திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 6 (திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி

<< பகுதி 5

இதுவரை இயற்பாவில் உள்ள முதல் நான்கு ப்ரபந்தங்களை அனுபவித்தோம் – அதாவது முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி மற்றும் நான்முகன் திருவந்தாதி.

இயற்பாவில் அடுத்து வரும் ப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம் மற்றும் பெரிய திருவந்தாதி. இவை மூன்றும் நம்மாழ்வாரால் அருளப்பட்டவை. நம்மாழ்வார் நான்கு ப்ரபந்தங்களை அருளினார். அவற்றில் மூன்று இயற்பாவில் அமைந்துள்ளன; நான்காவது திருவாய்மொழி – இது தான் திவ்ய ப்ரபந்தத்தின் நான்காம் ஆயிரம்.

இந்த ப்ரபந்தங்களின் அனுபவங்களைப் பார்ப்பதற்கு முன், நம்மாழ்வாரின் வைபவத்தைச் சிறிது பார்ப்போம். நம்மாழ்வார், (தற்கால) தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திவ்யதேஶமான ஆழ்வார்திருநகரியில் திருவவதாரம் செய்தார். ஆழ்வார் திருவவதாரம் செய்வதற்கு முன்பு அந்த திவ்யதேஶம் திருக்குருகூர் என்று அழைக்கப்பட்டது. ஆழ்வார் திருவவதாரம் செய்த பொழுது, அவரது திருத்தகப்பனாரும் திருத்தாயாரும் அவரை ஆழ்வார்திருநகரி திவ்யதேஶத்தில் உள்ள கோயிலுக்கு எழுந்தருளப் பண்ணினார்கள். ஆழ்வாரோ திருப்புளியாழ்வார் என்று அழைக்கப்படும் புளிய மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு, தம்மை எம்பெருமானுக்கே உரியவராக ஆக்கிக்கொண்டார். நம்மாழ்வார் அந்தத் திருப்புளியாழ்வாரின் பொந்தினுள் அமர்ந்த திருக்கோலத்தில், இந்த ஸம்ஸாரத்தின் எந்த விஷயங்களிலும் ஈடுபடாமல், எம்பெருமானின் திவ்ய கல்யாண குணங்களிலேயே மக்நராய் (மூழ்கினவராய்), எம்பெருமானையே த்யானித்துக்கொண்டு எழுந்தருளியிருந்தார்.

அவர் இந்த உலகில் 32 திருநக்ஷத்ரங்கள் (வருஷங்கள்) மட்டுமே எழுந்தருளியிருந்தார். அதில் முதல் 16 வருஷங்கள் எம்பெருமானை த்யானித்துக்கொண்டே கழித்தார். அந்த 16 வருஷங்களின் இறுதியில், மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை தர்ஶிக்கும் பாக்யம் பெற்றார். மதுரகவியாழ்வாரின் திருவவதார திவ்யதேஶம் ஆழ்வார்திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூர் ஆகும். அவர் வடக்கே பல திவ்யதேஶங்களில் உள்ள எம்பெருமான்களை தர்ஶித்து அனுபவிக்கும் யாத்ரையில் எழுந்தருளியிருந்தார். அப்பொழுது திடீரென்று தெற்கு திக்கில் ஒரு திவ்யமான ஜ்யோதி தோன்றியது. அந்த ஜ்யோதியை பின்தொடர்வதென்று நிர்ணயித்த மதுரகவியாழ்வார் தெற்கு நோக்கி புறப்பட்டார். இறுதியில் அந்த திவ்ய ஜ்யோதி அவரை திருப்புளியாழ்வாரிடம் கொண்டு சேர்க்க, அங்கே ஆழ்ந்த த்யானத்தில் எழுந்தருளியிருந்த நம்மாழ்வாரை தர்ஶித்தார். மதுரகவியாழ்வார் அருகில் ஒரு கல்லை எறிந்து, “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்க, நம்மாழ்வார் “அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்று அருளிச்செய்தார். மதுரகவியாழ்வார் கேட்ட கேள்வி ஜீவாத்மா, பரமாத்மா மற்றும் அசேதனம் — இந்த தத்வத்ரயம் தொடர்பானது. நம்மாழ்வாரின் பதிலைக் கேட்ட மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் மிகுந்த ஜ்ஞானம் உடையவர் என்பதை உணர்ந்து, அவரையே தனக்கு ஆசார்யனாகவும் ஸர்வஸ்வமாகவும் (எல்லா சொத்தாகவும்) ஏற்றுக்கொண்டு, பல வருஷங்கள் அவருக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு எழுந்தருளியிருந்தார். ஆழ்வார் மேலும் 16 வருஷங்கள் இந்த உலகில் எழுந்தருளியிருந்து, இறுதியில் பரமபதத்தை அடைய விரும்பி அங்கே எழுந்தருளினார்.

இப்படிப்பட்ட நம்மாழ்வார், நான்கு வேதங்களின் ஸாரமாக நான்கு ப்ரபந்தங்களை மிகுந்த க்ருபையுடன் அருளினார்.

  1. திருவிருத்தம் – ரிக் வேதம்
  2. திருவாசிரியம் – யஜுர் வேதம்
  3. பெரிய திருவந்தாதி – அதர்வண வேதம்
  4. திருவாய்மொழி – ஸாம வேதம்

நம்பிள்ளை தம்முடைய திருவாய்மொழி ஈடு வ்யாக்யானத்தில் விளக்கியுள்ளபடி, இன்னொரு ஸ்வாரஸ்யமான ஸம்பந்தமும் உள்ளது. நம்மாழ்வார் அருளிய இந்த நான்கு ப்ரபந்தங்களும், வேதங்களின் ஸாரமாக கருதப்படும் ரஹஸ்யத்ரயத்தின் (அதாவது – திருமந்த்ரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகம்) ஸாரத்தை உள்ளடக்கியுள்ளன. இந்த விளக்கத்தின்படி, திருவிருத்தம் திருமந்த்ரத்தின் ப்ரணவத்தையும் நம: பதத்தையும் விளக்குகிறது. திருவாசிரியம் நாராயணாய பதத்தின் ஸாரத்தை அருளிச்செய்கிறது. பெரிய திருவந்தாதி சரம ஶ்லோகத்தை விளக்குகிறது. இறுதியாக திருவாய்மொழி த்வயத்தை விளக்குகிறது.

திருவிருத்தத்திற்கும் திருவாய்மொழிக்கும் இடையே இன்னொரு ஸ்வாரஸ்யமான ஸம்பந்தமும் உள்ளது — திருவிருத்தத்தின் 100 பாசுரங்களும் திருவாய்மொழியின் 100 பதிகங்களுடன் நேரடியாக தொடர்புடையவை. இதனை அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் தம்முடைய தலைசிறந்த க்ரந்தமான ஆசார்யஹ்ருதயத்தில் அழகாக விளக்கியுள்ளார். 

இப்பொழுது நம்மாழ்வார் அருளிய முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தை அனுபவிப்போம்.

ஆழ்வார் பொதுவாக இரண்டு நிலைகளில் பாசுரங்களை அருளியுள்ளார் – தானான நிலை (ஆழ்வாராகவே இருந்துகொண்டு அருளுவது) மற்றும் ப்ரேம நிலை, அதாவது பெண் பாவம். பெண் பாவத்தில் மூன்று வகைகள் உள்ளன – தாய் பாவம், தோழி பாவம் மற்றும் நாயகி பாவம். இந்த மூன்று நிலைகளிலும் ஆழ்வார், எந்த ஜீவாத்மாவிற்கும் எம்பெருமானுடன் உள்ள ஸம்பந்தத்தின் மூன்று அம்சங்களை — உபாயம் (எம்பெருமானை அடைவதற்கான வழி), ஸம்பந்தம் (உறவின் தன்மை) மற்றும் ப்ரயோஜனம் (எம்பெருமானை அடைந்த பின்னர் உள்ள இலக்கு) — முறையே விளக்குகிறார்.

இந்த ப்ரபந்தத்தில், முதல் மற்றும் கடைசி பாசுரங்கள் ஆழ்வார் தானான நிலையில் — அதாவது மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நிலையில் — அருளிச்செய்தவை. இடையிலுள்ள மற்ற 98 பாசுரங்கள் ப்ரேம நிலையில் (பெண் பாவத்தில்) அருளிச்செய்யப்பட்டவை. எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார், முதல் பாசுரத்திலேயே எம்பெருமானுக்கு ஒரு செய்தி அனுப்புகிறார் — அதுவே விருத்தம் என்பதன் அர்த்தம் (செய்தி/விண்ணப்பம்). “இந்த ஸம்ஸாரம் தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது, இனி இங்கே இருக்க இயலாது, உம்மை அடைய விரும்புகிறேன்” என்று ஆழ்வார் எம்பெருமானுக்கு விண்ணப்பிக்கிறார். ஆழ்வார் தன் நிலையை எம்பெருமானுக்கு தெரியப்படுத்தும் விருத்தமாக (செய்தியாக) இருப்பதால், இந்த ப்ரபந்தம் திருவிருத்தம் என்று திருநாமம் பெற்றது. முதல் பாசுரத்தில் ஆழ்வார் எம்பெருமானை தன் விண்ணப்பங்களை கேட்டருள எழுந்தருள வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார். ஆழ்வார் “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்று அருளிச்செய்கிறார் — ஆசார்யர்களையும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களையும் நோக்கி விண்ணப்பிக்கும் போது நாம் பயன்படுத்தும் “விண்ணப்பம்” என்ற வார்த்தையை நமக்கு அருளியவர் ஆழ்வாரே.

அடுத்த 98 பாசுரங்களில் ஆழ்வார் பெண் பாவத்தில் அருளிச்செய்கிறார். இதில் தாய் பாவம், தோழி பாவம் மற்றும் தலைமகள் பாவம் என்று மூன்றும் முறையே வருகின்றன. எம்பெருமானிடமிருந்து பிரிந்து விரஹதாபத்தால் வாடும் ஆழ்வாரின் நிலையை இவை விளக்குகின்றன.

சாற்றுமுறைப் பாசுரமான கடைசிப் பாசுரத்தில், ஆழ்வார் மீண்டும் ஒருமுறை இந்த ஸம்ஸாரம் மாயையாலும் வன் சேற்றாலும் (வலிமையான சேற்றில் அமிழ்வது போல் அழுத்துவதாலும்) நிறைந்தது என்றும், எம்பெருமானே ஒரே ரக்ஷகன் என்றும் வலியுறுத்துகிறார்.

இந்த ப்ரபந்தத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை அழகான வ்யாக்யானம் அருளியுள்ளார். அந்த வ்யாக்யானத்தின் அவதாரிகையில் பெரியவாச்சான் பிள்ளை நம்மாழ்வார் யார் என்பதை விளக்குகிறார். பெரியவாச்சான் பிள்ளைக்கு முன்பு சில ஆசார்யர்கள் நம்மாழ்வாரை முக்தாத்மா (விடுதலை பெற்ற ஆத்மா), முக்தப்ராயர் (விடுதலை பெறவிருக்கும் ஆத்மா), எம்பெருமானால் அனுப்பப்பட்ட நித்யஸூரி மற்றும் எம்பெருமானின் அவதாரம் என்றும் கூறியுள்ளனர். இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை, இந்த விளக்கங்கள் நம்மாழ்வாரின் வைபவத்தினால் கூறப்பட்டவை என்று அருளுகிறார். உண்மையில் நம்மாழ்வார் முன்பு ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்ட ஒரு ஜீவாத்மா. ஆழ்வாரே திருவிருத்தம் முதல் பாசுரத்தில் “இன்னின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று, இந்த ஸம்ஸாரத்தில் திரும்பத் திரும்பப் பிறந்து துன்பப்படுவதை இனி விரும்பவில்லை என்று அருளிச்செய்கிறார். எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் ஆழ்வார் மயர்வற மதிநலம் அருளப்பெற்று, ஆழ்வாரானார். இந்த மாற்றம் எம்பெருமானின் திருவுள்ளத்தினால் மட்டுமே நிகழக்கூடியது — அவன் க்ருபையினால் மட்டுமே ஸம்பவிக்கக்கூடியது. இந்த அளவிலான மாற்றம் எம்பெருமானின் வைபவத்தையே காட்டுகிறது. ஆழ்வாரே கூறுகிறார் — இந்த ப்ரபந்தங்களை பாடுவிப்பவன் எம்பெருமானே என்று! ஆழ்வாரின் திருநாவிலே எழுந்தருளி, எம்பெருமானையே போற்றும் இந்த பாசுரங்களை எம்பெருமானே பாடினான் என்று ஆழ்வார் அருளுகிறார்.

பெண் பாவத்தில் அருளிய 98 பாசுரங்கள் அந்யாபதேஶமாகவும் (வெளிப்படையான அர்த்தம்) ஸ்வாபதேஶமாகவும் (ஆழ்ந்த உள்ளர்த்தம்) அமைந்துள்ளன என்று கூறப்படுகிறது. வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் ஒரு ஸ்வாபதேஶ வ்யாக்யானம் அருளியுள்ளார். அதேபோல் நம்பிள்ளையும் பெரியவாச்சான் பிள்ளையும் திருவிருத்தத்திற்கு வ்யாக்யானங்கள் அருளியுள்ளார்கள்.

இதுவரை திருவிருத்தத்தின் ஸாரத்தை அனுபவித்தோம்.

இனி, திருவாசிரியத்தைச் சிறிது அனுபவிப்போம்.

திருவாசிரியத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிய வ்யாக்யானத்தின் அவதாரிகையில், திருவாசிரியத்திற்கான முன்னுரையை மிகவும் அழகாக நிறுவியுள்ளார். திருவிருத்தத்தில் ஆழ்வார் தன்னுடைய குணம், ஸ்வரூபம் மற்றும் எம்பெருமானிடமிருந்து பிரிந்திருப்பதாலும் ஸம்ஸாரத்தில் தவிப்பதாலும் உண்டான ஆர்த்தியை வெளிப்படுத்தினார். ஆழ்வாரால் இந்த உலகில் இனிமேல் தரிக்கவே முடியாது என்ற நிலையை உணர்ந்த எம்பெருமான், ஆழ்வாரை இன்னும் சிறிது காலம் இந்த உலகில் நிலைத்திருக்கச் செய்வதற்காக, ஆழ்வார் ஸம்ஸாரத்திலேயே இருந்துகொண்டே நித்யஸூரிகள் வைகுண்டத்தில் அனுபவிக்கும் அதே திவ்ய பரமபத அனுபவத்தை அருளினான். ஸம்ஸாரத்தில் இருந்தாலும், எம்பெருமானின் திவ்ய மங்கள ரூப அழகை அனுபவித்த ஆழ்வார், அதனைப் பாசுரங்களாக அருளத் தீர்மானித்தார். இவ்வாறு திருவாசிரியத்தின் ஏழு அழகிய பாசுரங்கள் அவதரித்தன. இந்த 7 பாசுரங்கள் யஜுர் வேதத்தின் ஏழு காண்டங்களுக்கு ஸமானமானவை. இந்த ப்ரபந்தம் தமிழ் இலக்கணத்தின்படி ஆசிரியப்பா என்னும் யாப்பு வடிவில் அமைந்துள்ளது.

ஆழ்வார் எம்பெருமானின் திவ்ய மங்கள ஸ்வரூபத்தையும் கல்யாண குணங்களையும் போற்றி இந்தப் பாசுரங்களை அருளினார். எம்பெருமானின் திருமேனி சாய்ந்து கிடக்கும் மரகத மலை போன்று பசுமையான நிறம் உடையது என்று ஆழ்வார் அருளுகிறார். எம்பெருமான் நமக்கு எல்லா வகையிலும் ஸம்பந்தப்பட்டவனாக எப்பொழுதும் இருக்கும்போது, மக்கள் அந்யதேவதைகளை வழிபடுவது, தாயாரிடம் எவ்வளவோ கடன்பட்டிருந்தாலும், தாயாரை விட்டுவிட்டு ஒரு மரப்பலகையை பேணிக் காப்பாற்றிக் கொண்டிருப்பதற்கு ஸமானம் என்று ஆழ்வார் விளக்குகிறார். நிறைவாக, இந்த அகிலாண்டத்தையும் விழுங்கி, பின் ஆலிலையில் கண்வளரும் எம்பெருமானை (ஆலிலைக் கண்ணன்) விட வேறு யார் மேலானவராக இருக்க முடியும் என்று ஆழ்வார் முடிக்கிறார். இவ்வாறு திருவாசிரியத்தில் நம்மாழ்வார் எம்பெருமானின் திவ்ய அழகையும் கல்யாண குணங்களையும் அனுபவித்துள்ளார்.

இறுதியாக, அதர்வண வேதத்துடன் தொடர்புடைய முண்டக உபநிஷத்தின் ஸாரமான பெரிய திருவந்தாதியை அனுபவிப்போம். இந்தக் கட்டுரையில் முன்பே கூறியதுபோல், பெரிய திருவந்தாதி சரம ஶ்லோகத்தின் ஸாரமாகும். இதனை ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி தம்முடைய க்ரந்தத்தில் மிகவும் அழகாக வலியுறுத்தியுள்ளார்.

ஆழ்வார் திருவிருத்தம் அருளிய பின்னர், எம்பெருமான் ஆழ்வாருக்குத் தன்னுடைய அனுபவத்தின் ஆனந்தத்தை அருளினான். அது திருவாசிரியத்தில் வெளிப்பட்டு, பெரிய திருவந்தாதியில் மேலும் விரிந்தது. முதல் பாசுரமான “முயற்றி சுமந்து எழுந்து…” என்பதில், எம்பெருமானின் அனுபவங்களைப் பாசுரங்களாக அருளும் உற்சாஹம் தனக்கு மிகவும் அதிகமாக இருப்பதால், தன் உள்ளமே அதைப் பேசுவதற்கு தனக்கும் ஒரு படி முன்னே சென்றுவிட்டது என்று ஆழ்வார் அருளுகிறார். இறுதிக்கு முந்தைய பாசுரமான 86ஆம் பாசுரம் “கார் கலந்த மேனியான்…” என்பதில், எம்பெருமானின் திவ்ய மங்கள ரூபத்திலும் கல்யாண குணங்களிலும் ஈடுபடாமல், இந்த ஸம்ஸாரத்தில் உள்ள மக்கள் எவ்வாறு காலம் கழிக்கிறார்கள், எவ்வாறு தங்கள் துக்கங்களை போக்கிக்கொள்கிறார்கள் என்று ஆழ்வார் வியக்கிறார்! 87ஆம் பாசுரமான சாற்றுமுறைப் பாசுரத்தில், ஸம்ஸாரத்தில் காலம் கழிப்பதற்கு எம்பெருமானையும் அவனது திவ்யநாமங்களையும் த்யானிக்க வேண்டும் என்று ஆழ்வார் வலியுறுத்துகிறார்.

இது அந்தாதி வடிவில் (அதாவது ஒரு பாசுரத்தின் இறுதி வார்த்தையே அடுத்த பாசுரத்தின் முதல் வார்த்தையாக அமைவது) அருளப்பட்டதால், திருவந்தாதி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதற்கு “பெரிய” என்ற அடைமொழி ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இது அளவில் பெரியதல்ல, பெரியாழ்வாரால் அருளப்பட்டதுமல்ல. மற்ற திருவந்தாதிகளில் 100 பாசுரங்கள் உள்ளன, இதில் 87 பாசுரங்கள் மட்டுமே உள்ளன. இதற்கான காரணம் மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளது — 75ஆம் பாசுரமான “புவியும் இருவிசும்பும்…” என்பதில் நம்மாழ்வார் எம்பெருமானிடம், “இரண்டு உலகங்களையும் நியமிப்பவன் நீயே! நீ என்னுள்ளே வஸிக்கிறாய் என்றால், ஶாஸ்த்ரங்கள் மூலம் உன்னைப் பற்றிக் கேட்டறிந்து உன்னை என்னுள்ளே தரித்துக் கொண்டிருக்கும் என்னையும், என்னுள்ளே இருக்கும் உன்னையும் பார்க்கும்போது — யார் பெரியவர், நீயா அல்லது நானா?” என்று கேட்கிறார். இவ்வாறு ஆழ்வார் தன்னுடைய பெருமையைப் பேசியதால் இந்த ப்ரபந்தம் பெரிய திருவந்தாதி என்று திருநாமம் பெற்றது. மேலும், நம்மாழ்வாருக்கு “பெரியன்” என்ற திருநாமமும் உண்டு. அதுவும் இந்த “பெரிய திருவந்தாதி” என்ற திருநாமத்திற்கு பொருத்தமானதே.

இக்கட்டுரையில் ஒருவாறாக, திருவிருத்தம், திருவாசிரியம் மற்றும் பெரிய திருவந்தாதி ஆகியவற்றின் ஸாரத்தைச் சிறிது அனுபவித்தோம்.

ஆதாரம் – https://www.youtube.com/watch?v=eZ4QNAhs7Xk&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=7 மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/11/simple-guide-to-dhivyaprabandham-part-6/

அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி

பதிவிடம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org

Leave a Comment