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ருஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்கவைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
     சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
     கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
     வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
     இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்

போற்றி என்பது பல்லாண்டு வாழ்க என்று சொல்வதாக, மங்களாசாஸனத்தைக் குறிக்கும்.

முற்காலத்தில் தேவர்களுக்காக இந்த உலகங்களை அளந்தருளியவனே! உன்னுடைய திருவடிகள் போற்றி. ராவணின் இருப்பிடமான அழகிய இலங்கையைச் சென்றடைந்து அதை அழித்தவனே! உன்னுடைய பலம் போற்றி. வண்டிச் சக்கரத்தில் இருந்த சகடாஸுரன் அழியும்படி உதைத்தவனே! உன்னுடைய புகழ் போற்றி. கன்றின் வடிவில் வந்த அஸுரனை எறிதடியாகக் கொண்டு எறிந்து, விளாம்பழ வடிவில் இருந்த அஸுரனை வீழ்த்தியவனே! உன்னுடைய திருவடிகள் போற்றி. கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்தவனே! உன்னுடைய கல்யாண குணங்கள் போற்றி. எதிரிகளை ஜயித்து அந்தப் பகைவர்களை அழிக்கும் உன் கையில் இருக்கும் வேல் போற்றி. இப்படிப் பலமுறை மங்களாசாஸனம் செய்து கொண்டு, உன்னுடைய வீரத்தையே புகழ்ந்து, கைங்கர்யத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் இங்கே வந்துள்ளோம். நீ க்ருபை பண்ண வேண்டும்.

 

இருபத்தஞ்சாம் பாசுரம். எம்பெருமான் அவர்களிடம் நோன்புக்கு ஏதாவது தேவையா என்று கேட்க அவர்கள் அவன் குணங்களுக்கு மங்களாசாஸனம் செய்ததால் அவர்கள் துன்பங்கள் விலகின என்றும், இனி அவனுக்குக் கைங்கர்யம் செய்வது ஒன்றே வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
     ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை
     அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
     வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்

தேவகிப்பிராட்டியாகிற ஒப்பற்ற ஒருத்திக்கு மகனாய் அவதரித்து, அவதரித்த அந்த ஒப்பற்ற இரவிலேயே யசோதைப்பிராட்டியாகிற ஒப்பற்ற ஒருத்திக்கு மகனாகி ஒளித்து வளர்ந்த காலத்தில், அதைப் பொறுக்கமாட்டாதவனான கம்ஸன் தானே உன்னை அழிக்க வேண்டும் என்னும் தீமையை நினைக்க அவனுடைய எண்ணத்தை அவனோடே போகும்படி செய்து, அவனுடைய வயிற்றில் தீயாக நின்ற ஸர்வேச்வரனே! உன்னிடத்தில் எங்களுக்கு வேண்டியதை ப்ரார்த்தித்து இங்கே வந்தோம். எங்களுடைய ப்ரார்த்தனையை நீ நிறைவேற்றினாயாகில் பிராட்டியும் விரும்பும் உன் செல்வத்தையும் வீரத்தையும் நாங்கள் பாடி, உன்னைப் பிரிந்திருக்கும் இந்த துக்கமும் நீங்கி மகிழ்ச்சியடைவோம்.

 

இருபத்தாறாம் பாசுரம். இதில் நோன்புக்குத் தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள். முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜந்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள். நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.

மாலே மணிவண்ணா மார்கழி நீர் ஆடுவான்
     மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
     பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
     சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
     ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய்

அடியார்களிடத்தில் அன்புடையவனே! நீல ரத்னம் போன்ற வடிவையுடையவனே! ப்ரளய காலத்தில் ஆலந்தளிரிலே திருக்கண்வளர்ந்தவனே! இந்த மார்கழி நீராட்டத்தின் அங்கங்களாக முன்னோர்கள் செய்யும் செயல்களுக்கு வேண்டும் உபகரணங்கள் என்னவென்று கேட்டாயாகில், நாங்கள் அவற்றைச் சொல்லுகிறோம். உலகத்தை எல்லாம் நடுங்கும்படி முழங்கக்கூடிய பால் போன்ற வெண்ணிறத்தில் உள்ள உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜந்யம் போன்ற சங்கங்களையும், மிகவும் இடமுடையனவாய், பெரியதான பறை வாத்தியங்களையும், திருப்பல்லாண்டு பாடுமவர்களையும், அழகிய விளக்குகளையும், த்வஜங்களையும், மேற்கட்டிகளையும் எங்களுக்கு அளித்தருள வேண்டும்.

 

27 மற்றும் 28ம் பாசுரங்களில் எம்பெருமானே ப்ராப்யமும் ப்ராபகமும் என்பதை அறுதியிடுகிறாள்.

இருபத்தேழாம் பாசுரம். ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
     பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
     சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்
     ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
     கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்

தன்னை அடிபணியாதவரை வெல்லுகின்ற கல்யாண குணங்களையுடைய கோவிந்தா! உன்னைப் பாடி, பறையைப் பெற்று, நாங்கள் மேலும் அடையும் பரிசாவது, நாடே புகழும்படியாக சூடகங்கள், தோள்வளைகள், தோடுகள், கர்ண புஷ்பங்கள், பாடகங்கள் போன்ற பலவிதமான ஆபரணங்களையும் நீயும் நப்பின்னைப் பிராட்டியும் எங்களுக்கு அணிவிக்க நாங்கள் நன்றாக அணிவோம். உங்களால் அணிவிக்கப்பட்ட ஆடைகளை உடுத்துக்கொள்வோம். அதற்குப் பிறகு அக்கார அடிசிலை மூடும்படி நெய்சேர்த்து, முழங்கை வழியாக அந்த நெய் வழியும்படி எல்லோரும் கூடி இருந்து உண்டு குளிரவேண்டும்.

 

இருபத்தெட்டாம் பாசுரம். இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் (வ்ருந்தாவனத்தில் பசுக்களைப் போலே அத்வேஷத்தை மட்டும் காரணமாகக் கொண்டு) உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள்.

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
     அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
     குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
     அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
     இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்

ஒருவிதமான தோஷமும் இல்லாத கோவிந்தா! நாங்கள் பசுக்களின் பின்னே சென்று காட்டை அடைந்து உண்டு திரிவோம். சிறிதும் ஞானம் இல்லாத இடையர் குலத்தில் நீ வந்து பிறக்கும்படியான புண்ணியத்தை உடையவர்களாய் இருக்கிறோம். இறைவா! உன்னோடு எங்களுக்கு இருக்கும் உறவானது உன்னாலும் எங்காளாலும் ஒழிக்கமுடியாதது. ஒன்றும் அறியாத சிறுபெண்களான நாங்கள் உன் மீதுள்ள அன்பினாலே உன்னைச் சிறு பெயரைச் சொல்லி அழைத்ததைக் குறித்து எங்களிடத்தில் கோபிக்காமல், நாங்கள் விரும்பும் பலனைக் கொடுத்தருள வேண்டும்.

 

இருபத்தொன்பதாம் பாசுரம். இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது, கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.

சிற்றஞ்சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
     பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
     குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
     எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
     மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்

கோவிந்தா! அதிகாலையிலே இங்கு வந்து உன்னை வணங்கி உன்னுடைய பொன்போன்ற விரும்பத்தகுந்த திருவடித்தாமரைகளை மங்களாசாஸனம் செய்ததற்குப் பலன் என்ன என்பதைக் கேட்டருளவேண்டும். பசுக்களை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ எங்களிடத்தில் அந்தரங்க கைங்கர்யத்தைக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. நீ இன்று கொடுக்க இருக்கும் பறை என்னும் வாத்யத்தைப் பெற வந்தவர்கள் அல்ல நாங்கள். காலம் உள்ளவரை எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னோடு உறவுடையவர்கள் ஆகவே இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் தொண்டு செய்ய வேண்டும். அப்படிக் கைங்கர்யம் செய்யும் காலத்தில் அது எங்களுக்கு ஆனந்தம் என்கிற எண்ணத்தையும் போக்கி அருள வேண்டும் – அது உனக்கே ஆனந்தம் கொடுக்கும் செயலாக இருக்கும்படி செய்தருள வேண்டும்.

 

முப்பதாம் பாசுரம். எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபிகை பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள். அவள் யாரொருவர் இந்த முப்பது பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் என்று அறுதியிடுகிறாள். அதாவது – ஆண்டாளின் கருணையினால் – கண்ணன் வ்ருந்தாவனத்தில் இருந்த காலத்தில் அவனிடம் பேரன்பு பூண்டு அங்கிருந்த கோபிகைகளுக்கும், அதே பாவத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்ட ஆண்டாளுக்கும், வேறு யவரேனும் இப்பாசுரங்களை கற்று, பாடுபவர்களுக்கும் ஒரே பலன் கிடைக்கும். பட்டர் “வைக்கோலால் செய்யப்பட்ட தோல் கன்றைக் கண்டும் ஒரு தாய்ப் பசு பால் கொடுக்குமது போலே, யவரேனும் எம்பெருமானுக்கு பிரியமானவளால் பாடப்பட்ட இப்பாசுரங்களைப் பாடினால், அவருக்கும் அப்படி எம்பெருமானின் அன்பைப் பெற்றவர்கள் பெறும் பலன் கிடைக்கும்” என்று அருளிச்செய்வார். ஆண்டாள் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த சரித்ரத்தைச் சொல்லி முடிக்கிறாள். ஏனெனில், கோபிகைகள் எம்பெருமானை அடைய விரும்பினார்கள். எம்பெருமானை அடைய பிராட்டியின் புருஷகாரம் தேவை. எம்பெருமான் பிராட்டியை வெளிக்கொணர்ந்து மணம் புரியவே கடலைக் கடைந்தான். ஆகையால் ஆண்டாளும் இச்சரித்ரத்தைப் பாடி ப்ரபந்தத்தை முடிக்கிறாள். ஆண்டாள் ஆசார்ய அபிமான நிஷ்டையில் இருப்பவள் ஆகையாலே, தன்னைப் பட்டர்பிரான் கோதை என்று காட்டி, ப்ரபந்தத்தை முடிக்கிறாள்.

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
     திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப்பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
     பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
     இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
     எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

கப்பல்களை உடைய திருப்பாற்கடலைக் கடைந்த ச்ரிய:பதியான கேசவனை, சந்த்ரனைப் போன்ற அழகிய முகத்தையும் சிறந்த ஆபரணங்களையுமுடைய இடைச்சிகள் சென்று வணங்கி, அந்தத் திருவாய்ப்பாடியிலே தங்கள் பலனைப் பெற்ற சரித்ரத்தை, அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த, புதியதான தாமரை மலர்களாலான குளிர்ந்த மாலையையுடைய பெரியாழ்வாருடைய திருமகாளான ஆண்டாள் அருளிச்செய்த, கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து அனுபவிக்க வேண்டிய முப்பது பாசுரங்களால் ஆன தமிழ்ப் பாமாலையைத் தப்பாமல் இவ்வுலகில் இந்த முறையில் சொல்லக்கூடியவர்கள், பெரிய மலை போன்ற திருத்தோள்களையும், சிவந்த திருக்கண்களையுடைய திருமுகத்தை உடையவனும், செல்வத்தை உடையவனுமான திருமகள் கேள்வனாலே எல்லா இடத்திலும் அருளைப் பெற்று இன்பத்தை அடைவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment