ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி
ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். அவர்களின் பகவத் அநுபவம் ப்ரவாஹமாகப் பொங்கி திவ்ய ப்ரபந்தங்களாக வெளிப்பட்டன. திவ்யப்ரபந்தங்கள் வேதங்களின் ஸாரத்தையே நமக்கு அளிக்கின்றன. திவ்யப்ரபந்தங்களின் லக்ஷ்யம் நம்மை எம்பெருமானிடம் சேர்ப்பதாகும்.
ஆழ்வார்கள் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று அருளிச்செய்தார்கள். இந்தத் தத்வமே வேதத்திலும் விளக்கப்படுகிறது. பகவத் கீதை, ஶ்ரீ ராமாயணம், வராஹ புராணம் ஆகியவை எம்பெருமானிடம் ஶரணாகதி செய்பவர்கள் நிச்சயமாக ரக்ஷிக்கப்படுவார்கள் என்று விளக்குகின்றன.
ஶ்ரீ கீதை 18.66வது ஶ்லோகம் எம்பெருமானே உபாயம் என்று கூறுகிறது:
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுச: ||
ருஷிகள், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் எம்பெருமானே உபாயம் என்று விளக்கியருளினார்கள். அவனுடைய திருவடிகளைப் பற்றி அவனையே அடைவதே உபேயம். அதுவே நமக்கு உரிய பலம்.
திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்கள்
திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்கள் ஆறு – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம்.
இந்த ஆறில், பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை இரண்டாம் ஆயிரத்தில் வருகின்றன.
மீதமுள்ள திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகியவை இயற்பா என்று சொல்லப்படுகின்ற மூன்றாம் ஆயிரத்தில் வருகின்றன. இயல் என்பது பொதுவாக இசையுடன் பாடப்படுவதில்லை; இசை வடிவில் அமைக்கப்படுவதுமில்லை.
மணவாள மாமுனிகள் திருமங்கையாழ்வாரைப் பற்றி அருளிச்செய்தது
மணவாள மாமுனிகள் உபதேஶ ரத்தின மாலையின் எட்டாம் பாசுரத்தில் திருமங்கையாழ்வாரை இவ்வாறு மங்களாஶாஸனம் செய்கிறார்:
பேதை நெஞ்சே இன்றைப் பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கென்னில் ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்
ஓ மட நெஞ்சே! இன்றைய தினத்தின் பெருமை உனக்குத் தெரியாதோ? என்ன பெருமை என்று கேட்கிறாயா? கூறுகிறேன் கேள். வாய்த்த புகழுடைய திருமங்கையாழ்வார் இந்த மாநிலத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் வந்துதித்த நாள் இதுவே.
திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும்
நம்மாழ்வாரின் அருளிச்செயல்கள் நான்கு வேதங்களுக்கு நிகரானவை.
- திருவிருத்தம் — 100 பாசுரங்கள் — ருக் வேதம்
- திருவாசிரியம் — 7 பாசுரங்கள் — யஜுர் வேதம்
- பெரிய திருவந்தாதி — 87 பாசுரங்கள் — அதர்வண வேதம்
- திருவாய்மொழி — 1102 பாசுரங்கள் — ஸாம வேதம்
திருமங்கையாழ்வாரின் ஆறு அருளிச்செயல்களும் நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்களுக்கு அங்கங்களாகக் கொள்ளப்படுகின்றன. நான்கு வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் இருப்பதைப் போலவே, திருமங்கையாழ்வார் மொத்தம் 1361 பாசுரங்கள் கொண்ட ஆறு ப்ரபந்தங்களை அருளிச்செய்தார். மற்ற ஆழ்வார்களை விட அதிகமான பாசுரங்களை அருளிச்செய்தவர் இவரே. ஶ்ரீவைஷ்ணவர்கள் இவற்றை ஆறு வேதாங்கங்களாக, அதாவது நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்களுக்கு அங்க ப்ரபந்தங்களாகவே கொள்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் திருமங்கையாழ்வாரின் மூன்று அருளிச்செயல்களுக்கு அறிமுகம் காண்போம்.அவையாவன – திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.
எம்பெருமானாரால் அருளப்பட்ட திருமங்கையாழ்வாரின் தனியன்
வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன்
வாழியரோ மாயோனை வாள் வலியால் மந்திரம்கொள்
மங்கையர்கோன் தூயோன் சுடர்மான வேல்
வேற்று மத வாதிகளுக்கு யமனைப் போன்ற திருமங்கையாழ்வார் வாழி; கலியுக நோயை அழித்த திருமங்கையாழ்வார் வாழி; அவரால் சிறப்புற்ற திருக்குறையலூரின் வேந்தநான திருமங்கையாழ்வார் வாழி; வாள் வலியால் எம்பெருமானிடமிருந்து திருமந்திரம் கைக்கொண்டவரும், அகமும் புறமும் தூய்மையுடையவரும் ஆன திருமங்கையாழ்வாரின் சுடர் ஒளி வீசும் வேல் வாழி.
திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை
திருவெழுகூற்றிருக்கை இயற்பா பிரிவில் வருகிறது. இதற்கு வ்யாக்யானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் அருளிச்செய்துள்ளார்.
திருமங்கையாழ்வார் முதலில் பெரிய திருமொழியை அருளிச்செய்தார். பெரிய திருமொழி அநுபவத்தின் போது ஆழ்வார் திவ்ய தேஶங்களின் அநுபவத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்தார். ஆழ்வார் வைகுண்டத்தை மறந்துவிட்டாரோ என்று எம்பெருமான் எண்ணி, இந்த ஸம்ஸாரத்தின் உண்மையான ஸ்வரூபத்தை அவருக்குக் காட்டினான். ஆழ்வார் இந்த ஸம்ஸாரத்தின் உண்மையான தன்மையை உணர்ந்து, பெரிய திருமொழியின் கடைசி பதிகமான “மாற்றமுள…” என்ற பதிகத்தில், எரியும் விறகினால் சூழப்பட்ட எறும்பைப் போல் தான் இந்த ஸம்ஸாரத்தில் வருந்துகிறேன் என்று அருளிச்செய்தார். தேஹ ஸம்பந்தத்திலிருந்து விடுபட எம்பெருமானை வேண்டித் தலைக்கட்டுகிறார்.
இரண்டாம் ப்ரபந்தமான திருக்குறுந்தாண்டகத்தில், எம்பெருமான் ஆழ்வாருக்கு மேலும் தாகம் உண்டாகட்டும் என்று அவரிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்தான். எம்பெருமானைக் காணும் ஆவலை ஆழ்வாரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகவும் தாகமுற்றவன் தண்ணீரைக் குடித்தும், தன் மேல் ஊற்றிக்கொண்டும், அதில் மூழ்கியும் தன்னை ஆற்றிக்கொள்வதைப் போல், ஆழ்வார் எம்பெருமானைப் பற்றிப் பேசியும், திருவடிகளில் விழுந்தும், சிந்தித்தும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். வாக்கினாலும், மனத்தினாலும், திருவடிகளில் விழுவதாலும் எம்பெருமானுடன் ஒன்றித் திருக்குறுந்தாண்டகம் அருளிச்செய்தார்.
தாகமுற்றவன் கொஞ்சம் தண்ணீர் பருகும் போது மேலும் மேலும் பருக வேண்டும் என்று தோன்றுவதைப் போல், ஆழ்வாருக்கும் எம்பெருமானிடம் மேலும் தாகம் அதிகரித்தது. அதனால் மூன்றாம் ப்ரபந்தமான திருவெழுகூற்றிருக்கையில் திருக்குடந்தை ஆராவமுதனிடம் மிகுந்த ஆர்வத்துடன் ஶரணாகதி செய்தார். ஆகையால் இது ஒரு ஶரணாகதி ப்ரபந்தம்.
எம்பெருமான் “உமக்கு என்னிடம் என்ன வேண்டும்?” என்று கேட்கிறான். ஆழ்வார், “உம்மை அநுபவிக்கத் தடையாக இருக்கும் இந்த ஸம்ஸாரத்தை எந்த வாஸனையும் இல்லாதபடி முற்றிலும் போக்கியருள வேண்டும்” என்று பதில் கூறுகிறார். எம்பெருமான் “அது என்னால் செய்யக்கூடியதா?” என்று கேட்கிறான். ஆழ்வார், “உம்மைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நீரே ஸ்ருஷ்டித்து ரக்ஷிக்கிறீர்; அவை அனைத்தும் உம்மையே சரண் புகுந்து உம்மையே நம்பி இருக்கின்றன; எனவே இந்த ஸம்ஸாரத்திலிருந்து நம்மை விடுவிக்க நீரே வல்லவர், நாமாக அதை நீக்கிக்கொள்ள இயலாது” என்று அருளிச்செய்கிறார்.
நீரே எங்கள் ஸ்வாமி என்று எல்லா ஆழ்வார்களும் அருளிச்செய்தார்கள்; தாங்கள் உம்முடைய ஸொத்து என்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு கூறி, திருமங்கையாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதனின் திருவடிகளில் விழுந்து தம் நிலையை அவனிடம் விண்ணப்பித்து ஶரணாகதி செய்கிறார்.
நம்மாழ்வாரும் இந்த எம்பெருமானை நோக்கி (5-8) “ஆராவமுதே அடியேன் உடலம்” என்ற திருவாய்மொழியில் ஆராவமுதனிடம் ஶரணாகதி செய்தருளினார். இவ்வாறு திருமங்கையாழ்வாரின் இந்த ப்ரபந்தம் முழுவதும் திருக்குடந்தை ஆராவமுத எம்பெருமான் விஷயமாக அருளிச்செய்யப்பட்டது என்பதை அநுபவித்தோம்.
இந்த திவ்ய ப்ரபந்தத்திற்கு இரண்டாவது வ்யாக்யானமும் வ்யாக்யானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளையாலேயே அருளிச்செய்யப்பட்டுள்ளது.
திருவெழுகூற்றிருக்கைக்கான பெரியவாச்சான் பிள்ளையின் இரண்டாம் வ்யாக்யானம், அதை ப்ரார்த்தித்து நின்ற ஶ்ரீவைஷ்ணவர்களுக்காக மிகுந்த க்ருபையுடைய பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்தது என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த வ்யாக்யானத்தில், ப்ரளயகாலத்தில் நாம் கர்மேந்த்ரியங்களும் ஞானேந்த்ரியங்களும் இல்லாமல், தமஸ்ஸினால் சூழப்பட்டு, எந்த ஞானமும் இல்லாமல், அசித்தை ஒத்தவர்களாய், உம்முடைய திருமேனியில் அசித்தைப் போலவே தங்கியிருந்தோம் என்று கூறுகிறார். இந்த பரிதாபமான நிலையைக் கண்டு தேவரீர், நாம் வேண்டாமலேயே, நம்மிடத்தில் உமக்குள்ள அன்பாலும், அநாதியான நம் ஸம்பந்தத்தாலும், ஸ்வாபாவிகமாக உமக்கு பொங்கி வரும் க்ருபையினாலும், தேஹத்தை அளித்து ஸ்ருஷ்டி செய்தருளினீர்.
ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் (10) கூறுவதைப் போல், உம்முடைய அநுக்ரஹம் இல்லாமல் இந்த உலகங்கள் ஸ்ருஷ்டிக்கப்படவே மாட்டா. அநாதியாக நம் அஸ்தித்வமே (இருப்பே) உம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது; அப்படியிருக்க, உம்மை விட்டு நாம் எதுவும் செய்ய இயலாது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?
அதுபோலவே நம்மாழ்வார் திருவாய்மொழி 10-10-6ல், “இந்த உலகையே நீர் ஸ்ருஷ்டித்தீர்; அப்படியிருக்க நம்மை உம்மிடம் சேர்த்துக்கொள்வதை ஏன் நிறுத்தியிருக்கிறீர்?” என்று விண்ணப்பிக்கிறார்.
எம்பெருமான், “வஸிஷ்டர், விஶ்வாமித்ரர் போன்ற எத்தனையோ ஞானிகள் இருக்கும்போது ரக்ஷிக்க ஒருவரும் இல்லை என்று எப்படி கூறுகிறீர்?” என்று கேட்கிறான்.
ஆழ்வார், “தேவரீர் அறியாதது ஒன்றுமில்லை; உம்மை யாரும் தம் முயற்சியால் முழுமையாக அறியவும் இயலாது; அடையவும் இயலாது; உமக்கோ அறியாதது அடையாதது என்று ஒன்றுமே இல்லை. நம்மில் சிலருக்கு எவ்வளவு ஞானமும் ஶக்தியும் இருந்தாலும், நம் முயற்சியால் உம்மை முழுமையாக அறியவோ அடையவோ இயலாது. ஒரு உதாஹரணம்: ஒருவன் குருடனாகவும் நடக்க இயலாதவனாகவும் இருக்கிறான்; மற்றொருவன் நல்ல பார்வையுடனும் நடக்கும் திறனுடனும் இருக்கிறான். நன்கு பார்க்கக்கூடிய மற்றும் நடக்கக்கூடிய இரண்டாமவன் முதலாமவனுக்கு உதவி செய்து வழி காட்டாவிட்டால், முதலாமவன் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது அல்லவா? அதுபோல் அடியேன் ஞானமும் ஶக்தியும் இல்லாதவன்; தேவரீரே எல்லாவற்றையும் அறிந்தவரும் எல்லா ஶக்திகளையும் உடையவரும். அப்படியிருக்க, செயல்பட வேண்டியது தேவரீரே; அடியேன் செய்து ஸாதிக்கிறேன் என்பது எங்கனம் பொருந்தும்?” என்று பதில் அருளுகிறார்.
“தேவரீர் அருளிய ஞானத்தால் முயன்றாலும், வைகுண்டத்தை அடையும் ஶக்தி என்னிடம் உண்டோ? அடியேனின் ஞானத்தால் உம்மை அடைய இயலாது; தேவரீரே உபாயம், உம்மை அடைய தேவரீரே உபாயம் என்பதே என்னிடம் உள்ள ஞானம்.”
ஆழ்வார் மேலும் அருளுகிறார் – “நாம் என்ன செய்ய இயலும்? தாய் கண்ணில் மறைந்தால் குழந்தை அழுவதைப் போல், இந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவன் க்ருபையை நோக்கி அழுவதே நம்மால் ஆவது.”
இவை திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை அருளிய அற்புதமான வ்யாக்யானத்திலிருந்து சில துளிகள். நம்மாழ்வார் இன்பமாரி என்று அழைக்கப்படுகிறார்; திருமங்கையாழ்வார் அருள்மாரி என்று அழைக்கப்படுகிறார்.
திருவெழுகூற்றிருக்கை தனியன்:
சீரார் திருவெழுக் கூற்றிருக்கை என்னும் செந்தமிழால்
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தன் அடியிணைக் கீழ்
ஏரார் மறைப் பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உய்யவே
சோராமல் சொன்ன அருள்மாரி பாதம் துணை நமக்கே
திருவெழுகூற்றிருக்கை என்னும் அழகிய செந்தமிழ் ப்ரபந்தம், ஆராவமுதன் என்னும் திருநாமத்துடைய எம்பெருமானின் திருவடியிணையைப் பாடுவதாக அமைந்துள்ளது. இந்த உலகம் உய்யும் பொருட்டு, வேதங்களின் பொருட்களை எல்லாம் சோராமல் எடுத்துரைத்தார். இவ்வாறு நம்மிடம் அருளைப் பொழிந்த திருமங்கையாழ்வாரின் திருவடிகளே நமக்குத் துணை.
எம்பெருமானைத் தவிர வேறு ரக்ஷகன் இல்லை. அவன் கையில் ஶங்கும் சக்கரமும் உடையவன். ப்ரஹ்மாவுக்கு ஞானம் அளித்தவன்; அவனே நம் ஒரே ரக்ஷகன். “எம்பெருமானே! நீரே எல்லாவற்றையும் அறிவீர், நீரே என்னை ரக்ஷிக்க வல்லவர், என்னால் என்னை ரக்ஷித்துக்கொள்ள இயலாது!” என்பதே ஶரணாகதி செய்த பக்தனின் விண்ணப்பம்.
திருவெழுகூற்றிருக்கை என்னும் பெயர்க்காரணம்
எழு – 7, கூறு – பகுதிகள், இருக்கை – இருத்தல். இது சித்திரக் கவிதை என்று அழைக்கப்படுகிறது – திருவெழுகூற்றிருக்கையை ஒரு தேரின் வடிவில் வரையலாம்.
தேர் சிறிய அகலத்தில் தொடங்கி மேலும் மேலும் அகன்று செல்கிறது. அதைப் போலவே திருவெழுகூற்றிருக்கை ஒரு பாசுர வரியில் 1-2-1 என்றும், அடுத்த வரியில் 1-2-3-2-1 என்றும், பிறகு 1-2-3-4-3-2-1, 1-2-3-4-5-4-3-2-1 என்றும் விரிந்து செல்கிறது.
