ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை
இருபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், திருமாலிருஞ்சோலை என்கிற திருமலையில் எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் வடிவழகை நன்கு அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்
முன்பு, ஆழ்வார் திடமாக இருந்து சிகரங்களை உடைய திருமலையை அனுபவித்து, அங்கே எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் திருமேனியை, அந்தத் திருமேனியில் அணிந்திருக்கும் திருவபிஷேகம் (கிரீடம்), சதங்கை மற்றும் ஏனைய ஆபரணங்களுடன் சேர்ந்து அனுபவித்தார்.
இருபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், “என்னுடைய கரணங்களின் குறையால் எம்பெருமானின் குணங்களை அனுபவிக்க முடியவில்லை” என்று கலங்க அதை எம்பெருமான் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்னவளவென்ன எனக்கரிதாய்த் – தென்ன
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து
முன்பு, ஆழ்வார் அழகர் எம்பெருமானின் வடிவழகில் மூழ்கினார்; கரணங்களின் குறையால் ஏற்பட்ட அஜ்ஞானத்தால் “எனக்கும் கூட, எம்பெருமானின் அழகை இவ்வளவு என்று அளவுபடுத்தி அனுபவிக்க முடியவில்லையே!” என்ற ஆழ்வாரை ஸமாதானப் படுத்தி, எம்பெருமான் ஆழ்வாரின் கலக்கத்தைப் போக்கினான்.
இருபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், கைங்கர்யம் செய்வதில் தனக்கு இருக்கும் ஆசையை வெளியிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு – எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே! புகழ்
நெஞ்சே! உயர்ந்த சிகரங்களையுடைய திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடன் பிரியாமல் இருந்து எல்லாக் காலங்களிலும் குற்றமில்லாத கைங்கர்யங்களைச் செய்ய ஆசைப்பட்டு அதனால் பேரின்பத்தை அடைந்த ஆழ்வாரின் அழகிய திருவடிகளைக் கொண்டாடு.
இருபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் ப்ரார்த்தனைக்கு இணங்க எல்லாப் பொருட்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பதைக் காண்பிக்க, அதைக் கண்டு அனுபவித்து, வாசிக கைங்கர்யம் செய்யும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
புகழொன்று மால் எப்பொருள்களும் தானாய்
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க – மகிழ்மாறன்
எங்கும் அடிமை செய இச்சித்து வாசிகமாய்
அங்கடிமை செய்தான் மொய்ம்பால்
தகுந்த பெருமைகளை உடைய ஸர்வேச்வரன், தான் எல்லா பொருட்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் நேர்மை என்ற குணத்தை வெளிப்படுத்தினான். இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எல்லா இடங்களிலும் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்ட வகுளாபரணரான ஆழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பட்டதால் வந்த பெருமையுடன், வாசிக கைங்கர்யத்தைச் செய்தார்.
இருபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்களைக் கொண்டாடியும், அப்படிச் செய்யாதவர்களை நிந்தித்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
மொய்ம்பாரும் மாலுக்கு முன் அடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் – அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்தி நெஞ்சே! செய்
நெஞ்சே! மிகவும் சக்தி பொருந்திய ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்த ஆனந்தத்தால், அவனிடத்தில் பக்தியுடன் தொண்டு செய்பவர்களைக் கொண்டாடியும் அது செய்யாத மூடர்களை நிந்தித்தும் பேசிய ஆழ்வாரிடம் உயர்ந்த பக்தியைக் கொள்.
இருபத்தஆறாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சாவதாரம் வரை வந்துள்ள எம்பெருமானின் ஸௌலப்யம் (எளிமை) என்ற குணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று
சேதனர்களுடன் கூடி நன்றாக ஆராயப்படும் தமிழ் வேதத்தையே அடையாளமாகக் கொண்ட ஆழ்வார் “இவ்வுலகில் எம்பெருமானிடத்திலே சரணடைபவர்களுக்கு, உயர்த்தி பொருந்திய பரத்வம், சிறந்த வ்யூஹம், தூய்மையான அவதாரங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் எம்பெருமானின் அர்ச்சாவதாரமே அடைவதற்கு எளிது” என்று அருளிச்செய்தார்.
இருபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் அடியார்களே விரும்பத்துகுந்த குறிக்கோள் என்று பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு – இயல்வுடனே
ஆளானார்க்காளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா
ஆழ்வார் ச்ரிய:பதியான எம்பெருமானின் திருவடிகளில் மனதை வைத்துத் தொண்டு செய்யும் அடியவர்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப்பட்டார். இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளுக்குத் தொண்டு செய்யாதவர்களுக்கு இவ்வுலகில் பிறவி முடியாமல் தொடரும்.
இருப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தானும் தன்னுடைய கரணங்களும் (எம்பெருமானை அனுபவிப்பதில்) மிகவும் ஆசையுடன் இருந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
முடியாத ஆசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டு அவன் பால் படியா – ஒன்றொன்றின்
செயல் விரும்ப உள்ளதெல்லாம் தாம் விரும்பத்
துன்னியதே மாறன் தன் சொல்
ஆழ்வாரின் எல்லை இல்லாத அன்பு மேலும் பெருக, அவரின் எல்லாக் கரணங்களும் அடியார்களைவிட்டு ஸர்வேச்வரனை அடைந்தன; ஒவ்வொரு கரணமும் தன் அனுபவத்துக்கு மேல், மற்ற கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட, ஆழ்வார் எல்லாக் கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட்டார்; இவ்வாறு, ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் நன்கு செறிந்தன.
இருபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடியார் அல்லாதவர்களுக்குத் தொண்டு செய்வது தாழ்ந்தது என்றும் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது பொருத்தமானது என்றும் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
சொன்னாவில் வாழ் புலவீர்! சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் – என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்
நாக்கில் கவி பாடும் திறன் பெற்ற புலவர்களே! உணவு மற்றும் உடைக்காக, குறைந்த ஆயுளை உடைய மனிதர்களை உங்கள் கவிதைகளால் கொண்டாடுவதால் என்ன பயன்? எல்லோருக்கும் ச்ரிய:பதியைக் கொண்டாடும்படி உபதேசித்த திருக்குருகூரின் தலைவரான ஆழ்வாரின் அருளால், அவர்கள் பிறவி நீங்கும்.
முப்பதாம் பாசுரம். மாமுனிகள், “எம்பெருமானுக்காகவே என்னுடைய கரணங்கள் இருப்பதால் எனக்கு ஒரு குறையுமில்லை” என்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
சன்மம் பல செய்து தான் இவ்வுலகளிக்கும்
நன்மை உடை மால் குணத்தை நாள் தோறும் – இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை உலகீர்!
நாத்தழும்ப ஏத்தும் ஒரு நாள்
ஆழ்வார் “இவ்வுலகத்தில் வாழ்பவர்களே! பல அவதாரங்களைச் செய்து, இந்த உலகங்களைக் காக்கும் நன்மை உடைய ஸர்வேச்வரனின் கல்யாண குணங்களை எப்பொழுதும் கொண்டாடும் பேரானந்தத்தை இப்பிறவியில் பெற்றேன்” என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரை ஒரு நாளாவது பாடி, உங்கள் நாக்கில் தழும்பேறும்படிச் செய்யுங்கள்.
ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-21-30-simple/
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org