திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 2 (பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி

<< பகுதி 1

எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே சில ஆத்மாக்களுக்கு மயர்வற மதிநலம் அருளினான். அதாவது மயர்வு அற என்றால் – அஞ்ஞானத்தை தீர்த்து, உண்மையான ஞானத்தையும் பக்தியையும் அருளினான். அந்த பக்தியின் வெளிப்பாடாகவே அவர்கள் திவ்ய ப்ரபந்தப் பாசுரங்களை அருளினார்கள். இதுவே த்ராவிட வேதம் என்றும் அருளிச்செயல் என்றும் வழங்கப்படுகிறது. 

நம்மாழ்வாரின் அருளிச்செயல்கள் 4 வேதங்களுக்கு ஈடாகக் கருதப்படுகின்றன:

  • திருவிருத்தம் – 100 பாசுரங்கள் – ரிக் வேதம் 
  • திருவாசிரியம் – 7 பாசுரங்கள் – யஜுர் வேதம் 
  • பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள் – அதர்வண வேதம் 
  • திருவாய்மொழி – 1102 பாசுரங்கள் – சாம வேதம். 

திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் ஆகிய 6 திவ்ய ப்ரபந்தங்கள் வேதங்களின் ஆறு அங்கங்களாக கருதப்படுகின்றன. ஏனைய ஆழ்வார்களின் அருளிச்செயல்கள், வேதத்தின் உப-அங்கங்களாக கருதப்படுகின்றன. 

வேதங்களை புரிந்து கொள்வது மிகக் கடினம். மேலும் வேதத்தை அநுஷ்டிக்கப் பல விதிமுறைகள் உள்ளன – யார், எங்கு, எப்படிச் சொல்ல வேண்டும் என்று பல விதிகள் உள்ளன. ஆனால், ஆழ்வார்களின் ஈரச்சொற்களுக்கோ அத்தகைய விதிமுறைகள் இல்லை. 

அருளிச்செயல்கள் எதை உணர்த்த அவதரித்தன?
அர்த்த பஞ்சகம் என்றால் என்ன?

திவ்ய ப்ரபந்தங்கள் ஐந்து உண்மைகள் என்று சொல்லப்படும் அர்த்த பஞ்சகத்தை மிகவும் அழகாக விளக்குகின்றன. 

  • நான் யார்? (ஸ்வ-ஸ்வரூபம்)
  • பகவான் யார்? (பர-ஸ்வரூபம்)
  • நான் அடைய வேண்டிய இலக்கு என்ன? (புருஷார்த்த-ஸ்வரூபம்)
  • இலக்கை அடைய வழிகள் யாவை? (உபாய-ஸ்வரூபம்)
  • இலக்கை அடைவதற்கான தடைகள் யாவை? (விரோதி-ஸ்வரூபம்)

நாம் திவ்ய ப்ரபந்தங்களைத் தொடர்ந்து அநுபவிக்க அநுபவிக்க, எம்பெருமானின் குணங்கள் மீதும் அவனுக்குச் செய்யும் கைங்கர்யம் மீதும் நமக்கு ப்ரீதி மேலோங்கி, ஸம்ஸார விஷயங்கள் மீது தன்னடையே விரக்தி ஏற்படும். எம்பெருமானின் கல்யாண குணங்களையும் அவதார லீலைகளையும் நாம் தொடர்ந்து அநுபவிக்க, அதுவே நமக்கு ஆனந்தத்தை அளிப்பதோடு மட்டும் அல்லாமல், ஆத்ம ஜ்ஞானத்தையும் அளித்து, நம்முடைய உண்மையான தாஸ்ய ஸ்வரூபத்தையும் உணரச்செய்யும். 

பேயாழ்வார் பாசுரம் இதை நன்கு எடுத்துக் காட்டுகிறது:

மாற்பால் மனம் சுழிப்ப* மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம்* – நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்*
பாதத்தான் பாதம் பணிந்து*
மூன்றாம் திருவந்தாதி 14

எம்பெருமானின் மீது ப்ரீதி வளர வளர, ஸம்ஸார விஷயங்கள் மீது பற்று குறையும். ஆழ்வார்கள் பாசுரங்கள் நமக்கு எம்பெருமானிடம் உண்மையான பக்தியை வளரச் செய்கின்றன. அவை நம்மை எம்பெருமானிடம் நெருக்கமாக அழைத்துச் செல்கின்றன.

 உபதேச ரத்தின மாலையில், 34ம் பாசுரத்தில் 

ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச்செயல் ஏற்றம்
தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர்* – ஏழ் பாரும்
உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளதெல்லாம்
வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து*

மாமுனிகள் – “இந்த உலகம் அறிய ஆழ்வார்களின் பெருமையையும் அவர்கள் அருளிச்செய்த திவ்ய ப்ரபந்தங்களின் பெருமையையும் எடுத்துரைக்கக் கடவேனாக. அது மட்டும் அல்லாமல், ஏழு உலகங்களும் உய்வதற்காக, இந்த அருளிச்செயல்களுக்கு வ்யாக்யானங்கள் அருளிய நம் பூர்வாசார்யர்களின் பெருமையையும் பறை சாற்றுவது என் கடமை” என்று அருளுகிறார்.

மேலும் உபதேச ரத்தின மாலை 35வது பாசுரத்தில் 

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம்* நரகில் – வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே! எப்பொழுதும் நீ அவர் பால்*
சென்று அணுகக் கூசித் திரி* 

“ஓ! என் நெஞ்சே! ஆழ்வார்களையும் அவர்கள் அருளிய ப்ரபந்தங்களையும் தாழ்வாக நினைப்பவர்கள் நரகில் வீழ்வார்கள்! ஆகையால் அவர்களோடு எப்பொழுதும் நீ சேராதே” என்று உபதேசம் செய்கிறார். 

திருப்பல்லாண்டு/ பெரியாழ்வார் திருமொழி 

பெரியாழ்வார் திருப்பல்லாண்டில் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்கிறார். அவர் எம்பெருமானின் நியமனப்படி மதுரையில் பாண்டிய நாட்டு அரசவைக்கு பர-தத்வ நிர்ணயம் செய்வதற்காகச் செல்கிறார்.எம்பெருமானின் க்ருபையாலே நாராயணனே பர-தெய்வம் என்று நிரூபித்தவுடன், அரசனால் பல பகுமானங்கள் வழங்கப்பட்டுப்

பெருமைப் படுத்தப்படுகிறார். அந்த சமயத்தில் பெரியாழ்வாரின் பெருமையைக் காண, எம்பெருமான் தானே பிராட்டியுடன் கருடாழ்வார் மீதேறி அங்கு எழுந்தருளுகிறான். இந்தக் கொடிய ஸம்ஸாரத்தில் இறங்கி வந்த எம்பெருமானைப் பார்த்து, அவனை ரக்ஷிப்பதற்காகப் பெரியாழ்வார் திருப்பல்லாண்டைப் பாடி அவனுக்குக் காப்பிடுகிறார். 

சற்றுமுன் எம்பெருமானின் பரத்வத்தை நிர்ணயித்த பெரியாழ்வார், அவன் எதிரே வந்தவுடன், இந்த ஸம்ஸாரத்தில் அவனுக்கு என்ன நேர்ந்து விடுமோ என்று வயிறு பிடித்து அச்சப்பட்டு, இவ்வாறு பாடுகிறார். அவருடைய பொங்கி வரும் மாத்ருத்வ ப்ரேமம், ஞானத்தை மறைக்க, எம்பெருமானை ரக்ஷிக்க இவ்வாறு திருப்பல்லாண்டில் 12 பாசுரங்கள் பாடுகிறார்.
 

வேதத்திற்கு ப்ரணவம் எப்படி முதலில் உச்சரிக்கப்பட வேண்டுமோ, அவ்வாறு திருப்பல்லாண்டு மாசற்ற தமிழ் வேதமாகிய திவ்ய ப்ரபந்தங்களுக்கு முன் சொல்லப்படவேண்டும். வேதத்தின் ஸாரமாக எப்படி ப்ரணவம் இருக்கிறதோ அதே போல், திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரமாக திருப்பல்லாண்டு உள்ளது. இது எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்வதாக அமைந்துள்ளது. மங்களாஶாஸனம் என்றால், எம்பெருமானுக்கு நன்மையே விளைய வேண்டும் என்றும், அவனுக்கு ஸகல மங்களங்களும் உண்டாக வேண்டும் என்றும் விரும்புவது. 

திருப்பல்லாண்டில்:

  • முதல் இரண்டு பாசுரங்களில் ஆழ்வார் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்கிறார் 
  • அடுத்த மூன்று பாசுரங்களில், ஆழ்வார் பகவத் ப்ராப்தி காமர் (எம்பெருமானுக்கே அடிமை / கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்), கைவல்யார்த்தி (தன்னைத் தானே அநுபவிக்க விரும்புபவர் – ஜீவாத்ம அநுபவத்தை விரும்பிக் கேட்பவர்) மற்றும் ஐஶ்வர்யார்த்தி (இந்த பூலோக செல்வங்களை விரும்பி கேட்பவர் – புதியது, தொலைந்தது) ஆகிய மூவரையும் அழைக்கிறார்
  • அடுத்த மூன்று பாசுரங்கள், அழைத்த மூன்று வகையானவர்களும் வந்து பெரியாழ்வாருடைய கோஷ்டியில் சேர்வதைக் காட்டுகின்றது 
  • அடுத்த மூன்று பாசுரங்களில் பெரியாழ்வார் அவர்களோடு சேர்ந்து எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்கிறார். 
  • கடைசி பாசுரம் ப்ரபந்தத்தின் பலம் (பயன்) சொல்லும் பலஶ்ருதியாக அமைந்துள்ளது. 

பெரியாழ்வார் திருமொழியில், ஆழ்வார் மாத்ருத்வ பாவத்தில் கண்ணன் எம்பெருமானின் குழந்தைப்பருவ சேஷ்டிதங்களை அநுபவிக்கிறார். பெரியவாச்சான் பிள்ளை எல்லா ப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளினாலும் நமக்கு சில பாசுரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மாமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளின போது, தொலைந்த நம் ஸம்ப்ரதாயத்தை மீண்டும் நிர்மாணித்தார். அப்பொழுது தொலைந்த எல்லா க்ரந்தங்களையும் கண்டெடுத்து அவற்றை மீண்டும் ஏடு படுத்தி, பல ப்ரதிகள் இட்டுக் காத்தார். பெரியாழ்வார் திருமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானம் எந்தப் பாசுரம் வரையில் கிடைக்கவில்லையோ, அது வரையில் மாமுனிகள் வ்யாக்யானம் அருளினார். 

பெரியாழ்வார் திருமொழியும் மங்களாஶாஸனப் பாசுரங்களே 

எம்பெருமான் நம் அனைவருக்கும் ரக்ஷகன், அவனே ஸர்வேஶ்வரன், ஶ்ரிய:பதி என்றெல்லாம் உணர்வது ஞான தசையில். அதுவே, ப்ரேம தசையில் பொங்கி வரும் பரிவாலே இந்த பா4வம் தலை கீழாக மாறி, நாம் அவனை ரக்ஷிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆகையால் பெரியாழ்வார் இங்கு, “எம்பெருமான் வைகுந்தத்தில் இருக்கும் போது அவனுக்கு ஒரு கேடும் நேராது. ஆனால் அவன் இந்த ஸம்ஸாரத்திற்கு வந்தாலோ, இங்குப் பல ஆபத்துகள் வரும், பல அசுரர்கள் அவனை அழிக்க முற்படுவார்கள்” என்று நினைத்து அஞ்சி, அவனுக்குத் திருப்பல்லாண்டில் மங்களாஶாஸனம் செய்கிறார். 

திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் நரஸிம்ஹ அவதாரத்தை புகழ்ந்து பாடுகிறார்:
அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை” என்று.

மேலும், இராம அவதாரத்தையும் புகழ்கிறார்:
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு” என்று.

மேலும் க்ருஷ்ணாவதாரத்தையும் கொண்டாடுகிறார்:
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி பாய” என்று. 

“ஏன் எல்லா ஆழ்வார்களும் கண்ணனிடத்தில் ஒரு தனி ப்ரேமை கொண்டுள்ளனர்?”

ஏனெனில், க்ருஷ்ணாவதாரமே கடைசியாக நிகழ்ந்த அவதாரம். இது ஆழ்வாரின் காலத்திற்கு மிக அருகில் உள்ள த்வாபர யுகத்தில் நிகழ்ந்தது. ஆகையால் இது அவரது நினைவில் மேலோங்கி உள்ளது. கலியுகம் பிறந்து 42 நாள்களில் திருவவதாரம் செய்த நம்மாழ்வார், “சில நாள்களுக்கு முன்னால் பிறந்திருந்தால் க்ருஷ்ணாவதாரத்தை தான் நேரில் அநுபவித்திருக்கலாமே” என்று வருந்தினாராம். மேலும் இராமாவதாரத்தில் எம்பெருமான் சக்ரவர்த்தித் திருமகன் – எட்டாவிடத்தில் இருப்பவன். ஆனால், கண்ணபிரானோ எளிமையான இடையன். 

“இராமாவதாரத்தில், நான்கு சகோதரர்களும் மிக்க வலிமை வாய்ந்த, ஆற்றலுடைய அரச குமாரர்கள். தந்தையோ ஸம்பராந்தகன் (ஸம்பரன் என்ற அசுரனைக் கொன்றவர்). குருவோ த்ரிகாலமும் உணர்ந்த ப்ரஹ்ம ரிஷி வஸிஷ்டர். இடமோ அயோத்தி, காலமோ த்ரேதா யுகம் – ஆகையால் இங்கு எதுவும் கவலைக்கிடமில்லை. ஆனால், க்ருஷ்ணாவதாரத்திலோ, இவன் பிறந்த இடம் எதிரியின் சிறையில், கம்ஸனோ மிகக்கொடியவன் – பச்சிளங்குழந்தையைக் கொல்ல, பல கொடிய அசுரர்களையும் ராக்ஷஸர்களையும் அனுப்புபவன், தந்தையோ ஒரு சாதாரண கோபாலன், இருப்பிடமோ கன்றுகளும், பசுக்களும், அவற்றை மேய்க்கும் இடையர்களும், இடைச்சிகளும் வஸிக்கும் ஆய்ப்பாடி, பிள்ளைகளோ குறும்புக்காரர்கள், காலமோ கலியுகத்திற்கு மிக அருகில் உள்ள த்வாபர யுகம். எனவே தான் ஆழ்வார்கள் எப்பொழுதும் கண்ணனைப் பற்றியே சிந்திக்கிறார்கள். 

பெரியாழ்வார் எப்பொழுதும் க்ருஷ்ணானுபவத்திலேயே மூழ்கி இருந்தார். அவர் க்ருஷ்ணாவதாரத்தையே மிகவும் ரசித்து அநுபவித்துக் கொண்டு இருந்தார். “விஷ்ணு சித்தன் மனத்தே கோயில் கொண்டான்” என்று தன் மனத்திலே கண்ணன் எம்பெருமான் எப்பொழுதும் இருப்பதாக அருளினார். தன் அவதார அநுபவங்களை கண்ணன் எம்பெருமான் அவருக்கு வாரி வழங்கியதால், பெரியாழ்வாரும் எப்பொழுதும் அவனையே நினைத்துக்கொண்டு அந்த அநுபவத்திலேயே மூழ்கி இருந்தார். 

பெரியாழ்வார் தன் பாசுரங்களில் பாடிய க்ருஷ்ணாவதார சரித்ரம், புராண இதிஹாச கதைகளில் இருந்து நினைவு கூர்ந்தவை அல்ல. அவை அனைத்தும் கண்ணன் எம்பெருமான் தன் கண்கள் முன்பு நடத்திக்காட்டியதை தான் யசோதா பாவத்தில் அநுபவித்தவை.

“வண்ண மாடங்கள்” பதிகத்தில், ஒரு கேள்வி எழலாம்:

க்ருஷ்ணன் மதுரா நகரத்தில் தானே பிறந்தான்?ஆழ்வார் ஏன் திருக்கோட்டியூர் என்று பாசுரத்தில் பாடியுள்ளார் என்று? 

ஆழ்வாருக்கு திருக்கோட்டியூர் மிகவும் பிடித்த இடம். ஆழ்வாரால் மிகவும் கொண்டாடப்படும் செல்வ நம்பி என்கிற அடியார், திருக்கோட்டியூரில் வாழ்ந்தவர். அங்குள்ள திருக்கோயிலிலே எம்பெருமான் கண்ணனாக காட்சி அளிக்கின்றான். 

அர்ச்சாவதாரம் விபவ அவதாரங்களின் ப்ரதிநிதி. எம்பெருமான் பெரியாழ்வாருக்கு நரஸிம்ஹன், ராமன், வாமனன், க்ருஷ்ணன் என்று பல விதமாக காட்சி அளிக்க, அவற்றை அநுபவித்துப் பாசுரங்களாக வர்ஷிக்கின்றார். 

ஸ்ரீ வசன பூஷணத்தில், பெரியாழ்வார் தன்னை யசோதாவாகவும், ஆண்டாள் தன்னையும் தன் தோழிகளையும் கோபிகைகளாகவும் பாவித்து க்ருஷ்ணானுபவத்தில் ஈடுபட்டனர் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

பெரியாழ்வார் தனது பெரியாழ்வார் திருமொழியில், கண்ணன் எம்பெருமானின் பல்வேறு நிலைகளுக்கும் மங்களாஶாஸனம் அருளியுள்ளார். முதல் பதிகத்தில், அவனது திருவவதாரத்தையும், இரண்டாம் பதிகத்தில் திருவடி முதல் திருமுடி வரையிலான அவனது திருமேனி அழகையும், மூன்றாம் பதிகத்தில் தாலாட்டையும் கண்ணனின் வளர்ச்சியை யசோதா பாவத்தில் அநுபவித்துப் பாசுரங்கள் அருளினார். 

மேலும், திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர், திருவெள்ளறை, திருவரங்கம் போன்ற பல திவ்யதேசப் பெருமான்களுக்கும் மங்களாஶாஸனம் அருளியுள்ளார். 

பெரியாழ்வார் திருமொழி 5.4 சென்னியோங்கு பதிகத்தில் திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் அருளுகிறார்:

பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடி வந்தென்
மனக்கடலில் வாழவல்ல மாய மணாளநம்பீ*
தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்றென்று
உனக்கிடமாயிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே*

எம்பெருமானுக்கு தனிக்கடல் (பாற்கடல்), தனிச்சுடர் (சூரியனின் ஒளிச்சுடர்), தனியுலகு (வைகுந்தம்) என்று பல்வேறு விதமான அற்புதமான இடங்கள் இருந்தபோதிலும், அவன் அவை அனைத்தையும் விட்டுவிட்டு தனது மனத்தில் வந்து மிகவும் ஆனந்தமாகக் குடியிருக்கிறான் என்று பெரியாழ்வார் கொண்டாடுகிறார். 

அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்துவைகி வாழச் செய்தாய் எம்பிரான்*
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு* கண்கள் அசும்பொழுக*
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே*

தன் நெஞ்சினுள்ளே வந்து தனக்கு ஒரு புது வாழ்வு அளித்து தன் துன்பங்களெல்லாம் போக்கினான் என்று மங்களாஶாஸனம் செய்கிறார் ஆழ்வார். 

பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர்குலபதி போல்
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்*
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய் என்றென்றுன் வாசகமே
உறுப்பொலிந்த நாவினேனை உனக்கு உரித்தாக்கினையே*

பாண்டிய மன்னன் எவ்வாறு தன் சின்னக் கொடியை மலை மீது பொறித்தானோ அதே போல் எம்பெருமான் தன்னுடைய சிறந்த திருவடிகளை தன் தலை மேல் பொறித்தான் என்று கொண்டாடுகிறார். 

ஆழ்வார் இங்கு பாண்டியன் தன் கொடியை மலை மீது நாட்டியதையும் எம்பெருமான் திருவடிகளை தன் தலை மீது பதித்ததையும் அழகாக ஒப்பிடுகின்றார். பாண்டியன் மலை மீது சென்ற போது, அந்த மலையானது மன்னனை தன் உச்சியின் மீது கொடியை நாட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவில்லை. ஆனால் மன்னன் தானே அதைச் செய்தான். அதே போல், எம்பெருமான் தானே தன்னுடைய விருப்பத்தால் தனது திருவடிகளை ஆழ்வாரின் சிரஸில் வைத்தான். ஆழ்வார் இந்த அற்புதத்தை நினைத்து ஆனந்தப் படுகிறார், தா4ஸ்ய பாவம் தலையெடுக்க எம்பெருமானின் பெருமையைப் பாடுகிறார் இங்கே.

வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனை கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்தம் அமுதத்தினை
சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே 

யாரெல்லாம் இந்த பாசுரங்களை தா4ஸ்ய பாவத்தோடு பாடுகின்றார்களோ, அவர்கள் எம்பெருமானோடு அவனது நிழல் போலே பிரியாமல் அவன் புகழைப் பாடிக் கொண்டு பேரானந்தத்துடன் இருப்பார்கள். 

ஆக, பெரியாழ்வார் திருமொழியில், பெரியாழ்வார் கண்ணனின் திருவவதாரம் மற்றும் அவன் வளர்ந்து வந்த பல பருவங்களை யசோதா பாவத்தில் கொண்டாடி, மேலும் பல திவ்யதேச எம்பெருமான்களுக்கும் மங்களாஶாஸனம் அருளி, நாம் நம் கடைசி நாட்களில் எப்படி இருக்க வேண்டும் என்று நமக்கு உபதேசமும் செய்கின்றார். மரணம் வரும் தருவாயில் உன்னை நினைக்க முடியாது, ஆகையால் இப்போதே உன் நாமங்களைச் சொல்லி வைக்கிறேன் என்று பாடுகிறார். 

“பெரியாழ்வார் திருமொழி எப்படி மங்களாஶாஸனப் பாசுரங்கள் ஆகும்?” என்று நாம் வினவலாம். நம் பூர்வர்கள், அதை நன்றாக விவரிக்கிறார்கள். “ஏன் பெரியாழ்வார் க்ருஷ்ண அவதாரத்தைக் கொண்டாடுகிறார்?” ஏனெனில் க்ருஷ்ணன் ஆனந்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதே ஆகும். ஆக இதுவும் மங்களாஶாஸனமே! 

“ஏன் அவர் எம்பெருமானைக் கொண்டாடி தனக்கும் ரக்ஷணத்தை ப்ரார்த்திக்கிறார்?” ஏனெனில், “எங்களை நீ காப்பாற்றினால் தான், நாங்கள் உன் புகழை நன்றாக பாட முடியும், உனக்கு மங்களாஶாஸனம் செய்ய முடியும்” என்று விண்ணப்பிக்கிறார். 

ஆகவே, பெரியாழ்வாரின் பாசுரங்கள் எம்பெருமானுக்கு எவ்வாறு மங்களாசாசனமாக அமைகின்றன என்பதை நாம் காண்கிறோம்.

திருப்பாவை 

 உபதேச ரத்தின மாலையின் 22ம் பாசுரத்தில் மாமுனிகள் ஆண்டாளின் பெருமையைக் காட்டுகின்றார்: 

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்

நமக்காகத்தானே ஆண்டாள் திருவாடி மாதத்தில் பூர நக்ஷத்திரத்தில் திருவவதாரம் செய்தாள்? வைகுந்தம் கொடுக்கும் பேரின்ப அநுபவத்தைத் விட்டு, பெரியாழ்வாரின் பெண் பிள்ளையாய் வந்து பிறந்தது, நம்மையெல்லாம் உஜ்ஜீவிக்கத்தானே?! அவளின் பெருமை ஒப்பிட முடியாததல்லவோ?!

அவள் அருளிய திருப்பாவையோ, வேதத்தின் ஸாரமாகவே அமைந்துள்ளது – “வேதம் அனைத்துக்கும் வித்து” என்றே நம் ஆசார்யர்கள் கொண்டாடுகிறார்கள். 

மார்கழியின் முப்பது நாட்களில் ஆண்டாள் முப்பது பாசுரங்களை அருளினாள். தன்னையும் தன் தோழிகளையும் கோபிகைகளாகவும், தான் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆய்ப்பாடியாகவும் பாவித்து கண்ணனை அடைவதற்காக தானும் தன் தோழிகளும் காத்யாயனி நோன்பு அநுஷ்டித்து, அதற்காக தன் தோழிகள் எல்லாரையும் ஒவ்வொருத்தியாக எழுப்பி, நந்தகோபரின் திருமாளிகைக்குச் சென்று, அவரையும் யசோதைப்  பிராட்டியையும் எழுப்பி, பிறகு பலராமனையும் எழுப்பி, நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பி, பிறகு கண்ணனையும் எழுப்புகிறாள். பிறகு கண்ணனிடத்தில் மோக்ஷத்தையும் அவனுக்கு எப்போதும் அடிமை செய்யும் பேற்றையும், அதுவும் அவனது ஆனந்தத்திற்காக ப்ரார்த்தித்துப் பெறுவதாக அருளியுள்ளாள். 

மார்கழித் திங்கள் 

திருப்பாவையின் “மார்கழித் திங்கள்” என்கிற முதல் பாசுரத்தில், “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்கிற பதத்தில் அர்த்த பஞ்சகம் அழகாக விளக்கப்பட்டுள்ளது. 

அர்த்த பஞ்சகமாவது:

  • நாம் யார்? (ஸ்வ-ஸ்வரூபம்)
  • பகவான் யார்? (பர-ஸ்வரூபம்)
  • நாம் அடைய வேண்டிய இலக்கு என்ன? (புருஷார்த்த-ஸ்வரூபம்)
  • இலக்கை அடைய வழிகள் யாவை? (உபாய-ஸ்வரூபம்)
  • இலக்கை அடைவதற்கு தடைகள் யாவை? (விரோதி-ஸ்வரூபம்)

“நாராயணனே நமக்கே பறை தருவான்” என்ற பதம் எவ்வாறு அர்த்த பஞ்சகத்தை விளக்குகின்றது என்று பார்ப்போம்.

  • நாராயணன் – பரமாத்மா – “பர-ஸ்வரூபம்”. அவரே சித் அசித் எல்லாவற்றையும் உள்ளும் புறமுமாக சூழ்ந்து எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பவர்.
  • நமக்கே – ஆத்மாக்கள் – ஜீவாத்ம ஸ்வரூபம் – “ஸ்வ-ஸ்வரூபம்” – ஆத்மா இருப்பது பரமாத்வாவின் ஆனந்தத்திற்கு, பரமாத்மாவிற்கு போக்யமாக இருப்பது. 
  • பறை – பகவான் நமக்கு தரும் கைங்கர்யம் – பலஸ்வரூபம் – “புருஷார்த்த-ஸ்வரூபம்”
  • தருவான் – பகவான் நமக்குத் தருவான் – அதாவது அவனை அடைய ஒரே வழி அவன் திருவடிகளே – “உபாய-ஸ்வரூபம்”
  • ஏன் இதுவரையில் நமக்கு பலம் கிடைக்கவில்லை? (விரோதி-ஸ்வரூபம்) இதுவரையில் நம் முயற்சி பெரிதாக இருந்தது. இப்பொழுது அவனே என்று அவனிடத்தில் நாம் எல்லாவற்றையும் விட்டதால், அவனே நமக்குத் தடைகளை நீக்கி நித்ய கைங்கர்யத்தை அருளுகிறான். 

அனைத்து சாஸ்த்ரங்களின் ஸாரமான அர்த்தத்தையும் இந்த ஒரு பதத்திலேயே நமக்கு அருளியிருக்கிறாள் ஆண்டாள்.

இந்த முதல் பாசுரம் நம்முடைய ப்ராப்யம் / உபேயம் என்ன என்பதைக் காட்டுகிறது – அதாவது பறையாகிற கைங்கர்யம். 

  • முதல் ஐந்து பாசுரங்கள் ஆண்டாளும் அவள் தோழிகளும் எடுக்கும் ப்ரதிஜ்ஞைகளைக் காட்டுகின்றன
  • ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரை ஆண்டாள் தனது தோழிகளாகிற கோபிகைகளை எழுப்புகிறாள் 
  • பதினாறு முதல் இருபது பாசுரங்கள் வரை ஆண்டாளின் கோஷ்டி நந்தகோபரின் திருமாளிகையை அடைவது 
  • இருபத்தொன்று முதல் இருபத்தி ஐந்து பாசுரங்கள் வரை ஆண்டாள் கண்ணனை அடைய அவனிடத்திலேயே ப்ரார்த்திப்பது 
  • இருபத்தி ஆறு முதல் முப்பது வரை அவர்கள் கண்ணனை அடைவது, அவன் அவர்களுக்குக் கைங்கர்யத்தை அருளுவது 

ஆண்டாள் பல அற்புதமான விஷயங்களை திருப்பாவையில் மிக அழகாக நமக்கு விளக்குகிறாள்:

  • நமக்கு ப்ராப்யம் மற்றும் ப்ராபகம் எம்பெருமானே என்று நிலை நாட்டுகிறாள் 
  • ஸ்ரீவைஷ்ணவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எவை என்று காட்டுகிறாள் 
  • பகவத் அநுபவம் கோஷ்டியுடன் செய்ய வேண்டியது,தனித்து அல்ல என்று எடுத்துக்காட்டுகிறாள் – 10 கோபிகைகளை எழுப்பித் தன்னுடன் கண்ணன் எம்பெருமானைத் தர்சிக்க அழைத்துக் கொண்டு போகிறாள்
  • யசோதா, நந்தகோபர், பலராமர் போன்ற எம்பெருமானின் நெருங்கிய கைங்கர்யபரர்களின் புருஷகாரம் கொண்டே நாம் எம்பெருமானை அண்ட வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகிறாள். 
  • பிராட்டியின் துணை கொண்டே நாம் எம்பெருமானிடம் செல்ல வேண்டும் என்று காட்டுகிறாள். 
  • எப்பொழுதும் நாம் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்ய வேண்டும் என்பதையும் காட்டியுள்ளாள் 
  • நாம் அவனிடத்தில் கைங்கர்யம் ஒன்றையே ப்ரார்த்தித்துப் பெற வேண்டும் – ஏனெனில் அதுவே இந்த ஜீவாத்மாவிற்கு ஸ்வரூபம் என்று எடுத்துரைக்கிறாள் 
  • உண்மையான கைங்கர்யம் அவனுடைய ஆனந்தத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும். நமக்கு அதில் எந்தவித எதிர்பார்ப்பும் இருக்க கூடாது என்றும் காட்டுகிறாள். 

நாச்சியார் திருமொழி 

ஆண்டாள், “நாச்சியார் திருமொழியில்”, நம் ஸம்ப்ரதாயத்தின் மிகப் பெரிய தத்வங்களை மிக அருமையாக விளக்கியுள்ளாள். நம் பூர்வர்கள், பக்தியில் முதிர்ந்தவர்களாலேயே நாச்சியார் திருமொழியையோ அல்லது அதன் வ்யாக்யானங்களையோ அநுபவிக்க முடியும் என்று அருளுவர்கள். 

மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில், 24ம் பாசுரத்தில் 

அஞ்சு குடிக்கொரு ஸந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்* – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே! மகிழ்ந்து*

என்று ஆண்டாளின் பெருமையைப் பாடுகிறார். ப்ரபந்ந குலமான ஆழ்வார்களின் குலத்தில் அவதரித்த ஆண்டாளை, ஐந்து வயதிலேயே பரபக்தி, பரஜ்ஞானம், உலக விஷயங்களில் வைராக்யம் என்று பிஞ்சிலேயே பழுத்து, கனிந்த ஒரு அற்புதப் பழமாக கொண்டாடுகிறார் மாமுனிகள். அப்படிப்பட்ட ஆண்டாளை மனமே எப்பொழுதும் நினைப்பாயாக என்று தன் நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுகிறார். 

நாச்சியார் திருமொழியில், ஆண்டாள் “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று அருளுகிறாள் – அதாவது “யாரேனும் என்னை எம்பெருமானுக்கு அல்லாமல் ஒரு மானிடவர்க்கு மணம் முடிப்பதாகப் பேசினாலே, என் உயிர் தன்னடையே உடலை விட்டு நீங்கி விடும்” என்கிறாள் ஆண்டாள் நாச்சியார். பெரியாழ்வார் க்ருஷ்ண பக்தியை ஊட்டி வளர்த்ததனால், அவளுடைய பக்தி அத்தகைய உயர்ந்த ஸ்திதியில் இருந்தது. 

திருப்பாவையில் எம்பெருமானே உபாயம் (அவனை அடைய அவனே வழி) மற்றும் உபேயம் (அடைந்து அநுபவிப்பதும் அவனையே) என்று எடுத்துக்காட்டினாள். எம்பெருமான் உடனே வந்து அவளை ஆட்கொள்ளாததால் மனம் உடைந்து போனாள். எம்பெருமானை அடைய வேண்டும் என்ற கட்டுக்கடங்காத அவாவினால், அவள் அருளிய அற்புதமான ப்ரபந்தமே நாச்சியார் திருமொழி.

ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும், தன்னை விஷ்ணுசித்தன் கோதை, பட்டர்பிரான் கோதை என்று பெரியாழ்வாரின் ப்ரிய புத்ரியாகவே காண்பிக்கிறாள். ஆசார்யருக்கே அத்யந்த பரதந்த்ரராய் இருக்கும் தனது உன்னதமான ஆசார்ய நிஷ்டையை நமக்குப் பல இடங்களில் காட்டுகின்றாள். எம்பெருமான் தன்னைப் பெரியாழ்வாருக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறாள். பூமிப்பிராட்டியின் திருவவதாரமாகத் தான் இருப்பதால், அவளுக்கு எம்பெருமானுடன் இருக்கும் மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்தி, நம்மையும் அத்தகைய உன்னதமான பக்தியில் ஆழ்த்துகிறாள். 

திருப்பாவையில் ப்ராப்யம், ப்ராபகம் ஆகிய இரண்டுமே எம்பெருமான் என்று ஸ்தாபித்த ஆண்டாள், அந்த எம்பெருமான் உடனே வராததால் மனம் கலங்கி, நாச்சியார் திருமொழியின் முதல் பதிகத்தில் காம தேவன் திருவடிகளில் விழுந்தாள். பிறகு விடியற்காலையில் பனி நீராட்டம் ஆடி, ஆற்று மணலில் கூடல் இழைத்து எம்பெருமான் தன்னோடு கூடுவது எப்பொழுது என்று தவித்து, குயிலின் கூக்குரல்கள் கேட்டு, எம்பெருமான் வராத தவிப்பால் அவனைத் தன் கனவில் கண்டு உயிர் தரித்து, பாஞ்சஜன்யத்திடம் எம்பெருமானின் வாயமுதத்தைப் பற்றி வினவி, கார்மேகத்தை எம்பெருமானுக்குத் தூதாக அனுப்பி, மலரும் பூக்கள் எம்பெருமானையே மீண்டும் நினைவூட்டுவதால் தாபம் மேலெடுக்க, ஒரு பெண்ணாகப் பிறந்து எம்பெருமானைப் பிரிந்து தான் படும் துன்பத்தை நினைத்து வருந்தி, பிறகு பெரியாழ்வாருக்காக அவன் வருவான் என்று ஸமாதானம் கொண்டு, அப்படியும் அவன் வராததால் மிகவும் மனம் வருந்தி, விரக தாபத்தால் மிகவும் தபித்து, அருகில் உள்ளவர்களை அவன் வாழ்ந்த இடங்களுக்குத் தன்னை அழைத்து செல்லும்படி வேண்டி, அவன் அணிந்த ஆடை ஆபரணங்களைக் கொண்டு வந்து தரச்சொல்லி, அவற்றைக் கொண்டாவது தான் உயிர் தரிக்கலாம் என்று ப்ரார்த்தித்தாள்.

நாச்சியார் திருமொழியின் முடிவில், கண்ணனை விருந்தாவனத்தே கண்டமையைப் பாடி, அந்தப் பதிகத்தை மனத்தில் நினைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எப்பொழுதும் எம்பெருமானை விட்டுப் பிரியாமல், அவனுடய நித்ய கைங்கர்ய ப்ராப்தியைப் பெறுவார்கள் என்று பலஶ்ருதி அருளுகிறாள். 

பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள், பருத்த கால்களை உடைய ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உடனே வந்து அநுக்ரஹம் செய்த கண்ணனைத் தான் விருந்தாவனத்தில் வழிபட்டமையை, தன் பெருங்கருணையால் இந்தப் பாசுரங்கள் மூலம் நமக்கு அருளுகிறாள். இந்தப் பாசுரங்களை, பிறவி என்றும் கொடிய நோய்க்கு மருந்தாகத் தன் மனத்தில் வைத்து த்யானிப்பவர்கள், எம்பெருமானின் திருவடிகளிலிருந்து பிரியாமல் நித்ய கைங்கரியத்தைச் செய்யும் பேற்றினைப் பெறுவார்கள்.

ஆக, இந்த கட்டுரையில் ஒருவாராக, நாம் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியை சிறிது அநுபவித்தோம். 

ஆதாரம் – https://www.youtube.com/watch?v=kuXeAIqLzk4&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=3 மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/11/simple-guide-to-dhivyaprabandham-part-2/

அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி

பதிவிடம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org

Leave a Comment