திருப்பள்ளியெழுச்சி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

முதலாயிரம்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெருமையை உபதேச ரத்தின மாலை 11ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார்.

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ்
மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்

உலகத்தவர்களே! வைஷ்ணவமான மாதம் என்ற பெருமையைக் கொண்ட மார்கழியில், கேட்டை தினத்துக்கு என்ன பெருமை என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன், கேளுங்கள். வேத தாத்பர்யமான கைங்கர்யத்தை அறிந்து அதில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டவரும் அதிலும் அடியார்களுக்கே அடிமை என்ற நிலையில் நின்றவருமான தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால், எம்பெருமானாரைப் போன்ற வேத விற்பன்னர்கள் கொண்டாடும் நாளாக இந்த நாள் வழங்கப்படுகிறது.

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயம் சூர்ணிகை 85இல் எம்பெருமானைத் துயில் எழுப்ப ஸுப்ரபாதம் பாடியவர்களில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை “துளஸீப்ருத்யர்” என்று காட்டுகிறார். தானே தன் திருமாலை என்னும் ப்ரபந்தத்தில் “துளபத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை” என்று சொல்லிக் கொள்வதால் இவ்வாறு துளஸீப்ருத்யர் என்று அழைக்கப்பட்டார் இவர். பெரிய பெருமாளான ஸ்ரீ ரங்கநாதனைத் துயில் எழுப்பும் உத்தமமான ப்ரபந்தம் திருப்பள்ளியெழுச்சி.

பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களைத் துணையாகக் கொண்டு இந்த ப்ரபந்தத்தின் எளிய விளக்குவரை எழுதப்படுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

*****

தனியன்கள்

தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹணியம் |
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||

ஞானம் முதலிய கல்யாண குணங்களை உடையவராய், ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கும், ராஜாவைப் போலே வணங்கப்படுபவரான, ஸ்ரீவைகுந்தத்தில் பரவாஸுதேவனாக இருக்கும் பெரிய பெருமாளைத் துயில் எழுப்பும் பாமாலையைத் தந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரைக் கொண்டாடுகிறேன்.

மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னிய சீர்*
தொண்டரடிப்பொடி தொன்னகரம்* வண்டு
திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப்*
பள்ளி உணர்த்தும் பிரான் உதித்த ஊர்*

வண்டுகள் நிறைந்திருக்கும் வயல்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் கண்வளர்ந்தருளும் பெரிய பெருமாளைத் துயில் எழுப்பும், நமக்குப் பேருபகாரம் செய்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் அவதார ஸ்தலம் திருமண்டங்குடி என்று வேதம் வல்லார்களான பெரியோர்கள் கூறுவர்.

*****

முதல் பாசுரம். தேவர்கள் எல்லோரும் வந்து பெரியபெருமாளைத் திருப்பள்ளி எழுந்தருள வேண்டுமாறு ப்ரார்த்திப்பதை அருளிச்செய்கிறார். இதன் மூலம் ஸ்ரீமந் நாராயணனே ஆராதிக்கப்படுபவன் என்றும் மற்ற தேவதைகள் அந்த எம்பெருமானை ஆராதிப்பவர்கள் என்பதும் விளங்குகிறது.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
      கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
      வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
      இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே            

திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்வாமியே! இரவின் இருளைப் போக்கியபடி, கிழக்குத் திசையில், உதயகிரியில், கதிரவன் தோன்றிவிட்டான். அழகிய பகலின் வருகையால், சிறந்த புஷ்பங்களில் தேன் ஒழுகத் தொடங்குகிறது. தேவர்களும் ராஜாக்களும் கூட்டம் கூட்டமாக “நான் முன்னே! நான் முன்னே!” என்று தெற்கு வாசலிலே தேவரீரின் கடாக்ஷம் படும் இடத்தை வந்து சேர்ந்து, அந்த இடம் முழுவதையும் நிறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து அவர்களின் வாஹநங்களான ஆண் மற்றும் பெண் யானைகளும், வாத்தியம் வாசிப்பவர்களும் வந்துள்ளனர். தேவரீர் துயிலெழுவதைக் காணும் உத்ஸாஹத்தால் அவர்கள் செய்யும் கரகோஷம் ஆர்ப்பரிக்கும் கடலின் அலையோசை போலே எல்லா திசைகளிலும் எதிரொலிக்கிறது. ஆகையால், தேவரீர் உடனே திருப்பள்ளி உணர்ந்து இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் அருள் புரிவீராக.

