ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை
பாசுரம் 1
எப்படிப் பெரியாழ்வார் பாசுரம் பாடத் தொடங்கும்போதே எம்பெருமான் விஷயத்திலும் அவன் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடினாரோ, அப்படி மணவாள மாமுனிகளும், எம்பெருமானார் விஷயத்திலும் அவர் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடுகிறார்.
வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழியென
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை
யார் எப்பொழுதும் “வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!” என்று எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ, அப்படிப்பட்ட எம்பெருமானார் அடியார்களுக்கு யார் மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ, அப்படிப்பட்ட (முன் சொன்ன) அடியார்களுக்கு யார் மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ, அப்படிப்பட்ட (முன் சொன்ன) அடியார்களுடைய திருவடிகளில் யார் வணங்கி இருக்கிறார்களோ, அவர்கள், நித்யஸூரிகளுக்குத் தலைவர்களாக விளங்குவார்கள்.
பாசுரம் 2
நம்மாழ்வார் எப்படி திருவாய்மொழியின் முதல் பதிகத்தில் “தொழுதெழு என் மனனே” என்று சொல்லி, தொழுகைக்கு விஷயமான எம்பெருமானைக் காட்டும் மந்த்ரத்தை அடுத்த பதிகத்தில் “வண் புகழ் நாரணன்” என்று காட்டினாரோ, அதே போல, மணவாள மாமுனிகளும், இப்பாட்டில் எம்பெருமானார் விஷயமான மந்த்ரத்தை வெளியிடுகிறார்.
இராமாநுசாய நம என்று சிந்தித்திரா
மாநுசரோடு இறைப் போழ்து இராமாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு
யாரெல்லாம் “ராமாநுஜாய நம:” என்று சிந்திக்காமல் உளரோ அவர்களோடு ஒரு க்ஷணப்பொழுதும் பழகாமல் இருக்கப் பார்ப்பவர்களுடைய இரண்டு திருவடிகளில் சேர்ந்திருப்பவர்களுடைய இரண்டு திருவடிகளை வணங்குபவர்கள் நித்யஸூரிகளுக்கு எப்பொழுதும் இருக்கும் செல்வமாக இருப்பார்கள்.
பாசுரம் 3
எம்பெருமானாரைப் பார்த்து “அடியேனுக்கு எல்லா உறவும் தேவரீராக இருக்க, அந்த நிலைக்கு தடையாக இருக்கும் என் உடம்பை ஏன் இன்னும் அறுத்து அருளவில்லை?” என்கிறார்.
தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம்*
என் தனக்கு நீயே எதிராசா!* இந்நிலைக்கு
ஏராத இவ்வுடலை இன்றே அறுத்தருளப்*
பாராதது என்னோ? பகர்
எதிராசரே! தேவரீரே அடியேனைப் போன்றவர்களுக்குத் தந்தை, அன்புடைய தாய், மனைவி, பிள்ளைகள் மற்றும் பெரிய செல்வம். இந்த நிலைக்குப் பொருந்தாத என்னுடைய இந்த உடம்பை இப்போதே அறுத்து அருளாதது என்ன காரணத்தினாலேயோ? அதைச் சொல்லி அருள வேண்டும்.
பாசுரம் 4
கீழ்ப் பாசுரத்தில் விரோதியாகச் சொன்ன உடம்பையே தனக்குச் (ஆத்மாவுக்கு) சிறைக் கூடமாக நினைத்து, எம்பெருமானாரே தன்னை இந்தச் சிறையிலிருந்து விடுவிக்கக் கூடியவர் என்று கொண்டு அதை அவரிடத்தில் ப்ரார்த்திக்கிறார்.
இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யானேகி*
அந்தமில் பேரின்பத்துள் ஆகுவேன்* – அந்தோ
இரங்காய் எதிராசா! என்னை இனி உய்க்கை*
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்
இந்த உடல் என்னும் சிறையில் இருந்து விடுதலை பெற்று எப்பொழுது அடியேன் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று முடிவு இல்லாத பேரின்பத்தை உடைய பரமபதத்துக்குள் இருக்கப் பெறுவேன்? யதிகட்கு இறைவரே! கருணையைப் பொழிய வேண்டும். அடியேனை ரக்ஷிப்பது தேவரீருடைய பொறுப்பன்றோ? ஆலோசித்துப் பார்த்தருளவும்.
பாசுரம் 5
எம்பெருமானாராலே தன்னைக் கைவிட முடியாது என்பதை ஒரு உதாரணத்தைக் கொண்டு உணர்த்துகிறார்.
தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்*
இன்புறுமோ? தந்தை எதிராசா! * – உன் புதல்வன்
அன்றோ உரையாய் யான் ஆதலால்* உன் போகம்
நன்றோ? எனை ஒழிந்த நாள்
தன்னுடைய பிள்ளை அருகில் இல்லாதபோது தான் அனுபவிக்கும் செல்வம் முதலியவை தந்தைக்கு இன்பத்தைக் கொடுக்குமோ? யதிகட்குத் தலைவரே! அடியேன் தேவரீரின் புத்ரன் அல்லவோ? தேவரீரே இதைச் சொல்லி அருள வேண்டும். ஆகையாலே, அடியேனைப் பிரிந்து இருக்கும் நிலையில் தேவரீருடைய இன்பம் நன்றாக இருக்குமோ? [“அது இன்பமாக இருக்காது என்பதால் அடியேனையும் தேவரீரிடத்தில் அழைத்துக் கொள்ள வேண்டும்” என்று கருத்து]
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org