1-2-1 ஒரு பேருந்தி இரு மலர் தவிசில் ஒரு முறை அயனை ஈன்றனை
1-2-3-2-1 ஒரு முறை இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள் இலங்கை இருகால் வளைய, ஒரு சிலை
திருவெழுகூற்றிருக்கையின் ஸாரம்
“ப்ரளயத்திற்குப் பின் உலகமே இல்லாதிருந்தபோது, தேவரீரின் நிர்ஹேதுக க்ருபையால் எல்லாவற்றையும் இருக்கச் செய்தீர். உலகங்களை ஸ்ருஷ்டித்தீர்; தேவரீரின் தாமரை போன்ற திருநாபியிலிருந்து ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து, அவனுக்கு அந்தர்யாமியாக விளங்குகிறீர்; சேதன அசேதனங்களுக்கு ஸம்ஸாரத்தை ஸ்ருஷ்டித்தீர்; தேவரீரே ஸர்வ காரணங்களுக்கும் காரணம். அப்படியிருக்க, எங்கள் அனைவருக்கும் மோக்ஷம் அளிப்பது தேவரீருக்கு கஷ்டமோ?”
திருமங்கையாழ்வார், “தேவரீரிடமிருந்து அடியேனை பிரிக்கும் தடைகளை அடியேனால் நீக்கிக்கொள்ள இயலாது. இந்த ஸம்ஸாரத்தில் அடியேனிடம் உள்ள அவித்யை, கர்மம், வாஸனை, ருசி (அதாவது ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தைப் பற்றிய அறியாமை, முன்பு செய்த கர்மங்களின் தாக்கம், பழைய ஸம்ஸ்காரங்கள், பஞ்சேந்த்ரியங்களால் உண்டான விஷய ருசி) – இவை எதையும் அடியேனால் நீக்கிக்கொள்ள இயலாது. தேவரீரே இவற்றை நீக்கியருள வேண்டும்; அடியேனை தேவரீரிடமிருந்து பிரிக்கும் இந்த விரோதிகளை போக்கியருள வேண்டும்” என்று அருளிச்செய்கிறார்.
கடைசியில், திருமங்கையாழ்வார் திருக்குடந்தை எம்பெருமானின் திருவடிகளில் ஶரணாகதி செய்கிறார். ரத்னங்களையும் மற்ற செல்வங்களையும் கொண்டு வரும் வளமான காவிரி நதியால் சிறப்புற்ற அந்த திவ்ய தேஶத்தை வர்ணிக்கிறார்; எட்டு திக்குகளிலும் புகழ் பரவிய திருமழிசை ஆழ்வாரைப் போன்று, வேதாந்த ஸூக்திகளால் எம்பெருமானை ஆராதிக்கும் அந்த திவ்ய தேஶத்தில் வாழும் அறிஞர்களை மங்களாஶாஸனம் செய்கிறார்.
நம்மாழ்வாரைப் போலவே, திருமங்கையாழ்வாரும் இங்கே ஆராவமுதனின் திருவடிகளில் ஶரணாகதி செய்து, தம்மை ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.
திருவெழுகூற்றிருக்கையின் இறுதியில் கம்பரால் இயற்றப்பட்ட பாடல் பாடப்படுகிறது:
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூங்குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கரும் துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப்பாதங்களே
இந்தப் பாடலில் கம்பநாட்டாழ்வார் திருமங்கையாழ்வாரின் பெருமையை வர்ணிக்கிறார். திருவெழுகூற்றிருக்கையில் திருமங்கையாழ்வார் திருக்குடந்தையை வர்ணித்தது போலவே, கம்பர் திருக்குடந்தையையும், ஆராவமுதாழ்வாரையும், திருவனந்தாழ்வானையும் வர்ணித்து, அந்த எம்பெருமானின் திருவடிகளே திருமங்கையாழ்வாரின் விஶாலமான ஆழமான நெஞ்சில் என்றும் கிடப்பவை என்று அருளிச்செய்கிறார்.
சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல்
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் என்னும் அழகிய ஒரு திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்தார். இந்த ப்ரபந்தத்தில், எம்பெருமானிடமிருந்து பிரிவினால் வருந்தி, பிரிவாற்றாமையின் மிகுந்த துயரத்தால், பரகால நாயகியாக பெண்மைக் குணம் கொண்டு மடல் எடுக்கிறார் [மடல் என்பது ஒரு ஆண் அல்லது பெண், தன் காதலன்/காதலியைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் நோக்கில் தன்னை ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டுவது].
திருமங்கையாழ்வார் இரண்டு திருமடல் ப்ரபந்தங்களை அருளிச்செய்துள்ளார் – சிறிய திருமடல், இது க்ருஷ்ணனைப் பற்றிய விஷயங்களைக் கூறுவது; மற்றும் பெரிய திருமடல், இது திருநறையூர் நம்பியை – திருநறையூரில் (கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஒரு திவ்யதேஶம்) அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பற்றிய விஷயங்களைக் கூறுவது.
மடலூர்தல் என்னும் சொல், நாயகன் (அல்லது நாயகி) தன் காதலுக்கு நாயகி (அல்லது நாயகன்) செவிசாய்க்காதிருக்கும்போது, உலகோர் காண அவனை (அவளை) நாணமுறச் செய்து, தம்மிருவரையும் இணைக்க உலகோரின் உதவியை நாடும் நாயகியின் (அல்லது நாயகனின்) தைரியத்தைக் குறிக்கிறது. பெண்மையின் உணர்வு நிலையை அடைந்த திருமங்கையாழ்வார், இந்த இரண்டு மடல்களிலும் இத்தகைய தைரியத்தை வெளிப்படுத்துகிறார். அடக்கமுடியாத வெள்ளம் போல் ப்ரேமை பொங்கி, தன் இயல்பை மறந்த நிலையில் ஒரு பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வழிகளில் இதுவும் ஒன்று. நம் பூர்வாசார்யர்கள், உபவாஸம் இருந்து இவ்வாறு மடல் எடுப்பதும், மங்களாஶாஸனம் செய்வதும் மிகவும் உயர்ந்த நடத்தையாகவே கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இது எம்பெருமான் மீதான அளவு கடந்த பக்தியால் உண்டாகும் அஞ்ஞானத்தில் பிறந்தது; அதே சமயத்தில் அவனைப் பற்றிய உண்மையான ஞானத்தாலும் ஏற்படுகிறது. திருக்குறள் கூறுகிறது: “கடலன்ன காமத்தராயினும் மாதர் மடலூரார் மற்றையார் மேல்” (கடல் போன்று ஆழமான காதல் இருந்தாலும், பெண்கள் தம் காதலர் மீது மடலூர மாட்டார்கள்) என்றும், “கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்கதில்” (கடல் போன்று ஆழமான காதல் இருந்தாலும், தம் காதலர் மீது மடலூராத பெண்ணை விட மேன்மையானது எதுவுமில்லை) என்றும். ஆனால் திருமங்கையாழ்வார் இந்த கொள்கையை ஏற்காமல், இந்தப் பெரிய திருமடலில், விந்திய மலைக்கு வடக்கிலுள்ளோரின் கலாசார கொள்கையை ஏற்கிறார் என்று கூறுகிறார். அதாவது, ஆணோ பெண்ணோ யாராயினும், காதல் அடக்கொணாமல் பொங்கினால் மடலூரலாம் என்பதே அக்கொள்கை. ஒரு மனிதரின் ஆசை, வெள்ளப்பெருக்கெடுத்த காவிரி நதி போல் கரைகளை உடைத்தோடும்போது, கூறப்பட்ட எல்லா நியதிகளின் எல்லைகளையும் தகர்த்துவிடும் என்பதை நாம் உணர வேண்டும்.
சிறிய திருமடலில், திருமங்கையாழ்வார் எம்பெருமான் க்ருஷ்ணன் மீது மடலூர முயன்றார். க்ருஷ்ணன் வேறொரு யுகத்தில் வாழ்ந்தவன் என்பதாலும், அவனுக்கே மானம் என்பது இல்லாததாலும் (வெண்ணெய் திருடியதற்காகத் தாயார் உரலில் கட்டியதை பொறுத்துக்கொண்டான், இடையர் குலத்துப் பெண்கள் அவன் குறும்பு செய்தபோது அவனை வைது திட்டியதையும் சகித்துக்கொண்டான்) மடல் பலன் தரவில்லை. ஆகையால், தம் காலத்திலேயே எழுந்தருளியிருக்கும் ஸௌலப்யத்தின் எல்லையான திருநறையூர் அர்ச்சாவதாரப் பெருமாள் மீது மடல் எடுக்க முயல்கிறார். நம்மாழ்வார் திருவாய்மொழி 5-3-9ல் “மடலூர்தும்” என்று அருளிச்செய்தது போல், இந்த ஆழ்வாரும் எம்பெருமான் தம்மிடம் வர வேண்டும் என்பதற்காக மடலூருவேன் என்று எம்பெருமானை பயமுறுத்துகிறார். ஆனால் உண்மையில், அவர் எம்பெருமானை பயமுறுத்தினாரே தவிர மடலூரவில்லை. ஆகையால் எம்பெருமான் மீது முழுமையான சரணாகதி செய்திருக்கும் ஆழ்வாரின் பாரதந்த்ர்யத்திற்கு எந்தப் பங்கமும் வரவில்லை என்று கூறலாம்.
இந்த ப்ரபந்தத்திற்கு வ்யாக்யானம் பெரியவாச்சான் பிள்ளையாலும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராலும் அருளிச்செய்யப்பட்டுள்ளது. நாம் பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தையே பின்பற்றி, தேவையான இடங்களில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய முக்யமான விஶேஷ அர்த்தங்களையும் சேர்த்து அநுபவிப்போம்.
திருமங்கையாழ்வாரின் ப்ரபந்தங்களின் காலவரிசை பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என அமைகிறது. திருக்குறுந்தாண்டகத்தில், திருமங்கையாழ்வார் பரம புருஷனான ஶ்ரீமந்நாராயணனை தமது திருவுள்ளத்தில் உட்கண்களால் தர்ஶித்தார். திருவெழுகூற்றிருக்கையில், ஶ்ரீமந்நாராயணன்மேல் ஆழ்வார் ஆசை கொண்டு, அவனை தமது பாஹ்ய இந்த்ரியங்களாலும் அநுபவிக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளியிட்டருளினார். திருக்குடந்தையில் எம்பெருமானின் திருவடித்தாமரைகளில் சரணாகதி செய்தருளினார்.
மடல் என்றால் என்ன? நாயகனும் நாயகியும் ஒத்த வயதுடையவர்களாக இருக்க வேண்டும். நாயகன் ஞானம், செருக்கு, ஆர்வம், உறுதி போன்ற ஆண்மைப் பண்புகள் அனைத்திலும் நிரம்பியவனாக இருக்க வேண்டும். நாயகி அச்சம், நாணம், மடமை, பயிர்ப்பு மற்றும் பிரிவாற்றாமையால் மேனி வெளுத்தல் போன்ற பெண்மைப் பண்புகள் அனைத்தும் நிரம்பியவளாக இருக்க வேண்டும். நாயகி தன் தோழியருடன் மலர் பறிக்க ஒரு பூந்தோட்டத்திற்குச் செல்கிறாள். நாயகனும் வேட்டையாட அதே தோட்டத்திற்கு வருகிறான். நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் முதலில் பார்க்கின்றனர்; அது அவர்களின் சேர்க்கைக்கு வழிவகுக்கிறது. தடையற்ற தொடர்ச்சியான சேர்க்கை அதிக நீரால் பயிர் அழிவதுபோல் இறுதியில் அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கும் என்பதால், அவர்கள் எதிர்காலத்தில் நீண்ட காலம் பொறுமையுடன் அநுபவிக்கட்டும் என்று விதி அவர்களைப் பிரிக்க முடிவு செய்தது. எனினும் அந்தப் பிரிவு அவர்களின் வேதனையை நூறு, ஆயிரம் மடங்கு அதிகரித்தது. இந்தத் தருணத்தில், ஒருவரை அடைய இயலாத நாயகன் அல்லது நாயகி, ஒரு தைரியமான செயலில் ஈடுபடுகின்றனர் – அதுவே மடல் எனப்படுகிறது.
அந்தத் தைரியமான செயல் என்னவெனில் – காதலனின் (அல்லது காதலியின்) ஸ்வரூபம் (இயற்கையான தன்மை), ரூபம் (அழகு), குணம், விபூதி (செல்வம்) ஆகியவற்றை அழிப்பதாகும். அவள்(ன்) தன் காதலனின் (காதலியின்) உருவப்படம் வரைந்து, நெய் உண்ணாமலும் பால் பருகாமலும் அந்தப் படத்தையே இடைவிடாது உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பாள்(ன்). நீராடவும் மாட்டாள்(ன்); அலங்கரித்துக்கொள்ளவும் மாட்டாள்(ன்). பனை மட்டையால் செய்த குதிரை மீது ஏறி, கலைந்த கூந்தலுடன் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதாக நடிப்பாள்(ன்). “இவன்(ள்) என்னை விட்டு விலகிவிட்டான்(ள்). என்மீது சிறிதும் கருணை இல்லை. கல்நெஞ்சமும் கொடுமையும் கொண்டவன்(ள்). இவன்(ள்) செய்யக்கூடிய தீங்குகளுக்கு அளவே இல்லை” என்று கூக்குரலிட்டு அலைவாள்(ன்). கேட்போர் இரங்கும்படி தெருவெல்லாம் சுற்றி இவ்வாறு புலம்புவதே மடலூறுதல் எனப்படும். காதலனின் (அல்லது காதலியின்) உள்ளார்ந்த இயல்பையும், அழகையும், குணங்களையும், செல்வத்தையும் இவ்வாறு மறுப்பது, அவனை (அல்லது அவளை) அழிப்பதற்கு ஒப்பானதல்லவா?
இந்தக் கொடுமையான மடல் ஊர்ந்த செயலின் நோக்கம் என்ன?
இரு காதலர்களின் உறவினர்கள் அவர்களை இணைக்க முயற்சிக்கலாம். அந்த நாட்டின் அரசனும் அவர்களை இணைக்க உதவுவது ஸாத்யமாகும். இருவரின் நண்பர்களும் உறவினர்களும் அவர்களைக் கைவிட்டால், ஆயுதங்களின் குவியலில் ஒவ்வொரு ஆயுதமும் மற்ற ஆயுதங்களைத் தாங்குவது போல், இருவரும் இணைந்து ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு வாழலாம். மேற்சொன்னவற்றில் எதுவும் நடைபெறாவிட்டால், நாயகன் அல்லது நாயகி தான் விரும்பியவரைப் பெற முடியாததால் உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற பெருமையாவது கிட்டும்.
நம்மாழ்வார் தம் திருவாய்மொழி 1-5 “வளவேழ் உலகில்” தசகத்தில் குறிப்பிட்டதைப் போலவே, ஆழ்வார்கள் தம் தாழ்ச்சியை நினைத்து “இவ்வளவு மேன்மையுள்ள எம்பெருமானிடம் சென்றால் அவனுக்குத் தாழ்ச்சியைக் கொண்டுவருவேன்” என்று சொல்லி அவனிடமிருந்து விலகிச் செல்லும் இயல்பினர். இந்த இயல்பினராகிய ஆழ்வார்கள் எம்பெருமான் மீது கொடுமையான செயலாகிய மடல் ஊர்வதில் ஈடுபடுவார்களா? அவர்கள் இறுதிவரை மடல் ஊர்ந்து ஶ்ரீமந்நாராயணனின் குணங்களை அழிப்பவர்கள் அல்லர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழி 5-3-9-ல் “ஆணையென் தோழி உலகு தோறு அலர்தூற்றி, ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே” (தோழி! கேள், உலகெங்கும் பழிபரப்பி, கடுமையான செயல்களை செய்து, கட்டுக்கடங்காத பெண்ணாய் மடலூர்வோம்) என்றும் திருவாய்மொழி 5-3-10-ல் “யாம் மடலூர்ந்தும் எம் ஆழியங்கைப்பிரானுடை, தூமடல் தண்ணந்துழாய் மலர் கொண்டு சூடுவோம்” (மடலூர்ந்தாலும், அழகிய திருக்கையில் திருவாழியை உடைய எம்பெருமான் நமக்கு அளித்த தூய மடலினையுடைய குளிர்ந்த திருத்துழாய் மலரை சூடிக்கொள்வோம்) என்றும் மிரட்டியதைப் போலவே, இந்த ஆழ்வாரும் சிறிய திருமடலில் “ஊராதொழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல்” (நீண்ட அழகிய பனை மடலில் மடலூராமல் விடமாட்டேன்) என்றும் பெரிய திருமடலில் “உலகறிய ஊர்வன் நான் மன்னிய பூம் பெண்ணை மடல்” (உலகமெல்லாம் அறியும்படி, சிறந்த அழகிய பனை மடலில் மடலூர்வேன்) என்றும் ஶ்ரீமந்நாராயணனை மிரட்டி, தன்னிடம் வரும்படி செய்ய மடல் ஊர்வதாக அறிவித்தும், மடல் எடுக்கும் செயலை நிறைவேற்றவில்லை.
அப்படியிருந்தும், ஆழ்வார்கள் தம் சொந்த இயல்பில் [ஆணாக] பேசாமல் பிராட்டியின் இயல்பில் பேசுவது ஏன்?
ஆத்மாவின் ஸ்வரூப நிரூபக தர்மங்களாகிய (1) அநந்யார்ஹஶேஷத்வம் (ஶ்ரீமந்நாராயணனையன்றி வேறொருவருக்கும் அடிமையாகாத குணம்), (2) அநந்யஶரணத்வம் (ஶ்ரீமந்நாராயணனையன்றி வேறொருவரைச் சரணடையாத குணம்), (3) அநந்யபோக்யத்வம் (ஶ்ரீமந்நாராயணனையன்றி வேறொருவருக்கும் அனுபவ விஷயமாகாத குணம்) என்னும் குணங்கள், ஸ்த்ரீகளின் குணங்களாக – அதிலும் பதிவ்ரதையின் அஸாதாரண குணங்களைப் போல் ப்ரகாஶமாக வெளிப்படுவதாலும், ஆழ்வார்கள் போன்ற மஹான்களுக்கு எம்பெருமானுடன் இருந்தால் மட்டுமே தரிக்க முடியும், அவனிடமிருந்து பிரிந்திருந்தால் தரிக்க முடியாது என்பதாலும், முக்தி நிலையில் [ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்ட தருணத்தில்] அவர்களின் ஜ்ஞானம் விகஸிக்கும் போது பிராட்டியின் ஞானத்திற்கு ஸமமாகும் என்பதாலும், இந்த ஆழ்வார்களுக்கு ஸம்ஸார தஶையிலேயே நிர்மலமான ஜ்ஞானமும் பக்தியும் அநுக்ரஹிக்கப்பட்டு பிராட்டிக்கு ஸமமான நிலையில் இருப்பதாலும், ஆழ்வார்கள் எம்பெருமானின் பிராட்டிமார்களின் இயல்பில் பேசுகிறார்கள்.
தமிழ் இலக்கியமாகிய திருக்குறளில் “கடலன்ன காமத்தராகிலும் மாதர் மடலூரார் மற்றையார் மேல்” (கடல் போல் ஆழமான காமம் இருந்தாலும், பெண்கள் மடலூரமாட்டார்கள்) என்றும் “கடலன்ன காமமுழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்கதில்” (காமத்தால் வருந்தினாலும் மடலூராத பெண்களின் பிறப்பைவிட சிறந்தது எதுவுமில்லை) என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, மடலூருவது பெண்களின் இயல்பிற்கு மாறானது என்று தமிழ் ஶாஸ்த்ரங்கள் கூறும்போது, ஆழ்வார் பிராட்டியின் மனநிலையை ஏற்று மடலூருவது தகுமா? ஆண் பெண் இருவரில் ஆண்மட்டுமே தன் நாயகியிடம் அளவற்ற அன்பு கொண்டிருக்கிறான், பெண்ணின் அன்பு தன் நாயகனிடம் வரம்புக்குட்பட்டது என்றிருந்தால், தமிழ் இலக்கியம் கூறியது சரியாக இருக்கும். ஆனால், உண்மையில் அப்படி இல்லை — ஆண் பெண் இருவரும் தாம் விரும்புகின்றவர்களிடம் அளவற்ற அன்பு கொண்டிருப்பதாகக் காணப்படுகிறது. ஆகவே, காமம் வரம்பு கடந்தால் ஆண் பெண் இருவரும் மடலூரலாம் என்று கூறும் ஸம்ஸ்க்ருத ஶாஸ்த்ரங்களுக்கு ஏற்ப, இந்தப் பிராட்டி (பெண் மனநிலையில் உள்ள ஆழ்வார்) மடலூர்கிறார்.
மடலை நேரடியாக ஊராமல், மடல் ஊர்வதற்கான தன் உறுதியை வெளிப்படுத்தித் தாமதிப்பது ஏன்? ஏனென்றால், பரகால நாயகி முதலில் (1) மடல் ஊர்வதற்கான காரணங்களை விவரிக்க வேண்டும், (2) தன் உறவினர்களை இந்தச் செயலுக்குச் சம்மதிக்கச் செய்ய வேண்டும், (3) மிகச் சிறந்த மங்களகரமான குணங்களுடையவனை அவசரப்பட்டு அழித்துவிடாமல் இருக்க வேண்டும், (4) அவன் வருவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.
மடல் பொதுவாக ஆண்களால் செய்யப்படுவது. சிறிய திருமடலும் பெரிய திருமடலும் பெண் பாவத்தில் இயற்றப்பட்டவை. இது லௌகிக காமம் அன்று. இது பக்தியின் எல்லை நிலை. எல்லா ஆத்மாக்களும் பெண்கள், எம்பெருமான் மட்டுமே புருஷன். இந்த திருமடல்கள் உயர்ந்த பக்தியின் வடிவம்.
திருமங்கையாழ்வார் நேரடியாக மடலூரவில்லை. மடலூறுவதாக மட்டுமே கூறுகிறார். மிகவும் மென்மையான ஹ்ருதயம் படைத்தவராகையால், எம்பெருமானை விளித்து “நீர் என்னை அழைத்துச் செல்ல வருவீரா?” என்று கேட்கிறார். எம்பெருமான் தன்னிடம் வர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்.
தனியன்
முள்ளிச்செழுமலரோ(ர்) தாரான் முளைமதியம்
கொள்ளிகென்னுள்ளம் கொதியாமே – வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்
இந்தத் தனியனை பிள்ளை திருநறையூர் அரையர் அருளிச்செய்தார். தனியனுக்கான வ்யாக்யானத்தை பிள்ளை லோகம் ஜீயர் அருளினார்.
தனியனுக்கு முன்னுரை
இந்த தனியனின் அவதாரிகைக்கு இரண்டு வ்யாக்யானங்கள் உள்ளன.
வ்யாக்யானம் 1
முதல் சொற்றொடரை “முள்ளிச் செழு மலரோர் தாரான்” என்று கொண்டால் இந்த வ்யாக்யானம் அமையும். ஶப்த, ஸ்பர்ஶ, ரூப, ரஸ, கந்தம் என்று கூட்டாக “ஶப்தாதி விஷயங்கள்” என்று அழைக்கப்படும் ஐந்து பொருள்கள் உள்ளன. ஶப்தம் என்பது ஒலி; ஸ்பர்ஶம் என்பது தொடுதல்; ரூபம் என்பது வடிவம்; ரஸம் என்பது சுவை; கந்தம் என்பது மணம். இந்த ஐந்தும் ஒருவரின் மனதைக் கட்டுப்படுத்துவதில் முக்யமான பங்கு வகிக்கின்றன. திருமங்கையாழ்வார் நமக்கு அருளிச்செய்த “சிறிய திருமடல்” என்னும் ப்ரபந்தத்தை பிள்ளை திருநறையூர் அரையர் கொண்டாடுகிறார். “சிறிய திருமடல்” என்னும் ப்ரபந்தத்தின் துணையால், திருமங்கையாழ்வாரின் திருவடிகளுக்கு கைங்கர்யம் செய்யும் பக்தர்கள் “ஶப்தாதி விஷயங்கள்” காரணமாக உண்டாகும் தீய ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மனதையும் இதயத்தையும் ஶ்ரீமந்நாராயணன் திறத்தில் செலுத்த முடிகிறது என்று பிள்ளை திருநறையூர் அரையர் கூறுகிறார். இந்த வ்யாக்யானத்தின் தாத்பர்யம் என்னவென்றால் – இந்த “சிறிய திருமடல்” என்னும் ப்ரபந்தம், ஶ்ரீமந்நாராயணனிடமிருந்து பிரிந்து வேதனையால் உயிர் தரிக்க முடியாது தவிக்கும் பக்தர்களுக்கு ஒரு ஆறுதலாக, தரிப்பதற்கு உதவியாக விளங்குகிறது.
வ்யாக்யானம் 2
முதல் சொற்றொடரை “முள்ளிச் செழு மலரோ தாரான்” என்று கொண்டால் இந்த வ்யாக்யானம் அமையும். திருமங்கையாழ்வாரிடமிருந்து பிரிந்து வாழ முடியாத அவரது பக்தர்கள் உள்ளனர். இந்த பக்தர்கள் தங்கள் பிரிவாற்றாமையைத் தாங்கிக்கொண்டு, “ஶப்தாதி விஷயங்கள்” அவர்களைத் துன்புறுத்தாமல் இருக்கும் பொருட்டு திருமங்கையாழ்வார் “சிறிய திருமடல்” என்னும் ப்ரபந்தத்தை அருளிச்செய்தார். திருமங்கையாழ்வார் முள்ளி மலர்களால் ஆன மாலையை அணிவார். ஆனால் தம் பக்தர்களுக்கு முள்ளி மாலையை அளிக்கவில்லை. மாறாக, “சிறிய திருமடல்” என்னும் பாசுர மாலையாகிய இன்னும் மிகவும் அற்புதமான ஒன்றை அருளிச்செய்தார்.
சிறிய திருமடலுக்கும் பெரிய திருமடலுக்கும் உள்ள முக்ய வித்யாஸம் என்னவென்றால், சிறிய திருமடலில் திருமங்கையாழ்வார் பெண் பாவத்தில் இருக்கிறார்; மடலூர்வவதாக மிரட்டினார், ஆனால் எம்பெருமான் வரவில்லை. ஆகவே பெரிய திருமடலில் ஆழ்வார் “க்ருஷ்ணனுக்கு வெட்கமே இல்லை. ஆகவே, அர்ச்சாவதார எம்பெருமானிடம் மடலூர்வேன், அடியேன் அவனுக்காக அழுது ஏங்கிக்கொண்டிருக்கிறேன், ஒருவேளை அவன் வருவான்” என்று நினைத்தார். பகவத் அனுபவமே லக்ஷ்யம், மோக்ஷம் அல்ல என்று எடுத்துக்காட்டுகிறார்.
எம்பெருமானிடம் அவருக்கு ஆராத காதல் உள்ளது. அந்த காதல் மூன்று பா4வங்களில் வெளிப்படுகிறது:
- தாய் பாசுரம் (தாயின் பா4வம்) – எம்பெருமானே உபாயம் – அவன் மட்டுமே வர வேண்டும், நாம் காத்திருக்கிறோம்
- தலைமகள் (நாயகியின் பா4வம்) – எப்படியாவது எம்பெருமானை அடைய வேண்டும் – அதுவே லக்ஷ்யம்
- தோழி பாசுரம் (தோழியின் பா4வம்) – ஆத்மாவிற்கும் பகவானுக்கும், பிராட்டிக்கும் பெருமாளுக்கும் உள்ள ஸம்பந்தம்
இவ்வாறு திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் மூன்று ப்ரபந்தங்களின் அறிமுகத்தை ஒருவாறு அநுபவித்தோம்.
ஆதாரம் – https://www.youtube.com/watch?v=uaBoBPnzmTk&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=8 மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/11/simple-guide-to-dhivyaprabandham-part-7/
அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி
பதிவிடம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org