ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி
இக்கட்டுரையில் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் பற்றிச் சிறிது அநுபவிப்போம்.
முந்தைய கட்டுரைகளில், நாம் சில முக்யமான கருத்துக்களை விவரித்துள்ளோம்:
- திவ்ய ப்ரபந்தம் என்றால் என்ன ?
- ஒவ்வொரு திவ்ய ப்ரபந்தத்தின் நோக்கம் என்ன ?
- திவ்ய ப்ரபந்தங்கள் எவ்வாறு அவதரித்தன ?
- திவ்ய ப்ரபந்தங்களைக் காத்தது யார் ?
- பத்து/பதிகம் என்றால் என்ன ?
இவற்றை மனதில் வைத்துக்கொண்டு, நாம் இப்பொழுது திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்களைக் காண்போம்.
திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்கள் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம்
இவை ஆறில், பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம் மற்றும் திருநெடுந்தாண்டகம் இரண்டாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளன.
மீதமுள்ள திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய இம்மூன்றும், இயற்பா என்று சொல்லப்படுகிற மூன்றாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளன.
திருமங்கையாழ்வாரின் சரித்ரம்
ஆழ்வார் திருவாலி-திருநகரிக்கு அருகிலுள்ள திருக்குறையலூரில் திருவவதாரம் செய்தார். நீலன் என்று அழைக்கப்பட்ட ஆழ்வாருக்கு, இளம் வயதில் எம்பெருமான் மீதும், பகவத் விஷயம் மீதும் பற்றுதல் இல்லாமல், உலக விஷயங்களிலேயே ஈடுபட்டு வளர்ந்தார். அவர் உடல் வலிமை மிக்கவராகவும், வாள் வீசும் திறனும் பெற்றிருந்தார். அந்நாட்டு மன்னன் இவரைத் தன் படைத்தளபதியாக நியமித்தான். மேலும் அவருக்கு ஒரு சிறிய இடமும் கொடுத்து, ஒரு குறுநில மன்னனாகவும் ஆக்கினான்.
பிறகு, எம்பெருமான் ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளினான் – அதாவது அஜ்ஞானத்தை முழுவதுமாக நீக்கி, உண்மையான ஜ்ஞானமும் பக்தியும் அளித்தான். எம்பெருமானின் கருணையால், அவருக்கு குமுதவல்லி நாச்சியார் மூலமாக முதலில் பாகவத சம்பந்தம் கிடைக்கப்பெற்றது. குமுதவல்லி நாச்சியார் ஒரு தேவஸ்த்ரீ. அவளுடைய அழகைப் பார்த்து மயங்கிய நீலன், அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட, குமுதவல்லி நாச்சியாரோ தான் ஒரு ஆசார்யரிடத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்ட ஸ்ரீவைஷ்ணவனையே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறாள். மேலும், நீலனாகிய ஆழ்வாரை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், அவர் தினமும் ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததீயாராதனை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை இடுகிறாள். நீலன் உடனே திருநறையூருக்கு சென்று, திருநறையூர் நம்பியிடம் தனக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருள வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.
பிறகு, தினமும் பாகவதர்களுக்கு அருமையான ததீயாராதனை செய்து கொண்டு வருகிறார். தன்னுடைய எல்லாச் சொத்துக்களையும் பாகவத கைங்கர்யத்திலேயே அர்ப்பணிக்கிறார். இப்படியே செய்து கொண்டு வர, அவருடைய எல்லாச் சொத்துக்களும், அரசாங்க கஜானாவும் தீர்ந்தது. ஆனாலும் ததீயாராதனையை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக, அவ்வழியாகச் செல்லும் செல்வந்தர்களைக் கொள்ளை அடித்து வந்து கைங்கர்யத்தை ச்ரத்தையுடன் நடத்திப் போந்தார்.
எம்பெருமான் தானே ஆசார்யனாக வந்து ஜீவாத்மாவை கரை ஏற்றுவதாக ஶாஸ்த்ரம் கூறுகிறது. இங்கே நீலனைத் திருமங்கையாழ்வாராகக் கடாக்ஷிக்க, எம்பெருமான் தானும் பிராட்டியுமாகத் திருமணத் தம்பதியராக ஆழ்வார் இருக்கும் இடம் தேடி வருகிறான். ஆழ்வார், தனக்குத் ததீயாராதனை செய்ய, பெரிய தங்க வேட்டை கிடைத்தது என்று உற்சாகத்துடன் எம்பெருமானையும் அவனது திருமண கோஷ்டியையும் வழி மறித்து அவர்களிடமிருந்து எல்லாச் செல்வத்தையும் கொள்ளை அடித்தார். இறுதியில் எம்பெருமானின் திருவடியில் உள்ள மெட்டியையும் எடுக்க முயற்சித்து அது எளிதில் வராததால், அதை அவன் திருவடித் தாமரைகளிலிருந்து கடித்து எடுக்கிறார். கொள்ளையடித்த அனைத்து ஆபரணங்களையும் ஒரு மூட்டையாகக் கட்டிய நீலன், அதைத் தூக்க முடியாமல் தவிக்கிறார். பிறகு எம்பெருமானைப் பார்த்து “என்ன மந்திரம் செய்தாய்? ஏன் என்னால் இதைத் தூக்க முடியவில்லை?” என்று கேட்க, எம்பெருமானும் “ஆம், மந்திரம் ஒன்று உள்ளது, வேண்டுமானால் சொல்கிறேன்” என்று பதில் அளிக்கிறான். ஆழ்வாரும் தனது வாள் முனையில் எம்பெருமானை நிறுத்தி அப்பொழுதே அந்த மந்திரத்தைக் கூறுமாறு கட்டளை இடுகிறார். எம்பெருமான், ஆழ்வாரின் செவியில் ஸகல வேத ஸாரமாக, ப்ராப்யத்தையும் ப்ராபகத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக, யாரையும் இந்தக் கொடிய ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பதாக, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ, பகவத் கைங்கர்ய ப்ராப்தியையோ, தன்னை மனனம் செய்பவர்களுக்கு அவர்களது ஆசைக்கேற்றார்ப்போல் அளிப்பதாக இருக்கும் சீரிய திருமந்த்ரத்தை உபதேசிக்க, அந்த க்ஷணமே மயர்வற மதிநலம் அருளப்பெற்று நீலன் திருமங்கையாழ்வார் ஆகிறார்.
திருமந்த்ர உபதேசம் செய்த எம்பெருமான், உடனே தன் திவ்ய மங்கள ஸ்வரூபத்தை, க்ருபையே வடிவமாக ஸ்வர்ணம் போன்ற பொன்னிறமுடைய திருமேனியுடன் இருக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன், கருடாழ்வார் மீது அமர்ந்த திருக்கோலத்திலிருந்து கொண்டு ஆழ்வாருக்குக் காண்பித்தான். தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையை வர்ஷித்து மயர்வற மதிநலம் அருளினான். ஆழ்வாரும் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று எப்பொழுதும் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டே வாழ்ந்தார்.
தாயார் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் புருஷகாரத்துடன் எம்பெருமானுக்கே முழுவதுமாக ஆட்பட்ட ஆழ்வார், அனைவரும் நற்கதி அடைய 6 ப்ரபந்தங்களை அருளினார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம். இவை நம்மாழ்வாரின் நான்கு வேதங்களுக்கு ஆறு அங்கங்களாகத் திகழ்பவை. பிறகு எம்பெருமான் ஆழ்வாரை பல்வேறு திவ்ய தேசங்களுக்கு யாத்ரையாக தன் சிஷ்யர்களுடன் சென்று அங்குள்ள அர்ச்சா திருமேனி எம்பெருமான்களை மங்களாஶாஸனம் செய்யும்படி நியமித்தான்.
ஆழ்வாரும் நம் பாரத தேசத்தின் வடக்கிலிருந்து தெற்கு வரை எண்பதிற்கும் மேற்பட்ட பல திவ்ய தேசங்களுக்கு யாத்ரையாகச் சென்று, அங்குள்ள எம்பெருமான்களுக்கு மங்களாஶாஸனம் செய்தருளினார். அதில் நாற்பதிற்கும் மேற்பட்ட திவ்யதேஶங்கள் திருமங்கையாழ்வாரால் மட்டுமே மங்களாஶாஸனம் அருளப்பட்டவை. இவர் இல்லை என்றால் நமக்கு இந்த திவ்யதேஶங்கள் கிடைத்திருக்காது. ஆழ்வார் இந்த திவ்யதேஶங்களை மங்களாஶாஸனம் செய்ய, எம்பெருமான் அவருக்கு பரமபத அநுபவத்தையே அருளுகிறான்.
பெரிய திருமொழி தனியன்
கலயாமி கலி த்வம்ஸம் கவிம் லோக திவாகரம்
யஸ்யகோபி: ப்ரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம:
எளிய விளக்கம்
அகில உலகத்திற்கும் சூரியனாகத் திகழ்பவரும், கலியை நிரஸிப்பவரும், தன்னுடைய ஒளியால் உலகத்தாரின் அஜ்ஞானத்தை ஒழிப்பவருமான, கவியாகிய பரகாலனை நான் த்யானிக்கிறேன்.
இன்னும் பல தனியன்கள் உள்ளன. அவற்றை நாம் பெரிய திருமொழியும் ஆழ்வாரின் மற்ற அநுபவங்களையும் கற்கும்போது காண்போம்.
மாமுனிகள் திருமங்கையாழ்வாரின் திருமேனியை தர்ஶித்து, அந்த வடிவழகைப் பற்றி மிகவும் அற்புதமான பாசுரம் அருளியுள்ளார்.
திருமங்கையாழ்வார் ப்ரபந்தங்கள்
பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த ஆறு ப்ரபந்தங்களில் பெரிய திருமொழி முதன்மையானது. இந்த அழகிய திவ்ய ப்ரபந்தத்தில் திருமங்கையாழ்வார் பல பல திவ்யதேசங்களையும் எம்பெருமான்களையும் அநுபவிக்கிறார். ஆழ்வார் ஒவ்வொரு திவ்யதேசத்திற்கும் தான் நேரே சென்று, அங்கிருக்கும் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்து அருளினார் என்பது நமக்குப் பாசுரங்கள் மூலம் அறியப்படுகிறது. மேலும், அங்கிருக்கும் இயற்கைக் காட்சிகள், பசு, பக்ஷி, மரங்கள், நீர் நிலைகள் என்று ஒரு திவ்யதேசத்தைச் சார்ந்த எல்லா விஷயங்களிடத்திலும் ஆழ்வார் மிகுந்த பக்தியுடன் ஈடுபடுகிறார் என்பதும் அவர் பாசுரங்கள் மூலம் அறிகிறோம்.
இவர் முற்காலத்தில் ஆத்மாவை வெயிலில் வைத்து, தேஹத்தை நிழலில் வைத்தார். ஆத்மாவை வெயிலில் வைப்பது என்றால், ஆத்மாவிற்கு உஜ்ஜீவனம் அளிக்கக்கூடிய பகவத் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது. தேஹத்தை நிழலில் வைப்பது என்றால், தேஹத்தைப் பாதுகாப்பது மற்றும் அதற்கு இன்பம் அளிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவது. உண்மையில் பகவத் விஷயமே நமக்கு நிழல்.
எம்பெருமான், “ஆழ்வார் தான் கண்களால் காண்பதை மட்டுமே ஒப்புக்கொள்கிறார். நானும் இந்த உலக விஷயங்களைப் போல் அவர் கண்கள் முன்பு வந்து நின்றால், அவரால் என்னை நிராகரிக்க முடியாது” என்று யோசித்து, உகந்து அருளின திவ்யதேஶங்களில் வந்து, ஆழ்வாரை அங்கீகரித்து, ஆழ்வாருக்கு தன் திவ்ய மங்கள திருமேனி அழகைக் காண்பித்து, அவரை வசீகரித்து, அவருக்கு பேராநந்தத்தை அருளி, ஆழ்வாரால் இனி எம்பெருமானைப் பிரிந்து ஒரு க்ஷணம் கூட இருக்க முடியாது என்ற நிலையையும் ப்ரஸாதித்து, ஆழ்வாரை நித்யஸூரிகளுக்கு நிகராக இந்த பூலோகத்திலேயே மாற்றிப் பிறகு தன்னுடன் வைகுந்தத்திற்கும் அழைத்துச் சென்றான் என்று இப்படி எம்பெருமான் ஆழ்வாரை ஆட்கொண்ட விதத்தை பலவாறாக தன் பாசுரங்கள் மூலம் நமக்கு அருளுகிறார் திருமங்கையாழ்வார்.
பெரிய திருமொழியின் முதல் பதிகமாகிய “வாடினேன் வாடி” என்ற ப்ரபந்தத்தில், திருமங்கையாழ்வார் திருமந்த்ரத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறார். பதரிகாச்ரமத்தில் ப்ரகாசிப்பிக்கப் பட்டது திருமந்த்ரம். நாம் நமக்கு ரக்ஷகர் அல்லர் என்கிற உண்மையை விளக்குகிறது திருமந்த்ரம். நாம் எம்பெருமானின் அடிமைகள், அவனது சொத்து என்பதைக் காட்டுகிறது. இந்த உண்மையை நாம் திவ்யதேஶங்களில் உள்ள அர்ச்சா திருமேனி முன்பு அடி பணிவது மூலம் புரிந்து கொள்ளலாம் என்பதையே இந்த ப்ரபந்தம் காட்டுகிறது.
ஆழ்வார் உலக விஷயங்களில் ஈடுபடுபவராக இருப்பதனால் எம்பெருமான் ஆழ்வாரை உஜ்ஜீவிக்க ஶாஸ்த்ரத்தைக் காட்டுவது உசிதமல்ல என்று நினைத்து தன் வடிவழகைக் காட்டி வசீகரித்தான். ஆழ்வார் மிகவும் தேர்ந்த ரசிகராக இருப்பதால், அவருக்கு தன் அழகையும், மேலான பரமபத அநுபவத்தையுமே ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் அருளி, அவரை ஆட்கொண்டான்.
இதைக் கண்ட ஆழ்வார், திவ்யதேஶ அநுபவங்களையே உபாயமாகவும் உபேயமாகவும் கருதி “வாடினேன் வாடி” (பெரிய திருமொழி முதல் பத்து) துவங்கி “ஒரு நல் சுற்றம்” (பெரிய திருமொழி பத்தாம் பத்து) வரை எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேஶ அநுபவங்களிலேயே மூழ்கினார்.
ஆழ்வார் இவ்வாறு திவ்யதேச அநுபவங்களிலேயே மூழ்கி இருப்பதைக் கண்ட எம்பெருமான், “இவர் இப்படி இங்கேயே என் அழகை ரசித்துக் கொண்டு ஆனந்தித்திருந்தால் எப்படிப் பரமபதம் வருவார்?” என்று யோசித்து இவருக்கு இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையைக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்தான். ஆழ்வாருக்கு நித்ய அநுபவத்தைத் தர வேண்டும் என்ற ஆவலினால் அவருக்கு இங்குள்ள குறைகளைக் காண்பிக்க ஆரம்பித்தான் எம்பெருமான்.
ஸம்ஸாரத்தின் கொடுமைகளைக் கண்ட ஆழ்வார் மிகவும் பயந்து, பெரிய திருமொழி “மாற்றமுள” என்கிற 11ம் பத்தில் கடைசிப் பதிகத்தில், “ஆற்றங்கரை வாழ் மரம் போல” (பெரிய திருமொழி 11.8.1) என்றும் “பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போல்” (பெரிய திருமொழி 11.8.3) என்றும் “இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல்” (பெரிய திருமொழி 11.8.4) என்றும் எம்பெருமானிடம் பல் வேறு விதமாகக் கதறுகிறார்.
வறுமையில் இருப்பவர்களுக்கு ஒரு விலை உயர்ந்த பட்டு வஸ்த்ரம் கிடைத்தால் மிகுந்த ஆநந்தத்தை அளிக்கும் என்று கூறுவார்கள். அது போல், எம்பெருமான் தன்னுடைய குணம், ஸ்வரூபம், ரூபம், விபூதி என்று எல்லாவற்றையும் திருமந்த்ரத்தில் காண்பிக்கிறான். பட்டு வஸ்த்ரம் போல் இருக்கும் இந்த திருமந்த்ரத்தை, பகவத் விஷயத்தில் வறுமையில் இருந்த ஆழ்வாருக்கு எம்பெருமான் அருளினான்.
ஆழ்வாரும் திருமந்த்ரத்தின் உள்ளாழ்ந்த அர்த்தங்களை உணர்ந்து, எம்பெருமானின் திவ்யதேஶ அநுபவங்களில் மிகுந்த ஆனந்தம் பெற்று அதிலேயே ஈடுபட்டு வந்தார். அவருக்கு ஸம்ஸாரத்திற்கும் பரம பதத்திற்கும் வித்யாஸம் தெரியவில்லை. ஆழ்வாருக்கு ஸம்ஸாரத்தின் அஸ்திர / நிரந்தரமற்ற தன்மையை நினைவூட்டி அவர் இங்கேயே இருக்க முடியாது என்பதை உணர்த்த எம்பெருமான் ஸம்ஸாரத்தின் அடிக்கொதிப்பைக் காண்பிக்கிறான்.
திருக்குறுந்தாண்டகம்
ஸம்ஸாரத்தின் அடிக்கொதிப்பால் மிகவும் நொந்த ஆழ்வார் மேற்கொண்டு பாசுரங்கள் அருள முடியாமல் போய் விடுமோ என்று யோசித்த எம்பெருமான், ஆழ்வார் மேலும் பல திவ்ய தேசங்களுக்குச் சென்று கைங்கர்யங்கள் செய்து, பாசுரங்கள் அருள வேண்டும் என்று எண்ணி, அவருக்கு குணாநுபவங்களை அருளினான்.
எப்படி தாகத்தால் தவிக்கும் ஒருவன், தண்ணீரில் விழுந்து, தண்ணீரை தன் மேல் விட்டுக்கொண்டு, பருகி தாகத்தைத் தணித்துக்கொள்வானோ, அதே போல் ஆழ்வார் எம்பெருமானைத் தன் வாயால் பாடி, மனத்தால் சிந்தித்து, தலையால் வணங்கி இந்த திருக்குறுந்தாண்டக ப்ரபந்தத்தில் சரணடைகிறார்.
முதல் பாசுரத்தில்,
நிதியைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே
துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்தனமாக உதவுபவன் எம்பெருமான்; அவனே எல்லாராலும் விரும்பப்படும் பவளம்; தூணாக இருந்து எல்லாரையும் தாங்குபவனும் அவனே; அண்டங்களை எல்லாம் ஆள்பவனும் அவனே; எல்லார்க்கும் கதியாக இருப்பவனும் அவனே; தன் அன்பர்களை எப்பொழுதும் நினைத்துக்கொண்டு அவர்களிடம் ப்ரேமத்தை வர்ஷிப்பவனும் அவனே. அவன் தானே வந்து என் ஹ்ருதயத்தில் ஒரு அழகான இடத்தில் அமர்ந்து கொண்டான். என் கண்களால் அவனைக் கண்ட பிறகு, அவனை விட்டு என்னால் அகல முடியாது.
பாசுரம் 19ல்,
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந்துண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே?
எம்பெருமான் உகந்து எழுந்தருளியிருக்கும் திவ்யதேஶங்களில் ஈடுபட்டு அவனிடம் சரணடைந்தவர்களே உய்ய முடியும் என்கிறார்.
கடைசி பாசுரத்தில்,
வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும்
நாளும் தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மானவேல் கலியன் சொன்ன வண்தமிழ் மாலை நாலைந்தும்
ஊனமதின்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே
இந்த திருக்குறுந்தாண்டகத்தின் 20 பாசுரங்களையும் யாரொருவர் அநந்ய ப்ரயோஜனராய், அவனையே நினைத்து, சரணடைந்து அனுசந்திப்பார்களோ, அவர்கள் தெளிவிசும்பான வைகுந்தத்தையே ஆள்பவர்களாக இருப்பார்கள் என்று கலியனாகிய திருமங்கையாழ்வார் பலச்ருதி அருளினார்.
திருநெடுந்தாண்டகம்
முதலில் திருமங்கையாழ்வார் தேஹ ஸம்ரக்ஷணத்தில் ஈடுபட்டு ஸம்ஸாரிகமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். பிறகு எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றார். பிறகு, ஆழ்வார் முதலில் பெரிய திருமொழியை அருளினார். திவ்யதேசங்களில் எம்பெருமானின் பரமபத அநுபவத்தையே உணர்ந்த ஆழ்வார், ஸம்ஸாரத்திற்கும் வைகுந்தத்திற்கும் வாசி அறியாமல் ஆனந்தித்து பல பாசுரங்களை அருளினார். பிறகு, பெரிய திருமொழியின் இறுதியில், எம்பெருமானின் ஸங்கல்பப்படி ஸம்ஸாரத்தின் அடிக்கொதிப்பை உணர்ந்த ஆழ்வார், தன்னை தேஹ ஸம்பந்தத்திலிருந்து விடுவிக்குமாறு ப்ரார்த்தித்தார். பிறகு எம்பெருமான், உடனே ஆழ்வாருக்கு தர்ஶனம் தராமல் அவருடைய ஆர்த்தியை மேலும் தூண்டுவதற்காக காலம் தாழ்த்த, ஆழ்வார் தாகத்தால் துடிப்பவன் எப்படித் தண்ணீர் கிடைத்தவுடன் அதைப் பருகி, பின் அதிலே மூழ்கி, தண்ணீரை தன் மேல் கொட்டிக்கொண்டு அநுபவிப்பானோ, அதேபோல் ஆழ்வாரும் எம்பெருமான் தான் குணாநுபவத்தை ஆழ்வாருக்கு காட்டியவுடன், அவரும் எம்பெருமானைப் பற்றி வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தலையினால் வணங்கி என்று பல்வேறு விதமாக பகவத் அநுபவங்களைப் பாசுரங்களாக தன் இரண்டாவது ப்ரபந்தமாகிய திருக்குறுந்தாண்டகத்தில் அருளினார்.
மிகுந்த தாகத்தில் இருப்பவனுக்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் அவன் எப்படி மேலும் தண்ணீர் வேண்டும் என்று ஆசைப்படுவானோ, அதே போல், ஆழ்வாரும் எம்பெருமானின் அநுபவத்திற்கு மேலும் தாகத்துடன், திருவெழுக்கூற்றிருக்கை என்கிற மூன்றாவது ப்ரபந்தத்தில் திருக்குடந்தை ஆராவமுதனிடம் மிகுந்த அவாவுடன் சரணடைந்தார். எனவே இது சரணாகதி ப்ரபந்தம்.
திருவெழுகூற்றிருக்கைக்குப் பிறகு, திருமங்கையாழ்வார் இரண்டு திருமடல் ப்ரபந்தங்களை அருளினார். மடலூர்தல் என்பது, பண்டைய தமிழ் கலாசாரத்தில் இருந்த ஒரு மரபு. இதில் நாயகன் (அல்லது நாயகி) தன் அன்பிற்குப் பதில் தராத நிலையில், நாயகி (அல்லது நாயகன்) தன்னுடைய நிலை கண்டு நொந்து, ஆனால் தைர்யத்தை வரவழைத்துக்கொண்டு, உலகம் முழுவதும் காணும்படி தனக்கு நாயகனோடு இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தி நாயகனை வெட்கப்படுத்துகிறாள். இதனால் உலக மக்கள் அவனுடன் இணையும் பொருட்டு இவளுக்கு உதவுவார்கள்.
ஒரு பெண்ணின் உணர்வு நிலையை உள்வாங்கிக் கொண்ட திருமங்கையாழ்வார், இந்த இரண்டு மடல்களிலும் அத்தகைய தைர்யத்தை வெளிப்படுத்துகிறார். சிறிய திருமடலில் க்ருஷ்ணன் தொடர்பான விஷயங்களை அருளுகிறார்; மற்றும் பெரிய திருமடலில் திருநறையூர் நம்பி தொடர்பான விஷயங்களை அருளுகிறார் (திருநறையூர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திவ்யதேஶம்).
இவ்வாறாக மடலூர்ந்த பிறகும், எம்பெருமான் எழுந்தருளவில்லை. இறுதியில் திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் என்கிற ஒரு உன்னதமான அநுபவத்தை அருளி, எம்பெருமானை அடைகிறார். திருநெடுந்தாண்டகத்தில் 30 பாசுரங்கள் உள்ளன. இது 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஶுகர் மற்றும் முதல் ஆழ்வார்கள் போன்ற மஹான்கள் எம்பெருமானின் பரத்வத்தில் மக்நராய் (முழுகி) இருப்பார்கள். ஸநகர் மற்றும் திருமழிசைப்பிரான் போன்றோர் அவனது அந்தராத்ம ஸ்வரூபத்தில் மக்நராய் இருப்பார்கள்; பராஶரர், பாராஶர்யர் (வ்யாஸர்) மற்றும் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் போன்றோர் க்ருஷ்ணாவதாரத்தில் மக்நராய் இருப்பார்கள்; நாரதர் மற்றும் தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் போன்றோர் கோயிலில் (ஸ்ரீரங்கம்) மக்நராய் இருப்பார்கள் (ஸ்ரீரங்கம் எம்பெருமானின் பரத்வத்தை காட்டும் மற்றவற்றோடு சேர்த்து கூறப்படுகிறது, ஏனெனில் எம்பெருமானின் ஸ்வரூபம் இங்கே தானே உருவானது, மேலும் இந்த திவ்யதேஶம் மற்ற எல்லா திவ்யதேஶங்களுக்கும் மூலமாக விளங்குகிறது); ஸ்ரீ ஶெளநக பகவான் மற்றும் திருமங்கையாழ்வார் அர்ச்சாவதாரத்தில் மக்நராய் இருப்பார்கள் (அர்ச்சா மூர்த்தி வடிவிலுள்ள எம்பெருமான் எளிதில் அணுகக்கூடியவன். ஸௌலப்யத்தின் எல்லை நிலை).
திருநெடுந்தாண்டகத்தின் சீர்மை
பட்டரின் சரித்ரத்தில் முக்யமான நிகழ்வுகளில் ஒன்று, திருநாராயணபுரம் சென்று நஞ்சீயரைத் திருத்தி நம் ஸம்ப்ரதாயத்திற்குக் கொண்டுவருவது. மாதவாசார்யார் என்று முன்பு அழைக்கப்பட்ட நஞ்சீயரை நம் ஸம்ப்ரதாயத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பது எம்பெருமானாரின் திவ்யாஜ்ஞை. பட்டர் இதற்காகத் திருநாராயணபுரம் எழுந்தருள, பட்டரைப் பற்றிக் கேள்விப்பட்ட மாதவாசார்யார் இதனை உணர்ந்து, பட்டருடன் வாத ப்ரதிவாதத்தில் ஈடுபடுகிறார். பட்டர் திருநெடுந்தாண்டகத்தைக் கொண்டு எம்பெருமானின் பரத்வத்தை நிலைநாட்டி, அதனைத் தொடர்ந்து ஶாஸ்த்ரத்திலிருந்து அனைத்து அர்த்தங்களையும் அருளிச்செய்கிறார். மாதவாசார்யார் தோல்வியை ஒப்புக்கொண்டு பட்டரின் திருவடிகளில் விழுந்து அவரையே ஆசார்யனாக ஏற்றுக்கொள்கிறார். பட்டர் பெரியபெருமாளிடம் எழுந்தருளி, நடந்த அனைத்தையும் அவன் திருமுன்பே விண்ணப்பிக்கிறார். பெரியபெருமாள் மிகவும் ப்ரீதியடைந்து, பட்டரை திருநெடுந்தாண்டகம் அருளிச்செய்யுமாறு நியமிக்க, இதுவே பின்னர் வழக்கமாக ஆயிற்று. ஸ்ரீரங்கத்தில் இன்றும் அத்யயநோத்ஸவம் திருநெடுந்தாண்டகத்தை அரையர் விண்ணப்பம் செய்து தொடங்கப் படுகிறது.
திருநெடுந்தாண்டகத்தின் முதல் 3 பாசுரங்களில், ஆழ்வார் அனைத்து ஶாஸ்த்ரங்களின் ஸாரத்தையும் அருளிச்செய்கிறார். எம்பெருமானே அனைத்திற்கும் அந்தர்யாமியாக இருப்பவன், அவனே ஸர்வகாரணன், ஸ்ருஷ்டிகர்த்தா, ரக்ஷகன், அனைத்தையும் ஸம்ரக்ஷிப்பவன், பந்தங்களிலிருந்து விடுவிக்க ஸம்ஹாரம் செய்பவன் என்று இந்த 3 பாசுரங்களில் எம்பெருமானின் பரத்வத்தை நிலைநாட்டுகின்றார்.
மற்ற அனைத்து பாசுரங்களும் இந்த முதல் 3 பாசுரங்களின் விஸ்தாரமான விளக்கமாகும்.
- முதல் 10 பாசுரங்களில், ஆழ்வார் தன்னுடைய நிலையில் இருந்து கொண்டு – அதாவது திருமங்கையாழ்வாராகவே அருளிச்செய்கிறார்.
- அடுத்த 10, அதாவது 11-20 வரையிலான பாசுரங்களில், பரகாலநாயகியின் தாயாராக – திருத்தாயார் வார்த்தையாக அருளிச்செய்கிறார்.
- அடுத்த 10, அதாவது 21-28 வரையிலான பாசுரங்களில், ஆழ்வார் பரகாலநாயகி பாவத்தில் அருளிச்செய்கிறார் – பெருமாளுடனான விரஹத்தை தோழிகளிடம் விண்ணப்பிக்கும் பிராட்டி வார்த்தையாக அருளிச்செய்கிறார்.
- இறுதியாக, 29 & 30 ஆம் பாசுரங்களில், ஆழ்வார் மீண்டும் தானான நிலையில் நின்று திருமங்கையாழ்வாராக அருளிச்செய்கிறார்.
திருநெடுந்தாண்டகம், பகவத்கீதையின் 10ம் அத்யாயத்தின் 9ம் ஶ்லோகத்திற்கு ஸமானமானது:
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் |
கதயந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ||
அர்த்தம்: என்னிடம் மனதை நிலைநிறுத்தியவர்களும், என்னிடமே உயிரை வைத்திருப்பவர்களுமான பக்தர்கள், என்னைப் பற்றி பரஸ்பரம் ஸம்பாஷணம் செய்கிறார்கள், நித்யமும் பேசுகிறார்கள். இப்படியே காலத்தை க்ஷேபம் செய்யும் அவர்கள், த்ருப்தியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறார்கள்.
மச்சித்தா என்றால் — என்னிடம் மனதை நிலைநிறுத்தியவர்கள் என்று அர்த்தம். திருநெடுந்தாண்டகத்தில் முதல் 10 பாசுரங்களில், ஆழ்வாரின் மனம் எம்பெருமானையே சிந்திக்கிறது.
மத்கதப்ராணா என்றால் — நான் இல்லாமல் உயிர் வாழ முடியாத, என்னிடமே உயிரை (ப்ராணனை) வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம். அடுத்த 10 பாசுரங்களில், ஆழ்வாரின் திருவுள்ளம் எம்பெருமானின் திருவடிகளையே அடைந்துவிட்டது. எம்பெருமானையன்றி வேறொன்றையும் சிந்திக்க இயலாத நிலையில் இருக்கிறார்.
போதயந்த: பரஸ்பரம் என்றால், பக்தர்கள் தங்களுக்குள்ளே பரஸ்பரம் உரையாடுவது என்று அர்த்தம். எம்பெருமானின் கல்யாண குணங்களையும், திவ்ய சேஷ்டிதங்களையும் பரஸ்பரம் போதித்துக் கொண்டு ஆனந்திக்கிறார்கள். எம்பெருமானைப் பற்றிய உரையாடலே அவர்களுக்கு நிறைவையும் திருப்தியையும் அளிக்கிறது — வேறெதுவும் வேண்டாத நிலை அது. எம்பெருமானைப் பற்றி மற்றவரிடமிருந்து கேட்பதே, ப்ரேமத்தின் உச்சநிலையில் உள்ள அவர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. இங்கு இது பரகாலநாயகியும் தோழிகளும் உரையாடுவதைக் குறிக்கிறது.
ஆக, திருநெடுந்தாண்டகத்தின் முதல் 10 பாசுரங்களில், ஜீவாத்ம ஸ்வரூபம், பரமாத்ம ஸ்வரூபம், ஜீவாத்ம ஸ்வரூபத்திற்கேற்ற புருஷார்த்தம், அந்த புருஷார்த்தத்தை அடைவதற்கு உள்ள விரோதி, அந்த விரோதியைப் போக்கி புருஷார்த்தத்தை அடைவிக்கும் உபாயம் — இந்த ஐந்து அர்த்தங்களையும் (அர்த்தபஞ்சகம்) விளக்கும் திருமந்த்ரத்தையே விஷயமாகக் கொண்டு, அந்த அர்த்தத்திலேயே மூழ்கிக் காலம் கழித்தார்.
இரண்டாம் தஶகத்தில் – பரகாலநாயகியின் தாயார், தன் திருமகளைப் பற்றி கூறும் வார்த்தைகளாக இந்தப் பாசுரங்கள் அமைந்துள்ளன. தன் திருமகள், எம்பெருமானை மனதில் நினைத்துக் காலம் கழிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அளவற்ற ப்ரேமத்தினால் மூர்ச்சையடைந்தாள்; அவனை நேரில் கண்ணால் காண வேண்டும் என்ற துடிப்பை வளர்த்துக்கொண்டாள்; எதிர்பார்த்தபடி அவனை நேரில் காண இயலாமல் மீண்டும் மூர்ச்சையடைந்தாள். இவ்விதம் மூர்ச்சையடைந்த பரகாலநாயகியைப் பற்றித் தோழிகள் கூறுவதை கேட்டு, தாயார் தன் திருமகளைப் பற்றி அருளும் வார்த்தைகளாக அமைந்துள்ளது இந்தப் பத்து பாசுரங்கள்.
மூன்றாம் தஶகத்தில் – பரகாலநாயகியின் நிலையைக் கண்ட தோழி, அவளை சாந்தப்படுத்த விரும்பி, என்ன நடந்தது என்று கேட்க, பரகாலநாயகி தன்னைச் சமாளித்துக் கொண்டு தோழியிடம் நடந்ததை விண்ணப்பிக்கிறாள். பின்னர் கேள்வி பதில்கள் இல்லாத நிலையில், விரஹதாபம் மீண்டும் தலைதூக்கியது; தூது அனுப்புவதில் ஈடுபட்டாள். அதற்கும் எம்பெருமான் எழுந்தருளாத நிலையில், ஊடல் காரணமான கோபம் உச்சநிலையை அடைந்தது. நம்மாழ்வாரைப் போல் கோபத்தை நீண்ட காலம் கொண்டிருந்தால், எம்பெருமான் தானே வந்து காட்சி அளித்திருப்பான். ஆனால், திருமங்கையாழ்வாரின் ஸௌகுமார்யத்தினால் (மென்மையான தன்மை), கோபத்தைக் கைவிட்டு, முன்பு இருந்த ஆற்றாமையின் நிலை மீண்டும் வந்தது. இந்த நிலையிலும், எம்பெருமான் தானே வந்து காட்சி அளித்தால் மட்டுமே உயிர் தரிக்க முடியும் என்ற நிலையில் இருந்தாள். அதுவும் நடைபெறாத நிலையில், நம்மாழ்வாருக்கு “முனியே நான்முகனே [திருவாய்மொழி — 10.10]” என்பதில் பிறந்த பரமபக்தி, திருமங்கையாழ்வாருக்குத் இந்த தருணத்தில் உதித்தது; அநந்யகதித்வத்தையும் (அவனையன்றி வேறு கதியில்லை என்பதையும்), தன்னிடம் தோஷங்கள் மட்டுமே உள்ளது என்பதையும், எந்த யோக்யதையும் இல்லை என்பதையும் வெளிப்படுத்தி, இந்த பாசுரத்தில் ஆழ்வார் வாய்விட்டு “ஐயோ! நீ அல்லவோ என் மீது ப்ரேமம் கொண்டுள்ளாய்! இந்த நிலையிலும் நீ எழுந்தருளவில்லையே!” என்று கதறுகிறார்.
29ம் பாசுரத்தில் ஆழ்வார் அருளுகிறார்:
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்தடைத்த அம்மான் தன்னை
குன்றாத வலி அரக்கர் கோனை மாளக் கொடுஞ்-
சிலை வாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை
குன்றெடுத்த தோளினானை
விரிதிரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை
தண் குடந்தைக் கிடந்த மாலை
நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே
ஆழ்வார் திருக்குடந்தை எம்பெருமானை ப்ரார்த்தித்து, “அடியேனால் உம்மை விட்டு பிரிந்திருக்க இயலாது, அடியேனுக்கு திருவருள் புரிய வேண்டும்” என்று விண்ணப்பிக்கிறார்.
30ஆம் பாசுரத்தில்:
மின்னுமா மழை தவழும் மேகவண்ணா!
விண்ணவர் தம் பெருமானே! அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு
மறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னுமா மணிமாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழவினையை முதலரிய வல்லார் தாமே
திருமங்கையாழ்வார் எம்பெருமானை மிகுந்த ஆர்வத்துடன் அழைத்து, “அவாவற்று வீடு பெற்ற [திருவாய்மொழி — 10.10.11]” என்பதில் கூறியபடி ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து திருப்தியடைவதை இந்த ப்ரபந்தத்தில் முடிவாக அருளிச்செய்கிறார்.
இதுவே திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவற்றின் விளக்கத்தின் நிறைவாகும்.
ஆதாரம் – https://www.youtube.com/watch?v=eXU33T0RNeA&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=5 மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/11/simple-guide-to-dhivyaprabandham-part-4/
அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி
பதிவிடம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org