உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 49

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை

என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் அன்புடையோர்

சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே

ஏத்ததனைச் சொல்லு நீ இன்று 

ஐம்பதாம் பாசுரம். இவ்வாறு திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தின் பெருமையை அருளிச்செய்த பின், திருவாய்மொழியின் தாத்பர்யமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் பெருமையை அருளிச்செய்ய எண்ணி, முதலில் நம்பிள்ளைக்கு லோகாசார்யர் என்ற விசேஷமான திருநாமம் ஏற்பட்ட சரித்ரத்தை விளக்குகிறார். ஸ்ரீவசன பூஷணத்தை அருளிய பிள்ளை லோகாசார்யர், நம்பிள்ளையின் திருநாமமான லோகாசார்யரின் திநாமத்தைக் கொண்டிருப்பதாலே, அதன் சரித்ரத்தை விளக்குகிறார். இப்பாசுரத்தில் “நம்” என்று அபிமானிக்கப்பட்ட சில விசேஷமான வ்யக்திகளைக் கொண்டாடுமாறு தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார்.

நெஞ்சே! நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்று சிலர் விசேஷமான அபிமானத்துடன் அழைக்கப்பட்டார்கள். இதற்குக் காரணம் இவர்களுக்கு இருந்த பெருமையாலே சிலர் இவர்களை இவ்வாறு ஆதரத்துடன் அழைத்ததே. இத்திருநாமங்களைச் சொல்லி நீயும் இவர்களை இன்றே கொண்டாடு.

அழகிய மணவாளன் (ஸ்ரீரங்கநாதன்) பல காலம் திருவரங்கத்தில் இருந்து வெளியே எழுந்தருளியிருந்து பின்பு திருவரங்கம் திரும்பியவுடன் இத்திருமேனிக்குத் திருமஞ்சனம் செய்து ஒரு வயோதிகனான ஸ்ரீவைஷ்ணவ வண்ணானுக்குப் பெருமாளுடைய ஈரவாடைத் தீர்த்தத்தைக் கொடுக்க அவர் அதைப் பருகி “இவர் நம்பெருமாளே” என்று அன்புடன் சொன்னதால், அப்பெயரே ஸ்ரீரங்கநாதனுக்கு நிலைத்தது. நம்பெருமாளே ஆழ்வாரை “நம் ஆழ்வார்”, “நம் சடகோபன்” என்று அழைத்ததால் ஆழ்வாருக்கு நம்மாழ்வார் என்ற பெயர் நிலைத்தது. திருநாராயணபுரத்தில் ஸந்யாஸ ஆச்ரமம் ஸ்வீகரித்து, ஸ்ரீரங்கத்தை வந்தடைந்த வேதாந்தியை, பராசர பட்டர் “வாரீர் நம் சீயரே” என்று அன்புடன் அழைத்ததால், இவர் நஞ்சீயர் என்றே அழைக்கப்பட்டார். நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படியை மிக அழகாக ஏடு படுத்திக் கொடுத்த நம்பூர் வரதரை “நம் பிள்ளை” என்று நஞ்சீயர் அன்புடன் அழைத்ததால், இவருக்கு நம்பிள்ளை என்ற திருநாமமே நிலைத்தது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment