ஞான ஸாரம் 25- அற்றம் உரைக்கில்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                           25-ஆம் பாட்டு:

முன்னுரை:

“அடைக்கலம் புகுந்தார் அறியாமல் செய்யும் பிழைகள் அறிய மாட்டான்” என்று மனதுக்கு ஆறுதல் கூறப்பட்டது கீழ்ப்பாடலில். பழைய வினைகளில் ஏதேனும் ஒன்றை எவரேனும் நிரூபித்துக் காட்டினாலும் அதனை இன்பமாகக் கொள்வானேயன்றி அது குறித்து அடியார்களை இகழ மாட்டான். காரணம் அவனுக்கு வத்சலன் என்று பெயர் உள்ளதால் குற்றத்தையும் குணமாகக் கொள்வதே அக்குணமாம். அக்குணத்திற்குத் தக்கபடி அடியார்களின் பழைய குற்றங்களையும் குணமாகக் கொள்வதனால் பழவினகளைப் பற்றியும் கவலை வேண்டாம் என்று உதாரணத்துடன் எடுத்துரைக்கிறது இப்பாடல்.

lord-maha-vishnu

“அற்றம் உரைக்கில் அடைந்தவர்பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ – எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை யீன்று உகந்த ஆ”

பதவுரை:

அற்றம் உரைக்கில் முடிவாகச் சொல்லில்
அம்புயை கோன் தாமரை மணாளன்
அடைந்தவர்பால் தன்னிடம் அடைக்கலம் அடைந்தவரது
குற்றம் பாபங்களை
உணர்ந்து அறிந்து (கண்டுகொண்டு)
இகழும் கொள்கையனோ அவை காரணமாக வெறுக்கும் இயல்புடையவனோ வெறுக்கமாட்டான்
எற்றே என்ன வியப்பு
பசுவானது
தன் கன்றின் தன் கன்றினுடைய
உடம்பின் உடம்பிலுள்ள
வழுவன்றோ கருப்பப்பையின் அழுக்கை
அதனை ஈன்று உகந்து கன்றை ஈன்று மகிழ்ந்த
அன்று அப்பொழுது
காதலிப்பது ஆசையுடன் நாவால் சுவைப்பது

விளக்கவுரை:

அற்றம் உரைக்கில் – அற்றம் – முடிவு – முடிவாகச் சொல்லில். அதாவது முடிவான பொருள் இது என்று சொன்னால் (அது இதுவேயாகும்).

அடைந்தவர்பால் – தன்னை அடைக்கலமாக அடைந்த தொண்டர்கள் இடத்தில்,

அம்புயை கோன் – திருவின் நாயகன் இலக்குவனுக்கு அண்ணன் என்று இராமபிரானைக் கூறுவது போல, பால் –  ஏழம் வேற்றுமை இடப்பொருள். இங்கு ‘அம்புயை கோன்’ என்று பிராட்டியை முன்னிட்டு இறைவனடியாரை ஏற்றுக் கொள்பவன் என்ற குறிப்புப் புலனாகிறது. இவ்வாறு பிராட்டிக்காக ஏற்றுக் கொண்டால் பின்பு என்றைக்கும் அவ்வடியாரிடம் குற்றங்களைக் காணாதவனாகவே இருப்பான் என்று பொருள். இவ்வாறு தன் சிபாரிசு பண்ணின அடியவர்களை இறைவன் ஏற்றுக் கொண்டதன் உறுதிப்பாட்டை அறிவதற்காக பிராட்டிதானே தன் அடியார்களின் குற்றங்களைக் கூறினாலும் இறைவன் ‘என் அடியார் அது செய்யார். செய்தாரேல் நன்று செய்தார்’ என்று கூறுவான். இதனால் பிராட்டி சிபாரிசுக்காக அடியரை இறைவன் ஏற்றுக் கொண்டது உறுதியாயிற்று. பிராட்டியே தன் அடியாரது குற்றத்தைச் சொன்னாலும் அதை ஏற்க மறுத்து ‘என் அடியார்கள் குற்றங்களே செய்ய மாட்டார்கள்’ அப்படிச் செய்ததாகச் சொன்னாலும் அதை நான் குற்றமாக ஏற்க மாட்டேன். அதை நல்லாதாகவே நான் ஏற்றுக் கொள்வேன் என்று பகவானுக்கும் பிராட்டிக்கும் நடக்கும் உரையாடலைக் கொண்டு இவ்வுண்மையை அறியலாம். பெரியாழ்வார் பாடலில் இக்கருத்து இங்கு ஒப்பு நோக்கற்குரியது (தன்னடியார் திறத்தகத்து).

குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ – அடியவரின் குற்றங்களைக் குறித்து அது காரணமாக அவர்களை வெறுக்கும் இயல்பை உடையவனோ அத்தகையவன் இல்லை என்பதாம். கொள்கை – இயல்பு (சுபாவம்) என்பதாம். பிராட்டி சிபாரிசு பண்ண அதனால் அத் தொண்டரை ஏற்றுக் கொள்பவன் என்பது கருத்து. பகவான் அடியாரின் குற்றங்களைப் பற்றி அறியவே மாட்டான். ஒருகால் குற்றத்தை பிராட்டியே  உணர்த்தினாலும் அடியாரது குற்றத்தை இன்பமாக ஏற்பானேயொழிய அதைக் குறியிட்டு அவர்களை ஒருபோதும் வெறுக்க மாட்டான். இதுவே அவனுடைய இயல்பு என்பதாம். இவ்வாறான இயல்புக்கே வாத்சல்ய குணம் என்று பெயர். இக்குணத்தைக் குறித்து ‘வாத்சலன்’ என்று இறைவன் சொல்லப்படலானான். அடியாரது குற்றத்தையும் குணமாகக்  கொள்பவன் என்று இதற்குப் பொருள். ‘வத்ஸலம்’ என்றால் அப்பொழுது ஈன்ற கன்று அதனிடத்தில் தாய்ப் பசுவுக்குண்டான அன்பு வாத்ஸல்யம், அதையுடைய வத்ஸலன். குற்றத்தையும் குணமாகக் கொள்ளும் இயல்பு எங்கேனும் கண்டதுண்டோ என்று வினவினால் அதற்கு உதாரணத்துடன் பதில் கூறப்படுகிறது மேல் தொடரால்.

எற்றே தன் கன்றினுடம்பின் வழுவன்றோ காதலிப்பது அன்று அதனையீன்று உகந்த :- எற்றே – என்னே! வியப்பைக் குறிக்கும் இடைச்சொல். இறைவனுடைய வாத்சல்ய குணத்தின் பொருளை அறியாதாரன்றோ! ‘குற்றம் கண்டு இகழ்வான்’ என்று நினைப்பார். இப்படியும் நினைப்பார் உண்டோ என்று வருந்தி ஐயோ! (எற்றே) என்று ஆசிரியர் இரங்குகிறார். இதற்கு ஒரு உதாரணமும் மேல் தொடரால் காட்டப்படுகிறது. (சுவடுபட்ட தரையில்) கால் மிதிபட்ட தரையில் புல் கவ்வாத பசு தன் கர்ப்ப பையிலிருந்து பூமியில் விழுந்த தன் கன்றினுடைய உடம்பின் வழுவழுப்பை அல்லவா சுவைத்து பூசிக்கிறது. ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்’ என்பது போல, அப்பொழுது அதைப் பெற்ற அன்பினால் அதனிடம் நேசத்தைக் காட்டுகிறதல்லவா அப்பசு. இதுபோன்று தன்னிடம் அடைக்கலம் புகுந்தவனது குற்றத்தையும் குணமாகக் கொண்டு அவனை ஏற்றுக் கொள்வான். பகவான் ஒரு போதும் வெறுக்க மாட்டான் என்று கருத்து உணர வேண்டும். இறைவனுடைய ‘வாத்ஸல்யம்’ என்னும் குணத்தை விளக்குகையில், இவ்வுதாரணத்தையே உரையாசிரியர்கள் அனைவரும் எடுத்துரைக்கிறார்கள். வத்ஸம் – கன்று. கன்றினிடத்தில் தாய் பசு கொண்டுள்ள நேசம் (அன்பு) வாத்ஸல்யம் எனப்படும். அதை உடையவர் வத்ஸலர். இத்தகைய அன்பு இறைவன் ஒருவனிடமே காணத் தக்கதன்றி உலகில் காண இயலாது. ஆகவே, இப்பண்பு தெய்வீகமானது என்று உணரலாகும். இப்பண்பின் சிறப்பை நோக்கி ‘எற்றே’ என்று வியந்து கூறப்பட்டதாம்.

0 thoughts on “ஞான ஸாரம் 25- அற்றம் உரைக்கில்”

Leave a Comment