ஞான ஸாரம் 6- புண்டரிகை கேள்வன்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                          6-ஆம் பாட்டு:

 

$37B2598BC35DA6F3

முன்னுரை:

பகவானை அடைவதற்கு வழியாகக் கர்ம யோக, ஞான யோக, பக்தி யோகாதிகள் சாஸ்திரங்களிலே சொல்லப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்த முடியாதவை என்றும், ஆத்மாவின் அடிமை இலக்கணத்திற்கு முரணானவை என்றும், குற்றங்களைச் சொல்லிப் பல ஆதாரங்களைக் கொண்டு புறக்கணிக்கப்பட்டதால் இனி அவை தொடர வாய்ப்பில்லை ஆகிவிட்டது. ஆத்மாவின் க்ஷேமத்திற்கு மேலே சொன்ன குற்றங்கள் அற்றுப் போன நிலையே பெரும் பேறாகும். ஆயினும் நீண்ட காலம் (பல பிறப்புக்களில்) ஐம்புலன்  அனுபவங்களில் பழகிப்போந்த ஆத்மாவுக்கு, சாஸ்திரங்கள் குற்றம் என்று கடிந்து பேசின செல்வத்தைக் கண்டால், அதன்மேல் ஆசை செல்லாதிருக்குமோ? செல்வத்தின் கவர்ச்சி நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்னும் சாதாரண மானிடருடைய நிலையில் இத்தகைய கேள்வி எழுந்தால் அதற்குத் தக்க பதில் இப்பாடல் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. அதாவது, பகவானுக்குத் தொண்டு செய்து அதன் சுவையை அறிந்தவர்கள், செல்வத்துக்கு எல்லையான ப்ரம்மபதம் கிடைத்தாலும் அதை ஒரு பொருளாக விரும்பார்; அற்பப் பொருளால் நெஞ்சு கலங்கமாட்டார்கள் என்று விடையளிக்கிறார். இதற்கு உதாரணம் ஸ்ரீராமாயணத்தில் சரபங்க முனிவரது வரலாற்றைக் காணலாம்.

ஸ்ரீராமபிரான் தண்டக வனத்தில் சரபங்க முனிவரது தவக்குடிலுக்குச் சென்றான். அப்பொழுது இந்திரன், முனிவரோடு உரையாடிக் கொண்டிருந்தான். அவன் சென்ற பிறகு ராமபிரான் முனிவரை அணுகி வந்தனை புரிந்து நிற்கையில் முனிவன் கூறினான். தமது ஞானக்கண்ணால் ஸ்ரீராமபிரானைப் பார்த்து ‘ஆழியில் அரிதுயிலவன்’ என மகிழ்ந்து “இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா வந்தனன். மருவுதி மலர் அயன் உலகம் தந்தனென்” “என் உரவோய்! அந்தமில் உயர்பதம் அடைதலை முயல்வேன்” என்று கூறினான். அதாவது, ப்ரம்மதேவன் முனிவனைத் தன் உலகத்திற்கு இந்திரனை அனுப்பி அழைத்துவரச்

சொன்னதாகவும் சரபங்க முனிவன், அவ்வுலகத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொன்னதாகவும், “நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன். இனி ஒரு வினை இலை:- விறலோய்!” என்று கூறி இராமனைப் பார்த்துக் கொண்டே அந்தமில் உயர்பதமான பரமபதத்தை அடைந்தான் என்னும் வரலாறு கூறப்படுகிறது.

இத்தகைய சரபங்க முனிவன் பிரம்மபதத்தை ஒரு பொருளாக மதிக்காமல் இறை இன்பத்தையே கூறுவதால், உண்மையை உணர்ந்த ஞானிகளைச் செல்வம் கலங்கப் பண்ணாது என்பது கண்கூடு. இப்பாடல் மூலம் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது.

“புண்டரிகை கேள்வன் அடியார் அப்பூமிசையோன்
அண்டமொரு பொருள் ஆதரியார் – மண்டி
மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல்”

பதவுரை:-

புண்டரிகை தாமரையில் பிறந்த லக்ஷ்மீ தேவிக்கு
கேள்வன் மணவாளனான ஸ்ரீ ய::பதியின்
அடியார் தொண்டராயிருப்பவர்கள்
அப்பூமிசையோன் தாமரை மலரில் பகவானுடைய அழகிய கொப்பூழ் பிறந்த பிரமனின்
அண்டம் பதினான்கு உலகங்கள் கூடின அண்டத்தை
ஒரு பொருளா ஒரு சரக்காக
ஆதரியார் மதிக்க மாட்டார்கள்
ஒரு மீன் ஒரு மீனானது
மண்டி தன் ஆற்றல் எல்லாவற்றோடும் நெருங்கி
மலங்க நிலை குலைந்து கலங்கும்படி
புரண்ட மாத்திரத்தால் இடப்புறமாக வலப்புறமாக புரளுவதால்
முந்நீர்க்கடல் மூன்று வகையான நீர் சேர்ந்த கடலானது
ஆர்த்து நிலைகுலைந்து பேர் ஒலி செய்து
கலங்கிடுமோ கலக்கத்தை அடையுமோ? அடையாது

விளக்கவுரை:-

“பண்டை நாளாலே நின்றிருவருளும் பங்கயத்தாள் திருவருளுங் கொண்டு” என்று நம்மாழ்வார் கூறினார். பகவான் பிராட்டி இவ்விருவருடையவும் சிறப்பான அருள் நோக்கினால், பண்டை வினைகளிலிருந்து திருந்தி  அதாவது “யானே என்னை அறியகிலாதே, யானே எனதனதே என்றிருந்தேன், யானே நீ என் உடைமையும் நீயே” என்று பேசும்படி ஆனார். இத்தகையவர்கள் பகவானுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையையே தங்களுக்குச் சின்னமாகக் (முத்திரையாகக்) கொண்டு அவனுகந்த பணியைச் செய்வது ஒன்றிலேயே திளைத்திருப்பார்கள். (அப்பூமிசையோன் அண்டம் ஒரு பொருளா ஆதரியார்). செல்வத்துக்குக் கடைசி எல்லையாக நூல்களில் சொல்லப்படுவது பிரமபதம் நான்முகக் கடவுளுக்கிருக்கை. அப்பிரமன் திருமாலின் கொப்பூழ்த்தாமரையில் பிறந்தவன் அவனுடைய மகிழ்ச்சிக்கு காரணமாயும் பதினான்கு அடுக்குகள் கொண்டதுமான இப்பிரமாண்டத்தை அடியார்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள் என்பதாம்.

உடலுக்கும் உயிருக்கும் வேறுபாடு காணாமல் உடலையே உயிராக எண்ணும் அறிவிலிகளுக்கும் இவ்வான்மா பகவானுக்கு அடிமையாய் இருக்கும் என்பது அறியாமல், தான் என்றும், தனது என்றும் தன்னை சுதந்திரமாக நினைத்திருக்கும் மூடர்களுக்குமே செல்வம் இன்பகரமாய் அடைய வேண்டிய குறிக்கோளாயிருக்கும். பகவானுக்கு அடிமையாயிருக்கும் சுவையை அறிந்தவர்களுக்குச் செல்வம் சுவையற்றதாய் அருவருக்கத் தக்கதாய் இருக்கும். ஆகையால் அச்செல்வத்தை இறைவன் அடியார்கள் ஆதரிப்பார்களோ? ஆதரிக்க மாட்டார்கள் என்றவாறு. இவ்வாறு சொல்லலாமா? செல்வத்தினுடைய கவர்ச்சி மிகு எழுச்சி, தன்னை ஆசைப்படும்படி எத்தகையவராக இருந்தாலும் அவர்கள் நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்ற இவ்வினாவிற்கு “மண்டி மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக் கலங்கிடுமோ முந்நீர்க்கடல்” என்று பதில் சொல்கிறார். இதன் பொருள் – ஒரு மீனானது தன் வலிமை எல்லாவற்றோடும் கூடித் தள்ளிக்கொண்டு நிலை குலைத்துக் கலங்கும்படி இடம் – வலமாகப் புரண்ட மாத்திரத்தால் கடல் கலங்குமோ? என்பதாம். கடலுக்கு “முந்நீர்” என்று பெயர். ஆற்று நீர், ஊற்று நீர், மழைநீர் என்ற இம்மூன்றும் சேர்வதால் கடலுக்கு முந்நீர் என்று பெயர். மீனுடைய புரட்சியால் கடல் கலங்கினாலன்றோ செல்வத்தின் எழுச்சி கண்டால் இறை அன்பர்களின் பற்றற்ற மனம் கலங்குவதாகும். ஆகவே, எத்தகைய பெருஞ்செல்வத்திற்கும் இறைவனடியார்கள் மனம் கலங்கமாட்டார்கள் என்பது பொருள்.

 

Leave a Comment