ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி
நம் ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம், ராமாநுஜ தர்ஶனம் என்றே அழைக்கப்பட்டு மிகவும் போற்றப்படுகிறது. நம் ஆசார்யர் ராமாநுஜரின் பெருமை இராமானுச நூற்றந்தாதியில் விரிவாகக் கொண்டாடப்படுகிறது. இது திருவரங்கத்தமுதனாரால் மிகுந்த க்ருபையுடன் அருளிச்செய்யப்பட்டது. முன்பு எம்பெருமானாரை ஏற்றுக்கொள்ளாமல் லௌகிக விஷயங்களிலேயே ஈடுபட்டிருந்த திருவரங்கத்தமுதனாரை, பெரிய பெருமாளின் உறுதியான பக்தராக மாற்றியது கூரத்தாழ்வான் மூலம் வந்த ஜகதாசார்யர் ராமாநுஜரின் அநுக்ரஹமே ஆகும். பின்னர் தம் வாழ்வில், திருவரங்கத்தமுதனார் ஆசார்யர் ராமாநுஜரிடம் மிகவும் பக்தியுள்ளவராகி, எம்பெருமானுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தார்.
ப்ரபந்ந காயத்ரி
மணவாள மாமுனிகள் இராமானுச நூற்றந்தாதிக்கு ஒரு சுருக்கமான வ்யாக்யானம் அருளியுள்ளார். அதில், ஒரு ப்ராஹ்மணனுக்கு 108 காயத்ரி ஜபம் எவ்வாறு முக்யமான அங்கமாக விளங்குகிறதோ, அவ்வாறே இராமானுச நூற்றந்தாதி ஒரு ஶ்ரீவைஷ்ணவனுக்கு காயத்ரிக்கு நிகரான முக்யமான ப்ரபந்தம் என்று அவர் எடுத்துரைக்கிறார். ஆகையால், இது “ப்ரபந்ந காயத்ரி” என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, எல்லா ஶ்ரீவைஷ்ணவர்களும் இதைத் தினமும் அநுஸந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இராமானுச நூற்றந்தாதியில் 108 பாசுரங்கள் உள்ளன. இந்த 108 பாசுரங்களிலும் அமுதனார் ஆசார்யர் ராமாநுஜரின் திருநாமத்தை ஒவ்வொரு பாசுரத்திலும் நேர்த்தியாக அமைத்துள்ளார். இதை அநுஸந்திக்கும்போது, ஆசார்யர் ராமாநுஜரின் திருநாமத்தை 108 முறை சொல்லும் பாக்யம் நமக்குக் கிட்டுகிறது.
பாசுரம் 1
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே.
பொருள்: தாமரை மலரில் வீற்றிருக்கும் ஶ்ரீமஹாலக்ஷ்மியைத் தன் திருமார்பில் கொண்டவனின் புகழையே எப்போதும் பாடும் மாறன் (நம்மாழ்வார்) திருவடிகளிலே பணிந்து உஜ்ஜீவனம் பெற்றவருமான ராமாநுஜரின் சரணாரவிந்தங்களிலே நிலைத்து வாழ, ஓ என் நெஞ்சே! அவர் நாமங்களையே சொல்லுவோம்.
இங்கு கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அமுதனார் பாசுரத்தை நேரடியாக ராமாநுஜரிலிருந்து தொடங்கவில்லை. பாசுரம் “பூ மன்னு மாது பொருந்திய மார்பன்” என்று அழகாகத் துவங்குகிறது – இது எம்பெருமானின் வக்ஷஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீமஹாலக்ஷ்மியைக் குறிக்கிறது. அடுத்து, தாமரை மார்பனின் புகழையே பாடும் புகழ்பெற்ற நம்மாழ்வாரை – “புகழ் மலிந்த பா மன்னு மாறன்” என்று குறிப்பிடுகிறார். அதன் பின்னரே, மாறன் (நம்மாழ்வார்) திருவடிகளிலே பணிந்து உஜ்ஜீவனம் பெற்ற ராமாநுஜரை – “மாறன் அடி பணிந்து உய்ந்தவன்” என்று அமுதனார் பாடுகிறார்; நெஞ்சே! அவர் திருநாமத்தை “ராமாநுஜன்” என்று போற்றி வணங்கு -.
எம்பெருமானின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் தாயாரிலிருந்து தொடங்கி, அவரை ஆஶ்ரயித்த நம்மாழ்வார், அவரை ஆஶ்ரயித்த ராமாநுஜர், அவரை ஆஶ்ரயிக்கும் அடியேன் மனம் என்று விசேஷமான பரம்பரை வரிசையிலேயே இப்பாசுரம் அமைந்துள்ளது.
எல்லாப் பாசுரங்களும் ராமாநுஜரின் திருநாமத்தைக் கொண்ட அற்புதமான அமைப்பில் அருளப்பட்டுள்ளன. அமுதனார் தம் பாசுரங்கள் முழுவதும் ஆசார்ய பக்தியை வலியுறுத்துகிறார். ஏழாம் பாசுரத்தில் – “மொழியைக் கடக்கும் பெரும் புகழான்” என்று, எல்லோரையும் பிணிக்கும் மூன்று வகையான மதங்களையும் (கர்வங்களையும்) – வித்யா மதம் (ஞானத்தால் வரும் அஹங்காரம்), தன மதம் (செல்வத்தால் வரும் அஹங்காரம்), ஆபிஜாத்ய மதம் (உயர்ந்த குலத்தில் பிறந்தோம் என்ற அஹங்காரம்) கடந்து நின்ற தம் ஆசார்யர் கூரத்தாழ்வானின் பெருமையை வார்த்தைகளால் உணர முடியாது என்கிறார். கூரத்தாழ்வான் மிகவும் மரியாதைக்குரிய பரம்பரையில் பிறந்தவர், மிகுந்த செல்வம் படைத்தவர், தம் ஆசார்யர் ராமாநுஜரே போற்றும் அளவுக்கு பண்டிதர். இருப்பினும், ஆழ்வானுக்கு எந்த மதமும் இல்லை. இந்த குணம் அமுதனாரை வியப்பில் ஆழ்த்துகிறது; ஆகையால் தம் ஆசார்யர் கூரத்தாழ்வானை அவர் கொண்டாடுகிறார். மேலும், தம் ஆசார்யருக்குப் பிறர் உள்ளத்தில் உள்ள துன்பங்களை நீக்கும் உன்னத குணம் இருப்பதாகவும் தொடர்ந்து கூறுகிறார்.
அமுதனாரின் இந்த அபூர்வமான “இராமாநுச நூற்றந்தாதி” அநுபவம், பகவத் ராமாநுஜருக்கும் ஒவ்வொரு ஆழ்வாருக்கும் உள்ள உன்னத ஸம்பந்தத்தை நெஞ்சுருக்கமாக விளக்கியுள்ளது.
பின்வரும் பாசுரங்கள் அடியோங்கள் ஸம்ப்ரதாயத்தில் மிகவும் போற்றப்படுகின்றன:
பாசுரம் 45
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப்பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்று அச்சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரம் அன்று இராமாநுச! மெய்மை கூறிடிலே
இப்பாசுரத்தில் அமுதனார், ராமாநுஜரே உபாயம் மற்றும் உபேயம் என்கிற உயர்ந்த ஆசார்ய நிஷ்டையை உறுதியாக அறிவிக்கிறார்.
பாசுரம் 76
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் உன்
தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர்த்தாள்
என் தனக்கும் அது இராமாநுச! இவை ஈந்து அருளே
இப்பாசுரத்தில், திவ்ய தேஶங்களில் அநுபவிக்கும் எல்லா திவ்யாநுபவங்களையும் ராமாநுஜரை த்யானிப்பதால் பெறலாம் என்று விளக்குகிறார். ராமாநுஜரின் திருவடித் தாமரைகளே வாழ்வின் பரம புருஷார்த்தம்; அந்த லக்ஷ்யத்தை அடைவதற்கும் அதே திருவடிகளே உபாயம். இவ்வாறு தாம் ராமாநுஜரின் க்ருபையிலேயே முழுமையாகச் சரணாகதி செய்துள்ளோம் என்றும், வேறு எந்த உபாயமும் இல்லை என்றும் எடுத்துரைக்கிறார்.
பாசுரம் 98
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்
சுடுமே? அவற்றைத் தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில்
நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே
விடுமே? சரணம் என்றால் மனமே! நையல் மேவுதற்கே
இப்பாசுரத்தில் அமுதனார், ராமாநுஜர் செய்த உபகாரங்களை எடுத்துரைக்கிறார். ஒருவர் ராமாநுஜரிடம் சரணாகதி செய்துவிட்டால், அவர் அந்த ஆத்மாவை ஸ்வர்க்கத்திலும் செல்லவிடமாட்டார், நரகத்திலும் விழவிடமாட்டார்; மாறாக, பிறவிச் சுழலை முறித்து, அந்த ஆத்மாவை பரமபதத்திற்கு இட்டுச் செல்வார்.
இவ்வாறு, அமுதனாரின் இந்த திவ்யமான அநுபவம், ஆசார்யர் ராமாநுஜர் ஜீவாத்மாக்கள் பரமபதம் அடைவதில் எவ்வளவு முக்யமான பங்கு வகிக்கிறார் என்பதை நன்றாகக் காட்டுகிறது.
ஆதாரம் – https://www.youtube.com/watch?v=W4vjhU2FUlo&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=9 மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/11/simple-guide-to-dhivyaprabandham-part-9/
அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி
பதிவிடம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org