ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை
அறுபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், க்ரூரமான இந்த்ரியங்களுக்கு அஞ்சும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
உண்ணிலா ஐவருடன் இருத்தி இவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன்புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக்கங்குல்
இனிய பெருமைகளை உடைய ஆழ்வார், எல்லையில்லாத ஆச்சர்யமான லீலைகளை உடைய ஸர்வேச்வரன், தன்னை இவ்வுலகில் தன்னுள்ளே இருக்கும் விரோதிகளான இந்த்ரியங்களுடன், இவ்வுலகில் தன்னை இருக்க வைத்ததை எண்ணிக் கதறினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே, இந்த ஸம்ஸாரம் என்னும் இருண்ட இரவு நீங்கும்.
அறுபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், துயரத்தினால் அழும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
கங்குல் பகலரதி கை விஞ்சி மோகம் உற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து – இங்கிவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னும் நிலை சேர் மாறன்
அஞ்சொல் உற நெஞ்சு வெள்ளையாம்
இரவும் பகலும் துயரம் அதிகமான பராங்குச நாயகி மோஹித்தாள். ஆழ்வார், பராங்குச நாயகியின் தாயார் நிலையை அடைந்து ஸ்ரீரங்கநாதனை “இங்கு இந்தப் பெண்பிள்ளை விஷயமாக நீர் என்ன செய்ய எண்ணி உள்ளீர்?” என்று முறையிட்டார். இந்த ஸ்ரீஸூக்திகளை எண்ணினவாறே, நெஞ்சம் தூயதாகும்.
அறுபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், தென்திருப்பேரில் தன் நெஞ்சை இழந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக – உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார்
தன் தாயார் சொன்ன பகவானின் இனிய திருநாமங்களைக் கேட்ட ஆழ்வார், உணர்த்தி பெற்று, தன்னுடைய நெஞ்சமானது தென்திருப்பேர்நகரில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் விஷயமாக மிகவும் ஈடுபட்டு இருப்பதையும், அங்கே செல்லத் தொடங்குவதையும் அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாருக்காகவே இருப்பவர்கள், ஆழ்ந்த நெஞ்சை உடையவர்கள்.
அறுபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெற்றிச் சரித்ரங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
ஆழி வண்ணன் தன் விசயம் ஆனவை முற்றும் காட்டி
வாழ் இதனால் என்று மகிழ்ந்து நிற்க – ஊழில் அவை
தன்னை இன்று போல் கண்டு தான் உரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்
கடல்நிற வண்ணனான எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை ஆழ்வாருக்குக் காண்பித்து “இதை அனுபவித்து உம்மை தரித்துக் கொள்ளும்” என்று மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆழ்வார், முற்காலத்தில் நடந்த அந்த வெற்றிச் சரித்ரங்களை தற்போது நடப்பதுபோல் அனுபவித்து, அதற்கு வெளிப்பாடாக இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அனுஸந்திப்பவர்கள் உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னவர்களாகக் கருதப்படுவர்.
அறுபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், “எம்பெருமானின் வெற்றிகளுக்குக் காரணமான எம்பெருமானின் திருவவதாரங்களில் ஜனங்களுக்கு ஏன் ஆசை இல்லாமல் இருக்கிறது?” என்று வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை – உற்றுணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்துரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா
தசரதன், வஸுதேவன் முதலியவர்கள் சாஸ்த்ரத்தின் ஸாரத்தை உணர்ந்து, எம்பெருமானின் வெற்றிக்குக் காரணமான அவனுடைய விபவாவதாரங்களில் அன்பு செய்தார்கள். இதை ஆராய்ந்து அறிந்த ஆழ்வார், இவ்வுலகில் மக்கள் இந்த பகவத் விஷயத்தை இழப்பதைத் தகுந்த முறையில் அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் இனிய இசையை உடைய ஸ்ரீஸூக்திகள், தமிழில் அமைந்திருக்கும் சிறந்த சாஸ்த்ரம்.
அறுபத்தாறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் குணங்களைச் சொல்லிக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆம் அழகு வேண்டற்பாடாம் அவற்றை – தூ மனத்தால்
நண்ணி அவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்
இங்கே சொல்லப்பட்ட எம்பெருமானை நேரில் அடைந்து, காண ஆசைப்பட்ட ஆழ்வார், நன்றாக உருகி, “ஓ” என்று சொல்லிக் கதறி, சந்தத்துடன் கூடிய வேதத்தில் இருந்து, எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை அவனுடைய அழகு மற்றும் மேன்மையுடன் பெற்று தன் மனக்கண்ணால் கண்டு அனுபவித்தார். இப்படிப்பட்ட ஸ்வாமியான ஆழ்வாரைச் சென்று அடையாதவர்கள், ஏழைகள் (அஜ்ஞானிகள்).
அறுபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் திருமுகத்தின் அழகு தன்னை ஒருபடிப்பட்டு நலிவதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மால் அழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க – ஆழு மனம்
தன்னுடனே அவ்வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னும் அவர் தீவினை போம் மாய்ந்து
எம்பெருமானின் வடிவழகு நிலையில்லாத நெஞ்சைக்கொண்ட ஸம்ஸாரிகளை உருக்கும். அதே அழகு ஆழ்வாரைச் சூழ்ந்து, எல்லா இடமும் இருக்க, ஆழ்வாரின் நெஞ்சமும் துக்கக் கடலில் ஆழ்ந்தது. அந்த நெஞ்சத்துடன் கூடி அந்த அழகை அனுபவித்து அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாருடன் கூடியிருப்பவர்களின் பாபங்கள் அழிக்கப்படும்.
அறுபத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் விசித்ரமான (பரந்த, பலவிதமாக இருக்கும்) விச்வரூபத்தை அனுபவித்து ஆச்சர்யப்பட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே
தீயா விசித்திரமாச் சேர் பொருளோடு – ஓயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளம் உரைத்த மாறனை நாம்
ஏய்ந்துரைத்து வாழு நாள் என்று?
ஆழ்வாரின் சேஷத்வத்தைக் காத்து, ஸர்வேச்வரன் தான் பரந்து, விரிந்து இருக்கும் தன்மையில், 1) தீ தொடக்கமான பஞ்ச பூதங்களுடனும், அவற்றின் பல்வேறுபட்ட உருவங்களுடனும் 2) பல்வேறுபட்ட சேதனர்களுடனும், அவற்றின் தோஷங்களைப் பார்க்காமல் கூடி இருந்தான். ஸர்வேச்வரனின் இப்படிப்பட்ட பரந்த சொத்துக்களை அருளிச்செய்தார் ஆழ்வார். எப்பொழுது நாம் ஆழ்வாரை அடைந்து அவரின் திருநாமங்களைச் சொல்லி வாழ்வோம்?
அறுபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான் திருவாய்மொழி பாடவைத்த செயலை மிகவும் ஈடுபட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
என்தனை நீ இங்கு வைத்தது ஏதுக்கென மாலும்
என்தனக்கும் என்தமர்க்கும் இன்பமதா – நன்று கவி
பாடவெனக் கைம்மாறு இலாமை பகர் மாறன்
பாடணைவார்க்கு உண்டாம் இன்பம்
ஆழ்வார் எம்பெருமானிடம் “எனக்குப் பொருத்தம் இல்லாத இந்த ஸம்ஸாரத்தில் என்னை ஏன் வைத்தாய்?” என்று வினவ, எம்பெருமான் “எனக்கும் என் அடியார்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும் பாசுரங்களைப் பாட” என்று பதிலுரைத்தான். எம்பெருமான் செய்த நன்மைக்குத் தான் எந்த ப்ரத்யுபகாரமும் செய்ய முடியாது என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரை அடைபவர்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பர்.
எழுபதாம் பாசுரம். மாமுனிகள், திருவாய்மொழி பாடிக் கைங்கர்யம் செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.
இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திருவாறன்விளையில் – துன்பம் அறக்
கண்டடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு
தன்னுடைய துன்பங்களைப் போக்கியருளுவதற்காக, தன்னை இனிய திருவாய்மொழியைப் பாடவைக்க, எம்பெருமான் பெரியபிராட்டியாருடன் திருவாறன்விளையில் ஆனந்தமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டு, அங்கே சென்று அவர்களுக்கு தொண்டு செய்ய ஏங்கினார். ஆழ்ந்த விச்வாஸத்தை உடையவர்களுக்கு, இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே பரதெய்வம்.
ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-61-70-simple/
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org