ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி
உபதேச ரத்தினமாலை
உபதேச ரத்தின மாலை ஒரு அற்புதமான க்ரந்தம். பெயரிலிருந்தே இது உபதேசங்களால் (அறிவுரைகளால்) ஆன மாலை என்று நமக்குத் தெரிகிறது. இந்த உபதேசங்கள் மரகதம் மற்றும் மாணிக்கம் (ரத்தினம்) போன்றவையாகக் கருதப்படுகின்றன. அதனாலேயே இதற்கு உபதேச ரத்தின மாலை என்று பெயர்.
உபதேச ரத்தினமாலை, ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம் என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தின் ஸாரமாகும். அவர் திருவாய்மொழியின் ஸாரத்தை ஸ்ரீவசன பூஷணமாக அருளி, உஜ்ஜீவனத்திற்கு (இறுதி புருஷார்த்தத்தை அடைவதற்கு) ஆசார்யரின் அபிமானமே எல்லாமென்று நிறைவு செய்கிறார்.
மணவாள மாமுநிகள், ஸ்ரீவசன பூஷணத்தை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுருக்கமாகவும் எளிமையாகவும் உபதேச ரத்தின மாலையாக அருளிச்செய்கிறார்.
பகவத்கீதையில் கண்ணன் எம்பெருமான் “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” என்று அருளுகிறான் — அதாவது “மற்ற எல்லா உபாயங்களையும் விட்டு என்னையே சரணடை” என்று. எம்பெருமான் இதை இரண்டாம் அத்யாயத்திலேயே கூறியிருக்கலாம், ஆனால் இறுதியிலேயே அருளினான். பகவான் ஆத்மா என்றால் என்ன, பரமாத்மா என்றால் என்ன, கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் முதலியவற்றை விளக்கி, இறுதியில் தன்னையே சரணடையுமாறு வெளிப்படுத்துகிறான். நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் இதையே பின்பற்றி, அறிமுக விஷயங்களை முதலில் கூறி, பின்னரே நம்மை உத்தம ஞானத்தை நோக்கி வழிநடத்துகிறார்கள்.
மணவாள மாமுநிகள் உபதேச ரத்தின மாலையில் ஆழ்வார்களின் திருவவதார ஸ்தலம், மாதம், திருநக்ஷத்ரம் மற்றும் அவர்களின் அவதாரத்தின் சிறப்பு முதலான அறிமுக விஷயங்களுடன் தொடங்குகிறார். பின்னர், முக்யமான ஆசார்யர்களுள் ஒருவரான ஆசார்ய ஸ்ரீமந்நாதமுனிகளின் வைபவத்தை விவரிக்கிறார். பிறகு, நம் ஸம்ப்ரதாயமே நம்பெருமாளால் “ராமாநுஜ தர்சனம்” என்று மிகவும் போற்றப்படுவதை எடுத்துக்காட்டுகிறார். நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது பகவத் ராமாநுஜரினாலேயே என்றும், அவரே நம் ஸம்ப்ரதாயத்தின் சிகரம் என்றும் மாமுநிகள் விளக்கியருளுகிறார். மேலும் திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் அருளிய க்ரமத்தையும் அவர் எடுத்துக்காட்டுகிறார்.
ஈடு 36000 படி வ்யாக்யானம் நம்பிள்ளையால் அருளிச்செய்யப்பட்டு, வடக்குத் திருவீதிப் பிள்ளையால் ஏடுபடுத்தப்பட்டது. பின்னர் அது அவரது சிஷ்யரான ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு வழங்கப்பட்டு, ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள், நாலூர்ப் பிள்ளை, நாலூராச்சான் பிள்ளை, திருவாய்மொழிப் பிள்ளை என்று தொடர்ந்து ஓராண் வழி வந்து இறுதியில் மாமுநிகளைச் சென்றடைந்தது. வடக்குத் திருவீதிப் பிள்ளையிடமிருந்து இந்த ஞானம் அவரது புத்ரராகிய பிள்ளை லோகாசார்யருக்கும் அருளப்பட்டது. உபதேச ரத்தின மாலை ஸ்ரீவசன பூஷணத்தைப் பற்றிய க்ரந்தம் ஆதலால், ஸ்ரீ வசன பூஷணத்தை அருளிய பிள்ளை லோகாசார்யரை மையமாக கொண்டு வந்து நிறுத்துகிறார் மாமுனிகள். உபதேச ரத்தின மாலையில், அதுவரையில் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் அறிமுகப் பகுதியேயாகும்.
மாமுநிகள் ஸ்ரீவசன பூஷணத்தின் சீர்மையை மேலும் வலியுறுத்துகிறார். இந்த க்ரந்தத்தில் பல பாசுரங்கள் மூலம் அதன் அர்த்தங்களையே விரிவாக விளக்குகின்றார்.
பாசுரம் 61
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
ஆன குருவை அடைந்தக்கால் – மாநிலத்தீர்
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்
தானே வைகுண்டம் தரும்
அர்த்தம்: உண்மையான ஞானமும் அநுஷ்டானமும் நன்றாக உடையவரான ஆசார்யரைச் சரணடைந்தால், தேன் நிறைந்த கமலத்தில் வாழும் திருமாமகளின் கொழுநனான ஸ்ரீமந்நாராயணன் தானே அத்தகையவருக்குப் பரமபதத்தை அருளுவான்.
பாசுரம் 64
தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது
அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் – அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசார்யனைப்
பிரிந்திருப்பார் ஆர் மனமே பேசு
அர்த்தம்: தன் ஆசார்யன் இந்த உலகில் இருக்கும் நாளில் அவனுக்கு அடிமை செய்வதே மிகப்பெரிய அநுக்ரஹம் என்று முழுமையாக அறிந்திருந்தும், அதில் ஆசை இன்றி ஆசார்யனைப் பிரிந்திருப்பார் யார்? மனமே, நீயே சொல்.
மாமுநிகள் தம் ஆசார்யர் பரமபதம் எழுந்தருளும் வரை அவருக்கு எல்லாக் கைங்கர்யங்களும் செய்தருளினார். அதன் பின்னர் தம் ஆசார்யரின் நியமனப்படி ஸ்ரீரங்கம் எழுந்தருளினார்.
பாசுரம் 66
பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில்
அன்பு அதுவும் மற்று மிக்க ஆசையினால் – நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்
இந்த பாசுரத்தில், மாமுநிகள் ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டியருளுகிறார். நம்பிள்ளையின் சிஷ்யரான பின்பழகிய பெருமாள் ஜீயரின் நடத்தையை உதாரணமாக எடுத்துக்காட்டி, தன் ஆசார்யரின் திருமேனியின் மீது சிஷ்யன் கொண்டிருக்க வேண்டிய பரம பக்தியின் முக்யத்வத்தை விளக்குகிறார்.
பாசுரம் 72
பூர்வாசார்யர்கள் போதம் அனுட்டானங்கள் கூறுவார்
வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி
இருள் தருமா ஞாலத்தே இன்பமுற்று வாழும்
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து
அர்த்தம்: ஒருவர் ஆசார்யரைச் சரணடைந்து, நம் பூர்வாசார்யர்கள் வகுத்த அனுஷ்டானங்களைப் பின்பற்றி, நிறைவான வாழ்வு வாழ வேண்டும்.
இறுதி பாசுரத்தில், பலஶ்ருதியாக, மாமுநிகள் — இந்தப் பாசுரங்களை அநுஸந்தித்து உள்ளத்தில் உணர்பவர்கள் யதிராஜரான ஸ்ரீராமாநுஜரின் திருவருளுக்குப் பாத்திரமாவார்கள் என்று அருளிச்செய்கிறார்.
பாசுரம் 74 – எறும்பியப்பா அருளியது
மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை – உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமாநவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன்
அர்த்தம்: மண்ணுலகில் வாழும் உயிர்களே! மாமுனிகளின் திவ்யமான சிவந்த திருவடித் தாமரைகள் யாருடைய சிரஸ்ஸை தொடுகின்றனவோ, அவர்கள் வைகுண்டத்தில் நுழைவு பெறுவது நிச்சயம் — அமானவன் (ஒரு நித்யஸூரி) அவர்களைத் தொட்டு உள்ளே அனுமதிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.
இப்பாசுரம், எறும்பியப்பாவினால் மாமுனிகளின் மேன்மையை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ள பாசுரம். ஜீவாத்மாக்களின் உஜ்ஜீவனத்தில் மாமுனிகளின் திருவடித் தாமரைகளின் மஹிமையை வெளிப்படுத்துகிறது இந்தப் பாசுரம். மாமுனிகள் தமது திவ்யமான க்ருபையினால், ஸ்ரீவசன பூஷணத்தின் ஸூத்ர வடிவில் உள்ள விஷயங்களை, உபதேச ரத்தின மாலையில் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாசுர வடிவில் வெளியிட்டருளினார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
திருவாய்மொழி நூற்றந்தாதி என்பது மணவாள மாமுனிகள் தம்முடைய க்ருபையினால் அருளிய திவ்யமான க்ரந்தமாகும். பகவத் ராமானுஜர் காலத்தில் அமுதனாரால் அருளிச் செய்யப்பட்ட இராமானுச நூற்றந்தாதி இருந்தது. ஆழ்வாருக்கு நூற்றந்தாதி இல்லாமல் இருந்தமையால், மாமுனிகள் திருவாய்மொழி நூற்றந்தாதி அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டார். இந்த நூல் ஆழ்வாரையும் அவரது ப்ரபந்தத்தையும் முதன்மையாகக் கொண்டாடுவதாக அமைய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.
இந்த அற்புதமான திருவாய்மொழி நூற்றந்தாதியில், மாமுனிகள் திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்திலும் (பத்து பாசுரங்கள் கொண்டது) உள்ள சாரத்தை ஒவ்வொரு பாசுரத்தில் இருக்கும்படி அருளிச்செய்துள்ளார். திருவாய்மொழியை முழுமையாகக் கற்று உணர்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனால், மாமுனியின் இந்த க்ரந்தத்தால், ஆழ்வாரின் நிலை, மனோரதம் மற்றும் பாவத்தின் ஸாரத்தை நாம் எளிதில் உணர்ந்துகொள்ள இயலும். திருவாய்மொழி எவ்வாறு தொடங்குகிறது, எவ்வாறு விரிகிறது, மற்றும் ஆழ்வார் எவ்வாறு ப்ரபந்தத்தை நிறைவு செய்கிறார் என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.
மாமுனிகள் இந்த க்ரந்தத்தை அருளிச் செய்யும் போது சில நியமங்களைக் கடைபிடித்தருளுகிறார்:
- இது அந்தாதி வடிவில் (திருவாய்மொழி அந்தாதி வடிவில் இருப்பதைப் போல்) இருக்கிறது, மேலும் சுருக்கமாகவும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.
- நம்மாழ்வாரின் திருநாமம் மற்றும் வைபவம் ஒவ்வொரு பாசுரத்திலும் இடம்பெறுகிறது.
- நம்பிள்ளையின் ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்திலிருந்து ஒவ்வொரு பதிகத்தின் கருத்துக்களும் ஒவ்வொரு பாசுரத்தில் சுருக்கமாக அமைந்துள்ளது.
மாமுனிகளின் திருவாய்மொழி நூற்றந்தாதி, அந்தாதி வடிவத்தையே பின்பற்றுகிறது – அதாவது ஒரு பாசுரத்தின் இறுதிச் சொல்லே அடுத்த பாசுரத்தின் முதல் சொல்லாக அமையும். இதுவே அந்தாதி எனப்படும்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி “உயர்வற” என்று தொடங்குவதைப் போல், மாமுனிகளின் திருவாய்மொழி நூற்றந்தாதியும் “உயர்வே” என்று தொடங்குகிறது. மேற்கூறிய நியமங்கள் அனைத்தையும் மனதில் கொண்டு, மாமுனிகள் திருவாய்மொழி நூற்றந்தாதி என்ற இந்த அற்புதமான க்ரந்தத்தை அருளிச்செய்தார்.
திருவாய்மொழி “உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்” என்று துவங்குகிறது. நம்மாழ்வாரின் இந்த முதல் பதிகத்தில் உள்ள பத்து பாசுரங்களில் உயர்ந்த வேதாந்தம் விளக்கப்படுகிறது. எம்பெருமானின் பரத்வம், அவனது ஸர்வஶக்தி, ஶரீர ஶரீரி பாவம் முதலியவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது.
மாமுனிகளின் அகடித கடநா ஸாமர்த்யம் இவை அனைத்தையும் – அதாவது இந்த பத்து பாசுரங்களின் ஸாரத்தை – வேதாந்த தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கியபடி – வெறும் இரண்டே வரிகளில் கொண்டு வந்துவிட்டார்.
பாசுரம் 1
உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டுரைத்து – மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு
இந்தப் பாசுரத்தில், முதல் இரண்டு சொற்களிலேயே மாமுனிகள் எம்பெருமானின் மஹிமையையும் பரத்வத்தையும் அழகுற நிலை நிறுத்தியுள்ளார். எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பட்ட ஆழ்வார், இவை அனைத்தையும் ஸாக்ஷாத்காரமாகக் கண்டருளினார். மயர்வு ஏதும் வராதவாறு மானிடரை வாழ்விக்கும் நம்மாழ்வாரின் (மாறனின்) திவ்யமான சொற்களே இந்த ஜீவாத்மாக்களுக்கு மோக்ஷம் அடைவதற்கான வேர் (அல்லது காரணமாக) அமைகின்றன.
மாமுனிகள், நம்பிள்ளையின் ஈடு வ்யாக்யானத்தில் அத்யந்த நிபுணரானவர்; அதன் கருத்துக்களை முழுமையாக அனுஸந்தித்தவர். ஈடு வ்யாக்யானத்தில் மூன்று ப்ரவேஶங்கள் (முகப்புரைகள்) உள்ளன – முதல் ஶ்ரிய:பதிப் படி, இரண்டாம் ஶ்ரிய:பதிப் படி, மூன்றாம் ஶ்ரிய:பதிப் படி என்று அழைக்கப்படும் அவை. மேலும் ஒவ்வொரு பதிகத்திற்கும் தனியான ப்ரவேஶம் உள்ளது. இவை அனைத்தையும் தமது திருவுள்ளத்தில் எப்பொழுதும் தரித்து, அவற்றின் ஸாரத்தை திருவாய்மொழி நூற்றந்தாதியில் அருளிச்செய்திருப்பது மணவாள மாமுனிகளின் வைபவத்தையும் திருவாய்மொழி நூற்றந்தாதியின் சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
இத்துடன் இத்தொடர் கட்டுரைகள் முடிவுக்கு வருகின்றன.
ஆதாரம் – https://www.youtube.com/watch?v=W4vjhU2FUlo&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=9 மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/12/simple-guide-to-dhivyaprabandham-part-10/
அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி
பதிவிடம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org