இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 21 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமானுச நூற்றந்தாதி

<< பாசுரங்கள் 11 – 20

இருபத்தொன்றாம் பாசுரம். ஆளவந்தாருடைய திருவடிகளாகிற ப்ராப்யத்தை பெற்றவரான எம்பெருமானார் என்னை ரக்ஷித்தருளினார். ஆகையால் நான் தாழ்ந்தவர்களின் பெருமைகளைச் சொல்லிப் பாடமாட்டேன் என்கிறார்.

நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னைக் காத்தனனே

பரிசுத்தமான அனுஷ்டானத்தை உடையவர்களான யதிகளுக்கு நாதரான ஆளவந்தாருடைய ஒன்றுக்கொன்று ஒப்பான திருவடிகளாகிற ப்ராப்யத்தைப் பெற்றிருக்கும் எம்பெருமானார் என்னை ரக்ஷித்தருளினார். ஆனபின்பு “நிதியைப் பொழியும் மேகம்” என்று சிலருடைய உதார குணத்தைப் பேசும் ஸ்தோத்ரங்களைக் கற்று உலகத்திலே தாழ்ந்தவர்களான அவர்களுடைய வாசலைப்பற்றி நின்று என்னுடைய ரக்ஷணத்துக்குத் துவளமாட்டேன்.

இருபத்திரண்டாம் பாசுரம். தன்னோடு எதிரிட்ட தேவதைகளும் தன் பெருமை அறிந்து ஸ்தோத்ரம் பண்ண அவர்களுக்காக வாணனின் அபராதத்தைப் பொறுத்த ஸர்வேச்வரனை ஏத்தும் எம்பெருமானார் எனக்கு ஆபத்துக் காலத்திலே உதவும் செல்வம் என்கிறார்.

கார்த்திகையானும் கரிமுகத்தானும் கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என்தன் சேம வைப்பே

கார்த்திகேயனான ஸ்கந்தனும் கஜமுகனான கணபதியும் அவர்களுக்கு உதவியாய் வந்த அக்னிதேவனும், முக்கண்ணனான ருத்ரனும் துர்க்கையும் ஜ்வரம் என்னும் தேவதையும் தோற்று ஓடி அதற்குப் பிறகு அவர்களை ஜயித்த கண்ணன் ஸர்வேச்வரனே என்று உணர்ந்து மூன்று விதமான உலகங்களும் இருக்கும் அண்டத்தை உன்னுடைய திருநாபீகமலத்திலே உண்டாக்கினவனே என்று வாணனுடைய ரக்ஷணத்துக்காக ஸ்தோத்ரம் பண்ண, அவர்களுக்காக வாணனின் அபராதத்தைப் பொறுத்த பரிசுத்தமான குணங்களையுடைய ஸர்வேச்வரனைக் கொண்டாடும் எம்பெருமானார் எனக்கு ஆபத்துக்குத் துணையாக சேமித்து வைத்த தனம் ஆவார்.

இருபத்துமூன்றாம் பாசுரம். தோஷமற்றவர்கள் தங்கள் மனத்திலே வைத்துக் கொண்டாடும் எம்பெருமானாரை பாபிஷ்டனான நான் என்னுடைய தோஷம் நிறைந்த மனஸ்ஸிலே வைத்துக் கொண்டாடினால், அது அந்த எம்பெருமானாரின் குணத்துக்கு என்னாகும் என்கிறார்.

வைப்பாய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய்ப் புகழ்க்கே

ஆபத் தனமாக வைக்கப்பட்ட குறையாத தனம் என்று தோஷமில்லாதவர்களாய் ப்ரேமத்துடன் இருப்பவர்கள் உயர்ந்த நிதியை ஒரு பெட்டிக்குள்ளே வைப்பதைப் போலே தங்கள் மனஸ்ஸுக்குள்ளே பகல் இரவு என்று வேறுபாடில்லாமல் எல்லாக் காலத்திலும் வைக்கும் விஷயமானவர் எம்பெருமானார். அவரை இந்தப் பெரிய உலகில் பாபம் செய்தவர்களில் ஒப்பில்லாதவனான மிகவும் பாபிஷ்டனான நான், என்னுடைய வஞ்ச நெஞ்சில் வைத்து மூன்று வேளையிலும் கொண்டாடுகிறேன். இதனால் அவருடைய உயர்ந்த புகழுக்கு என்னாகுமோ?

இருபத்துநான்காம் பாசுரம். தாழ்ந்த நிலையிலிருந்து இப்பொழுதிருக்கும் நிலைக்கு எப்படி வந்தீர் என்று கேட்க அதற்கு தான் முன்பு இருந்த நிலையையும் இப்பொழுது தமக்கு இந்தப் பெருமை வந்த வழியையும் சொல்லுகிறார்.

மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்தொறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவியக்
கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே

தேன் கூட்டை தேனீ மொய்த்ததைப்போலே ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கும் மிகவும் க்ரூரமான கர்மத்தாலே அநேக சரீரங்கள் தோறும் வயோதிகத்தை அடைந்து துன்பப்பட்டேன். நீச ஸமயங்களாவன அநாதியான வேதத்திலே காட்டப்படாத க்ரமத்தில் செய்யாமல் தான்தோன்றியாக 1) உலகியல் இன்பங்களில் இருந்து விலகி இருத்தல், 2) பிறருக்குத் துன்பம் கொடுக்காமல் இருத்தல், 3) குரு சேவை முதலிய பொய்யான தவங்களைப் பார்த்துக்கொண்டு வருமவை. அவை எல்லாம் நசித்துப்போகும்படி அழித்த, உள்ளதை உள்ளபடி உணர்ந்திருக்கும் எம்பெருமானாராகிற பரம உதாரரை தம்முடைய வள்ளல்தன்மையாலே காட்டக் கண்டு இன்று உயர்ந்த நிலையை அடைந்தேன்.

இருபத்தைந்தாம் பாசுரம். எம்பெருமானார் தனக்குச் செய்த நன்மையை நினைத்து நேராக அவர் திருமுகத்தைப் பார்த்து “தேவரீருடைய க்ருபையை இந்த உலகில் ஆரறிவார்” என்கிறார்.

கார் ஏய் கருணை இராமாநுச இக் கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே

ஜலஸ்தல வித்யாசம் இல்லாமல் பொழியும் மேகம் போலே எல்லோருக்கும் உபகரிக்கும் க்ருபையையுடைய உடையவரே! துக்கத்துக்கு நேரே இருப்பிடமானவன் நான். இப்படி இருந்த ஸமயத்திலே தேவரீர் தாமே வந்து என்னை அடைந்தபின் தேவரீருடைய கல்யாண குணங்களே ஆத்மாவுக்கு தாரகமாய், அடியேனுக்கு இன்று தித்திக்கிறது. தேவரீருடைய க்ருபையின் தன்மையை இக்கடல் சூழ்ந்த உலகில் ஆர்தான் அறிவார்.

இருபத்தாறாம் பாசுரம். எம்பெருமானார் திருவடிகளில் முழுவுதுமாக தங்களை வைத்துக்கொண்டிருக்கும் பெரிய பெருமையை உடைய ஸ்ரீவைஷ்ணவர்களின் முந்தைய நிலைகளில் ஓரொன்றெ என்னை அடிமைப்படுத்துகிறது என்கிறார்.

திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினையாம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே

என்னாலே செய்யப்பட்ட வினையாகிற நிலை நின்ற தோஷத்தைப் போக்கி அதனால் ஏற்பட்ட ஆனந்தத்தாலே தாம் உஜ்வலாராக இருக்கும் பரம உதாரராய் திக்குத்தோறும் பரவிய குணங்களாலே வந்த பெருமையை உடையவராயிருக்கிற எம்பெருமானாரை திருவடி நிழலைப் போன்று பிரியாமல் இருக்கும் உயர்ந்தவர்கள் முன்பு யாதொரு குற்றத்தை உடையவராகவும் யாதொரு பிறவியிலே பிறந்திருந்தாலும் யாதொரு செயலைச் செய்பவராயிருந்தாலும் அந்தக் குற்றமும், பிறப்பும், செயலுமே, எப்படிப்பட்டவர்களும் எம்பெருமானாரைச் சென்று அடையலாம் என்று நினைத்திருக்கும் நம்மை அடிமைகொள்ளும். இப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டாலே ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மைப் போன்றவர்கள் என்று எண்ணாமல் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் ஏற்படும்.

இருபத்தேழாம் பாசுரம். இப்படி எம்பெருமானாரின் அடியார்கள்பக்கலிலே இவர் அன்புசெய்ய, எம்பெருமானார் தம்மை இவர் நெஞ்சுக்கு எப்பொழுதும் விஷயமாக்கிக் கொடுக்க, பாபிஷ்டனான என் நெஞ்சிலே வந்து புகுந்த இது தேவரீர் பெருமைக்கு ஒரு குறையை ஏற்படுத்துமே என்று வருந்துகிறார்.

கொள்ளக் குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே

உடையவரே! வேண்டுவார்க்கு வேண்டுவதெல்லாம் கொள்ளலாம்படி ஒரு குறைவில்லாமல் இருப்பதாய், கொடுத்ததால் உஜ்வலமாய், மேன்மேலும் இளகிப்பதித்து வளர்ந்திருப்பதான தேவரீருடைய வள்ளல்தன்மையாலே மஹாபாபியான என்னுடைய மனஸ்ஸிலே தேவரீர் பெருமை பாராதே வந்து புகுந்தீர். பரிசுத்தமாய் விளங்கும் தேவரீருடைய எல்லையில்லாத பெருமைக்கு ஒரு குறை என்று தனியாக இருக்கும் என் நெஞ்சானது தளர்ந்து ஈடுபட்டது.

இருபத்தெட்டாம் பாசுரம். தன்னுடைய வாக்குக்கு எம்பெருமானார் விஷயத்திலுண்டான மிகுதியான ஆசையைக் கண்டு இனியராகிறார்.

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வு இன்று கூடியதே

ஹ்ருதயத்திலே கோபத்தையுடையனான கம்ஸனை சீறின, தோஷங்களுக்கு எதிர்தட்டானவனாய், அடியார்களிடத்தில் அன்புபூண்டவனாய், பஞ்சுபோலே மென்மையான திருவடிகளையுடைய நப்பின்னைப்பிராட்டிக்கு அன்புடையவனான கண்ணனுடைய திருவடிகளைச் சென்று அடையாதவராய், ஆத்மாவைத் திருடுபவர்களுக்கு (அதாவது தங்கள் ஆத்மா எம்பெருமானுடையதன்று தங்களுடையதே என்று கருதுபவர்களுக்கு) மிகவும் அடைதற்கரியவரான எம்பெருமானாருடைய குணங்களைத் தவிர வேறொன்றை என்னுடைய வாக்கானது குழந்தைத்தனமாகக் (கள்ளமில்லாமல்) கொண்டாடாது. இன்று எனக்குக்கூடின வாழ்வு எவ்வளவு ஆச்சர்யமானது.

இருபத்தொன்பதாம் பாசுரம். எம்பெருமானார் திவ்யகுணங்களை உள்ளபடி அறிந்திருப்பவர்கள் திரளை என் கண்கள் கண்டு களிக்கும்படி கூட்டக்கூடிய ஸுக்ருதம் (நல்வினை) என்று கூடுமோ என்கிறார்.

கூட்டும் விதி என்று கூடுங்கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசுந்தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே

அழகிய திருநகரிக்கு நாதரான ஆழ்வாருடைய பாட்டென்று கொண்டு ப்ரஸித்தமாய் வேதரூபமாய் செந்தமிழிலே இருக்கிற திருவாய்மொழியை தம்முடைய பக்தியாகிற இருப்பிடத்திலே வைத்த எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை உள்ளபடி அறிந்திருப்பவர்களுடைய கூட்டங்கள் தன்னை என்னுடைய கண்கள் கண்டு ஸுகத்தை அடையும்படி, இப்பேற்றை நமக்குச் சேர்விப்பதான அவருடைய க்ருபை என்று கூடுமோ?

முப்பதாம் பாசுரம். நீர் மோக்ஷத்தை எம்பெருமானாரிடம் ப்ரார்த்திக்கவில்லையா என்று கேட்க எம்பெருமானார் என்னை அடிமை கொண்டருளிய பின்பு மோக்ஷம் வந்தாலென் நரகம் வந்து சூழிலென் என்கிறார்.

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்திலென் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழிலென் தொல் உலகில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே

அநாதி காலமாக இருக்கும் இவ்வுலகில் நித்யராய் எண்ணிலடங்காதவரான ஆத்மாக்களுக்குத் தலைவனானவன் ஸ்வரூப ரூப குணங்களால் ஆச்சர்யபூதனான ஸர்வேச்வரனென்று ஸ்ரீபாஷ்யம் மூலமாக அருளிச்செய்த அன்பையுடையவராய், இப்படி அன்பினாலே உபதேசிப்பதைத் தவிர வேறு ப்ரயோஜனத்துக்காக உபதேசிக்கும் பாபம் இல்லாத எம்பெருமானார் என்னை அடிமைகொண்டருளினார். ஆனபின்பு, இன்பத்தைக் கொடுக்கும், நித்யமாக எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்யக்கூடிய மோக்ஷம் கிடைத்தாலென்? கணக்கில்லாத துக்கத்தைக் கொடுக்கும் நரகங்கள் பலவும் வந்து தப்பமுடியாதபடி வளைத்துகொண்டாலென்? இவை இரண்டும் நமக்கு ஒன்றே.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment