கோயில் திருவாய்மொழி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி

paramapadhanathan

ஸ்ரீ மணவாள மாமுனிகள் வைகாசி விசாகம், நம்மாழ்வார், திருவாய்மொழி மற்று திருக்குருகூரின் (ஆழ்வார்திருநகரி) பெருமையை உபதேச ரத்தின மாலை 15ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார்.

ஸர்வேச்வரனான ஸ்ரீமந் நாராயணனும் அவன் விபூதிகளும் ஓங்கும்படி மங்களாசாஸனம் செய்த நம்மாழ்வார் அவதரித்த இந்த திருவைகாசித் திருநாளுக்கு ஒப்பாக ஒரு நாளுண்டோ? (கிடையாது) நம் சடகோபரான நம்மாழ்வாருக்கு ஒப்பாக ஒருவர் உண்டோ? (ஸர்வேச்வரனும், நித்யர்களும், முக்தர்களும், இவ்வுலகத்தவர்களும் ஒருவரும் ஆழ்வாருக்கு ஒப்பாக மாட்டார்கள்) வேதத்தின் ஸாரத்தை விரிவாக உரைக்கும் திருவாய்மொழிக்கு ஒப்பான ஒரு ப்ரபந்தம் தான் உண்டோ?  (கிடையாது) இப்படிப்பட்ட ஆழ்வாரை நமக்குப் பெற்றுத் தந்த திருக்குருகூருக்கு ஒப்பான ஒரு ஊர் உண்டோ? (ஆதிநாதப் பெருமாளுக்கும் நம்மாழ்வாருக்கும் ஸமமான பெருமையைக் கொடுக்கும் ஊர். எம்பெருமானின் பரத்வம் அர்ச்சாவதாரத்திலே பொலிந்து தோன்றும் திவ்யதேசம். நம்மாழ்வாரின் திருவவதார ஸ்தலம். நம்மாழ்வார் அருளாலே, எம்பெருமானார் காலத்துக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவரின் பவிஷ்யதாசார்ய விக்ரஹம் அவதரித்த ஊர். எம்பெருமானாரின் புனரவதாரமான மணவாள மாமுனிகளின் திருவவதார ஸ்தலம். இப்படிப் பட்ட ஏற்றம் வேறு எங்கும் நாம் காண முடியாது). இப்படி எம்பெருமான், ஆழ்வார் மற்றும் ஆசார்யர்களுக்குப் பெருமை சேர்க்கும் ஸ்தலமாக இருப்பதால் முப்புரியூட்டினதாகக் (மூன்று மடங்கு ஏற்றம் பெற்றதாக) கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீமந்நாராயணனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களுக்குள் தலைவர் நம்மாழ்வார். இவர் அருளிய நான்கு ப்ரபந்தங்கள் முறையே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி. இவற்றுள் திருவாய்மொழிக்குத் தனி ஏற்றம் நம் பூர்வாசார்யர்களால் காட்டப்பட்டுள்ளது. ஸாம வேதத்துக்குச் சமமாகக் கொண்டாடப்படும் இத்திருவாய்மொழி என்னும் ப்ரபந்தம் நம் பூர்வாசார்யர்களால் மிகவும் விரும்பி அனுபவிக்கப்பட்ட ஒன்றாகும். மந்த்ர ரத்னம் என்று கொண்டாடப்படும் த்வய மஹா மந்த்ரத்தின் விளக்கமாகவே இது அமைந்துள்ளது.

இதற்குப் பல வ்யாக்யானங்கள் அமைந்துள்ளன. அவற்றை மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் 39ஆம் பாசுரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை
தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை
மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த
குணவாளர் என்று நெஞ்சே கூறு 

நெஞ்சே! எம்பெருமானாரின் அபிமான புத்ரரான திருக்குருகைப் பிரான் பிள்ளான், பட்டர் சிஷ்யரான வேதாந்தி நஞ்சீயர், வ்யாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யரும் தெள்ளிய ஞானத்தைப் பெற்றவருமான வடக்குத் திருவீதிப் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளையின் கருணைக்கு இலக்கான வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் ஆகியோர் நம்மாழ்வார் தன் சோதி வாய் மலர்ந்து அருளிய, நம் ஸம்ப்ரதாயத்தின் ஆணிவேரான த்வய மஹாமந்த்ரத்தின் விவரணமான திருவாய்மொழியைக் காத்து வளர்த்த குணவாளர்கள் என்று கொண்டாடு.

மேலும் நம்மாழ்வார் மற்றும் திருவாய்மொழியின் தனிப்பெருமைகளை விளக்கும் ஆசார்ய ஹ்ருதயத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், 37ஆம் சூர்ணிகையில் “சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லாரானால் வைஷ்ணவத்வ ஸித்தி” என்று, இத்திருவாய்மொழி முழுவதையும் அர்த்தத்துடன் தெரிந்து கொண்டு அதன் வழி நடப்பவர்களே ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுவார்கள் என்று காட்டுகிறார்.

ஆக, இதை ஸ்ரீவைஷ்ணவர்களான நாம் ஒவ்வொருவரும் அவச்யம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது. நம் ஸம்ப்ரதாயத்தில் அனைத்துமே ஒரு ஆசார்யன் மூலமாகவே தெரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

திருவாய்மொழி முழுவதும் தினமும் சேவிக்கமுடியவில்லை என்றால், அதற்குப் பதிலாகத் தற்காலத்தில் கோயில் திருவாய்மொழி என்று ப்ரஸித்தமாக முக்யமான பதிகங்களைச் சேர்த்து, இதையாவது நாள்தோறும் நாம் சேவிக்கும்படிக்குப் பெரியோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பொதுவாகப் பல பதிகங்கள் இருந்தாலும், ப்ராந்தியம்தோறும் சில சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஓரளுவுக்கு, பல ப்ராந்தியங்களில் சேவிக்கப் படும் பதிகங்களுக்கு, இங்கே நாம் எளிய முறையில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் வகையில் பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களைத் துணையாகக் கொண்டு, இந்த எளிய விளக்கவுரை எழுதப் படுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “கோயில் திருவாய்மொழி – எளிய விளக்கவுரை”

  1. Your website is a big Bonanza especially during lockdown and your sincere efforts to enlighten those who are in pursuit of knowledge of lord Vishnu prompt us to feel indebted to you.
    Our Humble Pranams, Swamin

    Reply

Leave a Comment