ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
தத: கநகபர்யங்கே தருணத்யுமணித்யுதௌ |
விஸாலவிமல ஸ்லக்ஷ்ண துங்கதூலாஸநோஜ்ஜ்வலே || (4)
ஸமக்ரஸௌரபோத்கார நிரந்தர திகந்தரே |
ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வராஸநே || (5)
பதவுரை: தத: – அதன்பிறகு, தருணத்யுமணி த்யுதௌ – பாலஸூர்யன் போல் காந்தியையுடையதாய், விஸால விமலஸ்லக்ஷ்ண துங்க தூலாஸன உஜ்ஜ்வலே – அகன்றதும், அழுக்கற்றதும், மழமழப்பானதும், பருமனானதுமான பஞ்சுமெத்தையினால் விளங்குகின்ற தாய், ஸமக்ரஸௌரப உத்கார நிரந்தர திகந்தரே – நிறைந்த, பெருமாள் சாத்திக்களைந்த மாலைகளின் நறுமணத்தின் ப்ரவாஹத்தினால் சூழப்பட்ட நான்கு திக்குகளையுமுடையதாய், ஸோபதாநே – சாய்ந்து கொள்வதற்கேற்ற தலையணைகளை உடையதாயுமிருக்கிற, கநகபர்யங்கே – தங்கத்தாலான மஞ்சத்தில், ஸுகுமாரே – மிகவும் மெத்தென்றிருக்கிற, வரஆஸநே – (த்யானத்துக்கு உரியதாய்) உயர்ந்த தர்ப்பம் மான்தோல் துணிகளையிட்டுச் செய்யப்பட்ட ஆஸநத்தில், ஸுகஆஸீநம்-(த்யானத்திற்கு தடையில்லாதபடி) ஸுகமாக உட்கார்ந்திருக்கிற, தம்-அந்த மணவாளமாமுநிகளை, சிந்தயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.
கருத்துரை: ஸகலஸாஸ்த்ரார்த்தங்களுக்கும் நோக்கான பஞ்சமோபாயத்தின் (எம்பெருமானாரே மோக்ஷோபாயம் என்பதின்) பெருமையை உள்ளடக்கியிருக்கும் தமது இனிய எளிய பேச்சுக்களாலேயே ஸிஷ்யர்களை மகிழ்வித்தபின்பு, அவ்வெம்பெருமானாரை த்யாநம் செய்வதற்கு உறுப்பாக மாமுனிகள் ஸ்வர்ணமயமான கட்டிலில் ஆஸநத்தில் எழுந்தருளியிருக்கும் அழகை, தாம் ஸதா த்யாநம் செய்வதாக இந்த ஸ்லோகத்தினால் தெரிவிக்கிறார். தாமே ஆசைப்பட்டு மஞ்சத்தில், அதிலும் ஸ்வர்ண மஞ்சத்தில் உட்காருதல், ஸந்யாஸிகட்கு ஸாஸ்த்ரத்தில் மறுக்கப்பட்டிருந்தாலும் ஸிஷ்யர்களுடைய வேண்டுகோளுக்கிரங்கி, அவர்கள் செய்வித்திட்ட ஸ்வர்ணமஞ்சத்தில் வீற்றிருப்பது மறுக்கப்படவில்லையென்பது கருதத்தக்கது. ‘பொன் வெள்ளி வெண்கலம் செம்பு கல் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களில் உண்பதினால் ஸந்யாஸிக்கு பாபம் ஏற்படாது. அப்பாத்திரங்களைப் பிறரிடம் கேட்டுத் தானமாக வாங்கினால் தான் பாபம் உண்டாகும்’ என்று மேதாதிதி கூறியதை நோக்கினால், உண்ணும் கலத்தைச் சொன்னது கட்டிலுக்கும் உபலக்ஷணமாய், பொன்னால் செய்த கட்டிலைகேட்டுப் பெற்றுக் கொள்ளாமல், ஸிஷ்யர்கள் பொன்கட்டிலை இட்டு அதில் வீற்றிருக்கும்படி ப்ரார்த்தித்தால் அதன் மீது வீற்றிருப்பது குற்றத்தின்பாற்படாதென்று கொள்ளல்தகும். பொன்னின் மீதோ கட்டிலின் மீதோ தமக்குள்ள ஆசையைத் தடுக்கமுடியுமே தவிர, மிகமிக உயர்ந்தவர்களான ஸிஷ்யர்களின் வேண்டுகோளைத் தடுக்கமுடியாதிறே எப்படிப்பட்ட ஸந்யாஸிகளுக்கும். ஆக பொன் கட்டிலை இவர் உபயோகிப்பது தவறன்றென்க.
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org