உத்தர​ திநசர்யை – 1

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<< யதிராஜ விம்சதி – ச்லோகம் – 20

இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் |
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் ||

பதவுரை: இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே, ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற, ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான, உதிதை: – பேச்சுக்களாலே, யதிகுல துர்யம் – யதிகளின் கோஷ்டிக்குத் தலைவரான எம்பெருமானாரை, ப்ரஹர்ஷயந்தம் – மிகவும் மகிழச்செய்து கொண்டிருக்கிற, வரவரமுநிம் ஏவ – மணவாளமாமுனிகளையே, சிந்தயந்தீ – சிந்தை செய்யாநிற்கிற, இயம்மதி: – (என்னுடைய) இந்த புத்தியானது, நிரத்யயம் – நித்யமான, ப்ரஸாதம் – தெளிவை, ஏதி – அடைகிறது.

கருத்துரை: இதுவரையில் தகாத விஷயங்களையே நினைத்து நினைத்து, அது கிடைத்தோ கிடையாமலோ கலங்கிக் கிடந்த தமது புத்தி யதிராஜ விம்ஸதியை விண்ணபித்து யதிராஜரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிற மணவாளமாமுனிகளொருவரையே நினைத்துக்கொண்டிருக்கும் நிலைமையை அடைந்து, முன்பிருந்த கலக்கம் நீங்கித் தெளிவு பெறுகிறதென்று கூறி மகிழ்கிறார் இதனால் எறும்பியப்பா. ‘வரவரமுநிமேவ’ என்றதனால், நேராக யதிராஜரை நினையாமல், அவரைத் தமது துதிநூலால் மகிழ்விக்கும் மணவாளமாமுநிகளையே நினைக்கும் நினைப்பு தமதறிவின் தெளிவுக்குக் காரணமென்றாராயிற்று. பகவானையோ பாகவதரையோ ஆசார்யரையோ நினைப்பதனால் உண்டாகும் தெளிவைவிட, ஆசார்ய பரதந்த்ரரான மாமுநிகளை நினைப்பதனால் உண்டாகும் தெளிவு அதிகமாகி, அது நிலைத்தும் நிற்குமென்றபடி. இருபது ஸ்லோகங்களையே கொண்டு மிகச்சிறியதாகிய இந்நூலிலுள்ள பேச்சுக்களை ‘ஏத மாநை:’ என்று மேல் மேல் வளர்ந்து கொண்டே செல்லுகிற பேச்சுக்களாக, மிகவும் மிகைப்படுத்திக் கூறியது எம்பெருமானார் திருவுள்ளத்தால் என்று கொள்ளவேணும். தம்மிடத்தில் ப்ரவணரான மாமுனிகள் விண்ணப்பிக்கிற ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களாக நினைப்பவரன்றோ எம்பெருமானார். கடுகையும் மலையாக நினைப்பவர்களன்றோ மஹாபுருஷர்கள். ‘ப்ரஹர்ஷயந்தம்’ என்றவிடத்தில் ஹர்ஷத்திற்கு – ஸந்தோஷத்திற்கு, மிகுதியை – சிறப்பைக்குறிக்கும், ‘ப்ர’ என்று உபஸர்க்கமாகிய விஸேஷணத்தை இட்டது, எம்பெருமானார்க்கு மாமுனிகளிடத்தில் உண்டாகும் ஸந்தோஷம் ஸ்வயம் ப்ரயோஜனமானதேயன்றி அந்த ஸந்தோஷத்தைக்கொண்டு மாமுனிகள் வேறொருபயனை ஸாதித்துக்கொள்ள நினைக்கவில்லையென்பதை அறிவிப்பதற்காகவே என்க. வரவரமுநியையே நினைக்கும் சிந்தயந்தி’ என்று குறிப்பிட்டதனாலே, கண்ணனையே நினைத்த சிந்தயந்தியான ஒரு கோபிகையைக் காட்டிலும், கண்ணனையே ஓயாமல் நினைத்த தீர்க்க சிந்தயந்தியாகிய நம்மாழ்வாரைக்காட்டிலும் எம்பெருமானாரையே நினைக்கிற சிந்தயந்தியாகும் இம்மணவாளமாமுனிகள் விலக்ஷணரென்பது போதரும். எம்பெருமானை நினைப்பவரைவிட, எம்பெருமானாரை நினைப்பவரிறே உயர்ந்தவர். இங்கு ‘ஸ்ருதி மதுரை: உதிதை:’ என்று பதம் பிரித்துப் பொருள் கூறப்பட்டது. ஸ்ருதிமதுரை:ருதிதை: என்றும் பதம் பிரித்துப் பொருள் கூறலாம். ருதிதை: என்பது அழுகைகளினாலே என்று பொருள்படும். இந்த யதிராஜவிம்ஸதியில் ‘அல்பாபிமே’ (6) என்று தொடங்கிப் பெரும்பாலும் தம்முடைய அறிவின்மை, பக்தியின்மை, பாபகாரியத்தில் ஊன்றியிருத்தல் முதலியவற்றைச் சொல்லி, ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயையோ என்று தமது துக்காதிஸயத்தையே விண்ணபித்ததனாலும், ஆத்மஸ்வரூபத்துக்கு ப்ரகாஸத்தை உண்டுபண்ணும் அழுகை பெருமையையே விளைக்குமாகையாலும், ‘ருதிதை:’ என்ற பாடம் கொண்டு அழுகை என்னும் பொருள் கூறுதலும்  ஏற்குமென்க. மோக்ஷத்தையே தரும் எம்பெருமானாருக்கு ஸம்ஸார ஸ்ரமத்தைச் சொல்லி மாமுனிகள் அழும் அழுகை செவியின்பத்தை உண்டாக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ? அதனால் ஸ்ருதிமதுரை: என்றாரென்க. (யதிராஜவிம்ஸதி வடமொழி அழுகை, ஆர்த்திப்ரபந்தம் தென்மொழி அழுகை என்பது அறிதல் தகும்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment