ப்ரமேய ஸாரம் – 2 – குலமொன்று

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<< முதற் பாட்டு

இரண்டாம் பாட்டு

emperumanar_with_sishyas

முகவுரை:- கீழ்ப் பாட்டில் சொன்ன ‘மவ்வானவர்’ என்றதில் மூன்று வகையான உயிர்கள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம். அவர்களுள் வினை வயத்தால் ஏதோ ஒரு உடலில் கட்டுப்பட்டிருக்கும் உயிர்களுக்கு பிறப்பிறப்புக்கள் மாறி மாறி ஆற்று வெள்ளம் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இப்பிறப்பாகிற துன்பம் தீர்வதற்கு வழி என்ன? என்னும் வினாக்களுக்கு இப்பாடல் விடையிறுக்கிறது.

குலமொன்று உயிர்பல தன்குற்றத்தால் இட்ட
கலமொன்று காரியமும் வேறாம் -பலம் ஒன்று
காணாமை காணும் கருத்தார் திருத்தாள்கள்
பேணாமை காணும் பிழை

பதவுரை:-

குலம்                     – தொண்டர் குலம்

ஒன்று                     – ஒன்றே உளது

உயிர்                      – தொண்டுத் தன்மையைக் கொண்ட உயிர்கள்

பல                            – எண்ணில் அடங்காதன

தம் குற்றத்தால்        – அவ்வுயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளால்

இட்ட                         – இறைவனால் இட்டு வைக்கப்பட்ட

கலம்                          – உடலாகிற பாண்டம்

ஒன்று                         – ஒரே மூலப் பொருளால் ஆன ஒன்றேயாகும்

காரியமும்                – உயிர்களின் செயல்களும்

வேறாம்                   – வினை வேறுபாட்டால் வெவ்வேறு வகையாக இருக்கும்

பலம் ஒன்று             – ஒரு பயனையும்

காணாமை               – கருதாமல்

காணும்                      – உயிர்களைக் கடாக்ஷிக்கும்

கருத்தார்                     – ஆசார்யனுடய

திருத்தாள்கள்               – திருவடிகளை

பேணாமை காணும்      – பற்றாமை அன்றோ

பிழை   – பிறப்புத் தொடர்வதற்கான குற்றம்

விளக்கம்:-

குலம் ஒன்று: எல்லா உயிர்களுக்கும் ஒன்றே குலம். அது இறைவனுக்கு அடிமையாய் இருத்தல் ஆகும். அதாவது தன் விருப்பத்திற்குச் செயல்பட இயலாமல் இறைவனுக்கு வயப்பட்டே இயங்குதல். இது உயிர்களின் இயல்பு என்றைக்கும் மாறாதது. நிலையாய் இருப்பது. இதைத் தொண்டர் குலம் என்பர் ஞானியர்

“தொண்டக்குலத்துள்ளீர்”(திருப்பல்லாண்டு).

உயிர் பல:- ஆன்மாக்கள் அளவற்றன. அவை இறைவனுக்கு வயப்பட்டனவாய் பலவாக இருக்கின்றன.

தம் குற்றத்தாலிட்ட கலம் ஒன்று:- அவ்வுயிர்கள் தாங்கள் பண்ணின நல்வினைகள் தீவினகலாகிற குற்றம் காரணமாக அவற்றை இறைவன் இட்டுவைத்த பாண்டன்கலே உடல்களாகும்அவ்வுடல்கள் ஒரே வகையாய் ஆனது. அதாவது ப்ரக்ருதி என்னும் ஒரே பொருளால் உண்டானது. ஆகையினால் அதுவும் ஒன்றேயாகும். மண்ணால் ஆன் பொருள் எதுவானாலும் மண் தான். பொன்னால் ஆனது எதுவானாலும் பொன் தான். அதுபோல ப்ரக்ருதியால் ஆன உடம்புகள் எதுவானாலும் ப்ரக்ருதி தான். ‘தம் குற்றத்தால் இட்ட கலம் ஒன்று’ என்பதை இவ்வாறு விரித்து உணர வேண்டும். இறைவன் இவ்வுயிர்களை உடலில் இணைப்பது அவ்வவ்வுயிர்களின் வினைகளைத் தம் அறிவில் கொண்டு அவற்றிற்குத் தக்கபடி பிறப்பித்ததாகும். கலம் ஒன்று என்று கூறியது எல்லா உயிர்களின் உடல்களும் ப்ரக்ருதி என்று சொல்லப்படும் ஒரே பொருளால் ஆனது பற்றி அது.

“ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய

பந்தமாந்தேவர் பதினாலு அயன் படைத்த அந்தமில்சீர் தாவரம் நாலைந்து”

என்ற பாடலில் உயிர்கள் எடுக்கும் உடல் வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வேறுபாடு ஒவ்வொன்றின் உட்பிரிவுகளால் ஆயிரம் ஆயிரமாகக் கணக்கில்லாதபடி பரந்திருக்கும் என்பதையும் காண வேண்டும் எத்தனை அளவற்றிருந்தாலும் எல்லாம் ஒரே பிரக்ருதியின் வடிவமேயாகும் அதனால் உயிர்கள் கொண்டுள்ள உடலாகிற பாண்டம் ஒன்றே தான் என்று ‘கலம் ஒன்று’ என்பதால் சொல்லப்பட்டது.

‘பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்

கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்தியினாய்’ என்ற

திருவாய்மொழியில் அந்தந்த உயிர்கள்   செய்த வினைப்பயனை எத்தனை படைப்பு எத்தனை அழிவு நடந்தாலும் தவறிப் போகாமல் அந்தந்த உயிர்களே துய்க்கும்படி படைக்கிறதாக பேசப்படுகிறது. இது இங்கு ஒப்பு நோக்கற்குரியது.

காரியமும் வேறாம்:- உயிர்கள் வினைப்பயனால் எடுக்கும் உடல்களினால் செய்யும் செயல்களும் வேறுவேறாக இருக்கும் அது வேறாகையாவது நல்வினையின் பயனாக சுவர்க்கத்தில் இன்பம் துய்த்தலும் தீவினையின் பயனாக நரகத்தில் துன்பம் துய்த்தலும் இரண்டும் கலந்த நிலையில் துன்ப இன்பங்களைக் கலந்து துய்ப்பதுமாயிருக்கு ‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது’

என்னும் குறளின் உரையில் ‘ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிரிதோருயிரின் கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் ‘வகுத்தான்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வெறும் முயற்சிகளால் பொருட்களைப் படைத்தல் அல்லது நுகர்தலாகாது. அதற்கு ஊழ் வேண்டும் என்பதாம். என்று கூறியது காண்க.

காரியமும்:- என்ற உம்மையால் ஒரு குறிப்பு உணர்த்தப்படுகிறது. உயிர்பல என்றும் குலம் ஒன்று என்றும் சொன்னது போல, வினைப்பயனால் எடுத்த உடல் (பிரக்ருதியாகிற) ஒன்றாயிருக்க உயிர்களின் செயல்களும் அவற்றால் நுகரப்படும் பயன்களும் பலவகையாயிருக்கும் என்று உணரவேண்டும். உயிர்களுக்கு இயல்பான தன்மை இறைவனுக்கு அடிமையேயாகும். இத்தகைய உயிர்களுக்கு நல்வினை தீவினையாகிற வினைத் தொடர்பும் அது காரணமாக பல்வகைப் பிறப்புக்களும், அப்பிறப்புக்களில் நுகரும் இன்ப துன்பங்களும் இவ்வாறு ஆற்று ஒழுக்குப் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது எதனால் என்னும் எண்ணம் உண்டானால் அதற்குத் தக்க விளக்கம் தரப்படுகிறது மேல் தொடரால்.

பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார் திருத்தார்கள் பேணாமை காணும்

பிழை: இதில் ‘கருத்தார் திருத்தார்கள்’ பேணாமை காணும் பிழை என்று அதாவது ஆசார்யனுடைய திருவடிகளை அணுகாததே குறையாகும்.  என்று பதில் கூறப்படுகிறது. ஆசார்யனுடய சிறப்பு இவ்வாறு கூறப்படுகிறது. ‘பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார்’ என்று. அதாவது ஓர் உயிரை குரு, தான் ஏற்கும் பொழுது தனக்குப் புகழையோ ஒரு பயனையோ பணிவிடை முதலிய சிறப்புகளில் ஏதேனும் ஒன்றிலும் மனம் வைக்காமல் இவ்வுயிரினுடைய சேமமே சேமம். (வீடு பேருஅடைதல்) தனக்குப் பயன் என்று கருதி தன்னுடைய அருள் நோக்கத்தைச் செய்யும் நன்மனம் கொண்ட ஆசார்யனுடய திருவடிகளைப் பற்றாமையே மாறி மாறிப் பிறப்புக்கள் தொடர்ந்து வருவதற்கு காரணமான குற்றமாம்.

இதனால் குரு கடாக்ஷம் உயிர்க்கு சேமம் தரும். அதற்கு சற்குருவை நாடி அவன் திருவடிகளைப் பற்ற வேண்டும். அதனால் வினைப் பாசங்கள் அகன்று சேமத்தையும் நல்வீடையும் அடைவான் என்று பொருள். இப்பாடலால் ஆசார்யனுடய சிறப்புக் கூறப்பட்டது. “திருத்தாள்கள் பேணுதலாவது விரும்புகை. பேணாமை -விரும்பாமை. பிழை- குற்றம். ஆசார்ய வைபவத்தை ஸ்ரீ வசனபூஷணத்தில் காணலாம். “பகவல்லாபம் ஆசார்யனாலே. ஆசார்ய லாபம் பகவானாலே ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம். ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் அவை (ஞான பக்தி) உண்டானாலும் ப்ரயோஜனமில்லை.  தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிப் பூணலாம். தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை (பழிப்புக்கு இடமாகும்) விளைக்கும். ஸ்வாபிமாநத்தாலே ஈச்வராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானமொழிய கதியில்லை என்று பிள்ளை (நம்பிள்ளை) பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.

ஸ்வஸ்வாதந்தர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று. பகவத் ஸ்வாதந்தர்ய பயத்தாலே ப்ரபக்தி நழுவிற்று. ஆசார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாகையாலே காலங்கொண்டு மோதிரமிடுமோபாதி.  ஆசார்யபிமானமே உத்தாரகம். (ஸ்ரீ வசனபூஷனம் சூத்திரம் எண் -434).

ஒருவன் வீடு பேறாகிற சேமத்தைப் பெறுவதற்கு சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பக்தியாலேயோ,கருணைவடிவமான இறைவன் திருவடிகளில் செய்யும் அடைக்கலம் புகுதலாலேயோ முடியாது. என்பது பல காரணங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓர் உயிர் பிறவி நோயிலிருந்து நீங்கி சேமநல்வீடு எனப்படும் இறை இன்பத்தைப் பெறுவதற்கு ஒரே வழி நல்லறிவும் ஆன்ற ஒழுக்கமும் நிறைந்த நல ஆசான் ஒருவன் ‘இவன் நம்முடையவன்’ என்று பரிந்து நோக்குதலாகும். இதனால் ஆசார்யனுடய பார்வைக்கு இலக்காவான் சேமம் பெறுவான். அது இல்லை எனில் எவ்வுயிரும் சேமம் பெறாது என்ற கருத்து இப்பாடலால் உணரலாகும்.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “ப்ரமேய ஸாரம் – 2 – குலமொன்று”

Leave a Comment