திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 9.10 – மாலைநண்ணி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 8.10

எம்பெருமானைப் பிரிந்து மிகவும் வருந்தி இருந்த ஆழ்வாருக்கு அவன் தான் தன்னை எல்லோரும் எளிமையாகக் கண்டு அனுபவிக்கும்படி திருக்கண்ணபுரத்தில் அர்ச்சாரூபத்தில் எழுந்தருளியிருப்பதைக் காட்டி, இந்த தேஹத்தின் முடிவில் தன்னை அடைந்து விடலாம் என்று உறுதிகொடுக்க, அதை நினைத்து ஆனந்தத்தை அடைகிறார் ஆழ்வார் இந்தப் பதிகத்தில்.

முதல் பாசுரம். ஆலிலைக் கண்ணனான மஹோபகாரகன் திருவடிகளிலே எல்லாக்காலங்களிலும் அன்புடன் தொண்டு செய்யுங்கள் என்று இத்திருவாய்மொழியின் முக்கியக் கருத்தைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார்.

மாலை நண்ணித் தொழுதெழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே

அலைவீசும் கடலாலே மோதப்பட்ட மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே வாழும், ஆலிலையில் இருந்து ஜகத்தை ரக்ஷித்த நினைத்துப்பார்க்கமுடியாத செயலைச் செய்த எம்பெருமான் திருவடிகளைக் குறித்து ஆசையுடன் பகல் இரவு என்று வித்யாஸம் பார்க்காமல் சிறந்த தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து நீங்கள் உங்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்குத் தடையாக இருக்கும் வினைகள் தீரும்படிக் கைங்கர்யம் செய்து வாழ்ச்சியைப் பெறுங்கள்.

இரண்டாம் பாசுரம். அவன் வாழும் தேசத்தை வணங்கி அதினுடைய பாதுகாப்பை நினைத்து இன்பத்துடன் வாழப்பாருங்கள் என்கிறார்.

கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுதெழுமினோ தொண்டரே!

அனுபவத்தில் ஆசை உள்ள நீங்கள் தேனை ஒழுகவிடும் பூக்களைக்கொண்டு ஆராதியுங்கள். பெண் நண்டுகளுடன் ஆண் நண்டுகள் சேர்ந்து வாழும் வயல்களாலே சூழப்பட்ட அகழினுடைய அருகிலே வெள்ளியாலே செய்யப்பட்ட மதிளாலே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தை பாதுகாப்பான இடம் என்று எப்பொழுதும் நினைத்து, தொழுது கிளர்த்தியோடு ப்ரார்த்தியுங்கள்.

மூன்றாம் பாசுரம். உயர்ந்த விபூதிகளை உடையவனாய்க் கொண்டு எளிமையாக இருக்கும் ஸர்வேச்வரனை முழுவதுமாய் ஆராதியுங்கள் என்கிறார்.

தொண்டர் நுந்தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே

வண்டுகள் களித்துப் பாடும் சோலையாலே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே பரமபதநாதனாய் நித்யஸூரிகளாலே அனுபவிக்கப்படுபவனாய் இருப்பவனுக்குக் கைங்கர்யம் செய்ய ஆசைப்படுபவர்களே! உங்களின் துன்பமானது தீரும்படி நீங்கள் முழுமனதுடன் மலர்ந்த புதுமை மாறாத பூக்களை இட்டு உங்கள் அடிமைத்தனத்துக்கேற்ப ஆராதியுங்கள்.

நான்காம் பாசுரம். மிகவும் இனியவனான கண்ணனை நப்பின்னைப் பிராட்டியின் சேர்த்தியிலே ஆராதியுங்கள் என்கிறார்.

மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள்சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரணாகுமே

மானே வருந்தும்படியான நோக்கையுடையவளாய் ஆத்மகுணபூர்த்தியை உடையவளான நப்பின்னைப்பிராட்டிக்குக் கேள்வனாய் தேன்போலே இனிமையாக இருக்கும் கண்ணனை, வாடாத மலர்களைக்கொண்டு நீங்கள் ஆராதியுங்கள். ஆகாசத்தை உந்தித்தள்ளும்படியான ஓக்கத்தை உடைய மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தைத் தானே விரும்பின ஸர்வேச்வரன் உங்களுக்குப் புகலிடமாக இருப்பான்.

ஐந்தாம் பாசுரம். அடியார்களுக்குப் பரமபதத்தைக் கொடுப்பவனான எம்பெருமான், தன் விஷயத்தில் தொண்டு செய்யும் ஆசையை உடையவர்களுக்கு தான் அவர்கள் விஷயத்தில் அன்பே வடிவெடுத்தவனாக இருப்பான் என்கிறார்.

சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனதன்பர்க்கு அன்பாகுமே

தன் திருவடிகளைக் குறித்து ப்ரபத்தி பண்ணின எல்லாருக்கும் தானே உபாயமாக இருந்து கொண்டு, அவர்களின் மரண காலத்தில் திரும்பி வர வேண்டாத மோக்ஷ தேசத்தைக் கொடுக்கும் மஹோபகாரகனாய், பாதுகாப்புக்கு அமைந்த மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே பூமியைக் காப்பதற்காக வந்து நிற்பவன், தன் திருவடிகளில் அன்புபூண்டவர்களுக்கு அன்பே வடிவெடுத்தவனாக இருப்பான்.

