ஞான ஸாரம் 7- தோளார் சுடர்த்திகிரி

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                  7-ஆம் பாட்டு:

sri-parkadal-nathar

முன்னுரை:

அடிமைச் சுவை அறிந்தவர்கள் செல்வத்துக்கு எல்லையான பிரம்ம பதத்தையும் விரும்பார்கள் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. இதில் இறைவனது அழகிலே தோற்ற அவனுக்கு அடிமையானவர்கள் வேறு விஷயங்களை ஆதரிக்க மாட்டார்களென்று கூறப்படுகிறது.

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்
காளானார் மற்றொன்றில் அன்புசெய்யார் – மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு”

பதவுரை:

தோளார் திருத்தோள்களோடே சேர்ந்துள்ள
சுடர்த்திகிரி ஒளியுடைய சக்கரத்தையும்
சங்குடைய சுந்தரனுக்கு சங்கையும் அழகையும் உடையவனுக்கு
ஆளானார் அடிமையானவர்கள்
மற்றொன்றில் அவனைத் தவிர வேறு ஒரு பொருளில்
அன்பு செய்யார் பற்றுச் செய்ய மாட்டார்கள்
மீளா திரும்பவும் வராததும்
பொருவரிய உவமை இல்லாததுமான
விண்ணாட்டில் மாக வைகுந்தம் என்று சொல்லப்படும் வைகுந்தத்தில்
போகம் பேரின்பத்தை
நுகர்வார்க்கு துய்ப்பவர்க்கு
இந்திரன்தன் நாடு இந்திரனுக்குரிய சுவர்க்கமும்
நரகன்றோ துன்பமயமாகும் அன்றோ

விளக்கவுரை:

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்கு” திருத்தோள்களோடு சேர்ந்திருந்துள்ள ஒளிமயமான திருவாழியையும் அழகிய சங்கத்தையும் ஏந்தியிருப்பதாலே உண்டான அழகனுக்கு என்று பொருள். “மனைப்பாற் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்” என்ற பூதத்தார்

பாடலில் இறைவனின் தோள்களைக் கண்களால் ஆரத் தொழுபவர்கள், இவ்வுலகில் அனுபவிக்கும் சிற்றின்பத்தையெல்லாம் துறந்து விடுவார்கள் என்று கூறினார். ஸ்ரீராமாயணத்தில், இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் வேறு எதையும் காணவில்லை (காண விரும்பவில்லை) “தோள் கண்டார் தோளே கண்டார்” என்றும், “ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்” என்றும் விசுவாமித்திரர் வாயிலாகவும் கம்பர் கூறுகிறார். நம்மாழ்வாரும் ‘தோளுமோர் நான்குடைக் காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம்’ என்றார். திருமாலின் திருவழகுக்கு கண் எச்சில் வராமல் ஆரத்தி எடுக்க வேணும். அத்தகைய அழகைக் கண்டவர்களின் உலகப் பற்றுதல்கள் அனைத்தையும் அறுக்க வல்லதான திருத்தோள்கள் என்றும் “அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்” என்றார் ஆழ்வார். திருவாழியும் ஏந்து கையால் வந்த அழகு கூடினால் அழகு இரட்டித்திருக்கும் என்று சங்கு சக்கரம் ஏந்தின தோள் அழகை வருணித்தார்.

ஆளானார் – இவ்வாறு இருந்துள்ள அழகை உடையவனுக்கு அவ்வழகுக்குத் தோற்று அடிமையானவர்கள் என்று பொருள். இறைவனுக்கு அடிமையாயிருத்தல் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது. ஒன்று அவனுடைய தலைமைக்கு அடிமையாதல் மற்றொன்று அவன் குணத்துக்கு அடிமையாதல்.

புண்டரீக கேள்வனடியார் – என்றவிடத்து தலைமைக்கு அடிமை என்று சொல்லப்பட்டது. ‘சுந்தரனுக்கு ஆளானார்’ என்ற இவ்விடத்தில் அழகாகிற குணத்திற்கு அடிமையாதல் சொல்லப்படுகிறது. ஆகவே, இரண்டு வகையான வழிகளாலும் அடியவர்களைத் தோற்கடித்து ‘அடியேன்’ என்று எழுதிக் கொடுக்கும்படி செய்யும் பகவானின் அழகிய பெருமை இருப்பதால் இங்கு இப்பொழுது அழகுக்குத் தோற்று அடிமையானவர்களைச் சொல்கிறது.

மற்றொன்றில் அன்பு செய்யார் – அதாவது “ஆன்மாவின் இயல்புக்கும் பகவானின் குணங்களுக்கும் அடிமையானவர்கள், அவற்றிற்கு வேறாயிருக்கும் இவ்வுலக விஷயங்கள் ஒன்றிலும் பற்றுக் கொள்ள மாட்டார்கள்.” பரமபதமாகிற திருநாடு சுத்த சத்வ குணமயமானவை. அதனால் இவை ப்ராக்ருதம் என்றும் அவை அப்ராக்ருதம் என்றும் சொல்லப்படும். இங்குள்ள பொருள்களெல்லாம் கணந்தோறும் மாறுபட்டுக் கொண்டிருக்கும் அங்குள்ள பொருள்கள் என்றைக்கும் ஒரு படியாகவே இருக்கும். மற்றும் அங்குள்ள பொருள்கள் மனதைக் கவருவதாக இருக்கும். இவ்வாறாக, இவ்வுலகப் பொருள்களின் தாழ்வுகளையும் அவ்வுலகப் பொருள்களின் உயர்வுகளையும் ஆராய்ந்து அறிந்து அந்தமில் இன்பத்து அழிவில் வீடு என்று கூறப்படுகிற அப்பரமபதமாகிற அப்பேரின்பத்திற்குத் தோற்றிருக்கும் அவர்கள் இவ்வுலகப் பொருள்களை விரும்புவார்களோ? மாட்டார்கள். காரணம், இவ்வுலகப் பொருள்கள் மேலுக்குக் கவரிச்சியாயிருந்து உள்ளுக்குக் குற்றமுடையதாயிருக்கும், அருவருக்கத் தகுந்ததாயும் இருக்கும். ஆகவே இதை விரும்பமாட்டார்கள் என்றவாறு.

இவ்வுலக விஷயங்கள் குற்றமுடையதாயும் அருவரூக்கத் தகுந்ததாயும் இருந்தாலும் சுவர்க்கம் முதலிய ஏனைய மேலுலகங்களிலுள்ள உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பொருள்களும் சிறப்பாகப் பேசப்படுகின்றனவே அவற்றைக் கண்டால் அந்த சுவர்க்கம் முதலிய இடங்களில் பற்றுச் செய்யாதோ என்று கேள்வி எழுந்தால் அதற்குத் தகுந்த பதில் சொல்லப்படுகிறது மேல் தொடரால்.

“மீளாப் பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு” என்று தொடங்கி அதாவது வீடுபேறு என்பது “அழிவில் வீடு” என்று கூறப்படுகிறது. மறுபிறவி இல்லாதது முக்குணங்களுக்கு அப்பாற்பட்டுத் தூய சத்வ மயமானது. அளவு கடந்த ஒளிமயமானது. தனக்கு உவமையில்லாதது. மேலானவானம் என்று புனைந்து பாராட்டப் பெற்றது. இத்தகைய திருநாட்டில் இன்பத்தை நுகர வேண்டும் என்று அவா உடையவர்களுக்கு என்று பொருள்.

நரகன்றோ இந்திரன்தன் நாடு – அதாவது கீழே சொல்லப்பட்ட சுவர்க்கம் முதலிய உலகங்கள் புண்ணியத்தால் அடையப்படுவது. புண்ணியம் கழிந்தவாறே அங்கிருந்து தலைகீழாக இம்மண்ணுலகில் விழும்படி இருப்பது. சுவர்க்கத்திற்கு ஒப்பான மற்றும் பலபல லோகங்களையும் உடையதாய் வினைவயப்பட்ட இந்திரன் முதலிய தேவர்களின் அனுபவங்களுக்கு இடமாய் உள்ளன. இத்தகைய சுவர்க்கம் முதலிய உலகங்கள் நரகத்திற்கு ஒப்பாகும் அல்லவா? ஆகவே அடுக்கடுக்காக உள்ள பதினான்கு உலகங்கள் கூடிய இவ்வண்டம் பரமபதத்தில் வாழ்வாருக்கு துன்பத்திற்கிடமான நரகமேயாகும் என்பதாம்.

 

Leave a Comment