ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
முப்பத்தொன்றாம் பாசுரம். அநாதிகாலமாகப் பல பிறவிகளை எடுத்துத் துன்புற்ற நாம் இன்று எம்பெருமானாரின் நிர்ஹேதுக க்ருபையினால் அவரை அடைந்தோம் என்று ஆனந்தத்துடன் தன் திருவுள்ளத்துக்குச் சொல்லுகிறார்.
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோனிகள்தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணைக்கீழ்ப்
பூண்ட அன்பாளன் இராமாநுசனைப் பொருந்தினமே
மனமே! தினமாய், மாஸமாய், வருடங்களாய்க் கொண்டு இருந்த காலமெல்லாம் எண்ணிலடங்காததாகத் திரண்டு, பலவகைப்பட்டதாக இருக்கும் பிறவிகள்தோறும் நாம் உழன்றோம். ஆனால் இன்றோ ஒரு நினைவின்றிக்கே இருக்கச்செய்தே காணத்தகுதியாய் இருந்துள்ள திருத்தோள்களையுடையராகையாலே நமக்கென்று இருக்கும் இயற்கையான தலைவராய், அழகிய திருவத்தியூரிலே நித்யவாஸம் செய்யும் பேரருளாளப் பெருமாளுடைய ஒன்றுக்கொன்று ஒப்பான திருவடிகளின்கீழே ஆழமான அன்புகொண்ட எம்பெருமானாரை அடைந்து நிற்கும் பாக்யத்தைப் பெற்றோம்.
முப்பத்திரண்டாம் பாசுரம். இப்படி எம்பெருமானாரை அடைந்தோம் என்று ஆனந்திக்கும் இவரைக் கண்ட சிலர் எங்களுக்கும் இதே பலன் கிடைக்க வேண்டும் என்று பார்த்தாலும் எங்களுக்கு உம்மைப்போலே ஆத்மகுணங்கள் இல்லையே என்று கேட்க, “எம்பெருமானாரை அடைபவர்களுக்கு ஆத்மா குணங்கள் முதலியவை தன்னடையே வந்து சேரும்” என்கிறார்.
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அருந்தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே
துன்புறுத்தும் கலிதோஷத்தாலே துக்கப்பட்ட பூமியைத் தம்முடைய வள்ளல் தன்மையினால் தூக்கி எடுத்து ரக்ஷித்தவராய், ப்ரபன்ன ஜன கூடஸ்தராகையாலே (ப்ரபன்னர்களுக்குள் முதல்வராகையாலே) சரணாகதி என்கிற உயர்ந்த தவத்தையுடையவராய் இருப்பவர் எங்களுக்குத் தம்மை முழுதுமாக அளித்த எம்பெருமானார். அவரை அடைபவர்களுக்கு ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த மதிப்பும், பொறுமை என்னும் குணமும், இந்த்ரியங்களை அடக்கும் ஸாமர்த்யமும், குணங்களாலே வந்த பெருமையும், தத்வம், ஹிதம் புருஷார்த்தம் ஆகிய விஷயங்களில் தெளிவான ஞானமும், பக்தி என்கிற செல்வமும் தானே வந்து சேரும்.
முப்பத்துமூன்றாம் பாசுரம். எம்பெருமானாரைச் சரணம் புக புலனடக்கம் எவ்வாறு ஏற்படும் என்று கேட்க, ஸ்ரீபஞ்சாயுதங்களும் எம்பெருமானிடத்திலே வந்துள்ளன என்கிறார்; அல்லது, ஸ்ரீபஞ்சாயுதங்களும் சேர்ந்து எம்பெருமானாராய் வந்து அவதரித்துள்ளன என்கிறார்.
அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன் கை ஆழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடை ஆர் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமாநுசமுனி ஆயின இந் நிலத்தே
இலை நெருக்கத்தை உடைய தாமரைப்பூவை பிறப்பிடமாக உள்ள பிராட்டிக்குக் கேள்வனான எம்பெருமானுடைய திருக்கையிலே இருக்கும் திருவாழி என்கிற திவ்யாயுதத்தோடே நாந்தகம் என்கிற வாளும், ரக்ஷணத்திலே பரந்திருக்கும் ஸ்ரீகதையும், சிறந்ததான சார்ங்கவில்லும், புடை பெருத்து அழகாய் இருக்கும் ஸ்ரீபாஞ்சஜன்யமும் இந்த பூமியை ரக்ஷிக்கைக்காக இவ்வுலகிலே எம்பெருமானாரிடத்திலே வந்துள்ளன. அல்லது, அவராகவே அவதரித்துள்ளன.
முப்பத்துநான்காம் பாசுரம். கலிதோஷத்தைக் கழித்து உலகத்தை ரக்ஷித்த பின்னும் எம்பெருமானார் குணங்கள் ப்ரகாசித்ததில்லை. என் கர்மத்தைக் கழித்தபின்பே அவர் குணங்கள் பெருமை பெற்றன என்கிறார்.
நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பு அரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென்
புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பொறுத்தது இராமாநுசன் தன் நயப் புகழே
எம்பெருமானாருடைய விரும்பத்தக்கதான குணக்கூட்டம் உலகத்தைத் துன்புறுத்தி ஹிம்ஸிக்கும் தாழ்ந்ததான கலியையும், மனத்தாலே தெரிந்து கொள்ள அரிதாய் இருக்கும் பலத்தையும் அழித்த பின்பும் ப்ரகாசித்ததில்லை. என்னாலே உண்டாக்கப்பட்ட பாபங்களை எமலோகத்திலே எழுதிவைத்த அந்த புத்தகத்தின் பாரத்தை அழித்தபிறகே ஒளிவிடும் பெருமையைப் பெற்றது.
முப்பத்தைந்தாம் பாசுரம். எம்பெருமானார் உம்முடைய பாபங்களைப் போக்கினாலும் மீண்டும் அவை வந்தால் என்ன செய்வீர் என்று கேட்க இனி அவை என்னை வந்து படருகைக்கு வழியில்லை என்கிறார்.
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே
வேறு ஒரு தெய்வத்தை விரும்பமாட்டேன். இந்த லோகத்திலே சில தாழ்ந்த மனிதர்களை புயலே என்று அவர்கள் வள்ளல் தன்மைக்கு மேகத்தை ஒப்பாகக் கவிகள் சொல்லிப் பாடமாட்டேன். விரும்பத்தக்கதான கோயில் என்று பேச்சு வந்தால் காதல் மையல் பெருகும் எம்பெருமானாருடைய ஒன்றுக்கொன்று பொருந்தி இருக்கும், பரம பூஜ்யமான, இனிமையான திருவடிகளை மறக்கமாட்டேன். ஆதலால் போக்க அரிதான கர்மங்கள் எவ்வழியாலே என்னை வந்து அடர்ப்பது?
முப்பத்தாறாம் பாசுரம். எம்பெருமானாரை மறக்க மாட்டேன் என்றீர். நாங்களும் அவரை அடையும்படி அவர் தன்மையை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்க, அத்தை அருளிச்செய்கிறார்.
அடல் கொண்ட நேமியன் ஆர் உயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ்வொண்பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே
விரோதிகளை அழிக்கும் சக்தி கொண்டதான திருவாழியையுடையவனாய், எல்லா ஆத்மாக்களுக்கும் தலைவனானவன், அர்ஜுனன் கலங்கின அன்று வேதசப்தங்களாகிற கடலுக்குள்ளே மறைந்திருக்கும் சிறந்ததான அர்த்தங்களைக் கண்டு, ஸகல சேதனர்களின் உஜ்ஜீவனத்துக்காக ஸ்ரீகீதை மூலமாக அருளினான். அதற்குப் பின்பும் பூமியில் உள்ளவர்கள் ஸம்ஸார துக்கத்தில் மூழ்கியிருக்க எம்பெருமானாரான தாமும், முன்பு ஸர்வேச்வரன் அருளிச்செய்த உயர்ந்த அர்த்தங்களைக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து ரக்ஷிப்பது எங்கள் எம்பெருமானாருடைய தன்மை.
முப்பத்தேழாம் பாசுரம். இப்படியிருக்கிற எம்பெருமானாரை நீர் எப்படி அடைந்தீர் என்று கேட்க, நான் அறிந்து பற்றவில்லை, அவர் திருவடி ஸம்பந்திகளே விரும்பத்தக்கவர்கள் என்று இருப்பவர்கள் என்னை அவருக்கு அடிமையாக்கினார்கள் என்கிறார்.
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர்
கடி கொண்ட மா மலர்த் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே
பூமி முழுவதும் பரவி இருக்கும் கீர்த்தியையுடைத்தான ஸ்ரீராமாயணம் என்கிற பக்திக்கடல் எப்பொழுதும் இருக்கும் திவ்யஸ்தானமாயிருக்கிற எம்பெருமானாருடைய குணங்களைப் பேசும் அன்பர்களின் பரிமளத்தையுடைய சிறந்ததான திருவடிகளிலே நெஞ்சுகலந்து அன்புகொண்டிருக்கும் சிறந்தவர்கள் இந்த ஆத்மா அவருக்கு அடிமையாக இருக்க வேண்டுமே என்று என் நிலையைக் கண்டு அந்த ஸம்பந்தமே காரணமாக விரும்பி அங்கீகரித்து என்னையும் அவர்க்கு அடிமை ஆக்கினார்கள்.
முப்பத்தெட்டாம் பாசுரம். எம்பெருமானாரை ஈச்வரனாக நினைத்து அவரிடத்தில் நேரே இத்தனை நாள் என்னைக் கைக்கொள்ளாததற்கு என்ன காரணம் என்று கேட்கிறார்.
ஆக்கி அடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே
போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே
அநாதிகாலமாக “நானே ஈச்வரன்” என்றிருந்த என்னை அடிமைத்தனத்துக்கு இசையும்படி ஆக்கி, அது தன்னை அடியார்களுக்கு அடிமை என்பதுவரை செலுத்தி, அதிலே நிலைத்து இருக்கும்படிச் செய்தீர். இன்று இப்படி செய்த தேவரீர் முற்காலமெல்லாம் [அடியேனை] வீணாகப் போக்கி உலக விஷயங்களிலே தள்ளிவிட்டு வைத்தது என்ன காரணமாக? தேவரீரை உள்ளபடி அறிகைக்கீடான பாக்யத்தையுடைய வாக்குக்கு விஷயமாகயிருக்கும் தேவரீருடைய க்ருபையின் முறையைப் பார்க்கும் அளவில் புரிந்து கொள்ள முடியாதபடி இருந்தது. இந்த ஸூக்ஷ்மமான அர்த்தத்தை தேவரீரே விளக்க வேண்டும்.
முப்பத்தொன்பதாம் பாசுரம். இப்படிக் கேட்ட பின்பு எம்பெருமானாரிடத்திலிருந்து பதில் வராமல் இருக்கவே, அக்கேள்வியை விட்டு, எம்பெருமானார் செய்த உபகாரங்களை நினைத்துத் தன் நெஞ்சைப் பார்த்து எம்பெருமானார் செய்யும் ரக்ஷைகள் வேறு யாரால் செய்ய முடியும் என்கிறார்.
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு இல் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே
நெஞ்சே! அர்த்தமும், புத்ரர்களும், நிலமும், மனைவிகளும் என்று இவற்றையே விரும்பி, அறிவுகெட்டு துன்பப்படும் நமக்கு அஜ்ஞானத்துடன் இருக்கும் க்ரூரமான துக்கங்களை நீக்கி, தம்முடைய நித்யமாய், எல்லையில்லாத கல்யாணகுணங்களையே அறியும்படியான அறிவைத்தந்து எம்பெருமானார் செய்யும் ரக்ஷையானது மற்றவர்கள் செய்யும் சிறிய ரக்ஷைகளின் அளவு தானோ?
நாற்பதாம் பாசுரம். எம்பெருமானார் லோகத்துக்குச் செய்த உபகாரத்தை நினைத்து மிகவும் ஆனந்தம் அடைகிறார்.
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நல்
காமமும் என்று இவை நான்கு என்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே
மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் தானே வந்து உதவும் ஸ்ரீவாமனனைப் போன்றவர் எம்பெருமானார். க்ஷேமரூபமான உயர்ந்ததான மோக்ஷமும். தர்மமும், அர்த்தமும், நேரே புருஷார்த்தமாக (பலனாக) இருக்கக்கூடியதாய் சிறந்ததான காமமும் என்று கொண்டு இவை நாலும் புருஷார்த்தமாக நம்பத்தகுந்த பெரியோர்கள் சொல்லுவார்கள். இவை நாலிலும் காமம் என்பது ஸர்வேச்வரன் விஷயத்திலே ஏற்படுவது. எம்பெருமானார் தர்மம் நம் பாபத்தைப் போக்கும் என்றும், அர்த்தம் தானம் முதலியவைகளாலே தர்மத்துக்கு உதவியாய் இருக்கும் என்றும், மோக்ஷமும் அந்த நன்மையை அதிகப்படுத்தும் என்று இவை எல்லாம் பகவத் காமத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்று இந்த பூமியிலே அருளிச்செய்தார்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org