ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை
ஐம்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், பிரிவாற்றாமையால் எம்பெருமானுக்குத் தூது விடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கைதனைப் புள் இனங்காள்! செப்பும் என – கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர்! நீர் வணங்குமின்
உலகத்தீர்களே! மிகவும் அன்புடன் “பறவைக் கூட்டங்களே! திருவண்வண்டூரில் நித்ய வாஸம் செய்தருளும் சக்ரவர்த்தித் திருமகனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கோள்” என்று பறவைகளைத் தூது விடும் ஆழ்வாருடைய திருவடிகளை வணங்குங்கள்.
ஐம்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஊடலினால் எம்பெருமானைப் புறம் தள்ளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன் நிலை போய்ப் பெண் நிலையாய்த் தான் தள்ளி – உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாள் தோறும் நெஞ்சமே! நல்கு
ஆழ்வார் தன்னிலை மறந்து கோபிகைகளின் நிலையை அடைந்து, மின்னல் போன்ற இடையுடன் கூடிய பெண்களுடன் இருந்துவிட்டு நேரம் கழித்து வந்த கண்ணனிடம் கொண்ட ஊடலினால் “நான் உன்னுடன் கூட மாட்டேன்” என்று கூறிப் புறம் தள்ளினார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை தினமும் வணங்க நீ எனக்கு உதவி செய்.
ஐம்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் விருத்த விபூதியை (மாறுபட்ட செல்வங்களை) பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று – எல்லை அறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர்
முன்பு இருந்த விரோதிகளைப் போக்கும் கண்ணன், நம்முடைய ஊடலையும் போக்கி, அவனுடன் நாம் கூடும்படிச் செய்தான். அந்தக் கண்ணன் விருத்த விபூதியை உடையவன். இப்படிப்பட்ட கண்ணனை முடிவில்லாமல் வாழும் ஆழ்வார் கொண்டாடினார். தமிழ் மொழியில் மன்னரான இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளைப் பாடுபவர்கள், நித்யஸூரிகளுக்குத் தகுந்த தலைவர்களாக விளங்குவர்.
ஐம்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், கண்ணன் எம்பெருமானின் எல்லா லீலைகளையும் அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் – பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே! துவள்
நெஞ்சே! கண்ணன் எம்பெருமானின் ராஸக்ரீடை முதலிய திவ்ய லீலைகளை இரவு பகல் என்று பாராமல் கொண்டாடக்கூடிய நெஞ்சைக் கொண்டிருப்பதைப் பெருமையுடன் பேசிய ஆழ்வாரின் தேன் போன்ற இனிமையான ஸ்ரீஸூக்திகளில் எப்பொழுதும் மூழ்கி இரு.
ஐம்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், பகவத் விஷயத்தில் தனக்கிருக்கும் பெரிய காதலைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் – துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னும் உவப்பால் வந்த மால்
ஒரு தோஷமும் இல்லாமல் கல்யாண குணங்கள் நிரம்பிய எம்பெருமானைப் பொருந்தி அனுபவித்ததால் ஏற்பட்ட ஆனந்தத்தால், ஆழ்வார் ஒரு குற்றமும் இல்லாமல் முதலிலிருந்தே பகவத் விஷயத்தில் மூழ்கி இருந்தார். இப்படிப்பட்ட ஆழ்வார் இயற்கையான பக்தியால், பகவத் விஷயத்தில் தனக்கு எப்பொழுதும் இருக்கும் விருப்பத்தை வெளியிட்டார்.
ஐம்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் தான் எல்லாவற்றையும் இழந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன் உடைமை தான் அடையக் – கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனம் அறு சீர் நெஞ்சே! உண்
எம்பெருமானுடன் கூடியிருக்க முடியாததால், மிகவும் தளர்ந்த ஆழ்வார் “என்னுடைய ஆத்மாவையும், ஆத்மாவின் உடைமைகளையும் நான் விடுவதற்கு முன்பு, அவை என்னை விட்டு விலகின” என்று அருளிச்செய்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் குற்றமற்ற கல்யாண குணங்களை அனுபவி.
ஐம்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், திருக்கோளூரை நோக்கிச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
உண்ணும் சோறாதி ஒரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணிணைகள் – மண் உலகில்
மன்னு திருக்கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன் அடியே நந்தமக்குப் பொன்
ஆழ்வார், உண்ணும் சோறும் முதலிய தாரக, போஷக, போக்ய பதார்த்தங்கள் எல்லாம் எம்பெருமான் கண்ணனே என்று, தன் திருக்கண்களில் பெருகும் கண்ணீருடன், திருக்கோளூரில் பொருந்தி எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனை நோக்கிச் செல்லத் தொடங்கினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே நமக்கிருக்கும் ஒரே சொத்து.
ஐம்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், சோகத்தில் மூழ்கியதால் எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
பொன் உலகு பூமி எல்லாம் புள் இனங்கட்கே வழங்கி
என் இடரை மாலுக்கு இயம்பும் என – மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர்! போய் வணங்கும் நீர்
பறவைக் கூட்டங்களுக்கு நித்ய விபூதி (பரமபதம்) மற்றும் லீலா விபூதி (ஸம்ஸாரம்) ஆகியவற்றை முழுவதுமாக அளித்து “என்னுடைய துயரத்தை எம்பெருமானிடம் அறிவியுங்கோள்” என்று அருளிச்செய்த ஆழ்வார், ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களுக்கு ஆசையுடன் செய்தி அனுப்பினார். பரந்த உலகத்தில் இருப்பவர்களே! இந்த ஆழ்வாரையே நீங்கள் சென்று வணங்குங்கோள்.
ஐம்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படி எம்பெருமானைக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பரிதா – ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஓதிடவே உய்யும் உலகு
ஸர்வேச்வரன் அழகிய பரமபதத்தில் இருக்கமுடியாதபடியும், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படியும், ஆழ்வார் ஆராத காதலுடன் எம்பெருமானை அழைத்தார். இந்த ஸ்ரீஸூக்திகளைச் சொல்ல, உலகமே உஜ்ஜீவனத்தை அடையும்.
அறுபதாம் பாசுரம். மாமுனிகள், திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணடையும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் – மலர் அடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாள் இணையே
உன் சரணாய் நெஞ்சமே! உள்
இவ்வுலகத்துக்கு உஜ்ஜீவனம் அளிப்பதற்காக ஸர்வேச்வரன் அழகிய, உயர்ந்த திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ளான். ஆழ்வார், பெரியபிராட்டியார் புருஷகாரத்துடன் இப்படிப்பட்ட ஸர்வேச்வரனின் திருவடிகளைத் திடமாகப் பற்றினார். நெஞ்சே! இப்படிப்பட்ட வகுளாபரணரின் திருவடிகளையே உபாயமாகக் கொள்.
ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-51-60-simple/
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org