திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 41 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 31 – 40

நாற்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான்  நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான
பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை
போற்றினனே மாறன் பொலிந்து

ஆழ்வார் பொலிவுடன் “என்னிடத்தில் சிறிதளவும் பக்தி இல்லாதபோதும் நான் அவனை ஏமாற்றும் வகையில் பேசினாலும், அவன் பெரும் கருணையுடன் எனக்கு உயர்ந்த பலனைக் கொடுத்தான்” என்று அருளிச்செய்தார்.

நாற்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய ஒன்றும் தேவும் (திருவாய்மொழி 4.10) பதிகத்தைக் கேட்டுத் திருந்தியவர்களுக்கு மங்களாசாஸனமாகவும் திருந்தாதவர்களைத் திருத்தும் உபதேசமாகவும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொலிக பொலிக என்று பூமகள் கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி – உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மன மாசு

அடியார்களின் மிகப் பெரிய கோஷ்டியைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வார் “பொலிக! பொலிக!” என்றார். இவ்வுலகில் திருந்தாதவர்களைத் திருத்தினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை மருந்தாகக்கொண்டால், மனதில் இருக்கும் தோஷங்கள் நீங்கும்

நாற்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், முன்பு பேசிய எம்பெருமானின் வடிவழகை நேரில் அனுபவிக்க முடியாததால் மடல் எடுக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாசறு சோதி கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் – ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்

குற்றமற்ற ஒளியை உடைய எம்பெருமானிடம் தனக்கு ஏற்பட்ட அளவு கடந்த அன்பினால், எம்பெருமான் தன்னுடன் வந்து கலக்காததால், தனக்கு ஏற்படும் பழியையும் ஊராரின் நிந்தனைக்கு அஞ்சும் நிலையையும் கடந்து, தான் அவதரித்த ஊரில் மக்கள் நடுங்கும்படி இவ்வுலகில் மடல் எடுக்க முற்பட்டார் ஆழ்வார்.

நாற்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் பிரிந்து இரவின் நீட்சியால் மிகவும் வருந்தும் நாயகியின் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாதபடி
கூரிருள் சேர் கங்குலுடன் கூடி நின்று – பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்ஙனேயோ?

ஐயோ! இருண்ட இரவும் அதன் துணைவர்களும் சேர்ந்து ஆழ்வாரை விடாமல் நலிந்து அவர் மடல் எடுக்க முற்படுவதைத் தடுப்பதையும், அவர் திருவுள்ளத்தை அடைந்த துன்பத்தையும் எவ்வாறு பேசுவது?

நாற்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், உருவெளிப்பாட்டைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எங்ஙனே நீர் முனிவது என்னை இனி? நம்பி அழகு
இங்ஙனே தோன்றுகின்றது என் முன்னே – அங்ஙன்
உருவெளிப்பாடா உரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்

தமிழ் வேதமான ப்ரபந்தங்களை அருளிய ஆழ்வார், உருவெளிப்பாடு (மனக்கண்ணால் பார்த்து அனுபவிப்பது) என்னும் கவிதை முறையில் “என்னிடத்தில் நீங்கள் எல்லோரும் கோபம் கொள்ளலாமா? திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகு என் கண் முன்னே தோன்றுகின்றது” என்று அருளினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை த்யானிப்பவர்களுக்கு ஆழ்வாரே ஒரு ஆனந்தக் கடலாக இருப்பார்.

நாற்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், அனுகாரத்தின் மூலம் தன்னை தரித்துக் கொண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கடல் ஞாலத்தீசனை முன் காணாமல் நொந்தே
உடனா அனுகரிக்கல் உற்று – திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறன் உரை அதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்

கடல் சூழ்ந்த இவ்வுலகில் எம்பெருமானை நேரில், தன் கண்ணால் கண்டு அனுபவிக்க முடியாமல் வருந்தி, எம்பெருமானை அனுகரித்து (அவனைப் போலே இருந்து), திட விச்வாஸத்துடன் அவனைப் பற்றிப் பேசினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளின் பெருமைகளை அறிந்து, அதை அனுஸந்திப்பவர்கள், ஆழ்வாருக்குத் தொண்டு செய்யும் தபஸ்ஸைச் செய்தவர்கள் ஆவர்.

நாற்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், வானமாமலை எம்பெருமானை அன்புடன் வணங்கியும் அவன் திருவடிகளில் சரணாகதி செய்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நோற்ற நோன்பாதி இலேன் உன்தனை விட்டாற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளேசாற்றுகின்றேன்
இங்கென் நிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது

அழகை அடைந்த ஆழ்வார், உபாய விஷயமாக “எனக்கு மோக்ஷத்துக்கு வழியான கர்ம யோகம் முதலிய உபாயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை; உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியவில்லை; என்னுடைய பேற்றுக்கு உன்னுடைய பெரிய கருணையே உபாயம்” என்று அருளிச்செய்தார். கருணை மிகுந்த இப்பாசுரங்களை அனுஸந்திக்க வல்லவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளுக்கு ஆராவமுதமாக இருப்பர்.

நாற்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய கைம்முதல் இல்லாத் தன்மையை அறிவித்து ஆராவமுதன் எம்பெருமானைச் சரணடைந்தும், எம்பெருமான் “இவர் நம் ஆழ்வார்” என்று தன் ஆசையை நிறைவேற்றாததால், கலங்கி வருத்தத்துடன் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக  – தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான்

ஆழ்வாரின் எதிர்பார்ப்பை ஆராவமுதன் கருணையுடன் நிறைவேற்றாததால் ஆழ்வார் நிறைவேற்ற முடியாத மிகவும் அதிகமான ஆசையை அடைந்து வருத்தமுற்றார். இப்படிக் கலங்கிய தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டார்; இப்படிப்பட்ட ஆழ்வாரே நம்முடைய குற்றமற்ற ஸ்வாமி.

நாற்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், திருவல்லவாழுக்குச் சென்று அதைச் சூழ்ந்திருக்கும் புறச்சோலைகளின் அனுபவத்தால் வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாநலத்தால் மாறன் திருவல்லவாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ்வூர் தன் அருகில் – மேல் நலங்கித்
துன்பம் உற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற

மிகவும் அன்புடன் ஆழ்வார் திருவல்லவாழ் திவ்யதேசத்தை நோக்கிச் சென்றார்; ஆனால் அதை அடைய முடியாமல், அதைச் சூழ்ந்திருக்கும் சோலைகளில், தளர்ந்து கீழே விழுந்தார்; மேலும் கலங்கி, வருந்தி இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்பாசுரங்களைக் கற்பவர்களுக்கு, அவற்றைக் கற்றபின், எம்பெருமானின் திருவடிகளுக்கு வெளிப்பட்ட பிறவிகள் கிடையாது.

ஐம்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் “உன்னுடைய அவதாரங்களில் செய்த லீலைகளை அனுபவித்து நான் தரித்திருக்கும்படி அனுமதிக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறந்து உலகம் காத்தளிக்கும் பேரருள் கண்ணா! உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத்திறம் தவிர்ந்து
சேர்ந்தனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே! வைகு

ஸ்ரீ நம்மாழ்வார், இவ்வுலகில் அவதரித்து எல்லோரையும் ரக்ஷிக்கும், மிகவும் கருணை பொருந்திய கண்ணன் எம்பெருமானிடத்தில் “கண்ணா! என் ஹ்ருதயத்தின் உருக்கத்தை நிறுத்தி, உன்னை அடைந்து, உன்னுடைய குணங்களை நினைத்து அனுபவிக்கும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் வாழ்வாயாக.

ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-41-50-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment