திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 5 (முதல், இரண்டாம், மூன்றாம், நான்முகன் திருவந்தாதி)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி

<< பகுதி 4

திவ்யப்ரபந்தம் அருளிச்செயல் என்றும் அழைக்கப்படுகிறது. ப்ரபந்தம் என்றால் பிணைப்பது என்று பொருள்படும். ஆழ்வார்களின் ப்ரபந்தங்களுக்கு எம்பெருமானையே அடியார்களோடு பிணைக்கும் ஶக்தி உண்டு; அதேபோல் அடியார்களை பகவத்விஷயத்தில் ஈடுபடுத்தி எம்பெருமானோடு பிணைக்கிறது. எனவே இது ப்ரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. திவ்யப்ரபந்தம் ஸம்ஸாரத்தின் தோஷங்களால் பாதிக்கப்படாதது; குற்றமற்ற, தூய்மையான பக்தியில் ஈடுபட உதவுகிறது.

வேதம் ஒரே ஶாஸ்த்ர உடலாக இருந்தாலும், மக்கள் எளிதில் அநுஸரிக்கும் பொருட்டு வேதவ்யாஸர் அதை நான்கு பாகங்களாகப் பிரித்தருளினார் – ரிக், யஜுர், ஸாம மற்றும் அதர்வண என்று.

அதேபோல், நாதமுனிகள் திவ்யப்ரபந்தத்தை நான்கு பாகங்களாகப் பிரித்தருளினார் – முதல் ஆயிரம், இரண்டாம் ஆயிரம், இயற்பா/மூன்றாம் ஆயிரம், நான்காம் ஆயிரம் என்று.

திவ்யப்ரபந்தத்தின் நான்கு பாகங்கள்

  • முதல் ஆயிரத்தில் நாதமுனிகள் பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலஶேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவி ஆழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம் ஆகியவற்றை சேர்த்தருளினார்.
  • இரண்டாம் ஆயிரத்தில் நாதமுனிகள் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவற்றை தொகுத்து அருளினார்.
  • மூன்றாம் ஆயிரத்தில் நாதமுனிகள் இயற்பாவைச் சேர்த்தார் – இது உரைநடை வடிவமானது. இயற்பா பாசுரங்களுக்கு பொதுவாகப் ராகமோ தாளமோ இல்லை. தமிழ் இலக்கியத்தில் மூன்று வகைகள் உண்டு:
    • இயல் (ஸம்ஸ்க்ருதத்தில் கத்யம்) என்பது பாடலின்றி உரைநடை வடிவம்
    • இசை என்பது இசை வடிவத்தில் அமைக்கக்கூடியது
    • நாடகம் என்பது நாடக/நாட்டிய வடிவம்.
  • நான்காம் ஆயிரத்தில் நாதமுனிகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைச் சேர்த்தருளினார்.

திவ்யப்ரபந்தம் நம் ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் உயிர் நாடியாக கருதப்படுகிறது. நம்மாழ்வார் ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவராகக் கருதப்படுகிறார்.

நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்களும் நான்கு வேதங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும், இதிஹாஸ புராணங்களுக்கும் ஸமமானவையாகக் கருதப்படுகின்றன.

  • திருவிருத்தம் – 100 பாசுரங்கள் – ரிக் வேதத்திற்கு ஸமம்
  • திருவாசிரியம் – 7 பாசுரங்கள் – யஜுர் வேதத்திற்கு ஸமம்
  • பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள் – அதர்வண வேதத்திற்கு ஸமம்
  • திருவாய்மொழி – 1102 பாசுரங்கள் – ஸாம வேதத்திற்கு ஸமம்.

வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் இருப்பது போல், திருமங்கை ஆழ்வாரின் ஆறு ப்ரபந்தங்களும் நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்களுக்கு ஆறு அங்கங்களாக கருதப்படுகின்றன. வேதத்தின் ஆறு அங்கங்கள் யாதெனில்: (1) ஶிக்ஷா (உச்சாரண விதிகள்), (2) வ்யாகரணம் (இலக்கணம்), (3) சந்தஸ் (யாப்பிலக்கணம்), (4) நிருக்தம் (சொற்பிறப்பியல்), (5) ஜ்யோதிஷம் (ஜோதிட ஶாஸ்த்ரம்), (6) கல்பம் (கர்மானுஷ்டான விதிகள்).

மற்ற எல்லா ப்ரபந்தங்களும் நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களுக்கு அங்கங்களாகவே கருதப்படுகின்றன.

திவ்யப்ரபந்தங்களின் நோக்கம் நாம் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்யவேண்டும் என்பதே ஆகும். ஆழ்வார்களின் ப்ரபந்தங்களை நாம் அநுஸந்திக்க அநுஸந்திக்க, அவை அனைத்தும் எம்பெருமானுக்கு மங்களாஶாஸநங்களாகிறன. 

பொன்னடிக்கால் ஜீயர் தம் திருப்பாவை ஸ்வாபதேஶத்தில், திருப்பாவையை நாள்தோறும் அநுஸந்திப்பதால் குரு பரம்பரையையும், த்வய மஹாமந்த்ரத்தையும் ப்ரகாஶப்படுத்தி மங்களாஶாஸனம் செய்கிறோம் என்று அருளிச்செய்கிறார்.

அருளிச்செயல் முழுவதும் குறிப்பாக அர்ச்சாவதார அநுபவத்திற்காகவே அமைந்துள்ளது. இதை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயம் சூர்ணிகை 70இல் தெளிவாக விளக்கியருளினார். இந்தச் சூர்ணிகையில், நாயனார் வேத வேத்ய ந்யாயத்தின் அடிப்படையில் (அதாவது வேதம் ஶ்ரீராமனாக அவதரித்த எம்பெருமானை விளக்குவதற்காக ஶ்ரீராமாயணமாக அவதரித்தது என்னும் தத்வத்தின் அடிப்படையில்) ப்ரமாணம் மற்றும் ப்ரமேயம் பற்றிய ஒரு அட்டவணையை அருளிச்செய்கிறார்.

  • வேதம் எம்பெருமானின் பரத்வத்தைப் (பரமபத நாதனை) பேசுகிறது.
  • ஶ்ரீ பாஞ்சராத்ரம் வ்யூஹ எம்பெருமானைப் பற்றிப் பேசுகிறது.
  • மனு ஸ்ம்ருதி முதலியன அந்தர்யாமி எம்பெருமானைப் பற்றிப் பேசுகின்றன.
  • ஶ்ரீராமாயணமும் மஹாபாரதமும் ஶ்ரீராமன், க்ருஷ்ணன் போன்ற விபவாவதாரங்களைப் பற்றிப் பேசுகின்றன.
  • அருளிச்செயல் (த்ராவிட வேதம் அல்லது தமிழ் வேதம் என்றும் அழைக்கப்படுகின்றது) அர்ச்சாவதார எம்பெருமான்களைப் பற்றிப் பேசுகிறது.

எம்பெருமான் லீலா விபூதியிலிருந்து சில ஜீவாத்மாக்களைத் தானே தேர்ந்தெடுத்து, தன் திவ்ய ஸௌந்தர்யத்தையும் கல்யாண குணங்களையும் அவர்களுக்கு முழுமையாகக் காட்டி, மயர்வற ஞானத்தை அருளி, அதன் மூலம் அவர்கள் பூத (கடந்த), வர்த்தமான (தற்பொழுது நடக்கின்ற), பவிஷ்யத்துக்களை (பிற்காலத்தில் நடக்க இருப்பது) தர்ஶிக்கும் ஶக்தி பெற்று ஆழ்வார்களாக ஆக்கினான். ஆழ்வார் என்பதற்கு பகவத் விஷயத்தில் ஆழ்ந்து மூழ்கியவர் என்று பொருள்.

இயற்பா

இயற்பா பொதுவாக எம்பெருமானின் உத்ஸவ மூர்த்தியின் புறப்பாட்டின் போது சேவிக்கப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் மூன்று வகைகள் உண்டு – இயல், இசை, நாடகம்.

  • இயல் – உரைநடை – பொதுவாக இசையுடன் பாடப்படாதது; இசை வடிவத்தில் அமைக்கப்படாதது.
  • இசை – இசைப்பா பொதுவாக ராகமும் தாளமும் கொண்டது. முதல் ஆயிரம், இரண்டாம் ஆயிரம் மற்றும் திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்) ஆகிய மூன்றும் இசைப்பா வடிவத்தில் உள்ளன. இந்த மூன்றாயிரம் பாசுரங்களுக்கும் ராகமும் தாளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • நாடகம் – நாட்டிய/நாடக வடிவம்.

இயற்பா – மூன்றாம் ஆயிரத்தின் பாசுரங்கள். இயற்பா பிரிவில் உள்ள ப்ரபந்தங்கள் வருமாறு:

  • முதல் திருவந்தாதி – பொய்கை ஆழ்வார்
  • இரண்டாம் திருவந்தாதி – பூதத்தாழ்வார்
  • மூன்றாம் திருவந்தாதி – பேயாழ்வார்
  • நான்முகன் திருவந்தாதி – திருமழிசை ஆழ்வார்
  • திருவிருத்தம் – நம்மாழ்வார்
  • திருவாசிரியம் – நம்மாழ்வார்
  • பெரிய திருவந்தாதி – நம்மாழ்வார்
  • திருவெழுக்கூற்றிருக்கை – திருமங்கை ஆழ்வார்
  • சிறிய திருமடல் – திருமங்கை ஆழ்வார்
  • பெரிய திருமடல் – திருமங்கை ஆழ்வார்
  • இராமானுச நூற்றந்தாதி – திருவரங்கத்து அமுதனார்.

முதல் ஆயிரத்தில் திருப்பல்லாண்டு முதலில் சேவிக்கப்பட்டாலும், முதலில் அருளிச் செய்யப்பட்ட ப்ரபந்தம் பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதியே ஆகும்.

பெரியவாச்சான் பிள்ளை தம் வ்யாக்யானத்தில், ஒவ்வொரு ஆழ்வாரும் எம்பெருமானின் வெவ்வேறு வடிவங்களில் ஈடுபட்டிருப்பதை விளக்கியருளுகிறார்:

  • ஶுகர் முதலியோரும், முதலாழ்வார்களான பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகியோரும் பரத்வத்தில் ஆழ்ந்திருப்பவர்கள்.
  • ஸனகாதிகளான ஸனக, ஸனாதன, ஸனந்தன, ஸனத்குமாரர்கள் ஆகியோரும் திருமழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஆழ்ந்திருப்பவர்கள்.
  • வால்மீகியும், குலஶேகர ஆழ்வாரும் ராமாவதாரத்தில் ஆழ்ந்திருப்பவர்கள்.
  • பராஶர ரிஷியும், வேதவ்யாஸ ரிஷியும், நம்மாழ்வாரும், பெரியாழ்வாரும், ஆண்டாளும் க்ருஷ்ணாவதாரத்தில் ஆழ்ந்திருப்பவர்கள்.
  • நாரதரும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும் ஶ்ரீரங்கநாதனிடத்தில் ஆழ்ந்திருப்பவர்கள்.
  • ஶெளனகரும், திருமங்கை ஆழ்வாரும் எல்லா அர்ச்சாவதாரங்களிலும் ஆழ்ந்திருப்பவர்கள்.

இவ்வாறு ஒவ்வொரு ஆழ்வாரும் வெவ்வேறு வடிவங்களில் ஈடுபட்டிருந்தாலும், அனைவரும் ஒருமனதாக தம் பாசுரங்களில் மங்களாஶாஸனம் செய்வதன் மூலம் அர்ச்சாவதாரத்தை அநுபவிக்கிறார்கள்.

முதல் ஆழ்வார்கள்

பொய்கையாழ்வார் திருவெஃகா யதோக்தகாரி திருக்கோயிலருகே உள்ள ஒரு பொய்கையில் அவதரித்தருளினார். பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை ஸ்தலஶயனப் பெருமாள் திருக்கோயிலருகே உள்ள ஒரு பொய்கையில் அவதரித்தருளினார். பேயாழ்வார் திருமயிலை கேஶவப் பெருமாள் திருக்கோயிலருகே உள்ள ஒரு கிணற்றில் அவதரித்தருளினார்.

இம்மூன்று ஆழ்வார்களும் பொதுவாக ஒருங்கே போற்றப்படுவதற்குப் பின்வரும் காரணங்கள் உள்ளன.

  • இவர்கள் மூவரும் வரிசையாக அடுத்தடுத்த நாள்களில் – பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் வரிசையில் அவதரித்தருளினார்கள். இவர்கள் த்வாபர யுகத்தின் முடிவிலும் கலி யுகத்தின் தொடக்கத்திலும் உள்ள யுக ஸந்தி காலத்தில் அவதரித்தருளினார்கள்.
  • இவர்கள் மூவரும் அயோனிஜர்கள் – மானிட மாதாவிடம் பிறவாதவர்கள். இவர்கள் எம்பெருமானின் திவ்யமான அநுக்ரஹத்தால் புஷ்பங்களிலிருந்து தோன்றியருளினார்கள்.
  • இவர்கள் தம் அவதாரத்தின் தொடக்கம் முதலே எம்பெருமானிடம் பரிபூர்ண ப்ரேமை கொண்டிருந்தார்கள். எம்பெருமானின் பூர்ண திவ்ய அநுக்ரஹத்தைப் பெற்று வாழ்நாள் முழுதும் பகவத் அநுபவத்தில் திளைத்தருளினார்கள்.
  • ஒரு காலகட்டத்தில் இவர்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்தருளி, அதன்பின் சேர்ந்து வாழ்ந்து பல திவ்யதேஶங்களிலும், க்ஷேத்ரங்களிலும் யாத்திரை மேற்கொண்டருளினார்கள். இவர்கள் “ஓடித் திரியும் யோகிகள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள் – எப்போதும் தீர்த்த யாத்திரையில் திரியும் யோகிகள் என்று பொருள்.

மூன்று ஆழ்வார்களும் வெவ்வேறு திவ்யதேஶங்களில் அவதரித்தருளி எம்பெருமானைப் பரிபூர்ணமாக அநுபவித்தருளிக் கொண்டிருந்தார்கள். “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்” என்று கீதையில் அருளிச்செய்தபடி, தம் அடியார்களையே தனக்கு உயிராக மதிக்கும் எம்பெருமான், இம்மூவரையும் ஒருங்கே காணத் திருவுள்ளம் கொண்டு, அவர்களைத் திருக்கோவலூரில் இரவு வேளையில் ஒன்று சேர்க்க ஒரு திவ்யமான ஏற்பாடு செய்தருளினான்.

பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. ஒருவர் படுக்கவும், இருவர் உட்காரவும், மூவர் நிற்கவும் மட்டுமே இடம் கொண்ட ஒரு சிறு குடிலில் ஒவ்வொருவராக வந்தடைந்தார்கள். பொய்கையாழ்வார் முதலில் வந்தருளிப் படுத்துக்கொண்டார். பூதத்தாழ்வார் வந்தருளியதும் இருவரும் உட்கார்ந்தார்கள். பேயாழ்வார் வந்தருளியதும் மூவரும் நின்றார்கள்.

அந்த குடிலில் மூவரும் நிற்பதற்கு மட்டுமே இடம் இருந்தது. பகவத் பாவத்தில் பரிபூர்ணமாக திளைத்திருந்த அவர்கள், ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டார்கள்.

பொதுவாக ஜகத்தில் எல்லாரும் தம் தனிப்பட்ட இடத்தை விரும்புவார்கள். ஆனால் இம்மூன்று ஆழ்வார்களின் சந்திப்பில், அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு மகிழ்வுடன் இடம் கொடுத்துப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதைக் காணலாம். அவர்கள் ஶரீரத்தில் அல்ல, ஆத்மாவிலேயே நிலைத்திருந்தார்கள். பகவத் விஷயத்திலேயே மனம் லயித்திருந்த அவர்கள், ஶரீரத்தை மதியாது ஆத்மாவிலேயே ஈடுபட்டிருந்தார்கள்.

எம்பெருமான் திருவுள்ளத்தில், “எவ்வளவு அழகான ஸத்ஸங்கம்?! இவர்களை இங்கே கொண்டு வந்தது நானே, இந்த அடியார்களுடன் நானும் இருக்க வேண்டும்” என்று திருவுள்ளம் கொண்டு, தாயாருடன் அந்த அழகிய ஸத்ஸங்கத்தில் எழுந்தருளினான். இவ்வாறு, அவர்கள் தம் திவ்யமான அநுபவங்களைப் பரிமாறிக்கொண்டிருக்கும் வேளையில், திருமாமகளுடன் (ஶ்ரீ மஹாலக்ஷ்மியுடன்) எம்பெருமான் திடீரென்று அந்த இருண்ட குடிலில் எழுந்தருளினான்.

இப்போது, வந்தவர் யார் என்று காண விரும்பி…

முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் உலகையே தகளியாகவும், கடலையே நெய்யாகவும், கதிரவனையே விளக்காகவும் கொண்டு எம்பெருமானுக்கு திருவிளக்கேற்றியருளினார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று

இவ்வாறு எம்பெருமானுக்கு அழகிய வார்த்தைகளால் மாலை சூட்டியருளினார். எம்பெருமானை நினைக்கும்போதே துக்கக்கடல் நீங்கும்.

அறிவை அளிக்கும் மூன்று வகையான ப்ரமாணங்கள் உள்ளன.

  • ப்ரத்யக்ஷம் – நேரடி இந்த்ரிய அநுபவம்
  • அநுமானம் – அநுமானித்தறிதல்
  • ஶப்தம் – வேதம் – வேதங்களில் அருளிச்செய்யப்பட்டது ஒவ்வொன்றுமே ப்ரமாணம்.

ப்ரத்யக்ஷம் – நாம் காண்பதன் மூலமாகவோ, கேட்பதன் மூலமாகவோ பெறும் நேரடி அநுபவம். ஆனால் நம் இந்த்ரியங்கள் பரிபூர்ணமானவை அல்ல என்பதால் ப்ரத்யக்ஷத்திற்கு வரம்புகள் உண்டு. நாம் தினமும் சூரியனைப் பார்க்கிறோம். நமக்கு அது சிறிய வட்டமாகத் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் அது மற்ற க்ரஹங்களை விட பல மடங்கு பெரியதாகவும் மிகவும் தொலைவிலும் உள்ளது.

அநுமானம் – அநுபவத்தின் அடிப்படையில் உணர்தல். சமையல் செய்யும் போது நெருப்பும் புகையும் சேர்ந்திருப்பதை நாம் காண்கிறோம். மலையில் புகையைக் காணும்போது அருகே நெருப்பு இருக்க வேண்டும் என்று அநுமானிக்கிறோம். இது நேரடி ப்ரத்யக்ஷம் அல்ல; அநுபவத்தின் அடிப்படையில் செய்யும் அநுமானம்.

ஶப்தம் – வாக்கு ப்ரமாணம். வேதங்கள் நித்யமானவை; வேதங்களே மிகவும் உயர்ந்த ப்ரமாணமாகக் கொள்ளப்படுகின்றன.

பொய்கையாழ்வார் இந்த முதல் பாசுரத்தில் அநுமான ப்ரமாணத்தை கையாண்டருளினார். இவ்வழகிய உலகை நாம் காண்கிறோம்; இது தானாகத் தோன்றியிருக்காது, யாரோ ஒருவரால் படைக்கப்பட்டிருக்க வேண்டும். பூமியும், கடலும், சூரியனும், சூரிய கிரணங்களும் இவை அனைத்தையும் காணும்பொழுது, இவை அனைத்தையும் படைக்கும் ஒரு படைப்பாளி இருக்கிறான் என்று அவர் அநுமானித்து அருளினார். இவ்வாறு இங்கே அநுமான ப்ரமாணம் கையாளப்பட்டது.

இப்பொழுது ஒரு கேள்வி எழலாம் – அநுமானத்திற்கு வரம்புகள் உண்டே என்று. இதற்கு நம்பிள்ளை தம் வ்யாக்யானத்தில், “ஶ்ருதிக்கு அநுகூலமாக இருக்கும் அநுமானத்தை ஏற்றுக் கொள்ளலாம்” என்று விளக்கமருளினார். அதாவது, ஶாஸ்த்ரங்களுக்கு ஒத்துவரும் அநுமானத்தை ஏற்கலாம் என்பது கருத்து.

வேதம், பகவான் படைக்கிறான் என்றும், இந்த உலகம் பகவானின் ஸ்ருஷ்டியினாலேயே உள்ளது என்றும் அருளிச்செய்கிறது. பொய்கையாழ்வார் தம் முதல் பாசுரத்தில் அநுமானத்தின் மூலம் இதையே உறுதிப்படுத்தியருளினார்; ஆகையால் இந்த அநுமானம் ஏற்கத்தக்கதே.

பாசுரம் 15, முதல் திருவந்தாதி:

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் – முதலாய
நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்து
பல்லார் அருளும் பழுது

இந்த பாசுரம் எம்பெருமானின் பரத்வத்தை நிலைநாட்டுகிறது.

ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் – இம்மூவரும் முதன்மையான தேவர்களாவர். இம்மூவருள்ளும் முதலாவான் யார் என்றால், விஶாலமான கடலின் நிறத்தை உடையவனான எம்பெருமானே. அவன் ஸர்வகாரணமானவன், நல்லவர்களுக்கெல்லாம் நல்லவன். இந்த நீர் நிறைந்த வையகத்தில், அவனருள் தவிர ஏனைய தேவதைகளின் அருள் எல்லாம் பழுதே. ஏனென்றால் அவர்களால் மோக்ஷம் அளிக்க இயலாது. இவ்வாறு இந்த பாசுரம் எம்பெருமானின் பரத்வத்தை உறுதிப்படுத்தியருளுகிறது.

பாசுரம் 53, முதல் திருவந்தாதி:

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் 
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் – என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு

பிராட்டியுடன் (ஶ்ரீ மஹாலக்ஷ்மியுடன்) எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, திருவனந்தாழ்வானாகிய ஆதிஶேஷன் – எம்பெருமான் எழுந்தருளும்போது குடையாகவும், அமர்ந்தருளும்போது சிம்மாசனமாகவும், நின்றருளும்போது திருவடிக்கு மரவடியாகவும், எம்பெருமான் நீள் கடலில் படுத்தருளும்போது அவருக்கு படுக்கையாகவும் (புணையாகவும்), மணிவிளக்காகவும், அழகிய பூம்பட்டாகவும், எம்பெருமான் அணைத்துக்கொள்ளும் (புல்கும்) தலையணையாகவும் கைங்கர்யம் செய்தருளுகிறான்.

இந்த பாசுரத்தின் மூலம் ஆதிஶேஷன் செய்தருளும் கைங்கர்யங்களை நாம் உணர்கிறோம். தேவர்கள் எம்பெருமானை அணுகும்போது பலன்களை எதிர்பார்த்து அணுகுகிறார்கள். ஆனால் ஆதிஶேஷனோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி, எம்பெருமானின் திருவுள்ளம் உகக்கவே இந்தக் கைங்கர்யங்களை செய்தருளுகிறான். இவ்வாறு அன்புடன் செய்யப்படும் கைங்கர்யங்களை எம்பெருமான் மனமுவந்து ஏற்றருளுகிறான் என்பதை இந்தப் பாசுரம் நமக்கு உணர்த்துகிறது.

ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என் நெஞ்சே ! – ஓரடியில்
தாயவனைக் கேசவனை தண்துழாய்த் மாலை சேர்
மாயவனையே மனத்து வை.

முதல் திருவந்தாதியின் இறுதி பாசுரத்தில், ஆழ்வார் இவ்வாறு அருளிச்செய்கிறார் – “என் நெஞ்சே! அற்புதமான செயல்களைச் செய்தருளுபவனையும், உலகங்களை அளந்தருளியவனையும், அசுர கேசியை வதம் செய்தருளியவனையும், தண்ணிய துழாய் மாலை அணிந்தருளிய கேசவனையும் உன் மனத்தில் தரித்திரு! அப்போது, உலகை அளந்த திருவடியையும், சகடாசுரனை உதைத்தருளிய ஒண்மலர்ச் சேவடியையும், இரண்டு திருவடிகளையும் காணலாம்” என்று. இந்தப் பாசுரத்தின் மூலம் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்பதை நாம் உணர்கிறோம்.

எம்பெருமான் லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் உரிய ஸ்வாமி. இந்த பரதத்வ ஜ்ஞானமே முதல் திருவந்தாதியில் விஶேஷமாக விளக்கமருளப்பட்டுள்ளது.

இரண்டாம் திருவந்தாதி

இரண்டாம் திருவந்தாதியில் முதல் பாசுரத்தில்,

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்

எம்பெருமானின் குணங்களையும் அவனே அடையப்படுபவன் என்றும் அநுஸந்தித்து, அன்பிலிருந்து உதித்த ஶேஷத்வத்தை ஆழ்வார் உணர்த்துகிறார். அன்பே தகளியாகவும், ஆர்வமே நெய்யாகவும், ஞானமே திரியாகவும் கொண்டு, ஞானம் அருளும் இப்பாசுரம் பாடி எம்பெருமானுக்கே உரியேனான அடியேன் என்னை அர்ப்பணிக்கிறேன் என்று ஆழ்வார் அருளுகிறார். பக்தியினாலும் அன்பினாலும் எம்பெருமானை மங்களாஶாஸனம் செய்கிறார். பக்தி என்பது ஞானத்தின் உயர்நிலை. இரண்டாம் திருவந்தாதியில் பரபக்தி விஶேஷமாக உணர்த்தப்படுகிறது.

இரண்டாம் திருவந்தாதியில் இருபத்தொன்றாம் பாசுரத்தில்,

தாமுளரே தம் உள்ளம் உள்ளுளதே
தாமரையின் பூவுளதே ஏத்தும் பொழுதுண்டே – வாமன்
திருமருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அருநரகம் சேர்வது அரிது

இங்கு ஆழ்வார், எம்பெருமானை ஆராதிக்க நமக்கு உடலும் இந்த்ரியங்களும் உள்ளன, மனமும் உள்ளது, அர்ப்பணிக்கத்  தாமரை மலரும் உள்ளது, அவனை ஏத்தும் பொழுதும் உள்ளது, தன் திருவடிகளை நம் சிரஸில் வைத்தருளிய வாமனமூர்த்தியும் உள்ளான், அவனுக்கு அர்ப்பணிக்க நம் சிரஸும் உள்ளது. ஆயினும் நாம் எம்பெருமானை மங்களாஶாஸனம் செய்யாமல் இருப்பது வியப்பாக உள்ளது என்று அருளிச்செய்கிறார்.

இரண்டாம் திருவந்தாதியின் நூறாவதும் இறுதியுமான பாசுரத்தில்,

மாலே ! நெடியோனே ! கண்ணனே ! விண்ணவர்க்கு
மேலா ! வியன் துழாய்க் கண்ணியனே ! – மேனாள்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே ! என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு

ஆழ்வார் “அடியார்கள் மேல் அன்புடையவனே! இவ்வளவு என்று அளவிட முடியாத நெடியோனே! நித்யஸூரிகளுக்கும் மேலானவனே! வியன் துழாய்க் கண்ணியனே! கண்ணனே! உன்னிடத்தில் அடியேனுடைய அன்பு என்றனளவன்றால் – அது அளவிற்கு அப்பாற்பட்டு வளர்ந்துவிட்டது” என்று அருளிச்செய்கிறார்.

மூன்றாம் திருவந்தாதி

பொய்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஏற்றிய விளக்கினால் பிராட்டியுடன் கூடிய எம்பெருமானின் தர்ஶனத்தை பேயாழ்வார் பெற்றருளினார்.

மூன்றாம் திருவந்தாதியின் முதல் பாசுரத்தில்,

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று

இப்பாசுரத்தில், எம்பெருமானும் தாயாரும் ஆழ்வாருக்குத்  தங்கள் திவ்யமங்கள திருமேனியை காட்டியருளிய வைபவத்தை ஆழ்வார் மங்களாஶாஸனம் செய்கிறார். இந்த ப்ரபந்தத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், முதல் பாசுரத்திலும் இறுதி பாசுரத்திலும் தாயாரைக் குறிக்கும் “திரு” என்ற திவ்யநாமம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் பாசுரத்தில், ஆழ்வார் எம்பெருமானின் திருவடிகளை மங்களாஶாஸனம் செய்கிறார்.

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் – அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே ! உன்னை
மருக்கண்டு கொண்டு என் மனம்

பதினாறாம் பாசுரத்தில், திருவல்லிக்கேணி எம்பெருமானை ஆழ்வார் மங்களாஶாஸனம் செய்கிறார்.

வந்து உதைத்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் – எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று

ஐம்பத்தேழாம் பாசுரத்தில், கருட ஸேவையை மங்களாஶாஸனம் செய்து, கருடாழ்வார் மீது எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஆழ்வார் மங்களாஶாஸனம் செய்கிறார்.

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே
போல் தோன்றி மலிந்து திருவிருந்த மார்வன் – பொலிந்த கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருள் தன்மேல் கண்டாய் தெளி

வேதமே உருவாக இருக்கும் கருடாழ்வார் எம்பெருமானின் பரத்வத்தை உணர்த்துகிறார். வேதபுருஷன் எம்பெருமானே ஆவான்.

மூன்றாம் திருவந்தாதியின் நூறாவதும் இறுதியுமான பாசுரத்தில்,

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்துழாய்த்
தார்வாழ் வரைமார்வன் தான் முயங்கும் – காரார்ந்த
வானமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு

பெரிய பிராட்டியே நமக்கு என்றும் சார்வு. பெரிய பிராட்டியை திருமார்பில் தரித்தருளிய எம்பெருமானே நமக்கு ஆஶ்ரயம். இவ்வாறு ஆழ்வார் தாயாரோடே தொடங்கி தாயாரோடே தலைக்கட்டுகிறார்.

நான்முகன் திருவந்தாதி

முதல் ஆழ்வார்கள் எம்பெருமானே உபாஸிக்கப்படவும் (வணங்க) அநுபவிக்கப்படவும் தகுந்த ஒரே பரம்பொருள் என்று நிலைநாட்டினார்கள். திருமழிசை ஆழ்வார் அந்த அநுபவத்தில் தடையாக நிற்கும் களைகளைக் களைகிறார். எம்பெருமானை அநுபவிப்பதற்குத் தடையாக நிற்கும் களை எது? அந்யதேவதைகளை வழிபடுவதே நீக்கப்பட வேண்டிய முக்யமான களையாகும். இந்த திவ்யப்ரபந்தமான நான்முகன் திருவந்தாதியில், அந்யதேவதைகளை ஈஶ்வரனாக நினைத்து வழிபடும் ஸம்ஸாரிகளுக்கு, அந்த அந்யதேவதைகளும் எம்பெருமானாலேயே நியமிக்கப்படுகிறார்கள் என்று அருளிச்செய்கிறார். ஶ்ரீமந்நாராயணனே ஸர்வ ஜகத்தையும் நியமிக்கும் ஒரே நியந்தா என்று மிகத் தெளிவாக அருளிச்செய்கிறார்.

நான்முகன் திருவந்தாதியின் தனியனில் 

நாரயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் – சீரார்
மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே! மொய் பூ
மழிசைப் பரன் அடியே வாழ்த்து

“நாரயணன் நான்முகனைப் படைத்தான்; நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தான் என்னும் பாசுரத்தை நமக்கு அருளியவர் மொய்த்த பூக்கள் நிறைந்த மழிசை நகரில் அவதரித்தருளிய பரனான திருமழிசை ஆழ்வார் – அவர் திருவடிகளை வாழ்த்து.” என்று கூறுகிறது. 

35வது பாசுரத்தில், திருவல்லிக்கேணி எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்கிறார் ஆழ்வார். 

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்?
வாளா கிடந்தருளும் வாய் திறவான் – நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை

“ஆதிஶேஷன் மேல் ஸயனித்திருக்கும் எம்பெருமானே, தாளால் உலகங்களை அளந்ததால் ஓய்வெடுக்கிறீரோ ? பெரிய அலைகள் வந்தலைக்கும் மாமயிலையில் உள்ள மாவல்லிக்கேணியில் எழுந்தருளியிருக்கிறீரோ ?” என்று அருளிச்செய்கிறார். 

43வது பாசுரத்தில், எப்படி எல்லா அந்யதேவதைகளும் எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்கிறார்கள் என்று ஆழ்வார் காட்டுகிறார். 

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் – திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு

தேவதைகள் யாவரும் ஸத்வ நிலையில் இருக்கும்போது எம்பெருமானுக்கு மங்களாஶாஸனங்கள் செய்கிறார்கள். கைங்கர்யத்திற்குரிய அனைத்து உபகரணங்களும் எடுக்கப்பட்டு பெருமாளுக்கு மங்களாஶாஸனம் செய்வதற்கே  உபயோகிக்கப்படுகின்றன.

68வது பாசுரத்தில், ஸ்ரீவைஷ்ணவர்களின் மேன்மையை உணர்த்துகிறார் ஆழ்வார். 

திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு

முதல் மூன்று ஆழ்வார்கள் எம்பெருமானின் பரத்வத்தை நிலைநாட்டினார்கள். திருமழிசை ஆழ்வார் எம்பெருமானை மட்டுமே வழிபட வேண்டும், அந்யதேவதைகளை வழிபடக்கூடாது என்று வலியுறுத்துகிறார். இங்கே யம கிங்கர ஸம்வாதம் விஶதமாக அருளிச்செய்யப்படுகிறது. யமன் தன் தூதுவர்களை அழைத்து, ஶ்ரீவைஷ்ணவர்களிடம் செல்லாதீர்கள் என்று அவர்களின் செவிகளில் ரஹஸ்யமாகச் சொல்கிறான். 

ஶ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானின் திருவடிகளைக் கூட மறந்து விடலாம், ஆனால் அந்யதேவதைகளை சென்று தொழமாட்டார்கள்.

96வது பாசுரத்தில்,

இனியறிந்தேன் ஈஶற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான்! உன்னை  – இனியறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கறிந்தேன் நான்

“எம்பெருமானே! நீயே ப்ரஹ்மாவுக்கும் ருத்ரனுக்கும் தெய்வம் என்று உறுதியாக அறிந்தேன். உன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்தேன். நீயே ஸர்வத்திற்கும் காரணன், கற்கப்பட்ட அனைத்தும் நீயே, கற்கப்படவிருக்கும் அனைத்தும் நீயே. ஸர்வரையும் ரக்ஷிப்பவன் நீயே, என் நாராயணன் நீயே” என்றெல்லாம் எம்பெருமானைக் கொண்டாடுகிறார். 

இத்துடன் முதல், இரண்டாம், மூன்றாம், நான்முகன் திருவந்தாதிகளின் சுருக்கமான அறிமுகத்தை அநுபவித்தோம்.

ஆதாரம் – https://www.youtube.com/watch?v=m43vDKvv9dE&list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w&index=6 மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/11/simple-guide-to-dhivyaprabandham-part-5/

அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி

பதிவிடம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org

Leave a Comment