ஞான ஸாரம் 26- தப்பில் குருவருளால்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                      26-ஆம் பாட்டு:

முன்னுரை:

சரணாகதி என்பது இறைவனாலே சொல்லப்பட்ட நெறியாகும். திருவள்ளுவர், ‘பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி’ என்று கூறினார். இங்கு ‘ஐந்தவித்தானாகிற இறைவனால் சொல்லப்பட்ட உண்மையான ஒழுக்க நெறி’ என்று பொருள் கூறப்பட்டது. இதையே ‘பற்றற்றான் பற்றினை என்ற திருக்குறளிலும் இறைவன் ஓதிய வீட்டு நெறி’ என்று கூறப்பட்டது. அதுவே இங்கு சரணாகதி (அடைக்கலம் புகுதல்) என்று கூறப்படுகிறது. இறைவனுடைய திருவடிகளில் அடைக்கலம் புகுவதான சரணாகதி என்பது குருவின் துணை கொண்டு செய்ய வேண்டிய ஒன்றாகும். சரணாகதியின் ஆழ்பொருள்களை எல்லாம் குருவினிடமிருந்து அறிந்து கொண்டபின் அதில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், ‘வீட்டு உலகத்தில் சென்று அங்கு இறைத்தொண்டிலே ஊன்றி இருப்பார்கள்’ என்ற கருத்து இப்பாடலில் சொல்லப்படுகிறது.

ramanuja

“தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உள்ளத்து வைப்பு என்று
தேறியிருப்பார்கள் தேசு பொலி வைகுந்தத்து
ஏறியிருப்பார் பணிகட்கு ஏய்ந்து”

பதவுரை:-

தப்பு இல் அறிவு ஒழுக்கங்களில் ஒரு குறைதலுமில்லாத
குரு குருவினுடைய
அருளால் நல்லருளால்
தாமரையாள் நாயகன்தன் திருவின் மணாளனான இறைவனுடைய
ஒப்பில் உவமையில்லாத
அடிகள் திருவடிகள்
நமக்கு அறிவு ஆற்றலில்லாத நமக்கு
உள்ளத்து இதயத்தில் இருக்கும்
‘வைப்பு’ என்று சேமநிதி என்று
தேறியிருப்பார்கள் நம்பியிருக்குமவர்கள்
தேசுபொலி ஒளிமிக்குயிருக்கிற
வைகுந்தத்து வீட்டுலகத்தில்
ஏறி அதற்கான வழியிலே சென்றடைந்து
பணிகட்கு அங்கு செய்யும் இறைத் தொண்டுகளுக்கு
ஏய்ந்திருப்பார் பொருத்தமுடைய அடியராயிருப்பார்

விளக்கவுரை:-

தப்பில் குருவருளால் – தவறு இழைக்காத குருவினுடைய அருளாலே. அதாவது, கற்க – அதற்குத் தக நிற்க’ என்று கூறியவாறு அறிவு ஒழுக்கங்களினுடைய அருளால் என்றவாறு.

தாமரையாள் நாயகன் தன் – திருவின் மணாளனுடைய என்று பொருள். இதனால், “த்வய மந்திரத்தின்” முற்கூற்றில் சொல்லப்பட்ட ஸ்ரீமன் என்ற சொல்லிலும் நாராயண என்ற சொல்லிலும் கூறப்பட்ட பொருள்கள் இங்கு உணர்த்தப்படுகின்றன. விளக்கம் வருமாறு. தாமரையாள் நாயகன் என்ற தொடரில் பிராட்டியோடு சேர்ந்துள்ள பிரியா உடன் உறைதலைக் குறிக்கிறது. இது ‘ஸ்ரீமன்’ என்றதன் பொருளும் ‘நாயகன் தன்’ என்கிறதில் நாராயண பதத்தின் பொருளும் அடங்கி உள்ளன. அவை அடியவரை ஆதரிக்கும் பண்புகளாம். அவையாவன. அடைக்கலம் புகவருகின்ற அடியார்களுக்கு உதவியாக இருப்பனவான வாத்சல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம்,  சௌலப்யம் என்று சொல்லப்படும் நான்கு குணங்களும், அடைக்கலம் புகுந்த பிறகு அவர்கள் காரியம் செய்வதற்கு ஏற்றதான ஞானமும், சக்தி (அறிவும், ஆற்றலும்) ஆகிய இரண்டு குணங்களும் மற்றும் ப்ராப்தி, பூர்த்தி என்பனவும் அடங்கும். நாயகன் தன் என்ற இதில் ‘ நாராயண’ என்ற சொல்லில் கூறப்படும் பொருள்கள் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளன.

ஒப்பிலடிகள் – ஒப்பற்ற திருவடிகள். இதனால் த்வய மந்திரத்தில் சொல்லப்பட்ட ‘சரணௌ’ என்ற சொல்லின் பொருள் சொல்லப்படுகிறது. திருவடிகளுக்கு ஒப்பற்ற தன்மையாவது அடியவர்க்கு அருள் செய்யும் போது எந்த உதவியையும் அவரிடம் எதிர்பாராமல் செய்யும் தனி ஆற்றலைக் குறிக்கிறது.

நமக்கு உள்ளத்து வைப்பென்று – அடியவர்களான நமக்கு. பகவானுடைய அருள் பெறுவதற்கு எந்த ஆன்மாவுக்கும் வேறு புகலுமில்லை. வேறு வழியுமில்லை என்பது சாஸ்திர உண்மை. உண்மை உணர்வுடைய நமக்கு. இதயத்தில் இருக்கும் திருவடிகளே வைப்பு நிதி (சேமநிதி) ஆகும் என்று பொருள். இதனால் த்வய மந்திரத்திலுள்ள ‘சரணௌ’ என்ற சொல்லிலும், ‘ப்ரபத்தி’ யே என்ற சொல்லிலும் சொல்லப்பட்ட பொருள்கள் கூறப்படுகின்றன. எவ்வாறு எனில் ? ஒருவரிடம் வைப்பு நிதி இருந்தால் அதைக்கொண்டு எல்லாக் காரியங்களையும் சாதித்துக் கொள்ளலாம். அதுபோல இறைவனது திருவடிகளை, “அதுவே நமக்கு தஞ்சம்” என்று பற்றிக்கொண்டு இதயத்தில் தியானித்தால் எதையும் சாதிக்கலாம். ஆகவே திருவடிகளை சேமநிதியாகக் கூறுவதில் எவ்விதக் குறையுமில்லை. இறைவன் திருவடிகளைப் பற்றுவது மனதினால் ஆகையால் இதற்கு மானச சுவீகாரம் என்று பெயர். அதாவது மனதினால் பற்றுதல் என்று பொருள். இவ்வாறு மனதில் எண்ணி

தேறியிருப்பார்கள் – உறுதியாய் நம்பி இருப்பவர்கள் என்றவாறு. திருவடியே தஞ்சம் என்று அத்திருவடியை உள்ளத்தில் வைத்து தியானத்தாலும் நம்பிக்கை வருவது அரிதாகும். ஆகவே, “அத்திருவடிகளையே தஞ்சமாக நம்பியிருப்பவர்கள் என்று பெயர். சரணாகதி பண்ணினவனுக்கு இறுதிவரை இந்த நம்பிக்கையே கைம்முதலாக இருக்க வேண்டியதொன்று. நம்பிக்கை குலைந்தால் வீடு பேறு இல்லையாகி விடும். நம்பிக்கை குலையாதவர்களைத் ‘தேறியிருப்பார்கள்’ என்று இங்கு சொல்லப்படுகிறது. அத்தகையவர்களுக்குக் கிடைக்கும்  பயன் சொல்லப்படுகிறது மேல்.

தேசு பொலி வைகுந்தத்து ஏறி – அதாவது ‘அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடு’ என்று சொல்லப்படுகிற ஒளி மிகுந்த ஸ்ரீவைகுண்டத்தில் போய் என்று இதற்குப் பொருள். ஸ்ரீவைகுண்டமாகிற அத்திருநாடு பேரின்பத்தை நுகர்வதற்கும் இறைவன் உகந்த தொண்டுகள் செய்வதற்கும் ஏற்ற இடமாகும் என்பதாம்.

இருப்பார் பணிகட்கேய்ந்து – அங்கு போய்ப் பணிகளுக்கு ஏய்ந்திருப்பார். இறைத் தொண்டுகளுக்குத் தகுந்திருப்பார் என்று பொருள். ‘பணிகள்’ என்றது இறைவனுக்குச் செய்யும் தொண்டுகளாகும். அதற்கு ஏய்ந்து இருக்கையாவது தகுதியுடைய அடியார்களாய் இருக்கை. இருப்பார் என்றது இருப்பார்கள் என்றிவ்வாறு சொற்பொருள் காணலாம். இவ்வாறன்றி ‘பணி என்று ஆதிசேஷனான திருவனந்தாழ்வானுக்குப் பெயராகக் கொண்டு திருவனந்தாழ்வானுக்கு  ஒப்பாய் இருப்பார் என்றும் பொருள் காணலாம். அதாவது திருவனந்தாழ்வான் பரமபதநாதனாக பகவானுக்கு, ‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள் கடலுள் என்றும் புனையாம் மணி விளக்காம், பூம் பட்டாம், புல்கும் அணையாம் திருமாற்கு அரவு’ என்று சொல்லியபடி எல்லாத் தொண்டுகளிலும் தேர்ந்து இருக்குமாப் போல இவர்களும் எல்லாத் தொண்டுகளிலும் செயல்படுபவர்களாய் இருப்பர் என்று பொருள்.

Leave a Comment