ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: |
ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந்நந்தயந்தம் நமாமி தம்|| (3)
பதவுரை: தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு, ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய, ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை, ஸம்யக் – நன்றாக, (பரமபக்தியோடு), க்ருத்வா – செய்து, ஸுபை: – கேட்பாருக்கு நன்மை பயக்குமவையான, ஸ்வை:ஆலாபை: – தம்மிஷ்டப்படியே பேசும் ஸுலபமான பேச்சுக்களாலே, ஸ்ரோத்ரூந் – கேட்போரை, நந்தயந்தம் – மகிழ்வித்துக்கொண்டிருக்கிற, தம் – அம்மாமுநிகளை, நமாமி-வணங்குகிறேன்.
கருத்துரை: ‘ஆர்வசனபூடணத்தின் ஆழ்பொருளல்லாமறிவார் ? ஆர் அது சொல் நேரில் அநுட்டிப்பார்’ (உபதேச. 55) என்கிறபடியே அறிவதற்கும், அறிந்தபடியே அநுஷ்டிக்கைக்கும் முடியாத ஸ்ரீவசநபூஷணார்த்தங்களை ஸிஷ்யர்களுக்கு உபதேசிக்கும்போது எவ்வளவு எளிய நடையில் உபதேசித்தாலும், அர்த்தத்தின் அருமைக்கு ஏற்றபடி அவ்வுபதேசமும் அரிய நடையாகவே தோன்றும். ஸாயம்ஸந்த்யாவந்தநமும் பெருமாள் திருவாராதநமும் முற்றுப்பெற்ற பின்பு இப்போழுது செய்யும் ப்ரவசநம் தன்னிச்சைப்படி தானாகவே வரும் எளிய பேச்சாகவே இருக்கும். இதுவே ஸ்வைராலாபம் எனப்படும். ஸகல ஸாஸ்த்ரார்த்தங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மிகமிக எளிமையான பேச்சுக்கு ஸ்வைராலாபம் என்று பெயர். இத்தகைய பேச்சுக்களாலே முன்பு ஸ்ரீவசநபூஷணம் கேட்ட தம் ஸிஷ்யர்களையே மகிழ்விக்கிறார் மாமுனிகள் என்க. இங்கு ‘ஹரி:’ என்றது பூர்வதிநசர்யையில் பதினேழாம் ஸ்லோகத்தில் ப்ரச்தாவிக்கப்பட்ட ‘ரங்கநிதி’ என்ற தம் திருவாராதநபெருமாளாகிய அரங்கநகரப்பனையேயாகும். ஹரி: என்றதற்கு ஆஸ்ரிதருடைய விரோதியைப் போக்குமவனென்றும், எல்லா தேவதைகளையும் நியமிப்பவன் (அடக்கியாள்பவன்) என்றும் பொருள். பூர்வதிநசர்யையில் ‘அத ரங்கநிதிம்’ (17) என்று காலையாராதநமும், ‘ஆராத்யஸ்ரீநிதிம்’ (29) என்று பகலாராதநமும், இந்த ஸ்லோகத்தில் மாலையாராதநமுமாகிய மூன்று வேளைத் திருவாராதநங்களும் கூறப்பட்டது காணத்தக்கது.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org