ப்ரமேய ஸாரம் – 4 – கருமத்தால்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<< மூன்றாம் பாட்டு

நாலாம் பாட்டு

முகவுரை:– இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அவனை யாரும் ஆணையிடமுடியாது. அவனுக்கும்’ சுதந்திரன்’ என்று பெயர். அவனை வளைக்கவோ, தடுக்கவோ இயலாது. இவ்வரிருக்கையால் சாஸ்திரங்கள் அவனுடைய அருளைப் பெறுவதற்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் முதலிய பல வழிகளைச் சொல்லி உள்ளன. சாஸ்திரங்களின் நுட்பமறியாதார் மேற்சொன்ன  கர்ம யோகம்  முதலான யோகங்களைச் செய்து அவ்வழியால் இறைவனை அடையலாம் என்று மிக்க முயற்ச்சிகளை மேற்கொள்ளுகிறார்கள். அவர்களை நோக்கி ஓர் உண்மை இங்கு உணர்த்தப்படுகிறது. இறைவன் தன்  திருவடிகளை இவ்வுயிர்களுக்குத் தானே கொடுத்தாலொழிய எந்த முயற்சியினாலும் அவன் திருவடிகளை அடைய முடியாது. ஆகவே அவன் தன் திருவடிகளை எப்பொழுது கொடுப்பானோ! என்று எதிர் பார்த்துக் கொண்டே இருங்கள் என்னும் நுண்பொருள் இதில் கூறப்படுகிறது.

reclinevishnu

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டே?
தரும்  அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒருமத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி

பதவுரை:

ஒரு மத்தால் – மந்திர மலையாகிற  ஒரு மத்தால்
முந்நீர் – ஆழ் கடலை ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கலந்து)
கடைந்தான் – தேவர்களுக்காகக் கடைந்தவனானான்
அடைத்தான் – சீதப்பிராட்டிக்காகக் கடலை அணை செய்தவனானான்
முதல் படைத்தான் – படைப்புக் காலத்தில் முதன் முதலாக அந்த நீரைப் படைத்தவனானான்
அந்நீர் – அந்த நீரில்
அமர்ந்தான் – பள்ளி கொண்டருளினான்
அடி – இத்தகையவரது திருவடிகளாகிற
இறை தாள்கள் – இறைவனுடைய திருவடிகள் தாமே தரும் அத்தால் அன்றி  தருகையாகிற அதனால் ஒழிய
கருமத்தால் – தன் முயற்சியால் சாதிக்கப்படும் கரும யோகத்தாலும்
ஞானத்தால் – அப்படிப்பட்ட ஞான பக்தி யோகங்களினாலும் காணும் வகையுண்டே  காணும் முறைகள் உண்டோ? இல்லை.

விளக்கவுரை:-

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டோ?:-  கரும யோகத்தாலும் ஞான யோகத்தாலும் காணும் வழுகள் உண்டோ? இல்லை என்பது பொருள். ஞானம் என்பதில் பக்தியும் அடங்கும். பக்தி என்பது ஞானத்தின் முதிர்ந்த நிலயாதலால் இவ்வாறு சொல்லப்படுகிறது. வேதாந்த நூல்களில் மேற்சொன்ன மூன்று யோகங்களும் இறைவனை அடைவதற்கு வழியாகச்   சொல்லப் பட்டுள்ளது.ஞான யோகத்தைப் போன்று தூய வழி வேறு எதுவுமில்லை என்று கீதையில் சொல்லியிருக்கிறது. ‘என்னை அடைய வேணும் என்ற கொள்கையுடையவன் மனதை என்னிடம் வைக்க வேணும். என்னையே இடையறாமல் நினைக்க வேணும். என்னை வணங்க வேணும்’ என்று அர்ஜுனனுக்கு கண்ணனே போதித்திருக்கிறான். இவ்வாறு இருக்க இங்கு இவற்றால் காணும் வைகை உண்டோ / என்று சொல்லியிருப்பது எண்ணிப் பார்த்தற்குரியது. இவ்வாறு அருளிச் செய்த நூல் ஆசிரியரான அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மேற்படி யோகங்களின் உண்மை நிலைகளையும் இறைவனுடைய சிறப்பையும் தம்முடைய நுண் அறிவால் தெளிவாகக் கண்டிருப்பவர். ஆகையால் இவ்வாறு கூறியுள்ளார். மேற்சொன்ன யோகங்களெல்லாம் பகவானுடைய திருவடிகளில் சரணாகதி பண்ணியே செய்ய வேண்டியதாயுள்ளன. அச்சரணாகதி இந்த யோகங்களுக்குத் துணை நிற்பதாய் உள்ளது.ஆகவே தன முயற்சியால் சாதிக்கப்படும் கர்ம யோகம்,ஞான யோகம் , பக்தி யோகங்களும் சரணாகதியின் துணையினாலேயே சாதிக்கப்படுவன என்னும் சாஸ்திர நுட்பத்தைக் கொண்டு மேல்வாரியான இந்த யோகங்களால் அடைய முடியாது என்று கூறுகிறார். பகவானை சரணாகதி பண்ணி அவன் அருளைப் பெறாத போது எந்தமுயற்சியினாலும் அவனைப் பெற முடியாது என்கிற மறைப் பொருளின்  முடிவு (வேதாந்த விழுப் பொருள்) இங்குக் கூறப்படுகிறது.

இறைவனுக்கும் உயிர்களுக்கும் பிரிக்க முடியாத எல்லாவிதமான உறவுகளும் இருப்பதால் உரிமையுடன் அவனை அடைவதற்கான எளிய வழி இருக்கும் பொழுது அரும்பாடு பட்டு சாதிக்கக் கூடிய கர்ம, ஞான,பக்தி யோகங்களாகிற அரிய வழிகளைக் கைகொள்ள வேண்டாம் என்பது இதன் உட்கருத்து. .
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த கீதார்த்த ஸங்கிரத்தில்

“நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபயதாம் பரிதஜ்ய ந்யசேத் தேவேது தாமபீ:” என்று கூறியிருப்பதாலும்

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே – நன்றாக
நான் உன்னையன்றி இலனேன் கண்டாய்
நாரணனே நீ என்னை யன்றி இலை”
(நான்முகன்திருவந்தாதி-7)

என்ற திருமழிசைப்பிரான் பாடலாலும் இறைவனைத் தவிர வேறு உபாயமில்லை என்பதை உணரலாம்.

தருமத்தாலன்றி இறை தாள்கள்:-  இறை தாள்கள் தரும் அத்தாலன்றி  என்று கொண்டு கூட்டுக. அதாவது தலைவனான இறைவனுடைய திருவடிகள் தானே தன்னைக் கொடுப்பதல்லாமல் என்று பொருள். இங்கு’எம்பெருமானுடைய திருவடியே தஞ்சம்’ என்னும் கருத்து சொல்லப்பட்டுள்ளது. இதைப் பற்றியே ‘பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது திண்கழலாயிருக்கும்’ என்று முமூக்ஷுப்படியில் சொல்லப்படுகிறது. இங்கு இறை என்று சொன்னது அஷ்டாக்ஷர மகா மந்திரத்தின் முதல் பதமான ‘ஓம்’ என்ற ப்ரணவத்தில் முதல் பதமான அகாரத்தின் பொருள்.அதாவது நாராயணன் என்பதாம்.

தாள்கள் தரும் அத்தாலன்றி:- என்றது இறைவன் திருவடிகளே தஞ்சம்.வேறில்லை என்று நூல்களில் சொன்ன முடிவு பற்றிச் சொல்லப்பட்டது. த்வய மந்திரத்தின் முற்பகுதியில் தஞ்சமாகக் கொள்வது பற்றி சொல்லும்போது ‘திருவடிகளையே தஞ்சமாகப் பற்றுகிறேன்’ என்று சொல்லியிருப்பதைக் காண்க. மற்றும் நம்மாழ்வார் திருவாய்மொழியில் ”ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றும் ‘கழல்களவையே சரணாக் கொண்ட’ என்றும் ‘அடிமேல் சேமங்கொள்  தென்குருகூர்ச் சடகோபன்’ என்றும் ‘ சரணே சரண் நமக்கு ‘ என்றும் ‘திருவடிகளே தஞ்சம்’ என்பதை ஒருதரம் சொன்னது போல் பலதடவை சொல்லியிருப்பதைக் காணலாம். ஆகவே இறைவனுடைய திருவடிகள் தவிர வேறு எதுவும் தஞ்சமாகாது என்பது  நிலைநாட்டப்பட்டது. இதற்கு உதாரணமாகப் பல எடுத்துக்காட்டுக்கள் சொல்லப்படுகின்றன.

ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்:-தேவ லோகத்தில் இந்திரன் இராவதம் என்னும் தன்னுடைய யானை மேலேறி பவனி வரும்போது துர்வாச முனிவர் தேவி பூசையில்   தனக்குக் கிடைத்த மாலை ப்ரசாதத்தை அவனுக்குக் கொடுத்தார். அவன் யானை அம்மாலையை துதிக்கையால் சிதற அடித்தது. இதைப் பார்த்த முனிவர் ‘இந்திரன் செருக்கு அடங்கும்படி அவன் செல்வம் அழியுமாறு சாபம் கொடுத்தார். ‘கணமேயும் காத்தலறிது’ என்னும்   வாய்மொழிப்படி  அவனது செல்வம் ஒரு கணத்தில்  அழிந்தது. அந்நிலையில் இந்திரன் மிகவும் வருந்தி பகவான் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தான். தன்னை அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மந்திர மலையை ஒரு மத்தாகக் கொண்டு வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி தானே ஆமையாகி அம்மலையை முதுகில் தாங்கி கலக்க முடியாத நீர் நிறைந்த கடலை ‘ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான்’ என்று சொன்னவாறு கடலைக் கடைந்து அமுதத்தையும் இந்திரன் இழந்த செல்வங்களையும் எடுத்துக் கொடுத்து அவனது துயர் தீர்த்தான் என்னும் வரலாறு இங்கு கூறிக் கொள்ளத் தக்கது.
அடைத்தான்:-இராமபிரானின் பிரிவாலே தளர்ந்த சீதைப் பிராட்டியின் முக மலர்த்திக்காக கடலை அணை செய்தான். நீரைக் கண்டால் பயந்து ஓடும் வானரங்களை அதற்கு உதவியாகக் கொண்டான். நீரிலே அமிழும் மலைகளை அணை கட்டுதலுக்குக் கருவியாகக் கொண்டான். ஒருவராலும் அளவிடமுடியாத வண்ணம் வியந்து பார்க்கும்படி ‘சேது’ என்னும் அணை கட்டினான்.

முதல் படைத்தான்:- உலகமெல்லாம் அழிந்த மகாப்ரளைய காலத்தில் உயிர்கள் உடல்களைத் துறந்து இன்ப துன்ப நுகர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல் ‘அத்திக் காயில் அருமான் ‘ போல மாய்ந்து கிடந்த அவற்றை, கடலைப் படைத்து அதில் நான்முகனைப் படைத்து மற்றுமுள்ள அனைத்தையும் படைத்தான். அதில் முதல் முதலாக ‘நன்மைப் புனல் பண்ணி’ என்று சொன்னவாறு நீரைப் படைத்தான். இங்கு முதல் என்றது ‘நீர்தத்துவத்தை என்று பொருள்.

அந்நீர் அமர்ந்தான்:- படைக்கப்பட்ட அனைத்து ஜீவ ராசிகளுடைய   காவலுக்காக அந்நீரிலே கண் வளர்ந்தருளினான். ‘வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேல் மருவி’ என்றும்   ‘பாற்கடல் யோக நித்திரை செய்தாய்’ ‘பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்’ என்றும்’வெள்ள வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கிற மார்க்கம்’ என்றும் இறைவன் உயிர்கள் நலனுக்க கடலில் கண் வளர்ந்தருளும் நிலை சொல்லப்பட்டது.

அடி:-இத்தகைய திருவடிகளைக் காணும் வகை உண்டே என்று கொண்டு கூட்டுக. இங்குக் கூறிய ‘கடல் கடைந்தது ,கடலை அடைத்தது. அதனை படைத்தான்.அதில் பள்ளி கொண்டு அமர்ந்தான் என்றும் வரலாறுகளால் செல்வம் முதலிய வேறு பயனை விரும்பி அவற்றிற்காக சரணாகதி செய்த தேவர்களுக்கும் தன்னை விட்டுப் பிரியாமல் உடன் உறையும் பிராட்டிக்கும் ,பிரளயத்தில் அழிந்தும், படைப்பில் பிறந்தும் மாறி மாறி சுழன்று வரும் உயிர்களுக்கும் ஏற்றத் தாழ்வு இல்லாமல் எல்லோரையும் காத்தவனுடைய திருவடிகளை என்று விவரித்துக் காண்க. ‘ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்'(முந்நீர்   அடைத்தான்) முதல் (நீர்) படைத்தான் அந்நீர் அமர்ந்தான் அடி இறைவனுடைய அடியாகிற இறை தாள்கள் தரும் அத்தாலின்றி கர்மத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டே? என்று கொண்டு கூட்டுக.

உயிர்கள் நலத்திற்கு இறைவனுடைய திருவடிகள் தஞ்சமேயல்லாமல் உயிர்கள் தங்கள் முயற்சியினால் சாதிக்கும் சாதனங்கள் எவையும் பயன் தர மாட்டா என்பது இப்பாடலின் கருத்து.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “ப்ரமேய ஸாரம் – 4 – கருமத்தால்”

Leave a Comment