உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 49

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 48

ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை

தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் பாங்குடனே

நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்

மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு 

நாற்பத்தொன்பதாம் பாசுரம். ஈடு வ்யாக்யானம் எவ்வாறு தன் ஆசார்யரனான திருவாய்மொழிப் பிள்ளை அளவும் வந்தடைந்தது என்பதை விளக்குகிறார்.

சிறியாழ்வான் அப்பிள்ளை என்ற ஈயுண்ணி மாதவப் பெருமாள் நம்பிள்ளையிடம் இருந்து பெற்ற ஈடு வ்யாக்யானத்தை தன்னுடைய திருக்குமாரரான ஈயுண்ணி பத்மனாபப் பெருமாளுக்கு நன்றாகக் கற்றுக் கொடுத்தார். இவரும் பெருமாள் கோயில் என்று சொல்லப்படும் காஞ்சீபுரத்திலே வாழ்ந்த காலத்திலே, நாலூர் பிள்ளை இவர் திருவடிகளிலே பல கைங்கர்யங்களைச் செய்து, இவரின் அன்புக்கு இலக்காகி, இவரிடமிருந்து ஈடு வ்யாக்யானத்தைக் கற்றுக் கொண்டார். பின்பு, தன்னுடைய திருக்குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்குக் கற்றுக் கொடுத்தார். ஆழ்வார்திருநகரி திவ்யதேசத்தைத் திருத்திப் பொலிந்து நின்ற பிரான், நம்மாழ்வார் ஸந்நிதிகளைப் புனர் நிர்மாணம் செய்து பவிஷ்யதாசார்யரான எம்பெருமானாருக்கு ஒரு திருக்கோயிலும் நிர்மாணித்துப் பல கைங்கர்யங்களைச் செய்து வந்த திருவாய்மொழிப் பிள்ளை ஈடு வ்யாக்யானத்தைக் கற்றுக் கொள்ளும் ஆசையுடன் காஞ்சீபுரத்துக்கு வந்து சேர, தேவப்பெருமாள் தாமே ஆணையிட நாலூராச்சான் பிள்ளை திருவாய்மொழிப் பிள்ளைக்கும், திருவாய்மொழி ஆச்சானுக்கும், ஆயி ஜநந்யாசார்யருக்கும் திருநாராயணபுரத்தில் வைத்து ஈடு வ்யாக்யானத்தைக் கற்றுக் கொடுத்தார். இப்படித் திருவாய்மொழிப் பிள்ளை உபதேசமாகப் பெற்ற ஈடு வ்யாக்யானத்தையே பெரிய நிதியைப் போலே மணவாள மாமுனிகளுக்கு அளித்தார்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment