திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 1 – தனியன்கள், திருப்பல்லாண்டு, கண்ணிநுண்சிறுத்தாம்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி

<< அறிமுகம்

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி என்கிற இந்த தொடரில், சென்ற வலைப்பக்கத்தில், நாம் திவ்ய ப்ரபந்தங்களுக்கு ஒரு முன்னுரையை அனுபவித்தோம். ஆழ்வார்கள், அவர்களின் அருளிச்செயல்கள், அவற்றின் தன்மை, பிரிவுகள் போன்றவற்றைப் பார்த்தோம். எப்படி வேதங்கள் நான்காக பிரிந்து இருக்கின்றனவோ, அதே போல் திவ்ய ப்ரபந்தங்களும் நான்காக பிரிந்து இருப்பதைப் பார்த்தோம். 

வேதம், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களையும் ஸம்ஸ்க்ருதத்தில் காட்டி கொடுக்கிறது. ஸம்ஸ்க்ருதம் தெரியாதவர்களும் உஜ்ஜீவனம் அடைய வேண்டும் என்று அழகிய தமிழ் மொழியிலே ஆழ்வார்கள் தந்த ஈரச்சொற்களே திவ்ய ப்ரபந்தங்கள். மேலும் வேதங்கள் அநாதியானவை, அதற்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. அளவிட முடியாதது. அப்படி இல்லாமல், 4000 என்று ஒரு அளவிற்கு உட்பட்டு, எல்லோரும் க்ரஹிக்கும் படியாக இந்த தமிழ் ப்ரபந்தங்கள் அமைந்திருக்கின்றன. இவைகளே அருளிச்செயல்கள் என்று பார்த்தோம். எம்பெருமானுடைய அருளாலேயே ஆழ்வார்கள் பாடிய ப்ரபந்தங்கள் – அதனாலே அருளிச்செயல்கள். மற்றுமோர் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஆழ்வார்கள் எம்பெருமானுடைய க்ருபையாலே அவனை அனுபவித்தார்கள். அப்படி அனுபவித்தவர்கள், அந்த அனுபவத்தை தங்களுடன் முடித்துக்கொள்ளாமல் மிக்க க்ருபையுடன் மற்றவர்களுக்கும் இந்த விஷயங்கள் சென்று சேரும்படிப் பாசுரங்களாக இட்டு திவ்ய ப்ரபந்தங்களாக கொடுத்தனர் – அதனாலேயும் இவை அருளிச்செயல்கள். ஆழ்வார்களின் அருளின் வெளிப்பாடு என்றும் பார்க்கலாம். 

இந்த அருளிச்செயல்கள் எப்படி நமக்கு இன்றளவும் வந்து சேர்ந்தன என்பதையும் நாம் அனுபவித்தோம். ஆழ்வார்கள் த்வாபர யுகத்தின் கடைசியிலும் கலி யுகத்தின் ஆரம்பத்திலும் அவதரித்து பாசுரங்களைப் பாடினார்கள். கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரின் காலத்திற்கு பிறகு, ஒரு நீண்ட இடைவெளியில், இந்த திவ்ய பிரபந்தங்கள் எல்லாம் நடையாடாமல், எங்கோ ஒரு சில அடியவர்கள் சில பாசுரங்களை மட்டும் காப்பாற்றி, பாடி வந்து கொண்டிருந்தனர். கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களும், திருவாய்மொழியில் வரும் “ஆராவமுதே…” என்று தொடங்கும் 10 பாசுரங்கள் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. ஸ்ரீமந்நாதமுனிகள் காட்டு மன்னார் கோயிலில் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்த காலத்தில், சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அங்கே வந்து திருக்குடந்தை எம்பெருமான் விஷயமான இருக்கும் “ஆராவமுதே…” பாசுரங்களை ஸமர்ப்பிக்க, ஸ்ரீமந்நாதமுனிகளும் இப்படிப்பட்ட ஆச்சர்யமான  திருவாய்மொழி ப்ரபந்தங்கள் ஆயிரம் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டு, பின்னர் ஆழ்வார்திருநகரிக்கே சென்று, ஆழ்வார் திருமுன்பு 12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரங்களை த்யானித்து ஆழ்வாரிடமிருந்து அனைத்து  திவ்ய ப்ரபந்தங்களையும் அதன் விசேஷ அர்த்தங்களையும் பெற்றார் என்று பார்த்தோம். 

இவ்வாறாக திவ்யப்ரபந்தங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் நம்மாழ்வார் தொடக்கமாக, நம் ஆசார்ய பரம்பரையில் வளர்க்கப்பட்டு வந்தது. நம்மாழ்வாருக்கு பிறகு, ஸ்ரீமந் நாதமுனிகள்,  நாதமுனிகளுக்கு பிறகு உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பி என்று ஓராண் வழியாக நம் குரு பரம்பரையால் வளர்க்கப்பட்டு வந்தது. பிறகு, ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்து, பின் காஞ்சிபுரத்தில் பாடம் பயின்று வர, ஆளவந்தார் காஞ்சி சென்று ராமானுஜரை கடாக்ஷித்து, இவரே நம் ஸம்ப்ரதாயத்தை வளர்க்க வந்த அடுத்த ஆசார்யர் என்று நியமித்தார். அதற்கு பிறகு ராமானுஜர் ஸந்யாஸ ஆஸ்ரமத்தை ஸ்வீகரித்து, ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து, அங்கே நம் ஸம்ப்ரதாயத்திற்கு ஒரு தலைமை பீடம் இருக்க வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி, ஸ்ரீரங்கத்தை நமக்கு தலைமை பீடமாக நிலைநாட்டி, அங்கிருந்து கொண்டு, ஆழ்வார்களின் பாசுரங்களை நன்றாக வளர்த்து, வ்யாக்யானங்கள் பிற்காலத்திலும் நன்றாக வளரும்படி தொடங்கி வைத்தார். ராமானுஜருக்கு பிறகு எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை என்று வந்து, நம்பிள்ளை காலத்தில் இந்த வ்யாக்யானங்கள் மிக விரிவாக வளர்ந்து பாசுரங்களுக்கு எல்லோரும் நன்றாக அர்த்தங்களை தெரிந்து கொண்டு அனுபவித்து வாழ்ந்தார்கள். நம்பிள்ளையின் ஸத்சிஷ்யரான பெரியவாச்சான்பிள்ளை நாலாயிர திவ்யப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளிச்செய்தார். அதன் பிறகு, பிள்ளைலோகாச்சார்யார் காலத்தில் ரஹஸ்ய க்ரந்தங்கள் எல்லாம் ஆழ்வார்கள் பாசுரங்களைக் கொண்டே எளிதில் விளக்கி, தம் பெருங்கருணையால் அவற்றை எல்லாம் ஏடு படுத்தினார் பிள்ளைலோகாச்சார்யார். அதற்கு பிறகு திருவாய்மொழிப்பிள்ளை, மணவாள மாமுனிகள் என்று நம் ஸம்ப்ரதாயம் நன்றாக வளர்ந்தது. 

மணவாள மாமுனிகள் திருவரங்கத்தை அடைந்து, அங்கேயே நித்யவாஸம் செய்து, திவ்யப்ரபந்த வ்யாக்யானங்களை பறைசாற்றிக் கொண்டு சிறப்பாக வளர்த்தார். முக்யமாக திருவாய்மொழி வ்யாக்யானமான ஸ்வாமி நம்பிள்ளை அருளிச்செய்த ஈடு 36000 படியை, தன்னுடைய மனத்திலே எப்பொழுதும் அனுஸந்தித்துக் கொண்டு இருந்தார். பெரிய பெருமாளின் ஆணைப்படி, ஓராண்டு காலம் ஈடு காலக்ஷேபம் பெரிய பெருமாள், பிராட்டி மற்றும் ஆசார்யர்கள் திருமுன்பே செய்து, அதன் முடிவில் பெரிய பெருமாள் ஒரு சிறு பாலகன் வடிவில் வந்து மணவாள மாமுனிகளை ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, ஶ்ரீஶைலேஶ தனியன் சமர்ப்பித்து மாமுனிகளுக்கு பெரும் பேற்றை அருளினார். இப்படியாக மாமுனிகள் வாழ்ந்த காலத்தில் வ்யாக்யானங்களை எல்லாம் நன்றாக வளர்த்தார். நிறைய ஓலைச்சுவடிகளில் இருந்த பல வ்யாக்யானங்களை தேடி கண்டுபிடித்து, அவற்றை நன்றாக உலகமெங்கும் பரவும் படி ஏடு  படுத்தினார். பல ப்ரதிகள் எடுக்கும்படி ஆணை பிறப்பித்து, அதற்கு மேலும் பல விரிவுரைகள் வரும்படி செய்தார்.

அதற்கு பிறகு தொடர்ச்சியாக ஒவ்வொரு திருமாளிகைகள், மடங்கள், ஆச்சார்யர்கள் வித்வான்கள் வழியாக ஆழ்வார்கள் பாசுரங்கள், அவற்றின் அர்த்தங்கள் என்று விடாமல் இன்று வரை நம் வரைக்கும் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் விரிவாக போன வலைப்பக்கத்தில் பார்த்தோம். 

முதலாயிரம், இரண்டாயிரம், இயற்பா மற்றும் திருவாய்மொழி என்று நான்காக திவ்யப்ரபந்தங்கள் பிரிந்து இருப்பதையும் பார்த்தோம். இதில் இயற்பா என்பது இயலாக சேவிக்க கூடியது. இதில் இசை கிடையாது. மற்ற மூவாயிரங்களும் இசையுடனும், தாளத்துடனும் சேர்த்து சேவிக்க கூடியது. இன்றளவும் ஸ்ரீரங்கத்தில் அரையர், மற்ற மூவாயிரம் பாசுரங்களையும் தாளத்துடனும் இசையுடனும் அத்யயன உத்ஸவ காலத்தில் சேவிப்பது வழக்கம். பொதுவாக இயற்பா இசை இல்லாமல், திருவீதி புறப்பாடுகளில் சேவிப்பது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. 

இப்போது இந்த முகவுரையின் இரண்டாம் பகுதிக்கு செல்வோம். தனிப்பட்ட ப்ரபந்தங்களின் சுருக்கமான அறிமுகத்தையும் முக்யமான அம்சங்களையும் இப்போது பார்ப்போம்.

தனியன்கள் 

தனியன்கள் என்பவை ஆசார்ய வந்தனம். இதில் நாம் குரு பரம்பரையை ப்ரார்த்திக்கிறோம். பொது தனியன்களும், ப்ரபந்தத்தின் தனியன்களும் உள்ளன. பெரிய பெருமாள் மணவாள மாமுனிகளை தமது ஆசார்யராக ஏற்று தனியனை அருளிச்செய்தார்:

ஶ்ரீஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||

ஒவ்வொரு முறை திவ்ய ப்ரபந்தம் பாராயணம் செய்யும் முன் முதலில் பாடப்படும் தனியன் இதுவாகும்.சாற்றுமுறையின் போதும் இந்த தனியனை சொல்லியே முடிப்பது வழக்கம்.

சுருக்கமான எளிய அர்த்தம்:   திருவாய்மொழிப்பிள்ளையின் கருணையை பெற்றவரும், ஞானம், பக்தி, வைராக்யம் முதலிய குணங்கள் கடல் போல நிறைந்தவரும், யதீந்த்ரர் (ராமானுஜர்) மீது அளவற்ற ப்ரேமம் உடையவருமான ரம்ய ஜாமாத்ரு முனியை (மணவாள மாமுனிகளை) வணங்குகிறேன்.

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே ||

(பொன்னடிக்கால் ஜீயரின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான தொட்டையங்கார் அப்பையால் அருளிச்செய்யப்பட்டது)

மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரையின் பாதரேகாவாக இருக்கும் வானமாமலை முதல் ஜீயர் – ஶ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் மீதான தனியன் இதுவாகும்.

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம் |
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

– ஶ்ரீ கூரத்தாழ்வானால் அருளிச்செய்யப்பட்டது

சுருக்கமான எளிய அர்த்தம்: லக்ஷ்மியின் நாயகனான ஶ்ரீமந்நாராயணனிலிருந்து தொடங்கி, நாதமுனி, யாமுனாசார்யர் முதலிய ஆசார்யர்களை உள்ளடக்கி, குரு பரம்பரையாகிய மாலையில் நடு நாயகமாக விளங்கும் எம்பெருமானாரையே என் ஆசார்யராகவும் கொண்ட அந்த குரு பரம்பரையை வணங்குகிறேன். நாமும் நம் ஆசார்யரை த்யானிக்கலாம் என்பதால் இது நம் அனைவருக்கும் பொருந்தும்.

யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமானுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே ||

இந்த தனியன் நம் ஜகதாசார்யரான ராமானுஜரின் மகிமையை வெளிப்படுத்துகிறது. நம்பெருமாள் நம் ஸம்ப்ரதாயத்தை “எம்பெருமானார் தரிஸனம்” என்று அழைத்தருளினார். இந்த தனியனும் ஸ்வாமி கூரத்தாழ்வானால் அருளிச்செய்யப்பட்டது.

சுருக்கமான எளிய அர்த்தம்: அச்யுதனின் திவ்ய பொன்னடித் தாமரை இரண்டினிடத்தும் நித்யமும் ஆழமான அன்புடையவரும், எம்பெருமானின் திருவடிகளன்றி மற்ற எல்லாவற்றையும் த்ருணத்துல்யமாக (ஒரு புல்லுக்கு ஸமமாக) கருதுபவரும், கருணையின் ஒப்பற்ற கடலுமான என் ஆசார்யர் ஶ்ரீ ராமானுஜரின் திருவடிகளையே ஶரணமாக பற்றுகிறேன்.

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மதன்வயானாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஶ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

இந்த தனியன் நம்மாழ்வார் மீது ஆளவந்தாரால் அருளிச்செய்யப்பட்டது.

சுருக்கமான எளிய அர்த்தம்:  நம் ப்ரபன்ன குலத்தின் கூடஸ்தரான நம்மாழ்வார், நம் அனைவருக்கும் எல்லாமுமாவார் – தாயும், தந்தையும், மனைவியும், புதல்வரும், செல்வமும் எல்லாமே நம்மாழ்வார்தாம். வகுள புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவடித் தாமரை இரண்டையும் என் ஶிரஸில் என்றும் தரிக்கிறேன்!

பூதம் ஸரஶ்ச மஹதாஹ்வய பட்டநாத
ஶ்ரீ பக்திஸார குலஶேகர யோகிவாஹான் |
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்த்ர மிஶ்ரான்
ஶ்ரீமத் பராங்குஶ முனிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

இந்த தனியன் நம்மாழ்வாரை அவயவியாகவும் மற்ற ஆழ்வார்களை அவரது அவயவங்களாகவும் கொண்டாடுகிறது. இது ஶ்ரீ பராஶர பட்டரால் அருளிச்செய்யப்பட்டது.

சுருக்கமான எளிய அர்த்தம்: இந்த தனியன் நம்மாழ்வாரை அவயவியாகவும் (உடலாகவும்) மற்ற ஆழ்வார்களை அந்த உடலின் அவயவங்களாகவும் (உறுப்புகளாகவும்) கொள்கிறது. நம்மாழ்வாரின் ஶிரஸாக பூதத்தாழ்வார் தொடங்கி, அவருடைய திருவடியாக எம்பெருமானார் ஈறாக அனைத்து ஆழ்வார்களும், ஜகதாசார்யரான எம்பெருமானாரும் இதில் கொண்டாடப்படுகின்றனர். 

இப்போது முதலாயிரத்திற்குள் ப்ரவேசிப்போம். இந்த முதலாயிரம் பின்வரும் ப்ரபந்தங்களின் தொகுப்பாகும்:

1. திருப்பல்லாண்டு (பெரியாழ்வார்)
2. கண்ணிநுண் சிறுத்தாம்பு (மதுரகவி ஆழ்வார்)
3. பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார்)
4. திருப்பாவை (ஶ்ரீ ஆண்டாள்)
5. நாச்சியார் திருமொழி (ஶ்ரீ ஆண்டாள்)
6. பெருமாள் திருமொழி (குலஶேகர ஆழ்வார்)
7. திருமாலை (தொண்டரடிப்பொடி ஆழ்வார்)
8. திருப்பள்ளியெழுச்சி (தொண்டரடிப்பொடி ஆழ்வார்)
9. அமலனாதிபிரான் (திருப்பாணாழ்வார்)
10. திருச்சந்த விருத்தம் (திருமழிசை ஆழ்வார்)

ஶ்ரீமந் நாதமுனிகள் இவ்வாறாக ப்ரபந்தங்களை தொகுத்து அருளினார். முதல் ப்ரபந்தம் திருப்பல்லாண்டு. அதனைத் தொடர்ந்து கண்ணிநுண் சிறுத்தாம்பு வரும். ஆழ்வார் ஸந்நிதியில் (ஆழ்வார்திருநகரியில்) கண்ணிநுண் சிறுத்தாம்பு எப்போதும் முதலில் பாராயணம் செய்யப்படும். திருநாராயணபுரம் திவ்யதேஶத்திலும் கண்ணிநுண் சிறுத்தாம்பு முதலில் பாடப்படும்.

திருப்பல்லாண்டு 

மேற்கொண்டு, திருப்பல்லாண்டை சிறிது அனுபவிப்போம் – இது நம் ஸம்ப்ரதாயத்தில் ப்ரணவத்திற்கு ஸமானமாக கொள்ளப்படுகிறது. உபதேச ரத்தின மாலை பாசுரம் 19ல் மாமுனிகள் ப்ரணவத்துடன் திருப்பல்லாண்டை ஒப்பிட்டருளுகிறார். வேத பாராயணம் ப்ரணவத்துடன் தொடங்கி ப்ரணவத்துடனே முடிவடைவது போல், திவ்ய ப்ரபந்த பாராயணமும் திருப்பல்லாண்டுடன் தொடங்கி திருப்பல்லாண்டுடனே முடிவடைகிறது. மேலும், ப்ரணவம் ஸமஸ்த வேதங்களின் ஸாரத்தை உள்ளடக்கியிருப்பது போல், திருப்பல்லாண்டும் ஸமஸ்த திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரத்தை உள்ளடக்கியுள்ளது.

பெரியாழ்வார் ஶ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார். அவருக்கு கண்ணன் எம்பெருமானிடத்தில் ஆழமான ஈடுபாடு இருந்தது. ஶ்ரீ பாகவதத்தில் மாலாகார சரித்ரத்தால் உள்ளம் உருகி, குற்றமற்ற உயர்ந்த புஷ்ப கைங்கர்யம் செய்யத் திருவுள்ளம் கொண்டார்.

இந்த ஸமயத்தில் பாண்டிய மன்னன் தன்னுடைய ஸந்தேஹங்களை நிவர்த்தி செய்ய வித்வான்களை அழைத்தான். அவனுடைய மந்த்ரியான செல்வ நம்பி அறிவுரையின் பேரில், இவ்வுலக பலன்களுக்கும், உயர்ந்த உலகமான பரலோக பலன்களுக்கும் உள்ள வித்யாஸத்தை தெளிவுபடுத்தி பரதத்வத்தை நிலைநாட்டுபவருக்கு பொன் நிறைந்த கிழி (பொற்கிழி) வழங்கப்படும் என்று அறிவித்தான். எம்பெருமானின் ஆஜ்ஞையாலும் க்ருபையாலும் பெரியாழ்வார் அங்கு எழுந்தருளி பரதத்வத்தை நிலைநாட்டி பொற்கிழியை வென்றெடுக்கிறார். மன்னன் ஆழ்வாரை தன் ராஜ கஜத்தில் (யானையில்) அமரவைத்து நகர்வலம் வரவைத்துக் கௌரவிக்கிறான். அந்த ஸமயத்தில் தன் குழந்தையின் பெருமையைக் காண எப்படி ஒரு தாய் ஓடி வருவாளோ, அதுபோல் எம்பெருமான் பிராட்டியுடன் கருடன் மீது வானில் தோன்றுகிறான். இதனைக் கண்ட பெரியாழ்வார் எம்பெருமானுக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என்று தனது பொங்கும் பரிவாலே நெஞ்சம் நிறைந்து “பல்லாண்டு பல்லாண்டு…” என்று மங்களாஶாஸனம் பாடுகிறார். மங்களாஶாஸனம் வயதில் மூத்தோர் மட்டுமே இளையோருக்கு செய்வதன்று; இதயத்தில் அன்பும் பக்தியும் நிறைந்த எவரும் மங்களாஶாஸனம் செய்யலாம். இவ்வாறு எம்பெருமானுக்கே மங்களாஶாஸனம் செய்த பெரும் பெருமையால் அவர் “பெரியாழ்வார்” என்ற திருநாமத்தை பெற்றார். பெரியாழ்வாரின் ஸமஸ்த பாசுரங்களும் மங்களாஶாஸனத்தால் நிறைந்தவை. எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்ய அடியார்களின் திரளான கூட்டங்களை ஒன்று சேர்த்து அவர்களோடு சேர்ந்து மங்களாஶாஸனம் அருளுகிறார் இந்த திருப்பல்லாண்டு ப்ரபந்தத்தில்.

பெரியாழ்வார் தனியன் ஒரு முக்யமான விஷயத்தை காட்டுகிறது – ஆழ்வார் ஒரு ஆசார்யரிடம் கற்று ஞானம் பெறவில்லை. எம்பெருமானாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்மலமான ஞானம் அருளப்பட்டார். அவருக்கு இன்னொரு விஶேஷமும் உண்டு – அவர் ரங்கநாதனின் மாமனாரும் ஆவார். திருப்பல்லாண்டின் முதல் இரண்டு பாசுரங்களில் ஆழ்வார் தனியாக எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்கிறார். 3வது பாசுரத்தில் தன்னைப் போன்ற பாகவதர்களை அழைக்கிறார். 4வது பாசுரத்தில் கைவல்யார்த்திகளை (அதாவது தம் ஆத்ம ஸ்வரூபத்தை மட்டுமே அனுபவிக்க விரும்பி எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்ய விருப்பமில்லாதவர்களை) அழைக்கிறார். 5வது பாசுரத்தில் ஐஶ்வர்யார்த்திகளை (இவ்வுலகில் புதிய செல்வம் பெற விரும்புவோரையும் இழந்த செல்வத்தை மீண்டும் பெற விரும்புவோரையும்) அழைக்கிறார். 6 முதல் 8வது பாசுரங்களில் அவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். 9 முதல் 11வது பாசுரங்களில் பெரியாழ்வார் அனைவருடனும் சேர்ந்து மங்களாஶாஸனம் செய்கிறார். கடைசியான 12வது பாசுரத்தில் இந்த ப்ரபந்தத்தின் பலனைக் கூறி நிறைவு செய்கிறார் – எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்வதால் என்ன பலன் கிட்டும்? இவ்வுலகிலும் பரமபதத்திலும் என்றென்றும் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்யும் வரம் கிட்டும்! இந்த மங்களாஶாஸனமே நம் ஸ்வரூபத்திற்கு – நம் உண்மையான தன்மைக்கு – பொருத்தமான குணமாகும். பரமாத்மாவிற்கு என்றும் அடிமையான ஜீவாத்மா தன் ஸ்வாமியின் நலனை எப்போதும் நினைத்திருக்க வேண்டும். இந்த ஜீவன் தன் ஶேஷத்வத்தினால் எம்பெருமானுக்கு மேன்மேலும் கீர்த்தியை உண்டாக்க வேண்டும். ஆகவே, ஜீவாத்மாவினால் எம்பெருமானுக்கு நித்யமான மங்களாஶாஸனமே இந்த ப்ரபந்தத்தின் பலனாகும்!

கண்ணிநுண் சிறுத்தாம்பு

கண்ணிநுண் சிறுத்தாம்பு மதுரகவி ஆழ்வாரால் நமக்கு அருளிச்செய்யப்பட்டது. அவர் ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூர் திவ்யதேஶத்தில் அவதரித்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஶ்ரீ வைத்தமாநிதிப்பெருமாள். ஆழ்வார் வடதேஶம் சென்று அங்கே கைங்கர்யம் செய்துவந்தார். அவ்வாறு வாழ்ந்துகொண்டிருக்கும் நாளில், ஒரு நாள் நித்யகர்மங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது தெற்கு திசையிலிருந்து ஒரு பேரொளி தோன்றுவதை கண்டார். ஆர்வமுற்று அந்த ஒளியைத் தொடர்ந்து சென்று ஆழ்வார் திருநகரியை அடைகிறார். ஒளி மறைந்தவுடன், அறிவுடைய மகான் யாரேனும் இங்குள்ளாரா என்று விசாரிக்கிறார். ஊரார் திருப்புளியாழ்வாரை (திவ்ய புளிய மரத்தை) சுட்டிக்காட்டி, அம்மரத்தடியில் 16 வருடங்களாக த்யான நிலையில் எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி அறிவிக்கின்றனர். மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைவிட வயதில் மூத்தவர். நம்மாழ்வாரைக் கண்டதும் மதுரகவி ஆழ்வாருக்கு வார்த்தைகளில் சொல்லொணாத பேரானந்தம் உண்டாகிறது; நம்மாழ்வார் மகா ஞானியும் எம்பெருமானின் பரம பக்தருமென்று உணர்கிறார். அவரை த்யான நிலையிலிருந்து விழிப்படையச் செய்ய, மதுரகவி ஆழ்வார் அவர் முன்னே ஒரு சிறு கல்லை எறிகிறார். நம்மாழ்வார் கண்விழித்து மதுரகவி ஆழ்வாரை பார்க்கிறார். அப்போது மதுரகவி ஆழ்வார் ஒரு கேள்வி கேட்கிறார் – “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?”

நம்மாழ்வார் திருவவதரித்த பிறகு, முதல் முறையாக திருவாய் மலர்ந்து “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!” என்று அருளிச்செய்கிறார்!

இதன் அர்த்தம் – ஒரு ஜீவாத்மா அசித்தினுள் (ஒரு உடலினுள்) இருக்கும்போது அது என்ன அனுபவிக்கும், எங்கே இருக்கும்? இதற்கு நம்மாழ்வார், “ஜீவாத்மா கர்மாவில் ஈடுபட்டிருக்கும் வரை தேஹத்திலேயே இருந்து அதையே அனுபவித்துக் கொண்டிருக்கும்!” என்று பதில் அருளுகிறார். இதைக் கேட்ட மதுரகவி ஆழ்வாருக்கு தெளிவு பிறந்து நம்மாழ்வாரின் மஹா ஞானம் விளங்குகிறது! ஆழ்வாரின் மேன்மையை உணர்ந்து அவரையே தம் ஆசார்யராக ஏற்று கைங்கர்யம் செய்யத் தொடங்குகிறார். நம்மாழ்வாரிடம் திருவாய்மொழியையும் மற்ற ப்ரபந்தங்களையும் கற்றுக்கொள்கிறார். அந்த ப்ரபந்தங்களை வருங்காலத்திற்காக பதிவும் செய்கிறார். நம்மாழ்வாருக்குக் கைங்கர்யங்களும் தொடர்ந்து செய்கிறார். 32 திருநக்ஷத்ரங்களுக்குப் பின் நம்மாழ்வார் பரமபதம் எழுந்தருளியதும் மதுரகவி ஆழ்வார் ஆசார்ய விரஹத்தால் மிகவும் வியாகுலமடைகிறார். ஆயினும், தம் ஆசார்யரின் வைபவத்தை பரப்புவதற்காக “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்ற ப்ரபந்தத்தை அருளிச்செய்கிறார். இது மிகவும் சுருக்கமான இனிமையான ப்ரபந்தம். மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் 26வது பாசுரத்தில் இந்த ப்ரபந்தத்தின் மேன்மையை அருளிச்செய்கிறார்.

வாய்த்த திருமந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை – ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
சேர்வித்தார் தாத்பர்யம் தேர்ந்து

இதன் அர்த்தம் – மதுரகவி ஆழ்வாரின் ப்ரபந்தம் திருமந்த்ரத்தின் மத்திம பதமான “நம:” போன்றது. நம் பூர்வாசார்யர்கள் நம்மாழ்வார் மீதான இந்த ப்ரபந்தத்தின் மேன்மையை உணர்ந்து, எம்பெருமானை விட அவரது அடியார்க்கு கைங்கர்யம் செய்வதே உயர்ந்தது என்று விளக்கும் இந்த ப்ரபந்தத்தின் ஆழமான தாத்பர்யத்தைத் தேர்ந்து திவ்ய ப்ரபந்தத்தின் நடுவே சேர்வித்தருளினார்கள்!

ஶ்ரீமந் நாதமுனிகளிலிருந்து துவங்கும் நம் பூர்வாசார்யர்கள் மதுரகவி ஆழ்வாரின் ப்ரபந்தத்தை திருமந்த்ரத்தின் மத்திம பதத்திற்கு ஸமானமாக போற்றினார்கள். இந்த ப்ரபந்தத்தில் மதுரகவி ஆழ்வார் “தேவுமற்றறியேன் குருகூர் நம்பி, பாவின் இன்னிசை பாடித் திரிவனே” என்று – தம் ஆசார்யரான குருகூர் நம்பியன்றி வேறு தெய்வம் அறியேன் என்றும், தம் ஆசார்யரின் வைபவத்தையும் அவர் அருளிச்செய்த ப்ரபந்தங்களையும் பாடியே தம் காலத்தைக் கழிப்பேன் என்றும் அருளிச்செய்கிறார். இவ்வாறு ஆசார்ய பக்தியை பகவத் பக்தியைவிட உயர்ந்ததாக நிலைநாட்டுவதால் மதுரகவி ஆழ்வார் மற்ற ஆழ்வார்களைவிட உயர்ந்தவராவார். நம் பூர்வாசார்யர்கள் மதுரகவி ஆழ்வாரையும், வடுக நம்பியையும் போல் ஆக விரும்பினார்கள். மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வாரே எல்லாமுமாயிருந்தார். வடுக நம்பிக்கு எம்பெருமானாரே எல்லாமுமாயிருந்தார். 

இந்த ப்ரபந்தத்தில் 11 பாசுரங்கள் உள்ளன. நம்மாழ்வாரின் வைபவம் இந்த ப்ரபந்தத்தில் நன்கு விளக்கப்படுகிறது. “மிக்க வேதியர், வேதத்தின் உட்பொருள்…” என்ற பாசுரத்தில் ஆழ்வார், வேதங்களில் வல்லவர்கள் தன்னைத் தன் அஜ்ஞானத்தினால் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுகிறார். ஆனால் நம்மாழ்வாரோ எந்த தயக்கமுமின்றித் தன்னை ஏற்று மிகுந்த கருணையுடன் உரிய ஞானம் அனைத்தையும் அருளினார்! தன்னை சரியான வழியில் திருத்தினார்! “பயனன்றாகிலும் பாங்கலராகிலும், செயல் நன்றாகத் திருத்தி பணி கொள்வான்…” – எந்த விதத்திலும் பயனற்றவனாயிருந்த தன்னை நம்மாழ்வார் திருத்திக் கைங்கர்யம் செய்வதற்கு தகுதியுடையவனாக்கினார் என்று அருளிச்செய்கிறார்.

மேலும் நம்மாழ்வாரின் கருணை எம்பெருமானின் கருணையிலும் மேலானது என்றும், இவ்வுலகில் பெறக்கூடிய எந்த அநுக்ரஹத்திலும் மேலானது என்றும் அருளிச்செய்கிறார். எம்பெருமான் நமக்கு ஶ்ரீ பகவத் கீதையை அருளினான்; ஆனால் அது புரிந்துகொள்வதற்குக் கடினமானதும் தகுதியுடைய சிலரால் மட்டுமே கற்கக்கூடியதுமாக இருக்கிறது. ஆனால் ஆழ்வாரோ நமக்குத் திருவாய்மொழியை அருளினார்; அது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதும் அனைவராலும் கற்கக்கூடியதுமாகும்.

கடைசி பாசுரத்தில் மதுரகவி ஆழ்வார் கூறுகிறார் – “எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியமான என் ஆசார்யருக்கு அதிகமாக ப்ரியமான அடியேனின், ஆசார்ய பக்திக் கொள்கைகளை ஏற்று இந்த ப்ரபந்தத்தை பாடுவோர் நிச்சயமாக வைகுண்டம் அடைவார்கள்”. இங்கு நம் பூர்வாசார்யர்கள் அழகான வ்யாக்யானம் அருளுகிறார்கள். இந்த ப்ரபந்தத்தை நம்பிப் பாடுவோர் வைகுண்டம் அடைவார்கள் என்று மதுரகவி ஆழ்வார் ஏன் கூறினார்? நம்மாழ்வாரின் வாஸஸ்தானமான திருக்குருகூரை அடைவார்கள் என்று கூறியிருக்கலாமே? அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் போன்ற வ்யாக்யாதாக்கள் கூறுகிறார்கள் – திருக்குருகூரை ஆதிப்பிரான் எம்பெருமானும் நம்மாழ்வாரும் இருவரும் சேர்ந்து ஆள்கிறார்கள். ஆனால் வைகுண்டத்திலோ நம்மாழ்வார் மட்டுமே ஆட்சி செய்கிறார். மேலும், மதுரகவி ஆழ்வார் எம்பெருமானைத் தர்சிப்பதும் தம் ஆசார்யருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதற்காகவே அன்றி எம்பெருமானின் அநுக்ரஹத்தை நாடியல்ல என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு நம்மாழ்வாரின் வைபவத்தை பேசும் இந்த ப்ரபந்தம் ஒரு பொக்கிஷமாகவே கருதப்படுகிறது.  எனவே தான் இது திருப்பல்லாண்டு என்னும் ப்ரணவத்திற்கு பின் வரும் நம: பதத்திற்கு ஈடாக கொள்ளப்படுகிறது. ஏனைய ப்ரபந்தங்கள், திருமந்த்ரத்தின் நாராயண பதத்திற்கு ஒப்பாக, எம்பெருமானின் வைபவத்தையும் அவனது திவ்ய லீலைகளையும் கல்யாண குணங்களையுமே பேசுகின்றன.

ஆதாரம் – https://www.youtube.com/watch?v=0-xCdMtv1tg&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=2&pp=iAQB மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/11/simple-guide-to-dhivyaprabandham-part-1/

அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி

பதிவிடம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org

Leave a Comment