ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆழ்வார் பராங்குச நாயகியாக மடலூரப் பார்த்து, இரவிலே மிகவும் வ்யசனப்பட்டு, பின்பு விடிந்தவுடன் சிறிது தெளிவு பெற்றாள். பின்பு தாய்மார்களும் தோழிமார்களும் இவளுக்கு அறிவுரை சொல்லப் பார்க்க, இவள் அவர்கள் சொல்லைக் கேட்காமல், அவனை நினைப்பதால் ப்ரீதியுடனும் அவனை நேரில் காணப் பெறாததால் அப்ரீதியுடனும் பாடக்கூடிய பாசுரங்களாக இவை அமைந்துள்ளன. இது உருவெளிப்பாடு என்னும் க்ரமத்தில் ஆழ்வாரால் எம்பெருமானை நேரே காண்பதைப் போலே அனுபவிக்கப்பட்டது. இதில் நம்பி எம்பெருமானின் திருமேனி அழகை ஆழ்வார் பூர்த்தியாக அனுபவிக்கிறார்.
முதல் பாசுரம். நம்பியின் தனித்துவம் வாய்ந்த அடையாளமான திருவாழி திருச்சங்கத்தாழ்வார்களிலும், ப்ரதானமான அவயவ அழகிலும் என் நெஞ்சு ஈடுபடுகிறது என்கிறாள்.
எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றதென் நெஞ்சமே
அன்னைமீர்காள்! என்னைப் பெற்ற நீங்கள் எனக்கு விருப்பமானதைச் செய்யாமல், என்னை நினைத்து உகக்க வேண்டியிருக்க இப்படிக் கோபப்படுவது ஏன்? நம் குடிக்குத் தனித்துவம் வாய்ந்தவராய், அழகிய திருமேனியுடையவராய், திருக்குறுங்குடியில் கல்யாணகுண பூர்த்தியையுடைய நம்பியை நான் அனுபவித்தபின் அவருடைய சங்கினோடும், திருவாழியோடும், தாமரைபோலே அழகாய் இருக்கும் திருக்கண்களோடும் சிவந்த கனிபோலே தனித்துவமாய் இருக்கும் திருவதரத்தோடும் என் நெஞ்சு ஆசையுடன் செல்கிறது.
இரண்டாம் பாசுரம். நம்பியுடைய ஒப்பனை அழகும், தோளும் எல்லாவிடத்திலும் வந்து நின்று அனுபவத்துக்கு விஷயமாகிறது என்கிறாள்.
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே
என்னை ஆணையிடாமல் என் நெஞ்சினாலே அனுபவித்துப் பாருங்கள். தெற்குத் திக்கிலே அழகான சோலையையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு ஒளிவிடும் திருயஜ்ஞோபவீதமும், திருமகர குண்டலங்களும், திருமார்பில் ஆபரணமான ஸ்ரீவத்ஸமும், எப்பொழுதும் கழற்றாத ஆபரணங்களும் நான்கு திருத்தோள்களும் நான் போகுமிடமெல்லாம் வந்து நிற்கின்றன.
மூன்றாம் பாசுரம். நம்பியின் அழகை காப்பாற்றி வளர்க்கும் ஆயுதங்கள் எல்லாவிடத்திலும் ஒளிவிடுகின்றன என்கிறாள்.
நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே
வாயடைத்து நிற்கும், அறிவை இழக்கும், சிதிலையாகும் என்றுகொண்டு பெற்ற தாய்மார்களான நீங்கள் முன்பு நம்பி விஷயத்தில் ஈடுபடுத்தி இப்பொழுது கோபப்படாதீர்கள். மலைபோலே இருக்கிற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் அனுபவித்தபின் வெற்றியையுடைய வில்லும், கதையும், வாளும், சக்கரமும் சங்கமும் ஒன்றாக நின்று என் கண்ணுக்குள் தோன்றி விலகிப்போகாமல் இருக்கின்றன. நெஞ்சுக்குள்ளும் இருந்து விலகிப்போகாமல் இருக்கின்றன.
நான்காம் பாசுரம். மேன்மை பொலியும் நமபியின் திருமேனி அழகின் உயர்த்தி என் அருகில் வந்தது என்கிறாள்.
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே
இவள் கண்ணீர் குறையவில்லை என்று நம்பி விஷயத்தில் மூட்டின தாய்மார்களான நீங்களும் கோபப்படுகிறீர்கள். தேனையுடைய சோலைகளைக்கொண்ட திருக்குறுங்குடியில் நம்பியை நான் அனுபவித்த பின்பு அனுபவிக்கத் தகுந்ததாய் குளிர்ச்சியாய் மாலை வடிவில் இருக்கும் செவ்வித் திருத்துழாயும் அவன் பரத்வத்தைக் காட்டும் விரும்பத்தக்க கிரீடமும் திருமேனியும் அதற்குத் தகுந்த பட்டாடையும் அரைநாணும் அருகிலே சென்று அனுபவிக்க முடியாத பாபத்தையுடைய என் அருகில் வந்தன.
ஐந்தாம் பாசுரம். நம்பியின் திருமுகத்தின் அழகு என் ஆத்மா வரை செல்கிறது என்கிறாள்.
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே
அவன் வரும் பக்கத்தை நோக்கி நிற்கும், சிதிலையாகும் என்று தாய்மார்களான நீங்களும் கோபித்து வார்த்தை சொல்கிறீர்கள். பூர்த்திக்குத் தகுதியான கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் அனுபவித்தபின்பு திரண்ட ஒளியையுடைய தொண்டைப்பழம் போலிருக்கிற திருவதரமும் நீண்ட திருப்புருவங்களும் அதற்குத் தகுதியான நீட்சியையுடைய தாமரை போன்ற திருக்கண்களும் நினைத்தபடி அனுபவிக்கப்பெறாத பாபத்தையுடைய என் ஆத்மாவின் வரை செல்கிறது.
ஆறாம் பாசுரம். நம்பியின் திருமுகத்தின் அழகும், ரூபம், புஜம் முதலியவற்றின் உயர்த்தியும் என் நெஞ்சிலே பூர்ணமாக நிறைந்தது என்கிறாள்.
மேலும் வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே
அவன் வந்து கைக்கொள்ளும் வரை காத்திருக்கும் நம் குடிக்கு, தானாகக் காண ஆசைப்படும் இவள், உள்ளதனையும் பெரியதான பழி ஒரு வடிவெடுத்தாப்போலே இருக்கிறாள் என்று தாயாரானவள் நம்பியைக் காண அனுமதிப்பதில்லை. சோலை சூழ்ந்த குளிர்ச்சியான திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு, மிகவும் அழகாய் நீண்ட கற்பகக் கொடி போலேயிருக்கிற திருமூக்கும், தாமரைப் பூப்போன்ற திருக்கண்களும், பழுத்த திருவதரமும் நீல நிறத்தையுடைய திருமேனியும் நான்கு திருத்தோள்களும் என் நெஞ்சிலே வந்து நிறைந்தன.
ஏழாம் பாசுரம். மிகவும் ஒளிமயமான ஓங்கிய விரும்பத்தக்க திருமேனியுடன் நம்பி என் நெஞ்சுக்குள்ளே கையும் திருவாழியுமாய் நின்றார் என்கிறாள்.
நிறைந்த வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே
நம்முடைய குடிக்கு இவள் பூர்ணமான, வலிமையான பழி என்று தாயார் நம்பியைக் காண அனுமதிக்கவில்லை. சிறந்த கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் அனுபவித்தபின்பு, பூர்ணமான ஒளிக்கற்றையாலே சூழப்பட்டு ஓங்கிய விரும்பத்தக்க திருமேனியோடு என் நெஞ்சுக்குள்ளே நிறைந்து நின்றுவிட்டான். அந்நிலையில் அழகிய திருக்கையிலே திருவாழியும் இருந்தது.
எட்டாம் பாசுரம். நம்பியினுடைய எல்லா அவயங்களின் அழகும் என் முன்னே நிற்கின்றன என்கிறாள்.
கையுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே
கையுள் அழகிய முகத்தை வைக்கும், சிதிலையாகும் என்று இதற்குக் காரணமான தாய்மார்களான நீங்களும் கோபிக்கிறீர்கள். கரிய நிறத்தையுடைய மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களும், அரை ப்ரதேசமும், சிறுத்த இடையும், அழகிய திருமேனியும், செறிவையுடைய நீண்ட திருக்குழல்கள் (கூந்தல்) தாழ்ந்த திருத்தோள்களும் ஆசைப்படி அனுபவிக்கமுடியாத பாபத்தையுடைய என் முன்னே நிற்கின்றன.
ஒன்பதாம் பாசுரம். நம்பி கணக்கற்ற அழகுகளுடன் கூடியிருந்து எல்லையில்லாத இனிமையையுடையவனாகக் கொண்டு என் நெஞ்சை விட்டுப் போகாமல் இருக்கிறார் என்கிறாள்.
முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீள் முடி ஆதியாய உலப்பில் அணிகலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே
எல்லோரும் காணும்படி முன்னே வந்து நின்றாய் என்று தோழிகளும் தாய்மாரும் கோபிக்கிறீர்கள். பொருந்தி இருக்கும் மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு, தலையில் அவன் மேன்மையைக் காட்டும் ஓங்கிய கிரீடம் முதலான கணக்கற்ற அணியப்பட்ட ஆபரணங்களையுடையவன் சர்க்கரை, பால், அமிர்தம் ஆகியவைபோலே மிகவும் இனிமையானவனாக வந்து என் நெஞ்சைவிட்டுப் போகாமல் இருக்கிறான்.
பத்தாம் பாசுரம். நித்யஸூரிகளுக்கு இனிமையான, மிகவும் ஒளி படைத்த, அடைய வேண்டிய திருமேனியானது, மற்றவர்களுக்குப் பார்க்க முடியாதபடி என்னுளே ஒளிவிடுகிறது என்கிறாள்.
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காண கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே
இவள் கைகழிய விஞ்சின காதலையுடையவளானாள் என்று தாயானவள் நம்பியைக் காண அனுமதிப்பதில்லை. குறைவற்ற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் ஸூரிஸங்கங்கள் பரஸ்பரம் கூடியிருந்து தொண்டு செய்து அனுபவிக்கும்படி ஒளிக்கற்றையின் நடுவில் உயர்ந்து தோன்றுகிற தனித்துவம் வாய்ந்த திருமேனியானது அப்படியே என் நெஞ்சுக்குள்ளே தோன்றுகிறது. எத்தனையேனும் அறிவுடையார்க்கும் இது தங்கள் முயற்சியால் அடைய அரியது.
பதினொன்றாம் பாசுரம். இதிதிருவாய்மொழியைச் சொன்னவர்களுக்கு தான் பகவானுக்கு அடிமை என்ற உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்வதே பலம் என்று அருளிச்செய்கிறார்.
அறிவரிய பிரானை ஆழியங்கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி அதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே
தங்கள் ஸாமர்த்யத்தால் அறிய ஒண்ணாதபடியான ஸ்வாமியாய் திருவாழியை அழகிய திருகையிலேயுடையவனைக் காதலால் அலற்றி, உயர்ந்த பரிமளத்தையுடைய சிறந்ததான புஷ்பங்களைப்போலே ஆராய்ந்து, சிறந்த குணங்களையுடையவராய் திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்துள் ஆயுத அவயவ ஆபரண ரூப அடையாளங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பி விஷயமாக உள்ள இந்தப் பதிகத்தையும் ஞான ஒளி பிறக்கும்படிக் கற்று அர்த்தத்தையும் நினைத்துப் பார்க்க வல்லவர்கள் ஆழமான கடல் சூழ்ந்த பூமியில் பகவத் ஸம்பந்தத்துடன் வாழ்வார்கள்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org