ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
நர ருஷிக்கு திருமந்த்ரத்தை உபதேசிக்கும் நாராயண ருஷி (இருவரும் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம்)
ச்லோகம் 1
அகாரார்த்தோ விஷ்ணு: ஜகதுதய ரக்ஷாப் ப்ரலய க்ருத்
மகாரார்த்தோ ஜீவ: ததுபகரணம் வைஷ்ணவமிதம் |
உகாரோ அநந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ:
த்ரயீ ஸாரத்ரயாத்மா ப்ரணவ இமமர்த்தம் சமதிஸத் ||
பொருள்
உலகத்தின் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் புரியும் விஷ்ணுவே “அ”காரத்துக்குப் பொருள்; “ம”காரப் பொருள் ஜீவன்; வியாபித்திருக்கிற இவ்வுலகம் சேதனனுக்கு உபகரணமாக அமைந்தது. “உ”காரம் இருவர்க்கும் இடையில் மற்றொருவர்க்குப் பொருந்தாத ஒரு ஸம்பந்தத்தை நியமிக்கிறது. வேத ஸாரமான மூவகைப்பட்ட இந்த ப்ரணவம் இந்தப் பொருளை விளக்குகிறது.
ச்லோகம் 2
மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
பொருள்
பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.
ச்லோகம் 3
அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹமத மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயண பதம் |
யமா ஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு
அவஸ்தாஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜ கைங்கர்ய விதய: ||
பொருள்
நான் எம்பெருமானுக்கே உரியவன். ஆகையால் எனக்குரியனல்லன். ஆத்மாக்கள் அழிகிற பொருள்களின் திரள் இரண்டுக்கும் கதி எம்பெருமான் என்பதை நாராயண பதம் கூறுகிறது. கைங்கர்யம் உடன் பிறந்தது. கால வரையறை இன்றி எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் கைங்கர்யத்தை வலியுறுத்துகிறது.
ச்லோகம் 4
தேஹா ஸக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் ஸாது வித்யாத்ருதீயம்
ஸ்வாதந்த்ர்யாந்தோ யதிஸ்யாத் ப்ரதமம் இதர சேஷத்வதீஸ்சேத் த்விதீயம் |
ஆத்மத்ராணோந்முகச்சேத் நம இதி ச பதம் பாந்தவாபாஸலோல:
சப்தம் நாராயணாக்யம் விஷய சபலதீஸ்சேத் சதுர்த்தீம் ப்ரபன்ன: ||
பொருள்
பிரபத்தி என்னும் சரணாகதி உபாயத்தை ஏற்றுக்கொண்டவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சந்தேஹங்களுக்கு இந்தச்லோகத்தில் விளக்கம் கூறப்படுகிறது. உடலைவிட வேறு ஜீவன் இல்லை என்கிற ஸந்தேஹம் எழும்போது மூன்றாம் பதமான மகாரத்தைக் கூர்ந்து கவனித்துத் தெளிவு பெறுக. மகாரப் பொருள் ஞாநம், அறிவில்லாத தூக்கம், மரணம் முதலிய நிலைகளிலும் உடல் இருப்பதால் அறிவுக்கு ஆதாரமாக இவ்வுடலைக் கூறுவதற்கில்லை என்று அறியலாம். அறிவாதாரமாக ஆத்மாவை அறிந்தபின் அவன் சுதந்திரனா என்கிற சந்தேஹத்தை ப்ரதம பதமான அகாரத்தின் பொருளாகவே தெளிய வேண்டும். ஆத்மா நாராயணனுக்கு உரியவன் என்று தெரிந்ததும் இரண்டாவது பதமான உகாரம் நாராயணனுக்கே உரியவன் மற்றவர்களுக்கு உரியவனல்லன் என்பதைத் தெரிவிக்கிறது. தன் ரக்ஷணத்தில் முயற்சி உண்டாகும்போது ’நம:’பதத்தின் பொருள் உணரத்தக்கது. எனக்குரியனல்லன் என்பது அதன் பொருள். ஆபாஸ பந்துக்களான தேஹஸம்பந்தமுள்ளவர்களிடத்தில் நசை உண்டாகும்போது நாராயண என்னும் பதப்பொருள் நோக்கத்தக்கது. அதனால் அவனோடு உண்டான நித்ய ஸம்பந்தம் அறியலாம். சப்தாதி விஷயங்களில் பற்றுண்டாம்போது சதுர்த்தியின் பொருள் உணரத்தக்கது. அவனிடத்தில் கைங்கர்யமே சேதனனுக்கு ஸ்வரூபம் என்பது புலப்படும். இவ்விதம் உலக வாழ்க்கையில் ஏற்படும் அல்ப ஆசைகளைக் கழித்துக்கொள்ள வேண்டியது.
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
0 thoughts on “அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 1 – 4 – திருமந்த்ரம்”