 

இரண்டாம் பாசுரம். கீழ்க்காற்று வீசத்தொடங்கி ஹம்ஸங்களை எழுப்பி விடிவை உணர்த்திவிட்டதாலே, அடியார்களிடத்தில் பேரன்பு கொண்ட தேவரீர் திருப்பள்ளி எழுந்தருளவேண்டும் என்கிறார்.

கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்
      கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
      ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
      வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

நன்கு மலர்ந்த மல்லிகைக் கொடிகளைத் தடவி வந்த கீழ்க்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. அந்த மலர்ப்படுக்கையில் உறங்கும் அன்னங்கள் மழைபோலே பொழிந்த பனியாலே நனைந்த தங்கள் சிறகுகளை உதறிக்கொண்டு எழுந்தன. தன்னுடைய கூரிய விஷப் பற்களாலே கடித்துத் துன்புறுத்தி, தன் குகை போன்ற பெரிய வாயாலே கஜேந்த்ராழ்வானின் காலை விழுங்கப்பார்த்த முதலையைக் கொன்று கஜேந்த்ராழ்வானின் துயரைப் போக்கியவர் தேவரீர். திருவரங்கத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள ஸ்வாமியே! திருப்பள்ளி உணர்ந்து எங்களுக்கு அருள் புரிவீராக.

 

மூன்றாம் பாசுரம். கதிரவன் தன் கதிர்களின் ஒளியைக் கொண்டு நக்ஷத்ரங்களை மறைத்தான். தேவரீரின் திருவாழி பொருந்திய திருக்கையை அடியேன் சேவிக்கவேண்டும் என்கிறார்.

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
      துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
      பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
      வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

கதிரவனின் கதிர்கள் எல்லா இடமும் பரவி விட்டன. நெருக்கமாக அமைந்திருந்த நக்ஷத்ரங்களின் நன்கு பரவிய ஒளி இப்பொழுது மறைந்து, குளிர்ந்த நிலவும் கூடத் தன் ஒளியை இழந்துவிட்டது. நன்கு பரவி இருந்த இருள் ஒழிக்கப்பட்டது. இந்த அதிகாலைக் காற்றானது பாக்கு மரங்களின் மடல்களைக் கீறி அதிலிருக்கும் அழகிய நறுமணத்தைக் கொண்டு வந்து சேர்த்தது. திருக்கையில் விளங்கும் பலம் பொருந்திய திருவாழியை உடையவரே! திருவரங்கத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள ஸ்வாமியே! திருப்பள்ளி உணர்ந்து எங்களுக்கு அருள் புரிவீராக.

 

நான்காம் பாசுரம். தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அடியேனுக்கு தேவரீரை அனுபவிக்கத் தடையாக இருக்கும் விரோதிகளை ஸ்ரீராமாவதாரத்திலே செய்தாற்போலே போக்கியருள வேண்டும் என்கிறார்.

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
      வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
      இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
      மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.

தங்கள் இளம் எருமைகளை மேயவிட்டுக் குழல் ஊதும் இடையர்களின் குழல் ஓசையும், எருதுகளின் கழுத்தில் உள்ள மணியோசையும் சேர்ந்து எல்லாத் திசைகளிலும் பரவி உள்ளது. புல்வெளியில் இருக்கும் வண்டுகள் ரீங்காரமிடத் தொடங்கிவிட்டன. எதிரிகளை வாட்டக்கூடிய சார்ங்கம் என்னும் வில்லை உடைய தேவாதிதேவனான ஸ்ரீ ராமனே! ராக்ஷஸர்களை அழித்து விச்வாமித்ரரின் யாகத்தை முடிக்க உதவி அவப்ருத ஸ்நானத்தையும் (தீர்த்தவாரியையும்) நடத்திய, எதிரிகளை அழிக்கக்கூடிய பலத்தை உடைய, அயோத்திக்குத் தலைவனாகையாலே எங்களுக்கு ஸ்வாமியானவனே! திருவரங்கத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள ஸ்வாமியே! திருப்பள்ளி உணர்ந்து எங்களுக்கு அருள் புரிவீராக.

