ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>>
22-ஆம் பாசுரம்
ततस्सार्धं विनिर्गत्य भ्रुत्यैर्नित्यानपायिभिः ।
स्रीरङ्गमङ्गलं द्र्ष्टुं पुरुषं भुजगेशयम् ॥ 22
ததஸ்ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர்நித்யாநபாயிபி: |
ஸ்ரீரங்கமங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் || 22
பதவுரை:- தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு, ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய், புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய், புருஷம் – புருஷோத்தமராகிய பெரியபெருமாளை, த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக, நித்ய அநபாயிபி: ப்ருத்யை: ஸார்த்தம் – ஒருகணமும் விட்டுப்பிரியாத கோயிலண்ணன் முதலிய அடியவர்களுடன் கூடி, விநிர்க்கத்ய – தமது மடத்திலிருந்து புறப்பட்டு.
கருத்துரை:- இயற்கையாகவே பெருமையைப் பெற்ற பொருளைக்காட்டுகிற ஸ்ரீஸப்தம் இங்கு ரங்கநகரத்திற்கு அடைமொழியாயிற்று. ஸ்ரீயாகிற ரங்கம் – ஸ்ரீரங்கமென்றபடி. பெரியபெருமாள் பள்ளி கொண்டதனால் அரங்கத்திற்குப் பெருமை ஏற்படவில்லை. பின்னையோவென்னில் எல்லார்க்கும் பெருமையை உண்டாக்கும் பெரியபெருமாளும் தமக்கு ஒரு பெருமையைத் தேடிக்கொள்வதற்காகவே வந்து சேரும்படிக்கீடாக இயற்கையான பெருமைவாய்க்கப்பெற்றது அரங்கநகரமென்பது இவ்வடைமொழிக்குக் கருத்து. ‘க்ஷீராப்தேர் மண்டலாத் பாநோர் யோகிநாம் ஹ்ருதயாதபி, ரதிம் கதோஹரிர்யத்ர தஸ்மாத் ரங்கமிதி ஸ்ம்ருதம்’ (எம்பெருமான் திருப்பாற்கடல், ஸூர்யமண்டலம், யோகிகளின் ஹ்ருதயம் ஆகியவற்றைவிட அதிகமான ஆசையைப்பெற்ற இடமாதல் பற்றி இந்நகரம் ரங்கமென்று கருதப்பட்டது) என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத்தக்கதாகும். இக்கருத்து எம்பெருமானுடைய நினைவைத் தழுவிக் கூறப்பட்டதாகும். நம்முடைய நினைவின்படி – மேல் ‘ஸ்ரீரங்கமங்களம்’ என்று ஸ்ரீரங்கநகருக்கும் அணிசெய்பவராக – பெருமையைத் தருமவராக எம்பெருமான் கூறப்படுவதும் கண்டு அநுபவிக்கவுரியதாகும். இயற்கையாகவே பெருமைபெற்ற இரண்டு பொருள்களும் தம்மில் ஒன்று மற்றொன்றுக்குப் பெருமை தருமவையாகவும் உள்ளனவென்பது உண்மையுரையாகும். (1) புருஷ: – புரதி இதி புருஷ: என்பது முதல் வ்யுத்பத்தி. ‘புர-அக்ரகமநே’ என்ற தாதுவடியாகப் பிறந்த புருஷஸப்தத்திற்கு உலகமுண்டாவதற்கு முன்பே இருந்த எம்பெருமான் பொருளாகையால் அப்பெருமானுக்கு உண்டான ஜகத்காரணத்வம் இந்த வ்யுத்பத்தியாலே குறிக்கப்பட்டது. (2) புரீ ஸேதே இதி புருஷ: என்பது
இரண்டாவது வ்யுத்பத்தி. ஜீவாத்மாக்களுடைய ஸரீரத்தில் (இதயகுகையில்) தங்கியிருப்பவனென்பது இதன் பொருளாகையால் அந்தர்யாமித்வம் இதனால் குறிக்கப்பட்டது. (3) புரு ஸநோதி இதி புருஷ: என்பது மூன்றாவது வ்யுத்பத்தி. அதிகமாகக் கொடுப்பவனென்பது இதற்குப் பொருளாகையால், கேட்பவர் கேட்கும் மற்ற பொருள்களோடு தன்னோடு வாசியில்லாமல் எல்லாவபேக்ஷிதங்களையும் தந்தருளும் ஔதார்யம் இதனால் குறிக்கப்பட்டது. இம்மூன்று பொருள்களும் அழகியமணவாளப் பெருமாள் திறத்தில் பொருந்துமவையேயாம். ஆதிஸேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது பரம்பொருளின் லக்ஷணமென்பர் பெரியோர். ஸ்ரீரங்கமங்களமாய் புருஷஸப்தவாச்யனாய் புஜகஸயனனாயிருக்கிற எம்பெருமானை மணவாளமாமுனிகள் ஸேவிப்பது எம்பெருமானாருடைய திருவுள்ளவுகப்புக்காகவேயன்றி வேறொன்றுக்காகவல்ல என்பதும் இங்கு நினைக்கத்தக்கது. ‘நித்யநபாயிபி: ப்ருத்யை:’ – ஒருக்ஷணமும் விட்டு நீங்காத ஸிஷ்யர்கள் என்றபடி. ஒருமனிதனைவிட்டு நீங்காதது அவனுடைய நிழலேயன்றி வேறொன்றில்லையென்பர் உலகோர். நிழல் கூட இருளில் மனிதனைவிட்டு நீங்கும். மாமுனிகளின் ஸிஷ்யர்கள் அவரை இருளிலும் விட்டு நீங்காத பெருமையைப் பெற்றவர்கள் என்கிறார் அண்ணாவப்பங்கார்ஸ்வாமி. இதனால் மாமுனிகள் விஷயத்தில் ஸிஷ்யர்கள் வைத்திருக்கும் பக்தியின் பெருமை கூறப்பட்டது. (22)
archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org