ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி
திவ்ய ப்ரபந்தம் என்றால் என்ன என்றும், அது நமக்கு எவ்வாறு கிடைத்தது என்றும் “அறிமுகம்” பகுதியிலேயே அநுபவித்தோம். நம் ஆசார்யர்களின் பரம க்ருபையாலே, ஆழ்வார்களின் அருளிச்செயல்களே திவ்ய ப்ரபந்தம் என்று நமக்கு தெரியவந்தது. எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையினால், ஒரு ஜீவாத்மா ஸம்ஸாரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு, அருளிச்செயல் என்று அழைக்கப்படும் பாசுரங்களை அருளுகிறார் என்பதை நம் ஆசார்யர்கள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.
அருளிச்செயல் என்றால் என்ன?
அருளிச்செயல் என்பது தமிழில் ஒரு அழகான வார்த்தை. அருளாலே செய்யப்பட்டது என்பதே அருளிச்செயல் என்பதின் அர்த்தம். “யாருடைய அருளால்?” என்று கேட்டால், எம்பெருமானின் திருவருளால். எம்பெருமானின் திருவருளினாலேயே ஆழ்வார்கள் எம்பெருமானின் வைபவங்களை பாசுரங்களாக அருளினார்கள். ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதை ஆழ்வார்களின் அருள் என்றும் கூறலாம் – ஏனெனில் இது முழுவதும் அவர்களுடைய அநுபவமே. எல்லா ஆழ்வார்களும் இந்த திவ்ய அநுபவங்களைத் தங்கள் திருவுள்ளத்திலேயே வைத்துக்கொண்டு பரமபதம் எழுந்தருளியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய திவ்யமான க்ருபையினாலேயே இந்த அநுபவங்களைப் பாசுரங்களாக நமக்கு அருளினார்கள். ஆழ்வார்கள் பாசுரங்களை அருளினாலும், காலப்போக்கில் அவை மறைந்துவிட்டன. அவற்றை நம்மாழ்வாரை அணுகி மீட்டெடுத்தவர் ஸ்ரீமந்நாதமுனிகள். எனவே இதை ஆசார்யர்களின் அருள் என்றும் கூறலாம். எம்பெருமான், ஆழ்வார்கள் மற்றும் நம் ஆசார்யர்கள் — இம்மூவரின் திருவருளும் முழுவதுமாக நிறைந்திருப்பதால், இது அருளிச்செயல் என்று அழைக்கப்படுகிறது.
ஜீவனம் மற்றும் உஜ்ஜீவனம்
எல்லா ஆத்மாக்களும் நீண்ட காலமாக இந்த ஸம்ஸாரத்தில் பிறப்பு இறப்பு என்ற சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன. கண்ணன் எம்பெருமான் பகவத்கீதையில் அர்ஜுனனிடம் கூறுகிறான் – “நீயும் நானும் பல பல பிறவிகள் எடுத்திருக்கிறோம். அர்ஜுனா, வித்யாஸம் என்னவென்றால், நான் எடுத்த எல்லாப் பிறவிகளையும் நான் நன்கு அறிவேன், ஆனால் நீ உனது எந்தப் பிறவியையும் அறியமாட்டாய்” என்று. அர்ஜுனன் எல்லா ஆத்மாக்களுக்கும் ப்ரதிநிதியாக இருக்கிறான். எனவே எல்லா ஆத்மாக்களும் அநாதி காலமாக இந்த எண்ணற்ற பிறப்பு இறப்பு என்ற சக்கரத்தில் சுழன்று வருகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
நம்முடைய ஸநாதன தர்மத்தில், அநாதி என்றால் தொடக்கமே இல்லாதது என்று அர்த்தம். ஈஶ்வரன் அநாதி, ஆத்மா அநாதி, ஸம்ஸாரமும் அநாதி. இவை எல்லாம் காலம் என்கிற கருத்துக்கு அப்பாற்பட்டவை. ஆனால் நாமோ காலத்திற்கு உட்பட்ட விஷயங்களையே (அதாவது ஒரு தொடக்கமும் முடிவும் உள்ளவற்றை) கண்டு பழகியிருக்கிறோம். எனவே ஆத்மா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் படைக்கப்பட்டது என்று நாம் தவறாகப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஆத்மா ஒரு குறிப்பிட்ட காலத்தில் படைக்கப்பட்டது என்ற கருத்து வேதத்திற்கே முற்றிலும் விரோதமானது.
ஆத்மா அநாதியாக இருக்கும்போது, அதன் கர்மமும் அநாதியாகவே இருக்கும், ஸம்ஸாரமும் அநாதியாகவே இருக்கும். நாம் அநாதி காலமாக இந்த ஸம்ஸாரத்தில் கோடிக்கணக்கான பிறவிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவதே நமக்கு உஜ்ஜீவனம். தேஹத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக மட்டுமே வாழ்வது ஜீவனம் – தன் அஸ்தித்வத்தின் (இருப்பதன்) நோக்கமே தெரியாமல் வெறுமனே உயிர் வாழ்வது. உஜ்ஜீவனமோ, அழிந்துகொண்டே இருக்கும் தேஹத்திற்குப் பதிலாக அழியாத ஆத்மாவிற்கு நலம் அளிப்பதை இலக்காகக் கொண்டது. (ஆத்மாவின் உண்மையான இயல்பும் இலக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதேயாகும்)
நாம் அஜ்ஞானத்தால் மூடப்பட்டு ஸம்ஸாரத்தில் இருந்த எல்லாக் காலகட்டங்களிலும், எம்பெருமான் நமக்கு உதவ முயன்றுகொண்டே இருக்கிறான். பல பல பிறவிகளுக்குப் பின்னர், நமக்கு ஆசார்ய ஸம்பந்தம் கிடைக்கிறது. அதுவும் எம்பெருமானின் க்ருபையாலேயே. ஸம்ஸாரத்திலிருந்து தன்னைத் தானே விடுவித்துக்கொள்ளும் ஶக்தி நமக்கு இல்லை. இந்த உலகம் எத்தகைய ஆபத்தான வழியில் நம்மைத் திசை திருப்புகிறது என்பதை நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் நமக்குக் காண்பித்துள்ளார்கள். எனவே ஜீவாத்மாவின் எந்த ஒரு சிறிய அளவிலான ஆன்மிக ஈடுபாடும் கூட எம்பெருமானின் க்ருபையாலேயே நடைபெறுகிறது.
ஒரு ஆத்மா செய்ய வேண்டியது என்னவென்றால், எம்பெருமானின் க்ருபைக்குத் தடையாக நிற்காமல் இருப்பது மட்டுமே. எம்பெருமான் நமக்குத் தன்னை அடைவதற்கான வழிகளை எப்பொழுதும் காட்டிக்கொண்டே இருக்கிறான். உதாரணமாக, ஒரு தந்தை தன் மகனுக்கு எப்பொழுதும் உதவத் தயாராக இருக்கிறார். மகன் தன் தந்தையின் உதவி வேண்டாம் என்று நிராகரித்தாலும், தந்தை தன் அன்பினால், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மகனுக்குத் தேவையான எல்லா உதவிகளும் தகுந்த நேரத்தில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறார். அதேபோல், இந்த ஜீவாத்மா அவித்யையில் மூழ்கி, எம்பெருமானுடன் தனக்கு இருக்கும் ஸம்பந்தத்தை மறந்து இருந்தாலும், எம்பெருமான் எப்பொழுதும் அந்த ஆத்மாவின் உஜ்ஜீவனத்திற்காகச் சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். இந்த எல்லா விஷயங்களையும் ஆழ்வார்கள் தம்முடைய பாசுரங்களில் நமக்குத் தெளிவாகப் புரியும்படி அருளியுள்ளார்கள்.
இதுவரை முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆயிரங்களை அநுபவித்தோம். மூன்றாம் ஆயிரத்தில் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாசிரியம் ஆகியவற்றை அநுபவித்தோம். இப்பொழுது திருவாய்மொழியைச் சிறிது அநுபவிப்போம்.
திருவாய்மொழியின் சீர்மை
திருவாய்மொழி ஸாம வேத ஸாரமாகவும் சாந்தோக்ய உபநிஷத் ஸாரமாகவும் கொண்டாடப்படுகிறது. ஸாம வேதம் எவ்வாறு ஸங்கீதமயமானதோ, அதேபோல் திருவாய்மொழியும் மிகவும் ஸங்கீதமயமானது. முதலில், திருவாய்மொழி நமக்கு கிடைத்தது எப்படி என்பதைப் பார்ப்போம். “என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய” என்ற பதிகத்தில் நம்மாழ்வாரே, எம்பெருமான் ஆழ்வாருக்கு இந்த திவ்யமான அவகாஶத்தை அருளி, திருவாய்மொழி மூலம் எம்பெருமானின் வைபவங்களைப் பாடுவித்தான் என்று அருளிச்செய்கிறார்.
மாமுனிகளும் திருவாய்மொழி நூற்றந்தாதியில் இதனை “என்றனை நீ இங்கு வைத்தது ஏதுக்கென மாலும் என்றனக்கும் என் தமர்க்கும் இன்பமதாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அர்த்தம் ஆழ்வார் எம்பெருமானிடம் “என்னை இந்த உலகில் ஏன் வைத்திருக்கிறாய்?” என்று கேட்க, எம்பெருமான் “உம்முடைய பாசுரங்களைக் கேட்டு நானும் என் அடியார்களும் திவ்யமான ஆனந்தம் அடைகிறோம், அதற்காகவே உம்மை இங்கே வைத்திருக்கிறேன்” என்று அருளுகிறான். திருவிருத்தத்தில் ஆழ்வார் எம்பெருமானிடமிருந்து பிரிந்திருப்பது தாங்க முடியவில்லை என்று ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தார். ஆழ்வாரிடமிருந்து பாசுரங்களைப் பெறவேண்டும் என்பது எம்பெருமானின் திருவுள்ளம்; எனவே ஆழ்வாரின் இந்த உலக வாஸத்தை நீட்டித்தான். இதுவே திருவாய்மொழி அவதரிக்கக் காரணமாயிற்று. இவ்வாறு செய்வதன் மூலம், ஸம்ஸாரத்தில் உள்ள ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடைய எம்பெருமான் உதவ விரும்பினான் என்று தெரிகிறது. மாமுனிகளின் திருவாய்மொழி நூற்றந்தாதியைப் பார்க்கும்போது, எம்பெருமானின் இந்த திருவுத்தரம் (பதில்) ஆழ்வாரின் திருவுள்ளத்தை உருக்கியது. எம்பெருமானின் திருவுள்ளக் கருத்திலும், எம்பெருமான் ஆழ்வாரிடம் காட்டிய க்ருபையிலும் நெஞ்சுருகி ஆழ்வார் தன்னை முற்றிலும் கடன்பட்டவராக உணர்கிறார்.
ஆழ்வாரே திருவாய்மொழியில் “தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்” என்று கூறுகிறார் – எல்லா அடியார்களும் அநுபவிக்கும் பொருட்டு, இந்த அம்ருதத்தை (திருவாய்மொழியை) வார்த்தைகளால் ஆன மாலையாக அடியார்களுக்கு அளித்தேன் என்று.
மதுரகவியாழ்வார் தம்முடைய பாசுரத்தில், “நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்” என்று அருளுகிறார். இதன் அர்த்தம் – என் ஆசார்யரான நம்மாழ்வாரின் அம்ருதமான பாசுரங்களை என் நாவினால் அநுஸந்தித்தே அடியேன் உயர்ந்த ஆனந்தத்தை அடைந்தேன் என்று. நம்முடைய பூர்வாசார்யர்களும் திருவாய்மொழியை அநுஸந்திப்பதால் கிடைக்கும் திவ்யமான அநுபவத்தை விளக்கியுள்ளார்கள் – அர்த்தங்களை முழுவதுமாக அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், திருவாய்மொழியை அநுஸந்திப்பவர்களுக்கு நிச்சயமாக ஆனந்த அநுபவம் கிடைக்கும். அத்தகைய பெருமை வாய்ந்தது நம்மாழ்வாரின் திருவாய்மொழி.
ஆசார்ய ஹ்ருதயத்தில், நாயனார் ராமாநுஜாசார்யர் ஸ்ரீபாஷ்யம் இயற்றும்போது எவ்வாறு திருவாய்மொழியை எப்பொழுதும் ஆதாரமாகக் கொண்டார் என்பதை நன்கு விளக்குகிறார். ஸ்ரீபாஷ்யம் என்பது ப்ரஹ்ம ஸூத்ரங்களின் வ்யாக்யானம். வேதவ்யாஸர் வேதாந்தத்தின் ஆழமான அர்த்தங்களை ஸூத்ர வடிவில் ப்ரஹ்ம ஸூத்ரமாக அருளினார். ராமாநுஜர் ஸ்ரீ பாஷ்யம் அருளும்போது, ப்ரஹ்ம ஸூத்ரங்களின் நுட்பமான அர்த்தங்களை க்ரஹிப்பதற்கு திருவாய்மொழியையே ஆதாரமாகக் கொண்டார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் அனைத்து ஶாஸ்த்ரங்களின் முக்யமான அர்த்தங்களையும் அருளியுள்ளார். இதிலிருந்து திருவாய்மொழியின் சீர்மையை நாம் நன்கு அறியலாம்.
திருவாய்மொழியின் சிறு அறிமுகம்
திருவாய்மொழியின் தனியன்களில் ஒன்றில்,
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும் – ஊழ் வினையும்
வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்
அர்த்தம்: குருகூரின் தலைவரான நம்மாழ்வாரின் பாசுரங்கள் திவ்யமான யாழிசை போல் விளங்குகின்றன. இந்தப் பாசுரங்கள் மூலம் ஆழ்வார் பல முக்யமான விஷயங்களை அருளியுள்ளார் – எம்பெருமான் எல்லாவற்றிலும் மேலானவன் என்கிற இறை நிலையை (பரத்வம்) நிலை நாட்டியுள்ளார். ஜீவாத்மாவின் உண்மையான நிலை (உயிர் நிலை) – குணத்தில் எல்லா ஆத்மாக்களும் ஒரே தன்மையுடையவையாக இருந்தாலும் இந்த அண்டத்தில் எண்ணற்ற ஆத்மாக்கள் உள்ளன என்று ஆழ்வார் தெளிவுபடுத்துகிறார். ப்ரஹ்மம் ஒன்றே, வேறு ஆத்மாக்கள் இல்லை என்று கூறும் மாயாவாத தர்ஶனத்திற்கு மாறாக, ஆழ்வார் ஆத்மாக்களின் உண்மையான ஸ்வரூபத்தை வெளிப்படுத்துகிறார். எம்பெருமானை அடைவதற்கான உபாயத்தையும் (தக்க நெறி) காட்டியுள்ளார். ஆத்மா எம்பெருமானை அடைவதற்கு தடையாக இருப்பது என்ன (தடையாகித் தொக்கியலும்) என்பதையும் விளக்கியுள்ளார் – முக்யமான விரோதி நம்முடைய முன்ஜன்ம வினைகளே (ஊழ் வினை) என்று காட்டியுள்ளார். எம்பெருமானை அடைந்த பின்னர் இந்த ஜீவாத்மா பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தை அநுபவிக்கிறது (வாழ்வு) என்பதையும் காண்பித்துள்ளார்.
இந்த தனியன் திருவாய்மொழி பாசுரங்களில் காட்டப்படும் அர்த்தபஞ்சகத்தை சுட்டிக்காட்டுகிறது:
- பரமாத்ம ஸ்வரூபம் – ஸ்ரீமந்நாராயணனான எம்பெருமானின் உண்மையான ஸ்வரூபம்
- ஜீவாத்ம ஸ்வரூபம் – ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபம்
- உபாய ஸ்வரூபம் – எம்பெருமானை அடைவதற்கான வழிகள்
- விரோதி ஸ்வரூபம் – எம்பெருமானை அடைவதற்குத் தடையாக இருப்பவை (கர்மம்)
- உபேய ஸ்வரூபம் – எம்பெருமானை அடைந்த பின்னர் உள்ள அநுபவம் (இறுதி பலன்)
ஆசார்ய ஹ்ருதயத்தில், நாயனார் திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை மிக அழகாக விளக்குகிறார். ஆசார்ய ஹ்ருதயம் என்பது அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் அருளிய க்ரந்தம். இங்கே ஆசார்யன் என்பது நம்மாழ்வாரையும், ஹ்ருதயம் என்பது நம்மாழ்வாரின் திருவுள்ளத்தையும் குறிக்கிறது.
இந்த க்ரந்தம் திருவாய்மொழியின் அர்த்தங்களையும் நம்மாழ்வாரின் வைபவங்களையும் மட்டுமே விஶேஷமாக வெளிப்படுத்துகிறது. இந்த க்ரந்தத்திற்கு மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் அருளியுள்ளார். “மூன்றில் சுருக்கிய ஐந்து” என்ற சூர்ணிகையில் மாமுனிகள், அர்த்த பஞ்சகம் எவ்வாறு ரஹஸ்ய த்ரயத்தினுள் அடங்கியுள்ளது என்பதை விளக்கி, அர்த்த பஞ்சக ஜ்ஞானம் திருவாய்மொழியில் விஸ்தாரமாக காணப்படுகிறது என்பதை நமக்குக் காட்டுகிறார்.
அர்த்தபஞ்சகம் திருவாய்மொழியில்
மாமுநிகள், திருவாய்மொழியில் அர்த்த பஞ்சக ஞானத்தை தெளிவாகக் காட்டும் குறிப்பிட்ட பகுதிகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.
பரஸ்வரூபம் : 4 பதிகங்கள்
ஆழ்வார் எம்பெருமானின் பரத்வம் – அவனது நிலைகள், குணங்கள், விபூதிகள் முதலியவற்றை காண்பித்தருளினார்.
- 1.1 – உயர்வற
- 2.2 – திண்ணன்
- 2.8 – அணைவது
- 4.10 – ஒன்றும் தேவும்
ஜீவாத்மஸ்வரூபம் : 4 பதிகங்கள்
ஆழ்வார் இந்தப் பதிகங்களில் ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தையும் குணங்களையும் விவரிக்கிறார்.
- 3.7 – பயிலும்
- 4.8 – ஏராளும்
- 8.8 – கண்கள் சிவந்து
- 8.9 – கருமாணிக்க மலை
விரோதி ஸ்வரூபம் : 4 பதிகங்கள்
ஆழ்வார் நம்மை எம்பெருமானை அடைவதிலிருந்து தடுக்கும் விரோதியை விளக்கியருளுகிறார்.
- 1.2 – வீடுமின்
- 3.9 – சொன்னால்
- 4.1 – ஒருநாயகமாய்
- 9.1 – கொண்ட பெண்டிர்
உபாய ஸ்வரூபம் : 4 பதிகங்கள்
இந்த பதிகங்களில் ஆழ்வார் எம்பெருமானை அடைவதற்கான உபாயத்தை ஸ்தாபித்துள்ளார்.
- 5.7 – நோற்ற நோன்பு
- 5.8 – ஆராவமுதே
- 5.9 – மானேய் நோக்கு
- 5.10 – பிறந்தவாறும்
உபேய ஸ்வரூபம் : 4 பதிகங்கள்
ஆழ்வார், எம்பெருமானை அடைந்த பின் இந்த ஜீவாத்மாவுக்குக் கிட்டும் ப்ராப்யம் – தலையாய புருஷார்த்தத்தை நிரூபிக்கிறார்.
- 2.9 – எம்மா வீடு
- 3.3 – ஒழிவில் காலம்
- 8.10 – நெடுமாற்கடிமை
- 10.3 – வேய்மருதோள்
திருவாய்மொழியில் 100 பதிகங்கள் உள்ளன, அதில் இங்கே கூறப்பட்ட 20 பதிகங்கள் அர்த்த பஞ்சகத்தின் ஆழமான அர்த்தங்களை விவரிக்கின்றன. மீதமுள்ள 80 பதிகங்களும் அர்த்த பஞ்சகத்தின் அர்த்தங்களையே விரிவாக விளக்குகின்றன என்று மாமுநிகள் ஆசார்ய ஹ்ருதயத்தின் வ்யாக்யானத்தில் அருளிச்செய்கிறார்.
ஆசார்யரின் க்ருபையினாலேயே திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகத்தின் இருப்பை நாம் காண இயலுகிறது, இல்லையெனில் திருவாய்மொழியின் உண்மையான அர்த்தங்களை நாமாக எந்த விதத்திலும் உணர்ந்துகொள்ள இயலாது. ஆசார்யரின் வ்யாக்யானங்கள் இல்லாமல் திருவாய்மொழியின் உள்ளர்த்தங்களை யாரும் எளிதில் புரிந்துகொள்ள இயலாது என்பதை வலியுறுத்தவும், ஆசார்யரின் முக்யத்வத்தை எடுத்துக்காட்டுவதே இந்தச் சூர்ணிகையை அருள முக்யமான காரணமாகும்.
பெரிய பெருமாள் – திருவாய்மொழியின் சாரம்
திருவாய்மொழியின் தனியன்களில் ஒன்றான,
வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன்
மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமானுசன்
என்று பராசர பட்டரால் அருளப்பட்ட இந்த தனியன், திருவாய்மொழி, பெரிய பெருமாள் – ஸ்ரீரங்கநாதன் மேலேயே பாடப்பட்டது என்று நிரூபிக்கிறது. நம்மாழ்வார் தாயாக, தமிழ் வேதமாகக் கருதப்படும் இந்தத் திருவாய்மொழியை ஈன்றருளினார், வளர்த்த தாயான இராமானுசனால் இது நம் அனைவருக்கும் புரியும் வகையில் அருளப்பட்டது. வானளாவிய மரங்களும் பசுமையான சோலைகளும் சூழ்ந்த மதிளுக்குள் கண்வளரும் அரங்கநாதனின் மஹிமைகளைப் போற்றியே இந்த பாசுரங்கள் பாடப்பட்டன என்று இத்தனியன் மூலம் நமக்கு தெரிகிறது.
திருவாய்மொழி முழுவதிலும் பெரிய பெருமாள் மீது பாடப்பட்ட ஒரே ஒரு பதிகம் 7.2 – “கங்கும் பகலும்” மட்டுமே. அந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாசுரமும் எம்பெருமானின் ஒரு குணத்தைச் சித்தரிக்கிறது. இந்த குணமே மேலும் ஒவ்வொரு பதிகத்திலும் விரிவாக விளக்கப்படுகிறது (ஒரு பதிகம் ஒரு குணத்தை விளக்குகிறது). ஆகையால் நம் பூர்வாசார்யர்கள், 7.2-ல் உள்ள பெரிய பெருமாளின் இந்த 10 குணங்களையே திருவாய்மொழியின் 100 பதிகங்கள் முழுவதிலும் ஆழ்வார் விரிவாக்கம் செய்துள்ளார் என்று விளக்கியருளினார்கள். இதனாலேயே பெரிய பெருமாள் திருவாய்மொழியின் சாரம் என்பதை நாம் உணர்கிறோம். (குறிப்பு: 1 பத்தில் 10 பதிகங்கள் உள்ளன, 1 பதிகத்தில் 11 பாசுரங்கள் உள்ளன)
ஆழ்வார் தம் பாசுரங்களை வெவ்வேறு பாவங்களில் பாடியருளினார், இது “ஞானத்தில் தன் பேச்சு” மற்றும் “ப்ரேமத்தில் பெண் பேச்சு” என்று கூறப்படுகிறது. அதாவது: ஆழ்வார் பரிபூர்ண ஞானத்தின் நிலையில் இருக்கும்போது சடகோபனாகவே, பாசுரங்களை அருளிச்செய்கிறார். இந்த ஞானம் மிகுந்த ப்ரேமத்தின் நிலையாக மாறும்போது, ஆழ்வார் பாசுரங்களை ஸ்த்ரீ பாவத்தில் – நாயகியாகவும், நாயகியின் தாயாகவும், நாயகியின் தோழியாகவும் பாடியருளினார்.
திருவாய்மொழிக்கான வ்யாக்யானங்கள்
எம்பெருமானார், திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுதத் திருக்குருகைப்பிரான் பிள்ளானை நியமித்தார். நம் ஸம்ப்ரதாயத்தில் வ்யாக்யானம் பெற்ற முதல் திவ்யப்ரபந்தம் இதுவே. பின்னர், பல ஆசார்யர்கள் திருவாய்மொழிக்கு வ்யாக்யானங்கள் அருளிச் செய்தார்கள்.
திருவாய்மொழிக்கு 5 முக்யமான வ்யாக்யானங்கள் உள்ளன:
- 6000 படி – திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளியது
- 9000 படி – நஞ்சீயர் அருளியது
- ஈடு 36000 படி – நம்பிள்ளை அருளிச்செய்தது, வடக்குத் திருவீதிப்பிள்ளையால் ஏடு படுத்தப்பட்டது
- 24000 படி – பெரியவாச்சான் பிள்ளை (தம் ஆசார்யரான நம்பிள்ளையின் திருவுள்ளப்படி அருளிச்செய்தது)
- 12000 படி (சொல்லுக்கு சொல் அர்த்தம்) – வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளியது
(குறிப்பு: 1 படியில் 32 அக்ஷரங்கள் உள்ளன)
மணவாள மாமுநிகள், ஈடு 36000 படி வ்யாக்யானத்திலிருந்து திருவாய்மொழியின் அர்த்தங்களை மிகுந்த உத்ஸாஹத்துடன் விளக்கியருளினார். நம்பெருமாள் மாமுநிகளின் காலக்ஷேபத்தை கேட்க விரும்பி, ஸ்ரீரங்கத்திலுள்ள பெரிய கோயிலில் ஸந்நிதியின் முன்பே ஒரு வருடம் முழுவதும் காலக்ஷேபம் நடத்துமாறு நியமித்தார்.
காலக்ஷேபம் நிறைவடைந்த பின், ஆனித் திருமூலம் என்னும் சுபதினத்தில், நம்பெருமாள் ஒரு சிறு பாலகனாக எழுந்தருளி “ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம்” தனியனை விண்ணப்பித்து, மணவாள மாமுநிகளைத் தமது ஆசார்யனாக ஏற்றுக்கொண்டார்.
இவ்விதமாகவே ஈடு வ்யாக்யானம் அனைவருக்கும் மாமுனிகளால் நன்கு அறியப்படுத்தப்பட்டது, மேலும் மஹிமை மிக்க திருவாய்மொழி எங்கும் பரவலாயிற்று.
ஆதாரம் – https://www.youtube.com/watch?v=W4vjhU2FUlo&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=9 மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/11/simple-guide-to-dhivyaprabandham-part-8/
அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி
பதிவிடம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org