 

ஐந்தாம் பாசுரம். தேவர்கள் புஷ்பங்களுடன் தேவரீரைத் தொழ வந்துள்ளார்கள். அடியார்களில் உயர்வு தாழ்வு பார்க்காதவராகையால் தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து எல்லோருடைய கைங்கர்யத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
      போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்
      களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
      அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
      எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

மலர்ந்த புஷ்பங்கள் நிறைந்திருக்கும் சோலைகளில் உள்ள பறவைகள் ஆனந்தமாக ஓசை எழுப்புகின்றன. இரவு விலகி விடியல் வந்துவிட்டது. கிழக்குத் திசையில் இருக்கும் கடலின் ஓசை எல்லா இடத்திலும் கேட்கிறது. தேவர்கள் தேவரீரைத் தொழ, வண்டுகள் தேனைக்குடித்து ஆனந்தமாக ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் அழகிய மலர்களாலே தொடுக்கப்பட்ட மாலைகளைக் கொண்டு வந்துள்ளனர். ஆகையால், இலங்கைக்கு ராஜாவான விபீஷணாழ்வானாலே வணங்கப்பட்டவரே! திருவரங்கத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள ஸ்வாமியே! திருப்பள்ளி உணர்ந்து எங்களுக்கு அருள் புரிவீராக.

 

ஆறாம் பாசுரம். தேவரீரால் இவ்வுலக நிர்வாஹத்துக்கு நியமிக்கப்பட்ட தேவ ஸேனாதிபதியான ஸுப்ரஹ்மண்யன் முதலான அனைத்து தேவர்களும் தங்கள் மஹிஷிகள், வாஹநங்கள் மற்றும் தொண்டர்களுடன் தேவரீரை வணங்கித் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள வந்துள்ளதால் தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அவர்களுக்குக் காட்சி கொடுக்க வேண்டும் என்கிறார்.

இரவியர் மணி நெடுந்தேரொடும் இவரோ
      இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
      மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
      குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

பன்னிரண்டு ஆதித்யர்களும் தங்கள் சிறந்த, பெரிய தேர்களில் வந்துள்ளனர். இவ்வுலகத்தை ஆளக்கூடிய பதினோரு ருத்ரர்களும் வந்துள்ளனர். அறுமுகனான ஸுப்ரஹ்மண்யன் தன்னுடைய மயில் வாஹநத்தில் வந்துள்ளான். நாற்பத்தொன்பது மருத்துக்களும் அஷ்ட வஸுக்களும் “நான் முன்னே! நான் முன்னே!” என்று முன்னே வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் நெருக்கமாக இருந்து கொண்டு, தேவர்கள் தங்கள் தேர்களிலும் குதிரைகளிலும் இருந்துகொண்டு பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கிறார்கள். தேவரீருடைய திருக்கண் நோக்கை ஆசைப்பட்டுக்கொண்டு, ஸுப்ரஹ்மண்யனுடன் கூடிய தேவர்கள் கூட்டம் பெரிய மலையைப் போலே இருக்கும் திருவரங்கம் பெரிய கோயில் முன்னே வந்தனர். திருவரங்கத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள ஸ்வாமியே! திருப்பள்ளி உணர்ந்து எங்களுக்கு அருள் புரிவீராக.

 

ஏழாம் பாசுரம். இந்த்ராதி தேவர்கள் ஸப்தரிஷிகள் ஆகிய எல்லோரும் வந்து ஆகாசத்தை நிறைத்துக்கொண்டு நின்று தேவரீரைத் துதித்துக்கொண்டு இருப்பதால் தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அவர்களுக்குக் காட்சி கொடுக்க வேண்டும் என்கிறார்.

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
      அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
      எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
      இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

ஸ்வாமி! தேவர்களின் தலைவனான இந்த்ரன் தன் ஐராவதத்தில் வந்து தேவரீரின் திருக்கோயில் வாசலிலே இருக்கிறான். மேலும், ஸ்வர்க லோகத்தைச் சேர்ந்த தேவர்கள் மற்று அவர்களின் தொண்டர்கள், ஸநகாதி ரிஷிகள், மருத்துக்களும் அவர்களின் தொண்டர்களும், யக்ஷர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள் ஆகிய எல்லோரும் வந்து ஆகாசத்தை நிறைத்துக்கொண்டு நிற்கிறார்கள். தேவரீரின் திருவடிகளை வணங்க அவர்கள் மெய்மறந்து நிற்கிறார்கள். திருவரங்கத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள ஸ்வாமியே! திருப்பள்ளி உணர்ந்து எங்களுக்கு அருள் புரிவீராக.

 

எட்டாம் பாசுரம். தேவரீரை வணங்குவதற்கு ஏற்ற காலைப்பொழுது வந்து விட்டது. அநந்யப்ரயோஜனரான ரிஷிகள் தேவரீரை வணங்கத் தேவையான பொருள்களுடன் வந்துள்ளதால் தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அவர்களுக்குக் காட்சி கொடுக்க வேண்டும் என்கிறார்.

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
      மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைக்கலம் காண்டற்கு
      ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
      தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

என் நாதனான ஸ்வாமியே! உயர்ந்தவர்களான ரிஷிகள், தும்புரு, நாரதர், நறுமணம் நிறைந்த ஸ்வர்கத்தில் வாழும் தேவர்கள், காமதேனு முதலானோர் அருகம்புல், தனங்கள், கண்ணாடி மற்றும் திருவாராதனத்துக்குத் தேவையான பொருள்களுடன் வந்துள்ளனர். இருள் மறைந்து, கதிரவன் தன் கதிர்களை எல்லா இடமும் பரவச் செய்துள்ளான். திருவரங்கத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள ஸ்வாமியே! திருப்பள்ளி உணர்ந்து எங்களுக்கு அருள் புரிவீராக.

 

ஒன்பதாம் பாசுரம். சிறந்த இசைக் கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தேவரீரை துயிலெழுப்பி தேவரீருக்குக் கைங்கர்யம் செய்ய வந்துள்ளனர். தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அவர்கள் கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்ளவும் என்கிறார்.

ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
      யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
      கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
      சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.

கின்னரர்கள், கருடர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் தோஷமற்ற இசைக்கருவிகளான எக்கங்கள் (ஒற்றை தந்தியையுடைய வாத்தியம்), மத்தளிகள் (மத்தளம்), வீணைகள், புல்லாங்குழல்கள் போன்றவைகளைக் கொண்டு பெருத்த இசையை எல்லாத் திசைகளிலும் பரவச் செய்கிறார்கள். சிலர் இரவு முழுவதும் வந்து கொண்டிருக்க வேறு சிலர் பகலிலே வந்துள்ளனர். சிறந்த ரிஷிகள், தேவர்கள், சாரணர்கள், யக்ஷர்கள், ஸித்தர்கள் முதலானோர் தேவரீருடைய திருவடிகளை வணங்க வந்துள்ளனர். திருவரங்கத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள ஸ்வாமியே! திருப்பள்ளி உணர்ந்து எங்களுக்கு அருள் புரிவீராக. தேவரீருடைய பெரிய சபையில் அவர்களுக்கு இடம் அளிப்பீராக.

 

பத்தாம் பாசுரம். முதல் ஒன்பது பாசுரங்களில் மற்றவர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டினார். இப்பாசுரத்தில் பெரிய பெருமாளைத் தவிர வேறொரு தெய்வததை அறியாத தனக்கு அருள்புரியுமாறு வேண்டுகிறார்.

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
      கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
      துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
      தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
      ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே  

புனிதமான திருக்காவிரியால் சூழப்பட்டிருக்கும் திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதனே! இயற்கையாகவே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலில் கதிரவன் உதித்ததைக் கண்ட நறுமணம் மிக்க தாமரைகள் மலர்ந்து விட்டன.  உடுக்கையைப் போன்ற மெல்லிய இடையை உடைய மாதர்கள் நதியில் தீர்த்தமாடித் தங்கள் சுருண்ட கூந்தலை உலர்த்தி, வஸ்த்ரங்களை உடுத்திக் கரை ஏறி விட்டார்கள். திருத்துழாய் மாலைகளைக் கொண்ட கூடையையும் விளங்கும் தோள்களையும் உடைய தொண்டரடிப்பொடி என்ற பெயரைக்கொண்ட இந்த அடியவனை தேவரீருக்குத் தகுந்த தொண்டன் என்று ஆதரித்து உன்னுடைய அடியார்களுக்கு என்னை ஆட்படுத்துவீராக! தேவரீர் இதற்காகவே திருப்பள்ளி உணர்ந்து அருள் புரிவீராக!

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “திருப்பள்ளியெழுச்சி – எளிய விளக்கவுரை”

Leave a Comment