ஞான ஸாரம் 9- ஆசில் அருளால்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                        9-ஆம் பாட்டு:

Lord-Vishnu

முன்னுரை:

பகவானிடம் வேறு பயன் எதையும் விரும்பாமல் அடிமை செய்தலையே விரும்பியிருக்கும் அடியாரிடத்தில் அவனுக்குண்டான ஈடுபாட்டைக் கீழ்ப் பாடலில் கூறினார். இதில் கீழ்ச் சொன்ன ஈடுபாட்டைக் காட்டிலும் இன்னமும் அதிகமான ஈடுபாட்டைச் சொல்கிறார். இதில் பகவான்தான் பக்தர்களின் நெஞ்சைச் சோதனை செய்து அதைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்கிறான். அவ்வாறு நெஞ்சில் சோதனை செய்தாவது, “இந்த நெஞ்சு நம்மை மட்டுமே நினைக்கிறதா? நம்மிடம் ஏதாவது வேறு பயனை விரும்பி நம்மை நினைக்கிறதா? எந்தப் பயனையும் நினைக்காமல் நம்மையே நினைக்கிறதா?” என்று ஆராய்ந்து பார்த்து வேறு பயன் எதையும் விரும்பாமல் அவனை நினைப்பதுவே பயனாக எந்த நெஞ்சம் இருக்கிறதோ அந்த நெஞ்சமே அவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இடமாகும் என்ற கருத்து இங்கு சொல்லப்படுகிறது.

“ஆசில் அருளால் அனைத்து உலகும் காத்தளிக்கும்
வாச மலராள் மணவாளன் – தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறொன்றை
யெண்ணாதார் நெஞ்சத் திருப்பு”

பதவுரை:

ஆசில் குற்றமில்லாத
அருளால் கருணையினால்
அனைத்து உலகும் எல்லா உலகத்தையும்
காத்து இரட்சித்து
அளிக்கும் விருப்பங்களைக் கொடுக்கும்
வாசமலராள் மணவாளன் தாமரையில் பிறந்த பிராட்டிக்கு நாயகனான பகவான்
தேசு பொலி ஒளிமயமான
விண்ணாட்டில் ஸ்ரீவைகுண்டத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றை எண்ணாதார் தன்னையொழிய வேறு எதையும் நினைக்காதவர்களுடைய
நெஞ்சத்து இதயத்தில்
இருப்பு குடியிருப்பை
சால மிகவும்
விரும்பும் ஆதரிக்கும்

விளக்கவுரை:

அருளுக்குக் குற்றமாவது என் எனில்? ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்தால் அவ்வருள் குற்றமாகும். அருளுக்கு இலக்கணம் கூற வந்த பரிமேலழகர், அருளாவது – தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என்று கூறினார். இது துறவறத்திற்கு அடிப்படைப் பண்பாகக் கூறப்பட்டது. அருளைப் பற்றி இவ்வாறு அறியும்போது இதோடு தொடர்புடைய அன்பைப் பற்றியும் அறிய

வேண்டியதொன்றாகும். அதாவது மனைவி, மக்கள் முதலிய தொடர்புடையாரிடத்தில் செலுத்தும் அன்பு காதல் என்று விளக்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு அருள் வேறுபட்டது. தொடர்பு முதலிய எவ்விதக் காரணமும் இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் கருணை தான் பகவானுக்கும் பகவத் பக்தர்களுக்குமே உள்ள பண்பு என்று உணரவேணும்.

அனைத்துலகும் – எல்லா உலகத்தையும் பூமிக்கு மேலே ஏழு உலகங்களும் பூமிக்கு கீழே ஏழு உலகங்களுமாக மொத்தம் பதினான்கு உலகங்கள் என்று சொல்லப்பட்டுள்ளன. இந்த பதினான்கிற்கும் சேர்த்து அண்டம் என்று பெயர். பூமிக்கு மேல் உள்ள ஏழு உலகங்களாவன:- பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனேலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பன. பூமிக்கு கீழ் உள்ள உலகங்களாவன:- அதலம், விதலம், சுதலம், ரசாதலம், தலாதலம், மகாதலம், பாதாளம் என்பன. ஆகவே இவை அனைத்துலகும் எனப்பட்டன. ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்வதானால் அவ்வருளில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். பகவானுடைய அருள் எந்தக் காரணத்தைப் பற்றியும் நல்லவர் தீயவர் என்று பாகுபாடு பண்ணாமல் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதால் ஆசிலருள் எனப்பட்டது. இங்குச் சொல்லப்பட்ட உலகு என்ற சொல் மக்களைக் குறிக்கும்.

காத்தளிக்கும் – பக்தர்களுக்கு வேண்டாதவற்றைப் போக்கியும் வேண்டின விருப்பத்தைக் கொடுப்பதும் காத்தல் எனப்படும். இவ்விரண்டுமே இறைவனுடைய காக்கும் செயலாகும். வ்யாதி தீர்த்தல் ஒரு நன்மை. அதுபோல வேண்டாததைக் கழித்தும் விரும்பியதைக் கொடுத்தலும் காத்தல் ஆகும். “காத்து” “அளிக்கும்” என்ற இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக் கூறுவதால் இவ்வாறு கூறப்பட்டது.

வாசமலராள் மணவாளன் – “வேரி மாறாத பூமேலிருப்பாள்” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடி தாமரையின் அழகு மாறாமையால் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும் பெருமை உடையதும் நறுமணம் அலைவீசுகின்றதுமான தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் என்று பொருள். அவளுக்குக் கணவனாகயிருப்பவன் என்று வாசமலராள் மணவாளன் என்று எம்பெருமான் சிறப்பிக்கப்பட்டான். பெரிய பிராட்டியாருக்கு மணவாளன், “காத்தளிக்கும்” என்று கூறுவதால் இறைவன் உலகங்களைக் காப்பதற்குப் பிராட்டியோடு கூடியிருந்து காக்கின்றான் என்றும், காக்கும் தொழிலில் பிராட்டிக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும் சொல்லும் வேதாந்தக் கருத்து இங்கு உணர்த்தப்படுகிறது. மேலும் காத்தலுக்கு அடிப்படையான கருணை குணத்தைப் பிராட்டி பகவானிடத்தில் தூண்டுகிறாள் என்றும் அவ்வாறு இறைவன் உலக மக்களிடம் கருணை காட்டிக் காப்பதைக் கண்டு மகிழ்தலும் பிராட்டியுடைய காரியமாகும் என்றும் அறியவேணும். இவ்வாறு பிராட்டியோடு கூடி நின்று ஆன்மாக்களைக் காப்பதில் பகவான் பண்ணின முயற்சி பயன் தரும்போது அதாவது இறைவனுடைய முயற்சிக்கு இலக்காகும் ஆன்மா சீர்திருந்தி (பண்டை வினைகளைப் பற்றோடு அறுத்து) இறைவனைத் தவிர வேறு பயன்களை விரும்பாதவர்களாய்த் தூயனராகின்றார்கள். அத்தகைய தூய இதயத்தில் இறைவன் பண்ணும் அரவணைப்பின் சிறப்பு மேல் தொடரால் கூறப்படுகிறது.

தேசுபொலி விண்ணாட்டில் – தேசுபொலி விண்ணாடு – பரமபதம், வைகுண்டம் என்று அழைக்கப்படுகிற அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடு என்பதாம். இது பெரிய பிராட்டியாரோடும் நித்ய சூரிகளோடும் பகவான் பேரின்பமாக எழுந்தருளியிருக்கிற இடம். இத்தகைய இன்பமிகு இடத்தைக் காட்டிலும்,

சால விரும்புமே – மிகவும் உகந்திருக்கும் என்றவாறு. ஏகாரம் ஈற்றசை இவ்வளவு ஆதரித்து நிற்கின்ற இடம் எது என்றால் அது கூறப்படுகிறது மேல் தொடரால்.

வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்திருப்பு – உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்று ஆழ்வார் இருந்தார். அவருக்குக் கண்ணனைத் தவிர வேறு பயன் எதுவும் தேவையில்லை. அது போல, எல்லாப் பயன்களும் பகவானே என்று நினைத்து வேறுபயன் எதையும் உள்ளத்தால் உள்ளலும் செய்யாமல் யார் இருக்கிறார்களோ அவர்களுடைய இதயத்தில் இருக்கும் இருப்பு பரமபதத்தைக் காட்டிலும் மிக இன்பமாக இருக்கும் என்பது கருத்து.

Leave a Comment