ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமந்நாராயணனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள் என்று கொண்டாடப்படுகிறார்கள். அவர்களுள் தலைவரான நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு அற்புத ப்ரபந்தங்களை அருளியுள்ளார்.
அவற்றுள் திருவிருத்தத்தில், ஸர்வேச்வரனுடைய ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை எல்லாம் அவன் காட்டிக்கொடுக்கக் கண்ட ஆழ்வார், அவன் பரமபதத்தில் நித்யஸூரிகளுடனும் முக்தர்களுடனும் ஆனந்தமாக இருப்பதை நினைத்து, இந்த ஸம்ஸாரத்தில் உள்ளவர்கள் அதற்குத் தகுதி பெற்றிருந்தும் அதை இழந்திருப்பதை நினைத்து, அப்படி இழந்திருப்பவர்களில் தானும் ஒருவர் என்று உணர்ந்து, இதற்குக் காரணம் இவ்வுலகில் இந்த தேஹத்துடன் இருப்பதே என்று பார்த்து வருந்துகிறார்., அதைக் கழித்துக் கொள்ள தன்னிடத்தில் எந்த சக்தியும், தகுதியும் இல்லை என்பதை உணர்ந்து எம்பெருமானிடத்திலே “இவ்வுலகில் நான் இருக்கும் இருப்பை அறுத்தருள வேண்டும்” என்று ப்ரார்த்தித்தார்.
ஆனால் ஸர்வேச்வரனுக்கு இவருடைய ஆசையை உடனே பூர்த்தி செய்ய முடியாது. அம்புப் படுக்கையில் கிடந்த ஸ்ரீபீஷ்மரைக் கொண்டு சில நல்ல உபதேசங்களை வெளியிடச்செய்து நாட்டுக்கு நன்மை செய்ததைப் போலே, ஆழ்வாரைக் கொண்டும் சில ப்ரபந்தங்களை வெளியிட்டு இந்த உலகில் இருப்பவர்களைத் திருத்த விரும்பினான். ஆனால் இவரோ தன்னை அடைவதற்கு மிகவும் துடிப்பதைக் கண்டு இவருக்கு இவ்வுலகிலேயே நம்முடைய குணங்களை மிகவிரிவாகக் காட்டிக் கொடுப்போம், அதைக் கொண்டு இவர் த்ருப்தியுடன் இருப்பார் என்று அதைச் செய்ய, ஆழ்வாரும் அந்த குணங்களை இதில் அனுபவிக்கிறார்.
பெரியவாச்சான் பிள்ளையின் அற்புத வ்யாக்யானத்தையும் புத்தூர் ஸ்ரீ உ வே க்ருஷ்ணஸ்வாமி அய்யங்காரின் விவரணத்தையும் துணையாகக் கொண்டு, இந்த எளிய விளக்கவுரை எழுதப்படுகிறது.
தனியன்
காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து
ஆசிரியப் பாவதனால் அருமறைநூல் விரித்தானை
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே
இந்த பூமியில் உள்ள மனிதர்கள் உஜ்ஜீவனம் அடைவதற்காகக் கலியுகத்தில் வந்து அவதரித்து, ஆசிரியப்பா என்னும் பாட்டு க்ரமத்திலே, சிறந்த வேதமாகிற சாஸ்த்ரத்தை பரப்பியவரும், திசையைக்காட்டக்கூடிய ஆசார்யரும், ஒளியுடன் விளங்கும் மகிழம்பூமாலையை அணிந்தவருமான நம்மாழ்வாரை, அழுக்கற்ற மனஸ்ஸிலே இருக்கச் செய்து அவரை மறவாதபடி மங்களாசாஸனம் செய்யக்கடவோம்.
*****
முதல் பாசுரம். ஆழ்வார் எம்பெருமானின் ஸ்வரூபத்தை விட்டுத் திருமேனியை அனுபவிக்கிறார். அதிலும் அந்த அனுபவம் தன்னை நிலை கொள்ள முடியாதபடிச் செய்ய, ஒரு உதாரணத்தைக் கொண்டு அனுபவிக்கிறார். எம்பெருமானை ஒரு மரகத மலையாக அனுபவிக்கப் பார்த்து, அந்த மரகத மலையும் அவனுக்கு நேருக்கு நேர் ஒப்பாகாதாகையாலே அந்த மலையை அலங்கரித்து எம்பெருமானுக்கு ஒப்பிட்டுப் பார்த்து அனுபவிக்கிறார்.
செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி * அஞ்சுடர் மதியம் பூண்டு *
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய் *
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம் *
கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல் *
பீதகவாடை முடி பூண் முதலா *
மேதகு பல்கலன் அணிந்து * சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப * மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப *
நச்சு வினைக்கவர்தலை அரவினமளி ஏறி *
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து *
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்*
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த *
தாமரை உந்தி தனிப் பெரு நாயக! *
மூவுலகளந்த சேவடியோயே!
சிவந்த பெரிய மேகத்தை இடுப்பிலே கட்டி, மிகவும் சிவந்த கிரணங்களையுடைய ஸூர்யனைத் தலையிலே வைத்துக்கொண்டு, அழகிய குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரனை அணிந்து, நக்ஷத்ரங்களாகிய பல ஒளிபிழம்புகளைக் கொண்டுள்ள, பவளம் போன்ற சிவந்த இடங்களை உடைய ஒளிவிடும் பச்சை நிறத்தில் இருக்கும் மரகத மலை ஒன்று (எம்பெருமானுக்கு உதாரணம்). அந்த மலை, கடலுக்குத் தலைவனான வருணனுடைய அலைகளாகிற கைகளின் மேலே சயனித்துக்கொண்டிருப்பதுபோல் உள்ளது. அடுத்து இந்த உதாரணத்தால் சொல்லப்பட்ட எம்பெருமானை விளக்குகிறார். பீதாம்பர (வஸ்த்ரம்), கிரீடம், கண்டி முதலான பல விதமான பொருத்தமான, தகுதியான ஆபரணங்களையும் அணிந்து, ஒளிவிடும் திருப்பவளங்களும் (உதடுகளும்), திருக்கண்களும் சிவந்திருக்கும்படியாகவும், (அந்த சிவந்த நிறத்தை) வெற்றிகொண்டு திருமேனியில் பச்சை நிறம் நன்கு ஒளிவிடும்படியாகவும், எதிரிகளை அழிப்பதில் நச்சுத் தன்மை வாய்ந்த செயல்களையுடையவனாகவும், கவிழ்ந்திருந்த தலைகளை உடையவனுமான ஆதிசேஷனாகிற படுக்கையில் ஏறி, அலை வீசும் திருப்பாற்கடலின் நடுவே ஜகத்தைக் காப்பதற்கான உணர்வுடன் யோகநித்ரையில் சயனித்துள்ளான். அந்த எம்பெருமான் சிவன், ப்ரஹ்மா, இந்த்ரன் முதலான தேவர்களுடைய கூட்டமும் கைகூப்பி வணங்கும்படி சயனித்துக்கொண்டுள்ளான். எல்லா உலகத்தின் உற்பத்திக்கும் காரணமாயுள்ள திருநாபீகமலத்தை உடையவன். ஒப்பற்ற, எல்லோரையும் விடப் பெரியவனான எம்பெருமானே! மூன்று உலகங்களையும் அளந்த திருவடிகளை உடையவனே!
இரண்டாம் பாசுரம். இப்படிப்பட்ட அழகையுடைய எம்பெருமான் விஷயத்தில் பக்தியே வேண்டும் என்கிறார்.
உலகுபடைத்துண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவார்
உயிருருகி உக்க, நேரிய காதல்
அன்பிலின்பீன் தேறல் அமுத
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய
இயற்கை, மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?
எல்லா உலகங்களையும் ஸ்ருஷ்டித்து, பின்பு ப்ரளயத்தின்போது அவற்றை விழுங்கிய என் ஸ்வாமியாகிய எம்பெருமானுடைய ஓசைசெய்யும் வீரக்கழலையுடைய திருவடிகளாகிற ஒளிவிடும் அழகிய தாமரைப் பூவை அணிவதற்காக ஆசையினால் நிறைந்த ஆத்மாவானது உருகி விழுந்தது. அதனால் உண்டான பக்தியின் உருவில் இருக்கும் அன்பென்ன , பக்தியினால் ஏற்படும் ப்ரீதியிலுள்ள இனிமை என்ன, இவைகளிலுள்ள இனிமையின் உயர்ந்த நிலையான அமுதக் கடலில் மூழ்கியிருக்கும்படியான மேன்மையை விட்டு தாழ்ந்த ப்ரயோஜனத்திற்காக அல்லல்படுபவர்கள் அலையட்டும். செல்வத்துடன் கூடிய தன்மையொடும், அழியாத மிகுந்த வலிமையொடும், மூன்று உலகங்களுடனும் கூட மேலான புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெற்றாலும், தெளிந்த ஞானத்தையுடைய பெரியோர்களுடைய அபிப்ராயம் இவைகளைப் பெற நினைக்குமோ?
மூன்றாம் பாசுரம். பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்று கேட்க, எம்பெருமான் தொடங்கி அவன் அடியார்களுக்கு அடிமையாகும் அளவுக்குச் செல்லும் என்கிறார்.
குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகிச் சுடர் விளங்ககலத்து
வரைபுரை திரைபொரு பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடல் படவர
வரசு உடல் தடவரை சுழற்றிய, தனிமாத்
தெய்வத்தடியவர்க்கினிநாம் ஆளாகவே
இசையும் கொல், ஊழிதோறூழி ஓவாதே
மூன்று உலகங்களும் (மேல், நடு, கீழ்) நல்வழியில் செல்லும்படியாக திருவுள்ளத்தில் நினைப்பவனாய், அவ்வுலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு நிலையில் இருந்து தொழுகையாகிற, வேதத்தில் பரமனாகக் காட்டப்பட்டதின் மூலம் ப்ரஸித்தமான புகழையுடையவனாய், தன் ஆணையை நன்றாக நடத்துபவனாய், ப்ரஹ்மா, ருத்ரன், இந்த்ரன் ஆகிய தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாய், ஆபரணங்களின் ஒளியையுடைய திருமார்பையுடையவனாய் இருப்பவன் எம்பெருமான். மலை போன்ற உயரமான் அலைகள் மோதும், பெரிய மலைகள் நடுங்கும்படியாக, இடி முழக்கம் போன்ற கோஷமானது மிகுந்திருப்பதான குளிர்ந்த கடலை, படத்தை உடைய ஸர்ப்ப ராஜாவாகிய வாஸுகியினுடைய உடலை மிகப்பெரிய மந்தர மலையில் சுற்றிக் கடைந்தவனும், ஒப்பற்ற பரதெய்வமான எம்பெருமானுக்கு அடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இனி நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இடைவிடாமல் அடியவர்களாம்படியான இப்பேறு கிடைக்குமோ?
நான்காம் பாசுரம். எம்பெருமான் முதல் அடியார்கள் வரை பக்தி செய்யும் அடியார்களின் பரிமாற்றங்கள் மிகப் பெரியதாக இருக்கும் என்று அதற்கு மங்களாசாஸனம் செய்கிறார்.
ஊழிதோறூழி ஓவாது வாழிய!
என்று யாம் தொழ இசையும் கொல்,
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும் பாழ் காலத்து, இரும் பொருட்கு
எல்லாம் அரும்பெறல் தனி வித்து, ஒருதான்
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனோடு தேவுபல
நுதலி மூவுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுதல் அடியே
எவ்வகைப்பட்ட உலகங்களும், எவ்வகைப்பட்ட ப்ராணிகளும் இல்லாதவாறு முன்பே கடந்துபோன மிகவும் நீண்ட, அதாவது உலகம் அழிந்திருந்த காலத்தில், கணக்கிலடங்காத ஜீவராசிகளுக்கெல்லாம் பெறுவதற்கரியனாய், ஒப்பற்ற, துணையில்லாத தனிக் காரணமாகத் தானே நின்றான். அந்நிலையில் இவ்வுலகில் சிறந்த தேவதையான ப்ரஹ்மா என்கிற பூர்ணமான முளையையும், மூன்று கண்களையுடைய ருத்ரனுடன், பல தேவதைகளையும் படைத்து, இவர்களை ஒவ்வொரு கார்யத்துக்கு ஸங்கல்பித்து (சக்தியைக் கொடுத்து), மூன்று உலகங்களையும் படைத்த திருநாபியையுடையவனாய், ஆச்சர்ய சக்தியையுடையவனாய், பரதேவதையாய், பரம காரணபூதனானன எம்பெருமானின் திருவடிகளை, ஊழிதோறும் (கல்பங்கள்தோறும்) இடைவிடாமல் “வாழி” என்று நாம் மங்களாசாஸனம் செய்து தொழும் பாக்யம் கிடைக்குமா?
ஐந்தாம் பாசுரம். எம்பெருமான் இந்த உலகத்தைப் படைத்து ப்ரஹ்மாதி தேவர்களைக் கொண்டு நடத்திவந்து, பின்பும் தான் தேவதையாக நிறுத்திய இந்த்ரன் தன் ராஜ்யத்தை மஹாபலியிடத்திலே பறிகொடுத்துத் துன்பத்துடன் நிற்க, எம்பெருமான் தன் மேன்மையைக் குறைத்துக்கொண்டு ஒரு இரப்பாளனாகத் தன்னை ஆக்கிக்கொண்டு, இந்த்ரன் கார்யத்தை நிறைவேற்றின த்ரிவிக்ரமாவதாரத்தை நினைத்து உன்னைத் தவிர வேறு யாருக்கு நாம் மங்களாசாஸனம் செய்ய முடியும் என்று அனுபவிக்கிறார்.
மாமுதல் அடிப் போது ஒன்று கவிழ்த்தலர்த்தி,
மண் முழுதும் அகப்படுத்து, ஒண் சுடர் அடிப்போது
ஒன்று விண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடு வியந்துவப்ப, வானவர் முறை முறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க் கண்ணோடு கனிவாய் உடையது
மாய், இருநாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன,
கற்பகக் காவு பற்பல வன்ன,
முடி தோள் ஆயிரம் தழைத்த,
நெடியோய்க்கு அல்லதும் அடியதோ உலகே
பரமகாரணனான உன்னுடைய திருவடியாகிற ஒரு பூவைக் கவிழ்த்துப் பரப்பி பூமி முழுவதையும் கைகொண்டும், அழகிய ஒளிமிகுந்த பூவைப் போன்ற மற்றொரு திருவடியை ப்ரஹ்மா என்கிற தேவதையின் உலகமானது அதிசயப்பட்டு மகிழும்படியும், அவ்வுலகில் உள்ள தேவதைகள், சரியான வழியில் செல்லுகையை முறைப்படி காட்டும் சாஸ்த்ரவழிப்படி வணங்கும்படியும், ஆகாசத்தில் செலுத்தினாய். தாமரைப்பூக்கள் நிறைந்த காடு மலர்ந்தால் போல் இருக்கும் திருக்கண்களோடு கூட, பழம் போன்ற சிவந்த திருப்பவளத்தை (உதடுகளை) உடையதாய், பரந்த ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தாற்போல் இருக்கிற பல கிரீடங்களையும், கற்பகச் சோலை போலிருக்கிற ஆயிரம் திருத்தோள்களையும் உடையவனாய், எல்லாரையும்விட உயர்ந்தவனாய் விளங்குகிற எம்பெருமானைத் தவிர மற்றெவர்க்கும் இவ்வுலகமானது அடிமைப்பட்டதோ?
ஆறாம் பாசுரம். இப்படி எம்பெருமான் தன்னைக் குறைத்துக் கொண்டு உலகத்தை ரக்ஷித்தாலும் அவனுடைய பெருமையை உணர்ந்து அவன் விஷயத்தில் ஈடுபடாமல் உலக விஷயங்களிலேயே ஈடுபட்டு இருப்பதைப் பார்த்து, இப்படி இவர்கள் பகவத் விஷயத்தை இழந்து போகிறார்களே என்று அவர்களுக்காகத் தான் கதறுகிறார்.
ஓ ஒ உலகினதியல்வே, ஈன்றோளிருக்க
மணை நீராட்டிப், படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து, தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும்
கடவுள் நிற்பப் புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது
புல்லறிவாண்மை பொருந்தக்காட்டிக்,
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை இன்பு துன்பு அளித்
தொன்மா மாயப் பிறவியுள் நீங்காப்
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே
இந்த பூமியை முதலில் உண்டாக்கி, வராஹவதார காலத்தில் அண்டத்தில் சுவற்றிலிருந்து இடந்து எடுத்து, ப்ரளயத்திலிருந்து காப்பாற்ற அதை அமுது செய்து, மீண்டும் வெளியே உமிழ்ந்து, த்ரிவிக்ரமாவதாரம் செய்து அளந்து, அதற்கு மேல் இவ்வுலகை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்தை செய்து, காப்பாற்றும்படியான ஆதி காரணனும், பர தேவதையானவன் ஸ்ரீமந்நாராயணன். இந்த எம்பெருமான் புகலாக இருக்க, அவனை விட்டு, அவனுடைய சொத்தாகச் சொல்லப்பட்ட, பலவகைப்பட்ட, அவரவர்கள் அறிந்த தேவதைகளை ஆதரிப்பது எதைப்போல் இருக்கிறது என்றால், தன்னுடைய தாழ்ந்த புத்தியை பெரியோர்கள் மனதில்படும்படிக் காண்பித்து, பல நன்மைகளைச் செய்த, பெற்ற தாயிருக்க அவளைவிட்டு ஒரு மணையை (பலகையை) நீராட்டுவது போலிருக்கிறது. அந்த தேவதைகளின் செயல்கள் ஹிம்ஸிக்கை முதலான செய்யத்தகாத காரியங்களைச் செய்கையாகிற இப்படிப்பட்ட தன்மையையுடையவை. அவர்கள் கொடுக்கும் பலமும் துக்கத்துடன் கூடிய ஸுகமாகும். ஆகையால் அவர்களைச் சென்று வணங்குகை, அநாதியாய், பெரியதாய் ஆச்சர்யத்தைச் செய்யக் கூடிய ஸம்ஸாரத்திலிருந்து நீங்குவதற்காக இல்லாமல், பலவிதமாய், பெரியதாய் மோஹத்தை உண்டாக்கக்கூடிய சப்தம் முதலிய உலக ஸுகங்களில் நன்றாக அழுந்துகைக்குக் காரணமாகும். ஐயோ! ஐயோ! இந்த உலகத்தின் இயல்பு இப்படி வருந்தும்படி இருக்கிறதே!
ஏழாம் பாசுரம். இப்படி மற்றவர்கள் இவ்வுலக விஷயங்களில் ஈடுபட்டு மற்ற தேவதைகளை வணங்கித் துன்புறுவதற்கு வருந்தினாலும், தனக்கு எம்பெருமான் க்ருபையினாலே அப்படி ஒரு தேவையும் துன்பமும் இல்லாமல் எம்பெருமான் க்ருபை செய்துள்ளானே, இதுவே நமக்கு அமையும் என்று தனக்குக் கிடைத்த நன்மையைச் சொல்லி அனுபவிக்கிறார். மற்ற ப்ரபந்தங்களை அந்தாதியாகச் செய்தவர், இதை அப்படிச் செய்யாததற்குக் காரணம், இதில் பெற்ற இன்பத்துக்கு மேல் ஒரு வார்த்தை சொல்ல முடியாததாகையாலே இப்பாசுரத்துடன் முடித்தருளுகிறார். எல்லா தேவதைகளையும் ப்ரளய காலத்தில் எம்பெருமான் தன்னுள் விழுங்கி வைத்துக்கொண்டான் என்பதிலிருந்து, இந்த தேவதைகள் ஒருவரும் நமக்குப் புகலில்லை என்பது தெரிகிறது.
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,
யாவகை உலகமும் யாவரும் அகப்பட,
நிலம் நீர் தீ கால் சுடர் இருவிசும்பும்,
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓராலிலை சேர்ந்த எம்
பெருமா மாயனை அல்லது,
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே
ஸம்ஹாரத்துக்குக் காரணமான, குளிர்ந்த சந்த்ரனைத் தலையில் வைத்திருக்கும் ருத்ரனும், ஸ்ருஷ்டிக்குக் காரணமான நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மாவும், இளம் தளிர் போன்ற ஒளியையுடைய, தேவர்களின் தலைவனான இந்த்ரனும், இவர்கள் தொடக்கமான எல்லாவிதமான லோகங்களும், எல்லாச் சேதனர்களும் உட்பட, பூமியும், நீரும், நெருப்பும், காற்றும், ஒளியால் வ்யாபிக்கப்பட்டிருக்கும் ஆகாசமும், மலர்ந்த கிரணங்களையுடைய சந்த்ர ஸூர்யர்களும், மற்றுமுள்ள எல்லாப்பொருள்களும், ஓரே காலத்தில் தன் திருவயிற்றில் ஒரு சிறு பகுதியில் சேரும்படி, ஒரு பொருளும் வெளிப்படாதபடி எல்லாவற்றையும் உள்ளே இருக்கும் வண்ணம் உண்டு, தன் திருவயிற்றிலே மறைத்து வைத்துக் கொண்டு, ஓர் ஆலினிலைமேல் சயனித்திருப்பவனாய், என்னுடைய ஸ்வாமியாய், பெரியவனாய், அளவிட்டறிய முடியாதவனாய், ஆச்சர்ய சக்தியையுடைய ஸ்ரீமந்நாராயணனைத் தவிர, வேறு பெரிய ஒரு தேவதையை நாம் புகலாகக் கொண்டுள்ளோமோ?
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org