ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
எம்பெருமானுக்கு நித்யகைங்கர்யத்தைப் பண்ண ஆசைப்பட்ட ஆழ்வார் அது இங்கே செய்ய முடியாது என்றுணர்ந்து, பரமபதத்துக்குச் சென்று கைங்கர்யம் செய்வதை ஆசைப்பட, அங்கே போவதற்கான விரோதிகளைக் கழித்து நம்மை அழைத்துப் போகக்கூடியவன் திருமோகூரிலே இருக்கும் காளமேகம் எம்பெருமானே என்று அவனே தனக்கு வழித்துணையாக இருப்பான் என்று அவன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றுகிறார்.
முதல் பாசுரம். எதிரிகளை அழிக்கும் தன்மையையுடைய மிகவும் இனியவனான காளமேகத்தைத் தவிர வேறு புகலில்லை என்கிறார்.
தாள தாமரைத் தட மணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை அன்றி மற்றொன்றிலம் கதியே
வலிமையான தாளையுடைய தாமரைகள் தடாகங்களை அலங்கரிக்கும் வயலையுடைய திருமோகூரிலே எப்பொழுதும் வசித்து மிகவும் உகப்புடன் பொருந்தியிருப்பவனாய் விரோதிகளான அஸுரர்களை துன்புறுத்தி அழிக்கும்படி நான்கு திருத்தோள்களையுமுடைய சுரிந்திருக்கும் குழலையுடையவனாய் அன்பான திருவதரங்களையுடையவனாய் காளமேகம்போலே வள்ளல் தன்மையையுடைய எம்பெருமானைத் தவிர வேறு நமக்குத் துணையாக இருக்கும் புகலிடத்தை உடையோமல்லோம்.
இரண்டாம் பாசுரம். மிகவும் இனியவனாய் எப்பொழுதும் அனுபவிக்கலாம்படியான நாம பூர்த்தியையுடைய ஸர்வேச்வரன் திருவடிகளைத் தவிர எல்லா நிலைகளிலும் எனக்கு வேறொரு கதியில்லை என்கிறார்.
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கலங்கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
நலங்கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே
பூந்தாரை இனியதாக்குகிற குளிர்ந்த திருத்துழாயையுடைத்தாய் அசைகிற அழகிய மாலையையுடையவனாய் அனுபவிக்கத்தக்க ஆயிரம் திருநாமங்களையுடைய இயற்கையான தலைவனாய், கருணை முதலிய உயர்ந்த குணங்களையுடையவராய் நான்கு வேதங்களை நடத்துபவர்கள் வாழ்ச்சியுடன் இருக்கும் திருமோகூரிலே வாழ்கிறவனாய், அழகிய வீரக்கழலை உடையவனுடைய திருவடி நிழலாகிற தடாகத்தைத் தவிர, நாம் எல்லாப் பிறவிகளிலும் கதியாக வேறொன்றை உடையவர்கள் அல்லோம்.
மூன்றாம் பாசுரம். எல்லா உலகத்தையும் ரக்ஷிக்கும் தன்மையை உடைய எம்பெருமானின் திருமோகூரை நம் துக்கம் கெடும்படி அடைவோம் என்கிறார்.
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்றென்றலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்று இம்மூவுலகளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமதிடர் கெடவே
உன்னைத் தவிர நாங்கள் வேறு ஒரு புகலை உடையவர்கள் அல்லோம் என்று தங்கள் தளர்த்தி தெரியும்படி பலமுறை கூப்பிட்டு, பலன் கிடைக்கும் வரை நின்று, ப்ரஹ்மா ருத்ரன் ஆகிய தேவர்கள் தேடி வணங்க, விரோதிகளை வென்று இந்த மூன்று லோகங்களையும் காப்பதையே தொழிலாகக் கொண்டவனுடைய திருமோகூரை நாம் நம் துக்கம் தீரும்படி இனி வேறு பலனை எதிர்பார்க்காதவர்களாக இருந்து கொண்டு, அடைவோம்.
நான்காம் பாசுரம். ருசியையுடைய பாகவதர்களைப் பார்த்து, உலகத்தை ரக்ஷிப்பதற்காக திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவனுடைய திருவடிகளை அடைவோம் வாருங்கள் என்று அழைத்தருளுகிறார்.
இடர் கெட எம்மைப் போந்தளியாய் என்றென்றேத்திச்
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடரப்
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே
எம்பெருமானுடைய திருவடிகளில் ஆசையுடையவர்களே! “துக்கம் தீரும்படி எழுந்தருளி எங்களைக் காக்க வேண்டும் ” என்று பலமுறை தளர்த்தி தெரியும்படிக் கொண்டாடி, அதனால் பெரிய ஒளியை உடைய சோதிமயமான திருமேனியை தேவர்களும், முனிவர்களும் வந்தடைவதற்காக எம்பெருமான் ஸ்பர்சத்தாலே விரிந்த படத்தையுடைய ஆதிசேஷப் படுக்கையிலே பள்ளிகொண்டருளுபவனுடைய திருமோகூரிலே நம் துக்கம் தீரும்படி அவன் திருவடிகளைக் கொண்டாடுவோம். வாருங்கள்.
ஐந்தாம் பாசுரம். எல்லோருடனும் கூடும் தன்மையையுடைய த்ரிவிக்ரமன் வாழும் திருமோகூரில் கோயிலை அனுபவிட்த்து இன்பமடைவோம் வாருங்கள் என்கிறார்.
தொண்டீர்! வம்மின் நம் சுடரொளி ஒரு தனி முதல்வன்
அண்டமூவுலகளந்தவன் அணி திருமோகூர்
எண்திசையும் ஈன் கரும்பொடு பெருஞ்செந்நெல் விளையக்
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே
நமக்கு அனுபவிக்கத்தக்கதாய், மிகவும் ஒளிபடைத்த ஒளிவடிவாய் இருக்கும் திருமேனியையுடையவனாய், உலகுக்கு உபாதான, நிமித்த, ஸஹகாரி காரணங்களாய்த் தானே இருப்பவனாய், படைக்கப்பட்ட அண்டத்துள் இருக்கும் மூன்று லோகங்களையும் அளந்து கொண்டவனுடைய அழகிய திருமோகூரிலே எல்லாத் திசைகளிலும் இனிய கரும்பொடு பெரிய செந்நெலானது விளையும்படி ஏற்றுக்கொண்ட கோயிலை இந்த பூமியிலே ப்ரதக்ஷிணம் செய்து ப்ரீதியின் மிகுதியால் நடனம் ஆடுவோம். ஆசையுடைய தொண்டர்களே! வாருங்கள்.
ஆறாம் பாசுரம். அனுபவிப்பவர்களுக்கு அனுபவத்தைக் கொடுப்பவனாய் நம்பத்தகுந்தவனான எம்பெருமான் திருவடிகளைத் தவிர வேறொன்றை ரக்ஷமாக உடையோம் அல்லோம் என்கிறார்.
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே
தேர்ந்த நாட்டியக்காரர் ஆடினாற்போலே நடப்பவனாய், காக்கப்பட வேண்டியவர்களின் பின் சென்று காப்பவனாய், துன்புறுத்துவர்களாய் மிகவும் பலம் வாய்ந்த அஸுரர்களுக்கு ம்ருத்யுவாய், வேறு ப்ரயோஜனத்தை எதிர்பார்க்காமல் கொண்டாடும் நமக்கும், அமரர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவனாய், ஸம்ருத்தமாய் குளிர்ந்த நீர்நிலைகளாலும் அழகிய வயலாலும் சூழப்பட்ட திருமோகூரிலே அடியார்களுக்கு நம்பிக்கையுடன் பற்றும்படி நிற்கும் ஆப்ததமனுடைய தாமரைபோன்ற திருவடிகளை அன்றி வேறு புகல் உடையோம் அல்லோம்.
ஏழாம் பாசுரம். எல்லா உலகங்களையும் படைத்த ஸர்வேச்வரன் வாழும் திருமோகூரைப் பற்றி அங்கே கைங்கர்யங்களைச் செய்தால் உடனே நம் துக்கங்கள் போய்விடும் என்கிறார்.
மற்றிலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
தனித்துவம் வாய்ந்த பெரிய மேன்மையையுடைய தகுதிவாய்ந்த ப்ரக்ருதி முதலாகக் கொண்டு எல்லா இடத்திலும் வ்யாபித்திருக்கும் காரண ஜலத்தைப் படைத்து அதன் மூலமாக மிகவும் பழையவனாய் படைப்பை நினைத்திருக்கும் ப்ரஹ்மா முதலாக எல்லா தேவர்களுடன் கூடின எல்லா லோகங்களையும் செய்பவனுடைய திருமோகூரை ப்ரதக்ஷிணம் முதலான கைங்கர்யங்களை நாம் செய்ய நம்முடைய துன்பமானது உடனே போய்விடும். ஆதலால் இனி நாங்கள் வேறு ஒரு புகல் உடையவர்கள் அல்லோம்.
எட்டாம் பாசுரம். உங்களுடைய எல்லாத் துன்பங்களும் தீரும்படி தசரதபுத்ரன் என்னும் குளிர்ந்த தடாகத்தை அடைந்து அனுபவியுங்கள் என்கிறார்.
துயர் கெடும் கடிதடைந்து வந்து அடியவர்! தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கழுந்தத்
தயரதன் பெற்ற மரதக மணித் தடத்தினையே
உயர்த்தியையுடைய சோலைகளையும் சிறந்த தடாகங்களையும் அலங்காரமாகவுடைத்தாய் மிகவும் ஒளிவிடும் திருமோகூரிலே கணக்கற்ற திருநாமங்களையுடையவராய், மிகவும் வலிமை பொருந்திய ராக்ஷஸர்கள் புகுந்து மூழ்கும்படியாக தசரதன் பெற்ற மரதகமணி போலே கறுத்த நிறத்தையுடைய தடாகத்தை அவன் குணத்துக்கு அடிமையான நீங்கள் வந்து அடைந்து தொழுங்கள். உங்கள் துன்பமானது உடனே நீங்கும்.
ஒன்பதாம் பாசுரம். உயர்ந்த அவயங்களுடன் இருக்கும் எம்பெருமான் வாழும் திருமோகூரை நமக்கு ரக்ஷகமாக அடைந்தோம் என்று ஆனந்தப்படுகிறார்.
மணித்தடத்தடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக்கொள் நால் தடந்தோள் தெய்வம் அசுரரை என்னும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே
தெளிந்த தடாகம்போலே திருவடிகளையும் மலர்ந்த தாமரைபோலே இருக்கிற திருக்கண்களையும் பவளம்போலே சிவந்த திருவதரத்தையும் உடையவனாய், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட நான்கு பெரிய திருத்தோள்களையுடைய திவ்ய திருமேனியையுடையவனாய், அஸுரர்களை எப்பொழுதும் அழிக்கும் பெரிய பலத்தையுடையவன் நிரந்தரமாக வாழுமிடமாய் பொழிலையுடைய திருமோகூராகிற நம்முடைய சிறந்த ரக்ஷகமான தேசமானது அருகிலே வந்தது. நாம் அதை அடைந்தோம்.
பத்தாம் பாசுரம். அடியார்கள் ஆசைப்பட்ட திருமேனியை எடுத்துக்கொண்டு ரக்ஷிப்பவனுடைய திருமோகூரின் திருநாமத்தை நம்மோடு அந்வயமுடையவர்கள் நினைத்துக் கொண்டாடுங்கள் என்கிறார்.
நாம் அடைந்த நல் அரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்!
“நமக்கு நாம் பாற்றின அரண் சிறந்த ஒன்று” என்றுகொண்டு நல்லதறியும் தேவர்கள், பொல்லாங்கைச் செய்யும் மிகவும் வலிமை வாய்ந்த அஸுரர்களைப் பார்த்து அஞ்சிச்சென்று அடைந்தால், அவர்கள் விரும்பின திருமேனியைக்கொண்டு கிளர்ந்து ரக்ஷிப்பவனுடைய திருமோகூரின் புகழையே, நம்முடன் தொடர்புடையவர்களான நீங்கள் பயின்று நினையுங்கள். அவற்றை ப்ரேமத்துடன் கொண்டாடுங்கள்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவானை அடைவதற்குத் தடையாக இருப்பவை விலகுவதை அருளிச்செய்கிறார்.
ஏத்துமின் நமர்காள்! என்று தான் குடமாடு
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே
“நம்முடையவர்கள் எல்லாரும் ஏத்துங்கள்” என்று தான் குடத்தைக் கொண்டு கூத்தாடினவனை, திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வாருடைய அந்தரங்க கைங்கர்யங்களாய் இவை எம்பெருமானுக்குத் தகுதியாக வாய்த்த ஆயிரம் பாசுரங்களுக்குள்ளே உயர்ந்ததான திருமோகூர்க்கு ஸமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பத்துப் பாசுரங்களை அன்புடன் பாடவல்லவர்களுக்கு சரீரத்தின் முடிவில் துணை இல்லை என்ற துக்கம் தீரும்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org