ஆறாம் பாசுரம். ப்ரஹ்லாதனுடைய பகவத் அனுபவத்துக்குத் தடையாக இருந்த ஹிரண்யனைப் பிளந்தவன், தன் பக்கல் உயர்ந்த ப்ரேமத்தை உடையவர்களுக்கு உயர்ந்த ப்ரயோஜனமாக இருப்பான்.

அன்பனாகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன்பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே

தன் திருவடிகளை ஆச்ரயித்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத வாத்ஸல்யத்தை உடையவனாய் சிவந்த பொன்போலேயிருக்கிற வடிவையுடைய ஹிரண்யாஸுரனுடைய சரீரத்தைப் பிளந்தவனாய் நல்ல பொன்னாலே செய்யப்பட்ட மதிள்சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே விரும்பி வாழ்பவன் தன்னையே உயர்ந்த குறிக்கோளாய் உடையவர்களுக்கு எப்பொழுதும் அவர்களையே உயர்ந்த குறிக்கோளாய் உடையவனாய் இருப்பான்.

ஏழாம் பாசுரம். தன்னையே ஆசைப்படுபவர்களுக்குத் தன்னை எளிமையாகக் கொடுத்து, வேறு விஷயங்களை விரும்புபவர்களுக்கு அவற்றைக் கொடுத்து விலகி நிற்பான் என்கிறார்.

மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கெல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்தணைப்பார்கட்கு அணியனே

தன் விஷயத்தில் ப்ரயோஜன புத்தியுடன் இருப்பவர்களுக்குத் தன்னுடைய உயர்ந்த நிலையைக் காட்டிக் கொடுத்து நிற்பான். வேறு சில ப்ரயோஜனங்களை ஆசைப்பட்டு ஆச்ரயிப்பவர்களுக்கு அந்த ப்ரயோஜனங்களைக் கொடுத்து தான் மறைந்து நிற்பான். வயலிலே வாளை மீன் துள்ளி விளையாடும் திருக்கண்ணபுரத்திலே இருக்கும் எல்லோருக்கும் ஸ்வாமியானவன் தங்கள் உள்ளத்திலே தன்னைப் பலமாக நினைப்பவர்களுக்கு மிகவும் எளியவானாக இருப்பான்.

எட்டாம் பாசுரம். அவனைச் சென்று அடையுங்கள். உங்களுடைய துக்கத்தையும் அதற்குக் காரணமான ஸம்ஸாரத்தையும் போக்கியருளுவான் என்கிறார்.

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே

மிகவும் இனியதான திருவடிகளை அடைந்தவர்களுக்கு மிகவும் அருகிலே இருந்து அனுபவிப்பான். அதனால், மற்றைய விஷயங்களில் ஆசை ஆகிற வ்யாதியும் கழிந்துவிடும். அதற்குக் காரணமான பிறவியையும் கழித்து அடிமை கொள்வான். ஆதலால், மணியும் பொன்னும் சேர்ந்த மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே பரமபதத்தில் இருப்பதைப்போலே இருப்பவனின் திருவடிகளை எப்பொழுதும் வணங்கி அனுபவிக்கப் பாருங்கள்.

ஒன்பதாம் பாசுரம். நான் அவனை அடைந்து என்னுடைய எல்லா துக்கங்களும் தீரப்பெற்றேன். ஆதி காரணனானவனைக் கிட்டினார்க்குத் துன்பம் உண்டோ என்கிறார்.

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை?
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே

அவன் திருவடிகளை எப்பொழுதும் அனுபவிக்க முன்புண்டான துக்கங்கள் எல்லாம் போய்விடும். மேலும் எந்த துக்கங்களும் வந்து சேராது. ஆதலால், எனக்கு என்ன குறை உண்டு? வேதத்தைச் சொல்லுவதையே நாக்குக்கு அடையாளமாகக் கொண்டவர்கள் விரும்பும்படியான திருக்கண்ணபுரத்திலே இருக்கும் பரமகாரணபூதனை அடைந்தவர்களுக்கு துக்கம் இல்லையே.

பத்தாம் பாசுரம். திருமகள் கேள்வனான ஸர்வேச்வரனுடைய திருக்கண்ணபுரத்தைச் சொன்னவுடன் துக்கங்கள் வாராமல் இருந்தன. எனக்கினி என்ன குறை உண்டென்கிறார்.

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே

தாமரைப்பூவை இருப்பிடமாக உடையவளாய் பெண்களில் சிறந்தவளான லக்ஷ்மி நிரந்தரமாக வாழும் திருமார்பை உடையதாய், கல்லாலே செறிந்த மதிள்சூழ்ந்த திருக்கண்ணபுரத்தைச் சொன்னவுடன் எப்பொழுதும் துக்கங்கள் அருகில் வாராமல் இருந்தன. ஆதலால் எனக்கு எம்பெருமானை அனுபவிக்காமல் இருக்கும் துக்கம் இல்லை. இனி என்ன குறையுண்டு?

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவதனுபவத்தை அருளிச்செய்கிறார்.

பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர்!
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே

ஸம்ஸாரத்தில் இருக்கும் எல்லா துக்கங்களும் உங்கள் அருகில் இல்லாதவாறு முழுவதுமாக நீங்கவேண்டியிருந்தீர்களாகில், மாடங்கள் உயர்ந்த திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்ததாய் கானரூபமான தமிழ் பாசுரங்கள் ஆயிரத்துள்ளும் இப்பத்தையும் அன்பினாலே பாடி, ஆனந்தத்தாலே ஆடி அந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கி அனுபவிக்கப் பாருங்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment