திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 31 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 21 – 30

paramapadham

முப்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், ஐச்வர்யம் முதலியவற்றின் தாழ்ச்சி மற்றும் அநித்யமாக இருக்கும் தன்மையினால் உள்ள தோஷங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒரு நாயகமாய் உலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம் திரமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மால் அடிமையே இனிதாம்
பன்னி இவை மாறன் உரைப்பால்

ஆழ்வார் 1) உலகத்துக்கு ஏக சக்ரவர்த்தியாய் இருந்து பெறும் இன்பம் நிரந்தரமன்று 2) பரந்த ஸ்வர்கத்தில் தேவர்கள் அனுபவிக்கும் இன்பமும் நிரந்தரமன்று 3) நித்யமாக ஆத்மா தன்னையே அனுபவிப்பதும் தீது மற்றும் 4) எம்பெருமானுக்கு அடிமை செய்வது மிகவும் இனியது ஆகியவைகளை ஆராய்ந்து அருளிச்செய்தார்

முப்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்ட பல அவதாரங்களை அந்தந்த இடம் மற்றும் காலத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பாலரைப் போல் சீழ்கி பரன் அளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ

ஆழ்வார்திருநகரியில் அவதரித்த தலைவரான ஆழ்வார், எம்பெருமானிடத்தில் இருந்த அன்பால் அவனுடைய முற்காலத்து அவதாரங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு, அவை வேறு காலம் மற்றும் தேசத்தில் ஏற்பட்டதால், அது கிடைக்காமையால் குழந்தையைப் போலே சிணுங்கினார்; மேலும் அவனுக்குக் கைங்கர்யம் செய்ய மிகவும் ஆசைப்பட்டு (அது கிடைக்காமையால்), மிகவும் வருத்தமுற்றார்.

முப்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் எப்படி காலத்தால் இருந்த தடையை நீக்கி அனுபவத்தைக் கொடுத்தான் என்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கோவான ஈசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத்து உவாதிதனை மேவிக்
கழித்தடையக் காட்டி கலந்த குண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்தது இந்த மண்

எல்லோருக்கும் தலைவனான எம்பெருமான் ஆழ்வாருடன் கூடி, காலம் கடந்திருந்தாலும், காலத்தால் வந்த தடையைப் போக்கி, தன்னுடைய பூர்வ சரித்ரங்களை ஆழ்வார் ஆசைப்பட்டபடி காட்டிக்கொடுத்து ஆழ்வாரின் துன்பத்தைப் போக்கினான்; இவ்வாறு ஆழ்வார் எம்பெருமான் தன்னுடன் கூடிய அந்த குணத்தைக் கொண்டாட, இவ்வுலகம் நிலை பெற்றது.

முப்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் போன்று இருக்கும், மற்றும் எம்பெருமானுடன் தொடர்புடைய பொருட்களைப் பார்த்து, அவை எம்பெருமான் என்று ப்ரமித்து, அவைகளை எம்பெருமானாகப் பாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண் நிலைமையாய்க் காதல் பித்தேறி எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை அவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு

எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் ஆழ்வாருடன் கலந்து பின்பு பிரிந்தான்; அதனால் ஆழ்வார் ஒரு பெண் தன்மையை அடைந்து, அவனிடத்தில் இருந்த பக்தியால், மிகவும் கலங்கி, அவன் விஷயமான பேரன்பால், அவனைப் போன்ற பொருட்களை அவனாகவே நிர்ணயித்துப் பாடினார்.

முப்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், திவ்ய ஸ்தானமான பரமபதத்தில் எம்பெருமானின் இருப்பைக் கண்டு அடைந்த பேரின்பத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வீற்றிருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமை ஆனதெல்லாம் – தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்குகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து

பரமபதத்தில் வீற்றிருந்தருளும் எம்பெருமான், இங்கே வந்து, தன்னுடைய சிறந்த குணங்கள், திருமேனிகள் ஆகியவற்றைக் காட்டி ஆழ்வாரின் கலக்கத்தை நீக்கி, ஆழ்வாருடன் நன்றாகக் கலந்தான்; இப்படி ஸர்வேச்வரனைக் கண்ட ஆழ்வார், அவனை வணங்கி ஆனந்தத்தை அடைந்து, தன்னுடைய துன்பங்கள் நீங்கப் பெற்றதால், தன்னுடைய பெருமையைத் தானே அறிவித்தார்.

முப்பத்தாறாம் பாசுரம். ஆழ்வாரிடத்தில் மிகுந்த காதல் கொண்ட எம்பெருமானை நேரில் கண்டு அனுபவிக்க முடியாமையால் ஆழ்வார் மோஹித்தார்; ஆழ்வாரிடத்தில் அன்பு கொண்டவர்கள் இதற்கு ஒரு தீர்வு காண முற்பட, நல்ல ஞானம் உள்ள ஆழ்வாரின் நலம்விரும்பிகள் ஆழ்வாருக்குச் சேராத விஷயங்களையும், இந்நிலைக்குக் காரணத்தையும் தீர்வையும் விளக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி மாமுனிகள் அருளிச்செய்கிறார்.

தீர்ப்பாரிலாத மயல் தீரக் கலந்த மால்
ஓர்ப்பாதும் இன்றி உடன் பிரிய – நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்

ஆழ்வாரின் தீர்க்கமுடியாத பேரன்பைத் தீர்க்க ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் கலந்து, ஆராயாமல் ஆழ்வாரை விட்டுப் பிரிந்தான்; இதைக் கண்ட உறவினர்கள், முன்பைவிட மிகவும் வருந்தி அறிவிழந்தார்கள்; எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்டு தன்னுடைய உணர்வை மீண்டும் பெற்றார்; இதுவே ஆழ்வாரின் தன்மை.

முப்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் திருநாமத்தைக் கேட்டுத் தன் உணர்வை மீண்டும் பெற்ற ஆழ்வார், அந்தத் திருநாமத்துக்கு உடையவனான எம்பெருமானை அனுபவிக்க முடியாமல் வாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சீல மிகு கண்ணன் திருநாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு – சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு

ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார், கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணனின் திருநாமங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்; உணர்ந்தபின் மிகவும் வருந்தி, கண்ணனின் திருமேனியைக் காண ஆசைப்பட்டு, அனுபவிப்பதற்காக அழைக்கிறார்.

முப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தனக்கு உதவாததால், அவனுக்காக இல்லாத ஆத்மாவிலும் ஆத்மாவின் உடைமைகளிலும் தனக்கு இருக்கும் விரக்தியைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறு படில் என் உடைமை மிக்க உயிர் – தேறுங்கால்
என்தனக்கும் வேண்டா எனும் மாறன் தாளை நெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு 

ஆழ்வார் “என்னுடைய ஆபரணங்கள் முதலியவையும் அவற்றைவிடச் சிறந்ததான ஆத்மாவும், பிராட்டி ஏறி வீற்றிருக்கும் திருமார்பை உடைய ஸர்வேச்வரன் திருவுள்ளத்துக்கு ஏற்புடையதில்லை என்றால், ஆராய்ந்து பார்த்தால், எனக்கும் அவை வேண்டாம்” என்று வெறுப்புடன் அருளிச்செய்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த குறிக்கோளாகக் கொள்.

முப்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளின் அநர்த்தத்தைக் கண்டு வெறுத்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நண்ணாது மால் அடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பம் உறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை ஒன்று

இவ்வுலகில் தங்கள் பாபங்களினாலே எல்லையில்லாத துன்பங்களை அனுபவிக்கும் ஆத்மாக்களின் தாழ்ச்சியையும் அவர்கள் எம்பெருமானிடத்தில் சரணடையாமல் இருப்பதையும் கண்ட ஆழ்வார், ஆறியிருக்க முடியாமல், கண்ணீருடன் இருந்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் கருணையே நமக்குத் தகுந்த துணை.

நாற்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளும் சரணாகதி செய்வதற்கு ஸௌகரியமாகப் பரத்வத்துடன் இருக்கும் அர்சாவதாரத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசி அருள் மொய்ம்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை

எல்லோரும் புரிந்து கொள்ளும்படி, “இவ்வுலகங்களைப் படைத்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று நன்றாக நிர்ணயித்து அருளிய வகுளாபரணரின் திருவடிகளுக்கு அஞ்ஜலி செய்வதையே என் கைகள் விரும்பும்.

ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-31-40-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment