ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் |
வாக்யாலங்க்ருதிவாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் ||
பதவுரை: அத – யதிராஜவிம்ஸதியை இயற்றியருளியபிறகு, கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்யஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான, ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய, கோஷ்டீம் – ஸமூஹத்தை, அதிஷ்டாய – அடைந்திருந்து, வாக்யாலங்க்ருதிவாக்யாநி – ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்திலுள்ள வாக்யங்களை, வ்யாக்யாதாரம் – விவரித்துரைக்கும் தன்மையரான, தம் – அந்த மணவாளமாமுனிகளை, நமாமி – வணங்குகிறேன்.
கருத்துரை: இதுவரையில் க்ரந்தநிர்மாணமாகிய ஸ்வாத்யாயத்தை அருளிச்செய்து, இனி ஸ்வாத்யாயத்தில் மற்றொருவகையான பூர்வாசார்யக்ரந்த வ்யாக்யானத்தை அருளிச்செய்கிறார். கரிஷ்டா – அத்யந்தம் குரவ: கரிஷ்டா: – உயர்ந்த ஆசார்யர்கள் என்றபடி. இவர்களுக்கு அடைமொழி – ஸுமேத ஸ: என்பது. ஒருதடவை சொல்லும்போதே பொருளை நன்றாக அறிதலும், அறிந்த பொருளை மறவாதிருத்தலும், மேதா எனப்படும். ஸுமேத ஸ: நல்ல மேதையை உடையவர்களை, இங்ஙனம் நல்ல மேதாவிகளாய் கரிஷ்டர்களானவர் யார் என்றால் – கோயில் கந்தாடையண்ணன், வானமாமலை ஜீயர் முதலிய அஷ்டதிக் கஜாசார்யர்களேயாவர். இதுவரையில் யோகத்தில் ரஹஸ்யமாக எம்பெருமானாரை அநுபவித்தவர், அதைவிட்டு ஸிஷ்யர்கள் இருக்கும் கோஷ்டியில் சேர்ந்து அவர்களுக்கு ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்தை விவரித்தருளிச்செய்கிறார் மாமுனிகள். அன்னவரை வணங்குகிறேனென்றாராயிற்றிதனால். வசநபூஷணம் – ரத்நங்களை நிறைய வைத்துப் பதித்துச் செய்த பூஷணத்தை (அணிகலனை) ரத்நபூஷணம் என்று சொல்லுமாப்போலே, பூர்வாச்சார்யர்களுடைய வசநங்களை (சொற்களை) நிறைய இட்டுப் (தமது சொற்களைக் குறைய இட்டு) படிப்பவர்களுக்கு ப்ரகாஸத்தையுண்டாக்குமதாகப் பிள்ளைலோகாச்சார்யரால் அருளிச்செய்யப்பட்ட க்ரந்தம் வசநபூஷணமென்று சொல்லப்படுகிறது. அது பரமகம்பீரமாகையால் அதன் பொருள் விளங்கும்படி மாமுனிகள் வ்யாக்யானம் செய்தருளுகிறார். வ்யாக்யானமாவது – பதங்களைப்பிரித்துக்காட்டுதல். பொருள் விளங்காத பதங்களுக்குப் பொருள் கூறுதல், தொகைச்சொற்களை இன்ன தொகையென்று தெரிந்து கொள்வதற்காக அதற்கேற்றபடி பிரித்துக்கூறுதல், வாக்கியங்களிலுள்ள பதங்களில் எந்தப் பதம் எந்தப்பதத்தோடு பொருள் வகையில் பொருந்துமோ அப்படிப்பட்ட பொருத்தம் காட்டுதல், ஏதாவது கேள்வி எழுந்தால் அதற்கு விடை கூறுதல் ஆகிய இவ்வைந்து வகைகளையுடையதாகும். ‘ஸுமேத ஸ: கரிஷ்டா:’ என்று சொல்லப்பட்ட கோயில்லண்ணன் முதலியவர்களுக்கும் அறியமுடியாத வசநபூஷணத்தின் பொருளை மணவாளமாமுனிகள் விவரிக்கிறாரென்றதனால், ஸ்ரீவசநபூஷணநூலின் பொருளாழமுடைமையும், மாமுனிகளின் மேதாவிலாஸமும் அறியப்படுகின்றன. எல்லாவகையான வேதங்கள் ஸ்ம்ருதிகள் இதிஹாஸங்கள் புராணங்கள் பாஞ்சராத்ர ஆகமங்கள், திவ்யப்ரபந்தங்கள் ஆகியவற்றின் ஸாரமான பொருள்களெல்லாம் ஸ்ரீவசநபூஷண க்ரந்தத்தில் கூறப்பட்டுள்ளதனால், இந்த ஒரு நூலை விவரித்துச்சொன்னால் அந்நூல்களெல்லாவற்றையும் சொன்னதாக ஆகுமாகையால் இந்நூலை விவரித்து எல்லாவிதமான ஸ்வாத்யாயத்தையும் அநுஷ்டித்தாராயிற்று மாமுனிகள் என்க.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org